அமானுஷ்யன் – 71

வருண் தெருக் கோடியில் இருந்த கடையில் இருந்து சாக்லேட் வாங்கிக் கொண்டு வீடு திரும்பும் போது கடத்தப்பட்டான். எல்லாம் ஒரு நிமிட நேரத்தில் நடந்து முடிந்தது. பின்னால் இருந்து யாரோ ஒரு கைக்குட்டையை அவன் முகத்தருகில் கொண்டு வந்தார்கள். அதற்குப் பிறகு அவனுக்கு நினைவில்லை. அவனைத் தூக்கி ஒரு காரில் போட்டுக் கொண்டு அங்கிருந்து கடத்தல்காரர்கள் பறந்தார்கள். அந்த தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு வயதான கிழவி தான் பார்க்கிற தொலைவில் இருந்தாள். அவளுக்கும் நடந்தது என்ன என்பது சரியாகப் புரியவில்லை. ஒரு நிமிடம் நின்று யோசித்து விட்டு அவளும் பயணத்தைத் தொடர்ந்தாள்.

***********

சாரதாவிற்கு நடப்பது எதுவும் சரியாகத் தோன்றவில்லை. அவளுக்கு அக்‌ஷயைப் பார்க்க ஆவலாய் இருந்தது. ஆனால் கூட்டிக் கொண்டு போக ஆனந்த் இன்னும் வந்தபாடில்லை. அவள் பேசியதை எல்லாம் டேப் செய்து எடுத்துக் கொண்டு போன அதிகாரி போவதற்கு முன் ரகசியமாய் தாழ்ந்த குரலில் அவளிடம் சொன்னார்.

“நானும் அவசரமாய் போக வேண்டி இருக்கிறது. ஆனந்த் தன் வேலை முடிந்தவுடன் வந்து விடுவார். நீங்கள் ஏதாவது செய்து சாப்பிட்டு விட்டு அவர் வரும் வரை டிவி பார்த்துக் கொண்டு இருங்கள். பாதுகாப்பு காரணங்களுக்காக நான் வீட்டைப் பூட்டிக் கொண்டு போகிறேன். தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள். எங்கள் ஆட்களே இங்கு ஆனந்திற்கு முன்பாகவே வந்தாலும் அவர்களிடமும் அதிகம் பேசாதீர்கள்….வரட்டுமா”

அந்த அதிகாரி சொன்னதில் அவளுக்கு தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை. அவள் பதிலுக்குக் காத்திராமல் அவர் வீட்டை வெளியே பூட்டிக் கொண்டு போய் விட்டார். அவளுக்கு டிவி பார்க்கிற மனநிலை இருக்கவில்லை. அவள் மகன் மீது அநியாயமாய் தீவிரவாதி என்று பழி போட்ட போலீசார் மீது அவளுக்குக் கோபம் வந்தது. டிவியில் காண்பித்த ஆள் அவள் மகன் அக்‌ஷய் போல கண்டிப்பாக இல்லை. மிகவும் உற்றுப் பார்த்தால் மட்டும் ஏதோ சாயல் தெரிகிறது. அப்படி உற்றுப் பார்த்தால் ஒவ்வொருவரிடமும் எத்தனையோ சாயல் இருக்கலாம். அதை வைத்து இப்படி தவறாகச் சொல்லலாமா?

நேரம் செல்லச் செல்ல ஆனந்தும் வராமல் போகவே அவளுக்கு இருப்பு கொள்ளவில்லை. ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள். தூரத்தில் இருந்த ஒரு கட்டிடத்தைத் தவிர வேறு வீடோ, கட்டிடமோ அருகில் இல்லாததை அவள் அப்போது தான் கவனித்தாள். ஏன் இந்த மாதிரி இடத்தில் சிபிஐ காரர்கள் வீடு கட்டி வைத்திருக்கிறார்கள்? ரகசியத்திற்காகவா?

