இஸ்மாயில் சொன்னதைக் கேட்டு அவனது சகோதரர்கள் பரபரப்படைந்தார்கள்.. ”என்ன வழி?”
இஸ்மாயில் பெருமிதத்துடன் தன் திட்டத்தைச் சொன்னான்….
அக்ஷய் வீட்டில் பல ஆண்டுகளாக வேலை பார்க்கும் பீம்சிங் ஒருவன் தான் இன்னமும் அந்த வீட்டில் வேலை செய்கிறான். நாகராஜன் குடும்பத்திற்கு அவன் மேல் பரிபூரண நம்பிக்கை உள்ளது. அவனுக்கு நெருங்கிய உறவினரான சகதேவ் என்கிற இளைஞனை இஸ்மாயில் நன்றாக அறிவான். அந்த சகதேவ் லூதியானாவின் அருகே ஒரு கிராமத்தில் வசிக்கிறான். அவன் மும்பை வரும் போதெல்லாம் பீம்சிங்கைப் பார்த்து பேசி அக்ஷய் வீட்டில் இரவு தங்கி மறு நாள் காலை போவது வழக்கம். அவனை சில்லறை வேலைகளுக்கு இஸ்மாயில் சில முறை உபயோகப்படுத்தியும் இருக்கிறான். அவன் பணத்திற்காக எதுவும் செய்யும் ரகத்தைச் சேர்ந்தவன்.
அவனை வரவழைத்து ஒரு நாள் இரவு வழக்கம் போல் அக்ஷய் வீட்டில் தங்க வைத்து நள்ளிரவில் வீட்டுக் கதவை ரகசியமாகத் திறந்து விடச் சொல்லி ரகசியமாக உள்ளே நுழைந்து உறங்கிக் கொண்டிருக்கும் அக்ஷயை (அருகில் செல்லாமல் தூரத்தில் இருந்தே) சுட்டுக் கொன்று விடலாம் என்பது தான் இஸ்மாயிலின் திட்டமாக இருந்தது. கேட்டு விட்டு இஸ்மாயிலை சகோதரர்கள் பெருமையுடன் பாராட்டினார்கள்.
இஸ்மாயில் சக்தேவிற்குப் போன் செய்து வரவழைத்தான். வீட்டுக்குள் இருந்து கதவைத் திறக்கும் வேலைக்கு ஐம்பதாயிரம் ரூபாய் தருவதாகச் சொன்ன போது சகதேவிற்குத் தன் அதிர்ஷ்டத்தை நம்ப முடியவில்லை. முன் பணமாக இஸ்மாயில் சகதேவிற்கு பத்தாயிரம் ரூபாயைத் தந்தான். கதவைத் திறந்த கையில் மீதி நாற்பதாயிரம் தருவதாக இஸ்மாயில் வாக்களித்தான்.
நாகராஜனும் மனைவியும் கொல்லப்பட்டதை மட்டும் பத்திரிக்கைகளில் படித்து அறிந்திருந்த சகதேவிற்கு நாகராஜனைக் கொன்றவர்களின் தற்போதைய நிலை தெரிந்திருக்கவில்லை. இஸ்மாயில் சகோதரர்களும் அதைச் சொல்லி பயமுறுத்த விரும்பவில்லை. சகதேவிற்கு நாகராஜனின் மகனையும் சொர்க்கத்திற்கு அனுப்புவதில் எந்த ஆட்சேபணையும் இல்லாத காரணத்தால் அவன் மகிழ்ச்சியுடன் அன்று மாலையே அக்ஷய் வீட்டிற்குப் போனான்.
ஒரு காலத்தில் குறைந்தது நாலைந்து தடியர்களாவது அந்த வீட்டுக்கு வெளியே பாதுகாவலுக்கு இருப்பார்கள். இன்றோ வீடு வெறிச்சென்று இருந்தது. குறைந்த பட்சம் இரண்டு மூன்று நாய்களையாவது காவலுக்கு வைத்திருக்கலாம், அந்த அறிவு கூட இல்லை இந்த சாமியார்ப் பையனுக்கு என்று நினைத்துக் கொண்டே சகதேவ் அந்த வீட்டின் கதவைத் தட்டினான்.
கதவைத் திறந்த பீம்சிங் ஆழ்ந்த துக்கத்தில் இருந்தான். நீண்ட காலமாக நாகராஜனிடம் வேலை பார்க்கும் அவனுக்கு அது வேலை செய்கிற வீடு என்கிற மனோபாவத்தை நாகராஜன் குடும்பத்தினர் ஏற்படுத்தியதில்லை. குடும்பத்தினரில் ஒருவன் போலவே இருந்த பீம்சிங்கிற்கு அநியாயமாக தன் எஜமானரையும், எஜமானியையும் கொன்றதில் தாங்க முடியாத துக்கம் இருந்தது. தன் உறவினனான சகதேவை வரவேற்று ஊரில் அனைவரும் சௌக்கியமா என்று கேட்டு விட்டு பின் பீம்சிங் பேசியதெல்லாம் நாகராஜனைப் பற்றியும், திலகவதியைப் பற்றியும் தான்.
