அமானுஷ்யன் – 74

ஆனந்திற்கு அவர்கள் போன் வரவேயில்லை. ஏன் அவர்கள் இன்னும் பேசவில்லை என்று அவன் கவலையுடன் யோசித்தான். போன் பற்றி யோசிக்கும் போது தான் தன்னுடைய போன் ஒட்டுக் கேட்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் அவனுக்கு வந்தது. வெளிப்படையாகவே அவனைப் பின் தொடர்பவர்கள் போன் ஒட்டுக் கேட்பதில் முறையான வழியைப் பின்பற்றவா போகிறார்கள். அவன் கடைசியாக அம்மாவுடன் என்ன பேசினோம் என்று யோசித்துப் பார்த்தான். அம்மா அக்‌ஷய் பற்றி பேசியது நினைவுக்கு வந்தது. ஒட்டுக் கேட்டிருப்பார்களேயானால் நிலைமை மேலும் சிக்கலாக மாறுவதை ஆனந்த் உணர்ந்தான். அது உண்மையானால் ஆனந்திடம் அக்‌ஷய் இருக்கும் இடத்தைத் தெரிந்து கொள்வதற்காக மட்டுமே அவர்கள் அம்மாவைக் கடத்தியிருக்க மட்டார்கள். அவன் தாய் அக்‌ஷயின் தாய் என்பதும் அவர்களுக்குத் தெரிந்து இருக்கலாம். அக்‌ஷயின் தாய் என்பதற்காகவே கூட அவர்கள் அம்மாவைக் கடத்தி இருக்கலாம்….

அவனால் ஓட்டல் அறையில் உட்கார முடியவில்லை. முகம் தெரியாத எதிரிகளை எப்படி சமாளிப்பது என்று அவனுக்குத் தெரியவில்லை. இதில் அம்மா அல்லது தம்பி இருவரில் ஒருவரைப் பலி கொடுக்க வேண்டி வரும் போலத் தோன்றிய போது அவனை அறியாமல் கண்கள் கண்ணீரால் நிறைந்தன. தனியாக இருப்பதால் சிறிது நேரம் தயக்கமில்லாமல் அழுதான்.

இரவு எட்டு மணி ஆன பிறகு ஓட்டலில் இருந்து மெல்ல கிளம்பினான். மஹாவீர் ஜெயின் வீட்டருகே வந்தவுடன் அவருக்கு பொது தொலை பேசி ஒன்றில் இருந்து போன் செய்தான்.

“ஹலோ சார். நான் ஆனந்த் பேசுகிறேன். ஆச்சார்யா கேஸில் உங்களுக்கு அவசரமாகச் சொல்ல வேண்டியது நிறைய இருக்கிறது. உங்களிடம் பேச வரட்டுமா?”

மஹாவீர் ஜெயின் களைப்புடன் சொன்னார். “நாளைக்கு ஆபிசில் பேசலாமே ஆனந்த். நான் இப்போது தான் வீட்டுக்கு வந்தேன் ….”

“ஆபிசில் பேச முடியாத சில விஷயங்கள் இருக்கின்றன சார். நான் இப்போது மிகப் பெரிய சிக்கலில் வேறு இருக்கிறேன்……”

ஜெயின் வீட்டிலும் ஆபிஸ் விவகாரங்களைப் பேசத் தயங்குவது தெரிந்தது. பின்னணியில் முகேஷின் பாடல்கள் லேசாக ஒலித்துக் கொண்டிருப்பது கேட்டது. இப்போது தான் களைப்பாறியபடி பாடல்களைக் கேட்க ஆரம்பித்திருக்கிறார் என்று புரிந்தது. மனிதர் மறுத்து விடப் போகிறார் என்று பயந்து ஆனந்த் அவசரமாகச் சொன்னான். “சார், என் அம்மாவைக் கடத்திக் கொண்டு போய் விட்டார்கள்…”

ஜெயின் அதிர்ச்சி அடைந்தார். “என்ன?… சரி உடனடியாக வாருங்கள்”

