அமானுஷ்யன் – 65

அதிகாலை நான்கு மணிக்கு தங்கள் காருடன் வேறு இரண்டு டாக்சிகளும் வந்து வாசலில் நின்று ஒலியெழுப்பிய போது தான் இப்ராஹிம் சேட் கண் விழித்தார். அவர் வெளியே வந்து பார்த்த போது சகதேவ் மட்டும் பரிதாபமாக காரில் இருந்து இறங்கி மந்திரித்து விட்டவனைப் போல் நின்றான். அவனை அடையாளம் கண்டு பிடிக்க இப்ராஹிம் சேட்டிற்கு சிறிது நேரம் தேவைப்பட்டது. குழப்பத்துடன் அவர் அவனிடம் சரமாரியாகக் கேள்வி கேட்டார். “நீ எப்படி எங்கள் காரில் இருந்து இறங்குகிறாய்? எப்போது எங்கள் காரை எடுத்துக் கொண்டு போனாய்? ஏன் இரண்டு டாக்சிகளை அழைத்து வந்திருக்கிறாய்?”

சகதேவ் கையால் மட்டும் சைகை செய்து காரினுள்ளே பார்க்கச் சொன்னான்.

“நீ எப்போது ஊமையானாய்?” என்று கேட்டபடியே காரினுள் எட்டிப்பார்த்த இப்ராஹிம் சேட் பதறிப்போனார். முன் சீட்டில் அவர் மூத்த மகன் இஸ்மாயில் கழுத்தை சாய்த்துக் கொண்டு ஜடம் போல் அமர்ந்திருந்தான். பின் சீட்டில் அவன் நண்பன் ஜடமாய் படுத்திருந்தான். அவன் கழுத்து ஒரு பக்கத் தோளோடு ஓட்டியது போல் இருந்தது.

அவர்களைப் பார்த்த இப்ராஹிம் சேட்டிற்கு அவனுக்கு என்ன ஆயிற்று, யார் அதைச் செய்தது என்பதை உணர அதிக நேரமாகவில்லை.

பதட்டத்துடன் அவர் சகதேவ் பக்கம் திரும்பினார். “இவர்கள் இரண்டு பேரும் அவனிடம் எப்படிடா மாட்டினார்கள்?”

சகதேவ் பதில் சொல்லாமல் அந்த டாக்சிகளையும் பார்க்கச் சொல்லிக் கை காண்பித்தான். அந்த டாக்சிகளிலும் இரண்டிரண்டாக இருந்த ஜடங்களைப் பார்த்த இப்ராஹிம் சேட் அடைந்த அதிர்ச்சிக்கு அளவேயில்லை. அந்த வாகனங்களை அப்படியே புகழ்பெற்ற தனியார் மருத்துவமனை ஒன்றிற்குத் திருப்பி விட்ட அவர் சகதேவைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு இன்னொரு காரில் பின் தொடர்ந்தார்.

போகும் போது சகதேவிடம் அவர் கேட்டார். “என்னடா நடந்தது?”

சகதேவ் பல முறை முயற்சித்து கடைசியாகப் பேசிய போது சொன்ன முதல் வாக்கியம்- “அவன் மனிதனே அல்ல.”

பின் மெள்ள மெள்ள நடந்ததை அவன் இப்ராஹிம் சேட்டிற்கு அவன் தெரிவித்தான். அவருடைய பிள்ளைகள் போட்ட திட்டம், அவனைப் பயன்படுத்தியவிதம், அக்‌ஷய் வீட்டில் நடந்தது எல்லாவற்றையும் இன்னமும் நம்ப முடியாத கிலியோடு அவன் விவரித்தான்.

கடைசியில் அவன் சொன்னான். “…….ஒட்டு மொத்தமாக ஐந்தாறு நிமிடங்கள் தான் இருட்டில் இருந்தோம். அவன் அதற்குள் ஆறு பேரை இப்படி செய்து விட்டான். விளையாட்டு மாதிரி செய்து முடித்து விட்டான். இவர்களை எல்லாம் காரிற்குத் தூக்கிக் கொண்டு வரக் கூட அவன் உதவி செய்தான்…என் கையில் இருந்த பத்தாயிரத்தையும், இஸ்மாயில் அண்ணன் எனக்குக் கொடுக்கக் கொண்டு வந்திருந்த நாற்பதாயிரத்தையும் பிடுங்கிக் கொண்டு விட்டான்…”

அவன் இழந்த பணத்தைப் பற்றிச் சொன்ன போது மட்டும் அவனுக்கு நாக்கு தழுதழுத்தது. ஆறு பேர் இந்த நிலைக்காளானதைச் சொன்ன போது இல்லாத துக்கம் ஐம்பதாயிரக் கணக்கைச் சொன்ன போது மட்டும் அவனுக்கு வந்ததைக் கவனித்தார் இப்ராஹிம் சேட். முட்டாள்தனமான ஒரு திட்டம் தீட்டிய தன் மகன்கள் உதவிக்கு இப்படிப்பட்ட ஒரு அறிவுக் கொழுந்தையும் உபயோகித்து இப்படியொரு நிலைமைக்கு ஆளாகிக் கிடப்பதை எண்ணுகையில் அவருக்கு வாழ்க்கையே வெறுத்துப் போனது.