அவள் சமையல் அறையில் ஃபிரிட்ஜைத் திறந்து பார்த்தாள். தோசை மாவு, காய்கறிகள், பால் பாக்கெட்டுகள் எல்லாம் இருந்தன. ஃப்ரிட்ஜை மூடினாள். சமையலறையில் அரிசி முதற்கொண்டு அத்தனை மளிகை சாமான்களும், எல்லா வகையான பாத்திரங்களும் இருந்தன. கேஸ் ஸ்டவ் இருந்தது. கேஸ் சிலிண்டரும் முழுமையாக இருப்பது தெரிந்தது. எல்லாவற்றையும் பார்த்தால் இவர்கள் அவள் வருவதற்கு முன் தான் அத்தனையும் வைத்து விட்டுப் போயிருப்பது போல் தோன்றியது. எல்லாம் பல நாட்களுக்கு சமைக்கத் தேவையான அளவில் இருந்ததால் அவள் மனதில் லேசாக சந்தேகம் படர ஆரம்பித்தது.

நடந்ததை எல்லாம் ஆரம்பத்தில் இருந்து யோசித்து பார்த்தாள். பட்டாபிராமன் தன் வீட்டுக்கு வந்ததில் இருந்து ஆனந்திடம் அவள் பேசவில்லை என்பது நெருடலாக இருந்தது. அக்‌ஷயைப் பற்றி அந்த பட்டாபிராமன் சொன்னது தவிர ஆனந்திற்கும் இவர்களுக்கும் தொடர்பு இருப்பதற்கு வேறெந்த ஆதாரமும் இல்லையே என்பது உறைக்க அவளுக்கு சிறிது நேரம் தேவைப்பட்டது. தான் கடத்தப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் அரைகுறையாய் அவளுக்கு வந்தது. அவளைக் கடத்தி என்ன சாதிக்கப் போகிறார்கள்? அவளுக்கு மகன்களை நினைத்த போது தான் வயிற்றைப் பிசைந்தது. இருவரும் அவளைத் தேடி அழைவார்களே. போய் கும்பிடலாம் என்றால் இத்தனை வசதி இருக்கிற வீட்டில் ஒரு பூஜையறை கூட இல்லை.

டிவி போட்டு சிறிது நேரம் பார்த்தாள். ஆனால் மனம் அதில் லயிக்கவில்லை. அப்போது தான் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. பரபரப்புடன் எழுந்தாள். ஆனந்த் வந்து விட்டானோ?

இரண்டு ஆட்கள் ஒரு சிறுவனைக் கொண்டு வந்து அங்கிருந்த சோபாவில் கிடத்தினார்கள். அவளுக்கு அவர்களையும் தெரியவில்லை. அந்தப் பையனையும் தெரியவில்லை. குழப்பத்தோடு அந்த ஆட்களிடம் கேட்டாள்.

“யாரிந்த பையன்? இவனுக்கு என்ன ஆயிற்று?”

அவர்களில் ஒருவன் சுருக்கமாய் சொன்னான். “மயக்கம்.”

சொன்னவர்கள் திரும்பவும் வீட்டைப் பூட்டிக் கொண்டு போய் விட்டார்கள். ஒரு கார் கிளம்பும் சத்தம் கேட்டது. சாரதா அந்த பையன் அருகில் அமர்ந்து கொண்டாள். ஒரு வேளை இவனையும் கடத்திக் கொண்டு வந்து விட்டார்களோ? ஏன் கடத்தினார்கள்? நினைக்க நினைக்க தலை சுற்றியது. இப்போது தான் தன்னையும் கடத்திக் கொண்டு வருவது தான் அவர்கள் நோக்கமாய் இருந்திருக்க வேண்டும் என்று அவளுக்கு உறுதியாயிற்று.

சிறிது நேரத்தில் அவன் கண் விழித்தான். சுற்றும் முற்றும் பார்த்து விட்டு பரபரப்போடு கேள்விகள் கேட்டான். “இது யார் வீடு?… நான் எப்படி இங்கே வந்தேன்….. நீங்கள் யார்?”

சாரதா தனக்குப் பதில் தெரிந்த கேள்விக்கு மட்டும் பதில் சொன்னாள். “நான் சாரதா?”

“நான் எப்படி இங்கே வந்தேன்?”

