அமானுஷ்யன் – 63

முதல் தகவல் ஐந்தாம் நாள் அதிகாலை ஆறு மணிக்கு இப்ராஹிம் சேட்டிற்குக் கிடைத்தது. நாகராஜனை சுட்டுக் கொன்ற நபர்களில் ஒருவனை உடனடியாக ஆஸ்பத்திரிக்குப் போய் அவர் பார்த்தார். உயிர் இருக்கிறது என்பதற்கு அறிகுறியாக அவன் கண்கள் மட்டும் அசைந்தன. மற்றபடி அவன் ஜடம் போல் அசைவற்றுப் படுத்திருந்தான். அவன் கண்களில் பயம் மட்டுமே தெரிந்தது.

இப்ராஹிம் சேட் அவன் கூட இருந்தவர்களை விசாரித்தார். வழக்கம் போல் காலை டீ குடிக்க வெளியே சென்றவன் இந்த நிலையில் தெருவில் விழுந்திருந்தான் என்றும் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை என்றும் சொன்னார்கள்.

அடுத்த போன் காலை எட்டரை மணிக்கு வந்தது. நாகராஜனை சுட்டுக் கொன்ற இன்னொரு நபர் கழுத்தில் ஏதோ நரம்பு பிசகி தாங்க முடியாத வலியில் துடித்துக் கொண்டிருக்கும் தகவல் அது. மூளைக்குச் செல்லும் ஏதோ நரம்பும் சம்பந்தப்பட்டு இருப்பதால் ஏதோ பெருத்த சேதாரம் உள்ளே ஏற்பட்டிருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அபிப்பிராயம் தெரிவித்ததாகச் சொன்னார்கள். அவன் என்னைக் கொன்று விடுங்கள் என்று மனமுருகக் கெஞ்சுவதாகச் சொன்னார்கள்.

மூன்றாவது போன் ஒன்பது முப்பத்தைந்திற்கு வந்தது. நாகராஜனைக் கொல்லச் சென்ற இன்னொரு ஆள் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாகத் தகவல் சொன்னார்கள். என்ன ஆயிற்று என்று ஒருவருக்கும் தெரியவில்லை. உடலில் எந்த விதக்காயமும் இல்லை. ஆனால் உயிர் பிழைப்பது கஷ்டம் என்று சொன்னார்கள்.

இப்ராஹிம் சேட் அடுத்ததாக போன் மணி அடித்த போது பேசத் துணியவில்லை. என்ன நடக்கிறது என்பதை ஊகிக்க அவருக்கு அதிக நேரம் தேவைப்படவில்லை. மகன்களை அழைத்துச் சொன்னார். “அவன் உணமையைத் தெரிந்து கொண்டு விட்டான் என்றே தோன்றுகிறது. எனவே சிறிது காலம் கண் காணாத இடத்திற்குப் போய் தங்கி விட்டு வாருங்கள்.”

மகன்கள் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. அவர்கள் அப்போதும் அவன் தங்களை எதுவும் செய்து விட முடியாது என்று நம்பினார்கள். அவன் தங்கள் அருகில் கூட வர முடியாது என்று திடமாக எண்ணினார்கள். “அவன் அருகில் வரும் வரை எங்கள் கைகள் பூப்பறித்துக் கொண்டு இருக்குமா என்ன? அவனைத் தூரத்தில் பார்த்தவுடனே சுட்டுத் தள்ளி விடுவோம்” என்றனர்.

தன் அனுமதி இல்லாமல் எந்த முட்டாள்தனத்தையும் செய்து விட வேண்டாம் என்று மகன்களை எச்சரித்த அவர் மகன்களை வீட்டை விட்டு எங்கும் வெளியே போகக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்தார். குடும்பத்தினருக்கு காவலை அதிகப்படுத்தினார்.

ஐந்தாம் நாள் இறுதிக்குள் ஏழு பேர் கத்தியின்றி ரத்தமின்றி பெரிய மரணாவஸ்தையை அனுபவித்துக் கொண்டிருக்கும் செய்தி கிடைத்தது. அவர்கள் அனைவரும் நாகராஜனைக் கொல்லச் சென்றவர்கள் தான். அவர்கள் மரணமே மேல் என்று நினைக்கும் படியான நிலைமையில் இருந்தனர். டாக்டர்கள் அவர்களுக்கு எப்படி அறுவை சிகிச்சை செய்தாலும் மூளையின் செயல்பாட்டை அது பாதிக்காமல் இருக்க வாய்ப்பில்லை என்று சொன்னார்கள்.