டாக்டர்கள் கையை விரித்தார்கள். பாதிக்கப்பட்ட ஆறு பேர்களில் ஒவ்வொருடைய பாதிப்பிலும் சிறிய சிறிய வித்தியாசம் இருந்ததாகத் தெரிவித்தார்கள். மூளைக்குச் செல்லும் சில நரம்புகளில் நுணுக்கமான சில முடிச்சுகள் விழுந்திருப்பதாகச் சொன்னார்கள். ஆபரேஷன் செய்தாலும் அதன் வெற்றிக்கு சுமார் முப்பது சதவீதம் தான் வாய்ப்பு இருப்பதாகச் சொன்னார்கள். சிறு சிறு அசைவு ஏற்பட்டாலும் தாங்க முடியாத வலியில் அவர்கள் துடித்தாலும் வாய் விட்டுச் சொல்ல முடியாத பரிதாபகரமான நிலையில் அவர்கள் கிடப்பதைப் பார்க்கப் பார்க்க இப்ராஹிம் சேட்டின் வயிறு பற்றி எரிந்தது.

இது போன்ற நிலைமைக்குத் தன் மகன்களை ஆக்கி விட்ட அக்‌ஷயை சும்மா விட்டால் தொழிலில் தனக்கு சிறிதும் மதிப்போ, மரியாதையோ இருக்காது என்பதை உணர்ந்த இப்ராஹிம் சேட் அக்‌ஷயை உடனடியாகத் தீர்த்துக் கட்ட முடிவு செய்தார். இது வரை கிடைத்த அனுபவ அறிவு அவன் அருகில் ஆட்களை அனுப்புவது இது போல ஜடங்களாக அவர்களை மாற்றத் தான் உதவும் என்று அவருக்குச் சொன்னது. அதனால் அவன் இருக்கும் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்து அவனைக் கொல்ல அவர் முடிவு செய்தார்.

அவர்கள் தொழிலில் இது வரை வெடிகுண்டுகள் பயன்படுத்தி இருக்காததால் வெளியே இருந்து ஒருவனை வரவழைத்து அந்த வேலையை ஒப்படைத்தார். இரண்டு மணி நேரத்தில் தாதாவான உஸ்மான் பாயின் போன் அவருக்கு வந்தது. வெடிகுண்டுகளின் இலாகா அவருடையது, அந்த விஷயத்தில் அவருக்குத் தெரியாமல், அவருடைய ஒப்புதல் இல்லாமல், மும்பையில் யாரும் எங்கும் குண்டு வைக்க முடியாது என்கிற அளவு எல்லாவற்றையும் அவர் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். எனவே அவருக்குத் தகவல் கிடைத்ததும் உடனடியாகப் போனில் இப்ராஹிம் சேட்டிடம் சொன்னார்.

“இப்ராஹிம், உங்கள் மகன்களுக்கு மூளை இல்லை என்பது தெரிந்த விஷயம். ஆனால் உங்களிடம் இருந்து நான் இதை எதிர்பார்க்கவில்லை. அக்‌ஷய் வீட்டுக்கு வெடிகுண்டு வைத்தாலும் அவன் சாவானா என்பது வேறு விஷயம். அவன் வீட்டில் வெடிகுண்டு வெடித்தால் அதை இந்து முஸ்லிம் கலவரமாக மாற்ற அரசியல் கட்சிகள் எல்லா வேலைகளும் செய்யும். போலீஸ் கெடுபிடி, காவல் எல்லாம் மும்பையில் அதிகமாகும். அது நான் நடத்தும் தொழிலிற்கு நிறையவே இடைஞ்சல் செய்யும். அதனால் இந்த வெடிகுண்டு திட்டம் மட்டும் விட்டு நீங்கள் வேறு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். அதில் நான் தலையிட மாட்டேன்….”

அவரவருக்கு அவரவர் இலாப நஷ்டங்கள் பெரிது. இப்ராஹிம் சேட்டின் தனிப்பட்ட இலாப நஷ்டங்கள் பற்றி மற்றவர்களுக்கு அக்கறை இல்லை. இப்ராஹிம் சேட் இடிந்து போனார். இத்தனை வருடமாக வெற்றிகரமாக இயங்கி வந்த அவரிடம் அறிவு, அதிகாரம், அனுபவம், பணம் இருந்தும் சாமியார் என்று நினைத்திருந்த ஒரு இளைஞனிடம் தோற்றுப் போனதை இப்ராஹிம் சேட் உணர்ந்தார்.