**************

அக்‌ஷயிற்கு வருணையும் சஹானாவையும் நினைக்க நினைக்க மனதை என்னவோ செய்தது. வருணைக் காணோம் என்று ஆன போது அவள் கண்டிப்பாக அதற்குக் காரணம் அக்‌ஷயின் எதிரிகள் தான் என்று ஊகித்து இருப்பாள் என்று புரிந்த போது மனம் மேலும் காயப்பட்டது. அவனுக்கு உதவப் போய் இப்படி மாட்டிக் கொண்டோமே என்று யோசித்திருப்பாளோ? அந்த குழந்தை என்ன செய்கிறானோ? அழுது கொண்டிருப்பானோ என்றெல்லாம் நினைக்க ஆரம்பித்த போது அவனுக்கு பைத்தியமே பிடிக்கிற மாதிரி இருந்தது.

“கடவுளே இந்த அற்ப உயிரை வேண்டுமானால் எடுத்துக் கொள். ஆனால் தயவு செய்து அந்தக் குழந்தையையும், என் அம்மாவையும் எதுவும் செய்து விடாதே!” என்று அவன் மனமுருக வேண்டினான்.

சற்று யோசித்த போது இந்த துக்கம், வருத்தம், சுய பச்சாதாபம் எல்லாம் எந்த விதத்திலும் உதவப் போவதில்லை என்று தோன்றியது. அவன் முகம் சலனமே இல்லாமல் மாற ஆரம்பித்தது. அடுத்தது என்ன என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவனாக சஹானாவிற்கு போன் செய்ய நினைத்தான். ஆனால் அவளிடம் நேரடியாகப் பேச அவனுக்கு தைரியம் வரவில்லை. அந்த நல்ல மனதிற்கு இத்தனை பெரிய துக்கத்தை உண்டாக்கி விட்டு எப்படி தான் பேசுவது?

மதுவின் செல் போன் எண் அவனுக்கு நினைவு இருந்தது. அவன் மதுவிற்குப் போன் செய்தான். மதுவின் குரல் களைப்பாகக் கேட்டது. “ஹலோ”

“மது. அக்‌ஷய் பேசுகிறேன்”

ஒரு நிமிடம் மது எதுவும் பேசவில்லை. அவனுக்கு அக்‌ஷயிடம் பேசப் பிடிக்கவில்லை. வருண் காணாமல் போனதில் இருந்து அவனுக்கு அக்‌ஷய் மீது கோபம் அதிகரித்திருந்தது. இவன் மட்டும் சஹானாவின் வாழ்க்கையில் நுழையாமல் இருந்திருந்தால் இத்தனை பிரச்னைகள் அவளுக்கு வந்திருக்காது என்று அவன் நினைத்தான்.

“மது…”

வேண்டா வெறுப்பாகச் சொன்னான். “சொல் அக்‌ஷய்”

“யாராவது வருண் விஷயமாய் சஹானாவைத் தொடர்பு கொண்டார்களா?”

அவனுக்கும் வருண் கடத்தல் விவரம் தெரிந்திருக்கிறது …

“இது வரை இல்லை…”

“அப்படி தொடர்பு கொண்டால் எல்லா உண்மைகளையும் சொல்லி விடச் சொல். நான் அவளை முதலிலேயே மிரட்டி வைத்திருந்ததால் தான் அவள் என்னைப் பற்றி முதலிலேயே சொல்லத் தயக்கப்பட்டாள் என்று சொல்லச் சொல். தயங்காமல் என்னைப் பற்றி எவ்வளவு மோசமாகச் சொல்ல முடியுமோ அவ்வளவு மோசமாகச் சொல்லச் சொல். வருண் காணாமல் போன பிறகு என்னை அப்படிச் சொல்வதில் அவளுக்கு கஷ்டம் இருக்காது என்று நினைக்கிறேன்.”

“அவளுக்கு இப்போது உன் மேல் கோபம் இல்லை அக்‌ஷய்”. மதுவால் அந்த உண்மையைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

உணர்ச்சி வசப்பட்ட அக்‌ஷயிற்கு சிறிது நேரம் பேச்சு வரவில்லை. பிறகு பேசும் போது அவன் குரல் கரகரத்தது.