கேட்டு காது புளித்துப் போன சகதேவ் அக்ஷயைப் பற்றி விசாரித்தான்.
“அக்ஷய் தங்கமான பையன். எப்படியோ மனதைத் தேற்றிக் கொண்டு எந்திரம் மாதிரி இருக்கிறான். சின்னதில் இருந்தே மனதில் இருப்பதை சட்டென்று வெளியே சொல்ல மாட்டான். பாவம் எப்போதாவது வெளியே போய் விட்டு வருவான். பின் அவன் அறையிலேயே ஐக்கியமாகி விடுகிறான்…..”
இன்றிரவே சாகப் போகும் அக்ஷயிற்காகவும் நாளை நீ துக்கப்படப் போகிறாய் என்று பீம்சிங்கைப் பார்த்து நினைத்த சகதேவ் சொன்னான். “நானும் எத்தனையோ நாள் இந்த வீட்டில் சாப்பிட்டு இருக்கிறேன். அதனால் அக்ஷயைப் பார்த்து துக்கம் விசாரித்து விட்டுப் போவது தான் முறை என்று வந்தேன்.”
பீம்சிங் அக்ஷயின் அறைக்கு சகதேவைக் கூட்டிக் கொண்டு போனான். சகதேவ் தெரிவித்த அனுதாபங்களைப் பெற்றுக் கொண்ட அக்ஷயிடம் சகதேவ் மிக அக்கறை உள்ளவன் போல எச்சரிக்கையும் செய்தான். “சார். நீங்களும் ஜாக்கிரதையாக இருங்கள். உங்கள் அப்பாவின் எதிரிகள் உங்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்”.
அக்ஷய் தத்துவம் பேசினான். “சகதேவ் என் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் ஆயுள் முடிந்து விட்டது. இப்படி ஆகி விட்டது. எனக்கும் ஆயுள் இவ்வளவு என்று கடவுள் என்றோ தீர்மானித்திருப்பான். அந்த நேரத்திற்கு முன்னாலும் நான் சாக முடியாது. அதற்கு அப்புறமாகவும் நான் சாக முடியாது. அதனால் நான் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை”
சொன்ன போது நிஜமாகவே அவன் முகத்தில் தெரிந்த கவலையின்மை சகதேவிற்கு அவனை ஏளனமாக நினைக்கத் தோன்றியது. ”அட முட்டாளே. தத்துவம் பேசியே இன்றைக்கு இரவு உயிரை விடப் போகிறாயடா” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.
அன்றிரவு இஸ்மாயில் தன் சகோதரர்கள் மற்றும் மூன்று நண்பர்களுடன் தன் வீட்டை விட்டு இரவு ஒரு மணிக்கு மேல் கிளம்பினான். இப்ராஹிம் சேட் அறிந்தால் கண்டிப்பாக விட மாட்டார் என்பதால் அவருக்குத் தெரியாமல் கிளம்புவதில் அவர்கள் மிகவும் கவனமாக இருந்தார்கள். அக்ஷயின் வீட்டுக்கு அவர்கள் வந்து சேர்ந்த போது மணி நள்ளிரவு இரண்டாகி இருந்தது.
சகதேவ் மீதி நாற்பதாயிரம் வாங்கும் ஆர்வத்தில் உறங்காமல் அவர்களுக்காக காத்திருந்தான். பீம்சிங் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான். அக்ஷயும் இரவு உணவு முடிந்த உடனேயே மூன்று நான்கு கொட்டாவிகள் விட்டு மறுபடியும் தன் அறைக்கு உறங்கப் போய் விட்டான். அதனால் சகதேவன் ஜன்னல் வழியே பார்த்த படி அவர்கள் இஸ்மாயில் வரவிற்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தான்.
அவர்கள் காரை தெரு முனையிலேயே நிறுத்தி விட்டு வந்தார்கள். அவர்களுக்காக காத்திருந்த சகதேவ் சத்தமில்லாமல் கதவைத் திறந்தான். அந்த வீட்டில் அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் அது வரை ஒளி தந்து கொண்டு இருந்த ஜீரோ வாட்ஸ் பல்பும் அணைந்து கும்மிருட்டு பரவியது.
அடுத்த கணம் இஸ்மாயிலின் நண்பன் “ஆ” என்று அலறினான்.
“ஏன் பயப்படுகிறாய்? இரு செல் போன் லைட்டைப் போடுகிறேன்” என்று அமானுல்லா சொன்னான். அந்த நண்பன் குரல் அதற்கு மேல் கேட்கவில்லை. அமானுல்லா செல் போனை எடுக்க யாரோ அதைத் தட்டி விட்டார்கள். அந்த செல்போன் கீழே விழுந்தாலும் சில வினாடிகள் வெளிச்சத்தைத் தந்தது.
