ஆனந்த் சாரதாவிற்குப் போன் செய்த நேரத்திற்கு சுமார் மூன்று மணி நேரத்திற்கு முன்னால் ஒரு அதிகாரியைப் போலவும், கண்ணியமாகவும் தெரிந்த ஒரு நபர் சாரதாவின் வீட்டுக்கு வந்தான். சாரதாவிடம் தன் பெயர் பட்டாபிராமன் என்றும் சிபிஐயில் வேலை செய்வதாகவும் சொன்னான்.
சாரதா பட்டாபிராமன் ஆனந்தைத் தேடி வந்திருப்பதாக எண்ணி “ஆனந்த் டெல்லிக்குப் போயிருக்கிறானே” என்று சொன்னாள்.
“தெரியும். ஆனந்த் தான் என்னை டெல்லியில் இருந்து அனுப்பினார்….”
“போனில் அவன் உங்களை அனுப்புவது பற்றி எதுவும் சொல்லவில்லையே…. என்ன விஷயம்?…”
“உங்களை டெல்லிக்குக் கூட்டிக் கொண்டு வரச் சொன்னார்”
அக்ஷயிற்கு ஏதாவது ஆகி விட்டதோ என்று அவளது தாயுள்ளம் பதைத்தது. “அக்ஷயிற்கு ஏதாவது…?” என்று பயத்துடன் கேட்டாள்.
பட்டாபி புன்னகைத்தபடி சொன்னான். “அக்ஷய் நலமாய் தான் இருக்கிறார். நீங்கள் போனில் ஆனந்த் சாரிடம் அக்ஷயிடம் பேச வேண்டும் என்று சொன்னீர்களாம். அக்ஷயும் உங்களைப் பார்க்க வேண்டும் என்று சொன்னதால் ஆனந்த் சார் உங்களை டெல்லிக்கு அழைத்து வரக் கிளம்பினார். அவருக்கு ஆபிசில் திடீர் என்று வேறு அவசர வேலை வந்து விட்டதால் உங்களைக் கூட்டிக் கொண்டு வர என்னை அனுப்பினார்….”
இயல்பாகவே வெள்ளை உள்ளம் படைத்த சாரதாவிற்கு அவனை சந்தேகிக்கத் தோன்றவில்லை. அதுவும் இளைய மகனைப் பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியும் சேர்ந்து கொண்டதால் அரை மணி நேரத்தில் கிளம்பினாள்.
பட்டாபிராமன் அவளை விமானத்தில் அழைத்துக் கொண்டு டெல்லிக்கு விரைந்தான். போகிற வழியில் அவளிடம் மிகவும் மரியாதையாக நடந்து கொண்டான். சாப்பிட என்ன வேண்டும் என்று அடிக்கடி கேட்டான். மிக பவ்யமாகப் பேசினான்.
விமானத்தில் செல்கையில் சாரதா அவனிடம் கேட்டாள். “அக்ஷய் எப்படி இருக்கிறான்?”
“நலமாக இருக்கிறார்” என்று சொன்ன பட்டாபி மனதினுள் சொல்லிக் கொண்டான். “பல பேர் மனதில் கிலியைக் கிளப்பிக் கொண்டு இருக்கிறான் உங்கள் பையன்”
டெல்லியில் விமான நிலையத்தில் இறங்கியதும் பட்டாபிராமன் தன் செல்போனை எடுத்து சாரதா முன்னாலேயே ஆனந்திற்குப் போன் செய்வது போல நடித்தான்.
“சார் அம்மாவைக் கூட்டிக் கொண்டு வந்து விட்டேன். இனி உங்கள் அறைக்குக் கூட்டிக் கொண்டு வந்து விடட்டுமா சார்…. என்ன சார்…. ஏன் சார்?…அப்படியானால் எங்கே கூட்டிக் கொண்டு வருவது சார்…. கெஸ்ட் ஹவுசிற்கா… சரி சார்… அப்படியே செய்கிறேன்….அக்ஷய் சௌக்கியம் தானே சார். சரி சார் அம்மாவிடம் சொல்கிறேன் சார்…”
சாரதா போனைத் தனக்குத் தரும்படி சைகை செய்தாள். ஆனால் இணைப்பைத் துண்டித்து விட்ட பட்டாபிராமன் “சார் பிசியாக இருப்பதால் பேசவில்லை என்று உங்களிடம் சொல்லச் சொன்னார்…” என்றான்.
“ப்ரவாயில்லை…. ஆனந்த் வேறு என்ன சொன்னான்?….”
“அவர் ஒரு முக்கிய கேஸ் விஷயமாகப் போயிருக்கிறார் அம்மா. அந்த வேலை இன்னும் முடியவில்லையாம்…உங்களை கெஸ்ட் அவுசிற்குக் கூட்டிக் கொண்டு போகச் சொன்னார். அவர் பின்பு அங்கு வருகிறாராம்….அக்ஷயும் சௌக்கியமாம்….”
“ஏன் அக்ஷயைப் பார்க்கவே நான் நேராகப் போகிறேனே”
“அங்கே நோயாளிகளைப் பார்க்க அனுமதி தரும் நேரத்தில் தான் நாம் போக முடியும் அம்மா. அதனால் இப்போது கெஸ்ட் அவுஸ் போகலாம். பிறகு ஆனந்த சார் வந்தவுடன் அவரும், நீங்களுமாகச் சேர்ந்து அக்ஷயைப் பார்க்கப் போங்கள்….”
