அமானுஷ்யன் – 76

மந்திரி சந்தேகத்துடன் கேட்டார். “அன்றைக்கே அவன் கேசவதாஸைப் போய் பார்ப்பான் என்றீர்கள். ஆனால் அவன் போகவில்லை. இப்போது மட்டும் அவன் அங்கே போவான் என்று என்ன நிச்சயம்?”

“அப்போது நாம் அவருக்கு பாதுகாப்பை அதிகப் படுத்தி இருந்தோம். அதைப் பார்த்து தானோ இல்லை வேறெதாவது காரணத்தாலோ அவன் போகவில்லை. ஆனால் இப்போது அவன் கண்டிப்பாக அவரைப் போய்ப் பார்ப்பான் என்று என் உள்ளுணர்வு சொல்கிறது”

“அந்த ஆள் முதலிலேயே அந்த அளவு பாதுகாப்பு தருவதை ரசிக்கவில்லை. அந்த ஆள் குடும்பத்திலும் புகார் செய்கிறார்களாம். ஆனாலும் அதைப் பொருட்படுத்தாமல் வீட்டுக்கு வெளியே மட்டும் போலீஸ் காவல் இருக்கிறது. அதுவும் நான்கு போலீஸ் காரர்கள் மட்டுமே காவல் இருக்க அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார். இனி என்ன செய்வது? போலீஸ் பட்டாளத்தையே அங்கே குவித்து விடலாமா?…”

“பத்திரிக்கைக் காரர்களும், டிவிகாரர்களும் இப்போதெல்லாம் அனாவசியமாய் எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கிறார்கள். அளவுக்கு அதிகமாய் எது செய்தாலும் அவர்களும் அங்கே வந்து விடுவார்கள். கேள்விகள் கேட்பார்கள். இப்போதைக்கு இந்த விஷயத்தில் நமக்கு எதிரி விளம்பரம் தான்…”

“சரி என்ன செய்யலாம் சொல்லுங்கள்?”

“போலீஸ்காரர்களிடம் சந்தேகப்படும் படி யார் அவர் வீட்டுக்குள் நுழைந்தாலும் சுட்டுத் தள்ள சொல்லுங்கள். மீதியை நாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்….”

“சரி”

“ஒரு வேளை அவர்கள் கண்ணில் மண்ணைத் தூவி அவன் உள்ளே போய் விடவும் வாய்ப்பு இருக்கிறது…..”

அதில் மந்திரிக்கு சந்தேகமே இல்லை. அவன் எதுவும் செய்வான்! “சரி அப்படி உள்ளே நுழைந்தால் அவனைச் சுட்டுத் தள்ள கேசவதாஸிடம் சொல்வோம்…”

“மலை உச்சியில் பல பேர் துப்பாக்கியால் சுட்டும் அவன் சாகாமல் தப்பித்து இருக்கிறான்…”

மந்திரிக்கு எரிச்சல் வந்தது. “அது தான் என்ன செய்வது என்று கேட்கிறேன். ஒரேயடியாய் சொல்லித் தொலையுங்கள்…”

“அப்படி அவர் சுட்டுத் தள்ள முடியாமல் போனால் அவன் கண்டிப்பாக கேட்கிற விதத்தில் கேட்பான். கேசவதாஸ் உண்மை சொல்லாமல் உயிரோடு தப்பிக்க வேண்டுமானால் அவன் நம்புகிற மாதிரி ஏதாவது பதில் சொல்லவும் வேண்டும். நம்மையும் காட்டிக் கொடுக்கக் கூடாது…..”

“அப்படியானால் எனக்கு வேண்டாத வேறு எதாவது அமைச்சர் பெயரைச் சொல்லச் சொல்லட்டுமா?”

சிபிஐ மனிதன் புன்முறுவல் பூத்தான். அரசியல் ஒரு சாக்கடை என்று சும்மா சொல்லவில்லை. “வேறு அமைச்சர் பெயரைச் சொல்ல அந்த கேசவதாஸ் ஒத்துக் கொள்ள மாட்டார். அவருக்கு நீங்களும் வேண்டும். மற்ற மந்திரிகளும் வேண்டும். அனாவசியமாக பிறகு தனக்கு பிரச்னை வருவதை அவர் விரும்ப மாட்டார்….”

“அதற்கு தான் உடனடியாக ஆனந்திற்கு போன் செய்வது நல்லது என்று சொல்கிறேன். அமானுஷ்யனை உடனடியாக நம்மிடம் ஒப்படைக்கச் சொல்லச் சொல்கிறேன். அந்த அனானுஷ்யன் அங்கே இங்கே போவதற்கு நேரம் எதற்குத் தர வேண்டும்….”