அந்த வெளிச்சத்தில் தான் ஆ என்று அலறிய இஸ்மாயிலின் நண்பன் கீழே விழுந்து கிடப்பதைப் பார்த்தார்கள். அந்த அரையிருட்டில் ஏதோ நிழல் போல ஒரு உருவம் லாவகமாய் அசைந்ததை இஸ்மாயில் பார்த்தான். அடுத்த படியாக அமானுல்லா தடாலென்று கீழே சரிந்தான்.
நடப்பது என்ன என்று இஸ்மாயிலிற்குப் புரிவதற்குள் மேலும் இரண்டு நண்பர்களும் அலறியபடி சுவரில் சாய்ந்து சிலை போல நின்றார்கள். கீழே விழுந்திருந்த செல்போன் வெளிச்சம் தருவதை நிறுத்தியது. இஸ்மாயிலும், அவனுடைய கடைசித் தம்பி அஸ்ரஃபும் தங்களை கழுத்தருகே யாரோ லேசாகத் தட்டியது போல உணர்ந்தார்கள். உடனடியாக அவர்களும் அலறியபடி செயல் இழந்தார்கள்.
சிறிது நேரத்தில் ஜீரோ வாட்ஸ் பல்பு மீண்டும் எரிய ஆரம்பித்தது. சகதேவ் தான் காண்பது கனவா இல்லை நனவா என்று அறியாமல் திகைத்தான். தரையில் இருவர், சுவரில் சாய்ந்தபடி இருவர், சிலை போல் நின்றபடி இருவர் ஏதோ மந்திரத்தால் கட்டுண்டது போல ஏன் நிற்கிறார்கள், இவர்களுக்கு என்ன ஆயிற்று என்று புரியாமல் விழித்தவன் பார்வையைத் திருப்பிய போது சற்று தள்ளி அக்ஷய் அமைதியாக அங்கு நிற்பதைக் கண்டான்.
சகதேவிற்கு மெல்ல எல்லாம் புரிய ஆரம்பித்தது. விளக்கு தானாக அணையவில்லை. அக்ஷய் தான் மெயினை ஆஃப் செய்திருக்கிறான். அப்படி என்றால் அவர்கள் வருவார்கள் என்பதை முன்னமே அக்ஷய் ஊகித்து வைத்திருக்கிறான். பேசியது தத்துவமாக இருந்தாலும் செயல்பாடு எல்லாம் நேர் எதிராக இருந்திருக்கிறது. ஆனால் சகதேவிற்குப் புரியாத ஒரு விஷயம் இருந்தது. ‘இந்த இருட்டில், இத்தனை குறுகிய நேரத்தில், இந்த ஆறு பேரையும் என்ன செய்து இந்த நிலைக்கு ஆளாக்கி இருக்கிறான்?’
அக்ஷய் ஆக்ரோஷத்தில் இருந்திருந்தாலோ, மூச்சிரைக்க நின்றிருந்தாலோ அது இயல்பாக சகதேவிற்குத் தோன்றியிருக்கும். ஆனால் எந்த வித சலனமும் இல்லாமல் சமபந்தமில்லாத நிகழ்வுகளை அசுவாரசியத்துடன் வேடிக்கை பார்க்கும் நபர் போல அவன் நின்றிருந்தது சகதேவின் அடி வயிற்றைக் கலக்கியது.
அக்ஷய் கேட்டான். “கதவைத் திறக்க அவன் உனக்கு எவ்வளவு கொடுத்தான்?’
சகதேவிற்கு வியர்க்க ஆரம்பித்தது. நாக்கு உள்ளே ஒட்டிக் கொண்டது போல இருந்தது. பரிதாபமாக அக்ஷயைப் பார்த்தான்.
”ஏன் அவர்களை மாதிரியே உன்னையும் ஏதாவது செய்தால் தான் நீ வாயைத் திறப்பாயா?”
சகதேவின் கிலி பன்மடங்காக உயர்ந்தது. நடுக்கத்துடன் கஷ்டப்பட்டு நாக்கை அசைத்தான். “பத்தாயிரம்”
“வெறும் பத்தாயிரமா?”
எச்சிலை மென்று விழுங்கிய சகதேவ் சொன்னான். “கதவைத் திறந்த கையோடு இன்னும் நாற்பதாயிரம் தருவதாய் சொன்னார்”
“தந்தானா?”
“இல்லை. அதற்குள் ……”
“மகாபாவி. நீ விளங்க மாட்டாய்” – உறக்கத்தில் இருந்து எழுந்து வந்து எல்லாவற்றையும் அறிந்த பீம்சிங் சபித்துக் கொண்டே அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.
அக்ஷய் அமைதியாகச் சொன்னான். “சகதேவ் நீ உன் நண்பர்களைக் கூட்டிக் கொண்டு போய் அவர்கள் வீட்டில் விட்டு விடு”.
(தொடரும்)