வேறு வழியில்லாமல் அக்‌ஷயைப் பழிவாங்குவதை விட்டு விட்டு தன் மகன்களைக் காப்பாற்றும் வழிகளைப் பார்க்க ஆரம்பித்தார். ஆனது ஆகட்டும் என்று டாக்டர்களிடம் மூத்த இரு மகன்களுக்கு ஆபரேஷன் செய்யச் சொன்னார். நடந்த ஆபரேஷன் தோல்வியடைந்து இருவரும் கோமா நிலைக்குச் சென்றனர். இனி மரணம் எப்போது நிகழும் என்பதை டாக்டர்களாலும் சொல்ல முடியவில்லை. இப்ராஹிம் சேட் பாதி இறந்து போனார் என்றே சொல்ல வேண்டும்.

மூன்றாவது மகன் அஷ்ரபிற்கு ஆபரேஷன் செய்வது உசிதமில்லை என்பது புரிந்து வேறு வழிகளை ஆராய்ந்தார். ரிஷிகேசில் ஒரு வர்மக்கலை வல்லவர் இருக்கிறார் என்றும் அவர் உதவியைப் பெறுவது நல்லது என்றும் நண்பர் ஒருவர் தெரிவிக்க இப்ராஹிம் சேட் உடனடியாக அவரை விமானம் மூலமாக மும்பைக்கு வரவழைத்தார்.

அந்த வர்மக்கலை வல்லுனர் ஆபரேஷன் ஆகி கோமாவில் இருக்கும் இஸ்மாயிலையும், அமானுல்லாவையும் பார்த்தவுடனேயே இனி ஒன்றும் யாராலும் செய்வதற்கில்லை என்று சொல்லி விட்டார். “கத்தி பட்டால் உடல் உறுப்புகள் தங்கள் பிராணசக்தி பெருமளவை இழக்கின்றது. அதுவும் மூளைக்குச் செல்லும் நரம்புகள் வெகு நுட்பமானவை. இனி அவற்றை சரி செய்ய முடியாது……”என்று ஏதேதோ சொல்லிக் கொண்டு போனார். இப்ராஹிம் சேட்டிற்கு எதுவும் புரியவில்லை. தலையை மட்டும் ஆட்டினார்.

அந்த ஆளை மூன்றாவது மகனிடம் அழைத்துப் போனார். அஷ்ரபை சற்று நேரம் சோதித்து பார்த்த அவர் அதிசயித்தார். “மனித உடலின் முழு சூட்சுமங்களையும் உணர்ந்த ஒரு நபர் இதைச் செய்திருக்கிறார். இந்த அளவு நுணுக்கமான வேலையை நான் இது வரை பார்த்ததில்லை. இதை சரி செய்யும் வேலையையும் அவரிடமே காலில் விழுந்தாவது ஒப்படையுங்கள். உங்கள் மகனை அவரைத் தவிர வேறு யாரும் காப்பாற்ற முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.”

இப்ராஹிம் சேட் பேச்சிழந்து போனார். பின் அவர் நடைப்பிணம் போல் ஆனார். சரியாக சாப்பிடவில்லை. யாரிடமும் பேசவில்லை. ஆஸ்பத்திரியில் ஐசியூ விற்கு வெளியே கல்லைப் போல் அமர்ந்திருந்தார். அவர் மனைவி சாய்ரா பானு அடைந்த துக்கத்திற்கு அளவேயில்லை. வேண்டிய அளவு அழுது தீர்த்தாள் அவள். பிறகு அவளுடைய குழந்தைகளின் தற்போதைய நிலையையும், அவள் கணவர் விரக்தியின் உச்சக்கட்டத்தில் அமர்ந்திருப்பதையும் கண்டு யோசித்து விட்டு கடைசியில் கணவரிடம் சொன்னாள். “அந்த ஆள் சொன்னது போல அக்‌ஷயிடம் போய்க் கெஞ்சினால் என்ன?”

இப்ராஹிம் சேட் வரண்ட குரலில் சொன்னார். “கெஞ்சப் போனவனும் இந்த மாதிரி ஜடமாய் தான் திரும்பி வரவேண்டி இருக்கும்”

“அந்தப் பையன் நல்லவன். நம் பிள்ளைகள் போல் அல்ல. வேண்டுமானால் நான் போய்க் கேட்கட்டுமா?”

இப்ராஹிம் சேட் ஒன்றுமே சொல்லாமல் மனைவியை வெறித்துப் பார்த்தார்.

அவர் மௌனத்தையே சம்மதமாக எடுத்துக் கொண்டு சாய்ரா பானு தனியாக அக்‌ஷயைப் பார்க்கச் சென்றாள்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top