“இப்போது இரண்டு பேர் உன்னை இங்கே போட்டு விட்டு போனார்கள்?”

“யாரவர்கள்?”

“தெரியவில்லை”

“உங்கள் வீட்டில் யாரோ ரெண்டு பேர் என்னை கூட்டிக் கொண்டு வந்து விட்டால் என்ன ஏது என்று கேட்க மாட்டீர்களா பாட்டி”

“இது என் வீடு அல்ல?”

“அப்புறம் யார் வீடு?”

“தெரியவில்லை?”

“அப்படியானால் நீங்கள் எப்படி இங்கு வந்தீர்கள்?”

இவனைப் பார்த்தால் கிட்டத்தட்ட ஆறேழு வயது தான் இருக்கும் போல தெரிந்தது. ஆனால் விவரமானவன் போல தெரிந்தான். இருந்தாலும் இவனுக்கு தன் கதையைச் சொன்னால் விளங்கவா போகிறது என்று நினைத்த சாரதா சுருக்கமாகச் சொன்னாள். “என்னை ஏமாற்றி இங்கே கூட்டிக் கொண்டு வந்து விட்டார்கள். உன் பெயர் என்ன?”

அவன் உடனடியாகப் பதில் சொல்லவில்லை. அவன் முகத்தில் பயம் படர்ந்தது. “எனக்கு அம்மாவைப் பார்க்கணும்” என்று சொல்லியவன் அழ ஆரம்பித்தான். சாரதாவிற்கு அந்த சிறுவனைப் பார்க்க பாவமாக இருந்தது.

“அழாதே….”

சிறிது நேரம் கழித்து அழுகையை நிறுத்தி அவன் சொன்னான். “எனக்கு பசிக்குது…”

சாரதா சொன்னாள். “தோசை வார்த்து தரட்டுமா? சாப்பிடுகிறாயா?”

அவன் தலையாட்டினான்.

தோசை ஊற்றியபடியே அவனிடம் கேட்டாள். “உன் பெயர் என்ன?”

“வருண்”

அந்தப் பெயரைக் கேட்டவுடன் அவளுக்கு அக்‌ஷய் சொன்ன வருண் ஞாபகம் வந்தது. அவன் அந்தப் பையனுடன் தனக்கு இருந்த நட்பை அவளிடம் விரிவாகச் சொல்லி இருந்தான்… அவளை அறியாமல் புன்னகைத்தாள்.

அதைக் கவனித்த வருண் கேட்டான். “ஏன் பாட்டி சிரிக்கிறீர்கள்?”

“என் சின்ன மகனுக்கும் வருண் என்ற பெயரில் ஒரு நண்பன் இருக்கிறான்.. அது ஞாபகம் வந்தது. அவனும் உன்னை மாதிரி சின்னப் பையன் தான்…”

“உங்கள் மகன் என்னை மாதிரி சின்னப் பையனா?”

சாரதா வாய் விட்டு சிரித்தாள். “என் மகன் சின்னப் பையனில்லை. அவன் நண்பன் தான் சின்னப் பையன். என் மகன் பெரியவன்.”

வருணுக்கு அக்‌ஷயின் நினைவு வந்தது. “எனக்கும் பெரிய அங்கிள் நண்பனாய் இருந்தார்…அவர் பெயர் அக்‌ஷய்….அது நான் வைத்த பெயர்..” சொல்கையில் அவன் குரலில் சோகம் இருந்தது.

சாரதா யோசிக்காமல் சொன்னாள். “என் சின்ன மகன் பெயரும் அக்‌ஷய் தான்…”

திடீரென்று அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

சாரதா ஒரு வித படபடப்புடன் கேட்டாள். “உன் அம்மா பெயர் சஹானாவா?”

வருண் சொன்னான். “ஆமாம்….”. இந்தப் பாட்டிக்கு எப்படித் தெரியும் என்று கேட்க நினைத்தவன் வேறு யோசனை வர பரபரப்புடன் கேட்டான். .”உங்கள் அக்‌ஷய் அங்கிளுக்கு நாக மச்சம் இருக்கிறதா பாட்டி?….”

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top