“மது… சஹானாவிடம் சொல். என் உயிரைக் கொடுத்தாவது நான் வருணை அவளிடம் சேர்த்து விடுவேன். வருணை மட்டுமல்ல அவர்கள் என் அம்மாவையும் கடத்திக் கொண்டு போய் விட்டார்கள்….”

“உனக்கு உன் அம்மா, குடும்பம் பற்றி எல்லாம் நினைவுக்கு வந்து விட்டதா?”

“ஓரளவு நினைவுக்கு வந்திருக்கிறது.. அது ஒருபெரிய கதை மது… நான் நேரில் பார்க்கும் போது, சாரி எப்போதாவது பார்க்க முடிந்தால் சொல்கிறேன். எனக்கு ஒரு அண்ணனும், அம்மாவும் இருக்கிறார்கள்…. இப்போதைக்கு அண்ணாவும் என்னுடன் இருக்கிறான்…. அதனால் அவனுக்கும் ஆபத்து வந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டி இருக்கிறது….”

“உன் எதிரி யார் என்று தெரிந்ததா அக்‌ஷய்”

“மிகவும் முக்கியமான அந்த விஷயம் மட்டும் இன்னும் எனக்கு நினைவுக்கு வரமாட்டேன்கிறது மது. ஆனால் சீக்கிரமே அவர்களை நான் கண்டு பிடித்து விடுவேன் என்று நினைக்கிறேன். என் எதிரியைத் தெரிந்தவர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களைப் பார்க்கத் தான் நான் போய்க் கொண்டிருக்கிறேன்…”

மது சொன்னான். “அக்‌ஷய்…. ஜாக்கிரதையாய் இரு”

அக்‌ஷய் லேசாகச் சிரித்தபடி சொன்னான். “நான் நினைக்கிறேன். எனக்கு கெட்டதிலும் ஒரு நல்ல காலம் இருக்கிறது என்று…”

“ஏன் அப்படி சொல்கிறாய்?”

“என்னை வெறுக்கும் ஆள் கூட அக்கறையுடன் ‘ஜாக்கிரதையாய் இரு” என்று சொல்கிறதால் தான் அப்படி சொல்கிறேன்.

மதுவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. தர்மசங்கடத்தைப் போக்க வேறு ஒரு கேள்வியைக் கேட்டான். “அதுசரி நீ ஏன் சஹானாவிடம் பேசாமல் என்னிடம் பேசினாய்?”

அக்‌ஷய் சொன்னான். “வருண் காணாமல் போன பிறகு அவளிடம் பேசும் தெரியம் எனக்கு வரவில்லை மது. அனாதை மாதிரி நின்ற நேரத்தில் எனக்கு ஆதரவு தந்த அவளுக்கு வருத்தத்தை விட வேறு எதையுமே திருப்பித் தராத நான் எப்படி பேசுவேன் சொல்.”

அக்‌ஷய் போனை வைத்து விட்டான். மதுவுக்கு மனம் கனத்தது. அக்‌ஷய் நிலைமையில் இருந்து பார்த்தால் மிகவும் பாவமாக இருந்தது. அவன் குரலில் தெரிந்த வலி அவனை என்னவோ செய்தது. அக்‌ஷய் நிலையில் அவன் இருந்திருந்தால் அவனுக்குப் பைத்தியமே பிடித்திருக்கும். அப்படிப்பட்ட நிலையிலும் தைரியமாக அவனால் முடிந்த வரை அக்‌ஷய் போராடிக் கொண்டிருக்கிறான். ஆனாலும் அவன் பிரச்னைகள் நீண்டு கொண்டே போகின்றன. அதைப் பார்த்து அனுதாபப் படுவதற்கு பதிலாக அவன் மேல் கோபப் பட்டது நியாயமல்ல என்று மதுவின் மனசாட்சி சொன்னது. நீண்ட நேரம் அவன் அசையாமல் அப்படியே உட்கார்ந்திருந்தான். அவன் மனதில் அக்‌ஷய் சொன்ன ஒரு வாக்கியம் திரும்பத் திரும்ப ஒலித்தது.

“சஹானாவிடம் சொல். என் உயிரைக் கொடுத்தாவது நான் வருணை அவளிடம் சேர்த்து விடுவேன்…..”

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top