சாரதா தலையசைத்தாள். அவனுடன் சேர்ந்து ஒரு டாக்சியில் புறநகர்ப் பகுதிக்குப் பயணித்த போது கூட அவளுக்கு தான் கடத்தப்படுகிறோம் என்ற எண்ணம் எழவேயில்லை.
வீட்டிற்குப் போன் செய்த போது தாய் போனை எடுக்காதது ஆனந்திற்கு பயத்தை ஏற்படுத்தியதைக் கண்ட அக்ஷய் சொன்னான். “அம்மா காய்கறியோ, மளிகை சாமானோ வாங்க கடைக்குப் போயிருக்கலாம்.”
“இல்லை அக்ஷய். பக்கத்தில் இருக்கும் டிபார்ட்மெண்ட் ஸ்டோரிற்கு போன் செய்தால் அவர்கள் எப்போதும் கொண்டு வந்து கொடுத்து விடுவார்கள்…..”
“அம்மா கோயிலுக்குப் போயிருக்கலாம்….”
“இந்த நேரத்தில் போக மாட்டார்கள் அக்ஷய்”
“சரி பாத்ரூம் போயிருக்கலாம்…நீ பத்து நிமிஷம் கழித்துப் போன் செய்”
ஆனந்த் தலையசைத்து விட்டு பத்து நிமிடங்கள் பொறுத்திருந்தான். அந்தப் பத்து நிமிடங்களில் சகோதரர்கள் இருவரும் ஒன்றும் பேசவில்லை. இருவருமே ஆழ்ந்த யோசனையில் இருந்தார்கள்.
பத்து நிமிடங்கள் கழித்து ஆனந்த் போன் செய்தான். மறுபக்கத்தில் பதில் இல்லை. மறுபடி பத்து நிமிடங்கள் கழித்துப் போன் செய்த போதும் பதில் இல்லை. ஆனந்த் பக்கத்து வீட்டுக்காரருக்குப் போன் செய்து விசாரித்தான்.
“மாமி நான் ஆனந்த் பேசறேன். நான் நிறைய நேரமாய் அம்மாவிடம் போனில் பேச முயற்சி செய்து கொண்டே இருக்கிறேன். ஆனால் அம்மா போன் எடுக்கவில்லை. போனில் ஏதாவது கோளாறா, இல்லை அம்மா எங்கேயாவது போயிருக்கிறார்களா என்று தெரியவில்லை. கொஞ்சம் பார்த்து சொல்லுங்களேன்….”
“உங்கம்மா வீட்டைப் பூட்டி விட்டு யாரோ ஒருத்தருடன் ஒரு சூட்கேஸோடு போனதை நான் பார்த்தேனே ஆனந்த்”
“எப்போது?”
“ஒரு நாலு மணி நேரம் இருக்கும். ஏன் ஆனந்த ஏதாவது பிரச்னையா?”
“அப்படி எல்லாம் இல்லை மாமி. எங்கள் சொந்தக்காரர் வீட்டுக்குப் போய் இருப்பார்கள். நான் அங்கே போன் செய்து கொள்கிறேன்…நன்றி…”
ஆனந்த் போனை வைத்தான். அவன் கைகள் லேசாக நடுங்கின. ஸ்பீக்கர் மோடில் பேசியிருந்ததால் அக்ஷயும் பேச்சு முழுவதையும் கேட்டு இருந்தான். ஆனால் அவன் அமைதியாகவே இருந்தான்.
அக்ஷய் கேட்டான். “நிஜமாகவே அம்மா அப்படி போகிற மாதிரி நமக்கு சொந்தக்காரர் யாராவது இருக்கிறார்களா என்ன?…”
“இல்லை…”. ஆனந்த் குரல் பலவீனமாக வந்தது.
சிபிஐ மனிதன் பட்டாபிராமன் என்றழைக்கப்பட்ட மனிதனிடம் போன் பேசி விட்டு திருப்தியுடன் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்தான். பிறகு மந்திரிக்குப் போன் செய்தான். “ஒரு நல்ல செய்தி…”
“என்ன அந்த அமானுஷ்யன் கிடைத்து விட்டானா?”
“இல்லை. அவன் அம்மாவைக் கடத்திக் கொண்டு வந்தாகி விட்டது. இனி அவனும், ஆனந்தும் நம்மிடம் வந்து தானாக வேண்டும்….”
“சென்னையிலிருந்து வரும் போது அந்தம்மாள் ஏதும் பிரச்னை செய்யவில்லையா…”
“மூத்த மகன் அழைத்து இளைய மகனைப் பார்க்க வருவதாய் அந்த அம்மாள் இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கிறாள். மகன்கள் அளவுக்கு அம்மா புத்திசாலி இல்லை போல தெரிகிறது. அந்தம்மாளை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துப் போகச் சொல்லி இருக்கிறேன்….”
மந்திரி திருப்தியுடன் சொன்னார். “நீங்கள் கச்சிதமாக வேலையை செய்து இருக்கிறீர்கள். இனி ஆனந்திடம் பேரம் பேசலாமா?”
“உடனடியாகப் பேசக்கூடாது. அவன் அம்மாவைத் தேடி அலைந்து களைத்து உடைந்து பயந்து போய் இருக்கிற சமயம் பார்த்து பேசினால் தான் உடனே நம் வழிக்கு வருவான். பொறுங்கள். நிதானமாய் பேசலாம்….”
(தொடரும்)