சிபிஐ மனிதன் பொறுமையாகச் சொன்னான். “கேசவதாஸ் பெயர் அவனுக்கு ப்யாரிலால் மூலம் தெரிந்து விட்டது. ஆனந்தும் அவனும் சந்தித்தாகி விட்டதால் அவன் அதை ஆனந்திடமும் சொல்லி இருப்பான். ஆனந்த் யார் யாரிடம் சொல்கிறான் என்பது நமக்குத் தெரியாது. அதனால் நம் வேலை முடிகிற வரையாவது கேசவதாஸை யாரும் குடைந்து கேட்காமல் இருப்பது நல்லது. அமானுஷ்யனே அவரிடம் கேட்டு அவர் சொல்கிற பதிலால் திருப்தி அடைந்து போனால் பிறகு பெரிய பிரச்னை இல்லை என்று நினைக்கிறேன். அதனால் அமானுஷ்யன் வந்து கேட்டால் என்ன சொல்ல வேண்டும் என்று கேசவதாஸிற்கு நாம் சொல்லித் தருவது நல்லது.”

என்ன சொல்ல வேண்டும் என்று சிபிஐ மனிதன் விவரித்த போது மந்திரி பிரமித்துப் போனார்.

சிபிஐ மனிதன் தொடர்ந்து சொன்னான். “அவன் அங்கிருந்து போன பிறகு நாம் ஆனந்திற்குப் போன் செய்யலாம். இடையில் ஏதாவது வில்லங்கம் வந்தாலும் கேசவதாஸை யாரும் குடையப் போக மாட்டார்கள். நீங்கள் உடனடியாகக் கேசவதாஸிற்குப் போன் செய்து பேசுங்கள்….”

*************

கேசவதாஸிற்கு திகைப்பு, ஆச்சரியம், கோபம், சந்தேகம் போன்ற பல உணர்ச்சிகள் பொங்கி எழுந்தன. அமானுஷ்யன் அவரைப் பார்க்க வரலாம் என்று உறுதியாக மந்திரி சொன்னதால் திகைப்பு, இத்தனை நாட்களாய் வராதவன் இப்போது ஏன் அவரைப் பார்க்க வர வேண்டும் என்று ஆச்சரியம், அவரை மந்திரி பகடைக் காயாய் பயன்படுத்துகிறதை எண்ணி கோபம், உண்மையில் என்ன நடக்கிறது, இந்த அமானுஷ்யன் அந்த மந்திரி வாழ்க்கையில் எப்படி குறுக்கிட்டான் என்று சந்தேகம் என வரிசையாக அவர் மனதில் எழுந்தன.

மந்திரி அமானுஷ்யன் ஒரு தீவிரவாதி என்றும் வழக்கமான முறையில் அவனைப் பிடிக்க முடியாது என்பதால் இந்த பொய் வழக்கு அவன் மீது போடலாம் என்று ஆரம்பத்தில் சொன்ன போதே அவர் அதை நம்பவில்லை. தன் சுயநலத்தைத் தவிர நாட்டு நலத்தையும் சேர்த்து எண்ணும் மந்திரிகள் ஒருசிலர் இருக்கிறார்கள் என்றாலும் அந்த மந்திரி அந்த ரகம் அல்ல என்பதால் போலீஸ்காரர் வேலையை தான் ஏற்று செய்ய முன் வந்த அந்த நடிப்பு அவரிடம் எடுபடவில்லை. எத்தனையோ முறை அரசியல் வாதிகளுக்காக அவர் சட்டத்தை வளைத்து இருக்கிறார். ஆனால் அப்போதெல்லாம் உண்மையில் எதற்காக அதைச் செய்கிறோம் என்பது அவருக்குத் தெரிந்து இருந்தது. ஆனால் இப்போதோ ஒருசில விஷயங்களை அவருக்குச் சொல்லி, மீதி சில விஷயங்களை அவருக்கு கீழ் பணி புரியும் போலீஸ் அதிகாரிகள் சிலரை வைத்துச் செய்யும் இந்த தில்லு முல்லு அவருக்குப் பிடிக்கவில்லை.

அரசியல்வாதிகளை எதிர்த்து நிற்க செயல்படுவது சுலபமல்ல என்பது அவருக்குத் தெரியும். இந்த அரசியல் புயலில் நாணலாக வளைபவர்கள் மட்டுமே தாக்குப் பிடிக்க முடியும். வளைய மறுப்பவர்கள் ஒடிந்து போவார்கள் என்பது அவர் கண்கூடாகப் பார்த்த ஒரு யதார்த்த உண்மை. எனவே உண்மை என்ன என்று சொல்லி இருந்தால் கூட அவர் ஒன்றும் அந்த மந்திரியை எதிர்த்து எதுவும் செய்திருக்கப் போவதில்லை. பின் ஏனந்த மந்திரி இப்படி அவரிடம் மறைக்கிறார் என்பது அவருக்குப் புரியவில்லை.

இப்போது இன்னொரு மிகப் பெரிய கேள்வி அவர் மனதில் எழுந்து நின்றது. மந்திரி அமானுஷ்யன் வந்தால் சொல்லச் சொன்ன பதில் புத்திசாலித் தனமானது. அது பொய் என்று தெரிந்து கொள்ள அமானுஷ்யனுக்கு சில நாட்கள் கண்டிப்பாகத் தேவைப்படும். இப்படி ஒரு பதிலைச் சொல்லச் சொல்லும் அளவு அந்த மந்திரி பெரிய புத்திசாலி அல்ல. வேறு யாரோ தான் இது போல சொல்லச் சொல்லித் தந்திருக்க வேண்டும். திரை மறைவாய் காய்கள் நடத்தும் அந்த ஆள் யார்? அதுவும் அமானுஷ்யன் அடுத்தது என்ன செய்வான் என்று அந்த ஆள் முன்கூட்டியே தெரிந்து செயல்படுவது போல் இருப்பதும் பெருத்த சந்தேகத்தை கேசவதாஸ் மனதில் ஏற்படுத்தியது.

ஏதோ பெரிய சதித்திட்டம் இங்கு பின்னப்படுகிறது என்பது மட்டும் அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது. எதுவானாலும் நாளைக்கு தனக்குப் பிரச்னை ஏற்படுத்தி விட அனுமதித்து விடக் கூடாது என்று மட்டும் உறுதியாக நினைத்துக் கொண்டார்.

பெரும்பாலும் இன்று இரவே கூட அவன் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லி இருந்ததால் போலீசாரை அழைத்து சந்தேகப்படும் படி யாராவது அந்த வீட்டுக்குள் நுழைய முயன்றால் சுட்டு விடச் சொல்லி ஆணை இட்டார்.

காவலுக்கு இருந்தவர்களில் மூத்த போலீஸ்காரர் ஒருவர் வெளிப்படையாக அவரிடம் கேட்டார். “யாராவது வரக்கூடும் என்று எதிர்பார்க்கிறீர்களா சார்?”

கேசவதாஸ் அவரிடம் உண்மையைச் சொல்ல விரும்பவில்லை. “வரலாம். வராமலும் இருக்கலாம். எதற்கும் எச்சரிக்கையாக இருக்க மேலிடத்தில் சொல்கிறார்கள்”

‘மேலிடம்’ என்று சொல்லப்படுவது யாரை என்ற கேள்வியை அந்த போலீஸ்காரரும் கேட்கவில்லை. முதல் கேள்வியைக் கேட்டதையே கேசவதாஸ் ரசிக்கவில்லை என்பதை அவர் முக பாவனை வைத்தே அந்த போலீஸ்காரர் புரிந்து கொண்டு விட்டார்.

கேசவதாஸின் மனைவி கல்கத்தாவில் இருக்கும் தன் அண்ணா வீட்டுக்குச் சென்றிருப்பது இந்த சமயத்திற்கு அனுகூலமாக இருந்தது. அவள் மட்டும் அங்கு அவருடன் இருந்து அவனும் வந்து விட்டால் அவள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி மாளாது. மனைவி வாயை அடைக்கும் வித்தையை அவர் இத்தனை காலம் அவளுடன் வாழ்ந்தும் கண்டு பிடித்து வைத்திருக்கவில்லை. அவருடைய பிள்ளைகள் அவரவர்கள் அறையில் இருந்தார்கள். காவலுக்கு இருந்த போலீசாரையும் மீறி அவன் வீட்டுக்குள் நுழைவது கஷ்டம் தான் என்றாலும் அவன் ஃபைலைப் படித்திருந்த அவருக்கு அது முடியவே முடியாத காரியம் போல் தோன்றவில்லை. அப்படி வந்தால் அவனை எதிர் கொள்ள அவர் தயாரானார். இரண்டு மூன்று இடங்களில் துப்பாக்கியை மறைத்து வைத்து விட்டு ஒரு புத்தகத்தைப் பிரித்து படிக்கும் பாவனையில் அவர் காத்திருந்தார்.

அந்த நேரத்தில் தான் அக்‌ஷய் அவர் வீட்டிற்கு ஒரு பர்லாங் தூரத்திற்கு வந்து சேர்ந்திருந்தான்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top