மகன்கள் சொன்னது போல இந்த ஆட்கள் ஏன் எதுவும் செய்யவில்லை என்ற சந்தேகம் இப்ராஹிம் சேட்டிற்கும் வந்தது. அவன் அருகே வரும் வரை இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? இந்தத் தொழிலில் எப்போதும் எதிரியின் தாக்குதலை எதிர்கொள்ளும் நிலையில் அல்லவா இருப்பார்கள். அப்படியிருக்கையில் எப்படி….?

அந்த ஏழு பேர் குடும்பத்தினரையும் சுற்றி இருந்தவர்களையும் நன்றாக விசாரித்த போது அந்த ஏழு பேருமே அவன் அருகில் வந்ததை அறியவில்லை என்றார்கள். ஏழு பேர்களில் மூன்று நபர்களுக்கு அருகில் இருந்தவர்கள் மட்டும் அவனைக் கவனித்ததைச் சொன்னார்கள்.

இப்ராஹிம் சேட் சந்தேகத்தோடு கேட்டார். “பார்த்தவர்கள் எப்படி அவனை நெருங்க விட்டீர்கள்?”

“அவன் தான் என்பது மூளைக்கு எட்டும் முன்னாலேயே அவன் வந்து வேலையை முடித்தும் விட்டான். அதுவும் அவன் லேசாகத் தொட்ட மாதிரி தான் இருந்தது. ஆனால் விளைவு இப்படி இருக்கும் என்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. என்ன நடக்கிறது என்று நாங்கள் புரிந்து கொள்வதற்கு முன்னாலேயே அவன் போயும் விட்டான்.”

இப்ராஹிம் சேட் முதல் முறையாக தன் கணக்கு பொய்த்து விட்டதை உணர்ந்தார். சாமியாராகப் போகப் போகும் ஒற்றை மனிதன் என்று நினைத்தவன் பெரிய சைத்தானாக இருப்பான் என்று கனவிலும் நினைக்கவில்லை.

அக்‌ஷய் உயிருடன் இருக்கும் வரை தன் குடும்பத்தினர் அபாயத்திலேயே இருக்க நேரிடும் என்ற உண்மை அவருக்கு நன்றாகவே உறைத்தது. பகைமையில் பாக்கி வைப்பதும் தீயில் மிச்சம் வைப்பதும் பேராபத்து என்று உணர்ந்த அவர் அக்‌ஷயைக் கொன்று விடத் தீர்மானித்தார். அதற்கென அவர் தகுந்த ஆட்களை அணுகிய போது அவர்கள் பின் வாங்கினர்.

“எவ்வளவு வேண்டுமானாலும் நான் பணம் தருகிறேன். எனக்கு நீங்கள் வேலையை முடித்துக் கொடுத்தால் போதும்.” என்று இப்ராஹிம் சேட் சொன்ன போது அவர்கள் சொன்னார்கள். “பணத்தை செலவு செய்கிற நிலையிலாவது இருக்க வேண்டுமல்லவா?”. அந்த ஏழு பேர் ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் இருப்பதைப் பார்த்தவர்கள் அவர்கள். அக்‌ஷய் வசிக்கும் தெரு அருகில் செல்லக் கூட அவர்கள் விரும்பவில்லை.

கடைசியில் தங்களுக்கும் பெரிய தாதாவான உஸ்மான் பாயை இப்ராஹிம் சேட் அணுகினார். இப்ராஹிம் சேட், நாகராஜன் சாம்ராஜ்ஜியம் மும்பை, பூனே மற்றும் அருகே உள்ள பகுதிகளில் வெற்றிகரமாக இயங்கியது என்றால் உஸ்மான் பாயின் செல்வாக்கு நாடெங்கும் இருந்தது மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் இருந்தது. அல்கொய்தா தீவிரவாதிகளிடம் கூட அவருக்கு செல்வாக்கு இருப்பதாக மும்பையில் பலர் உறுதியாக நம்பினார்கள்.

ஆனால் உஸ்மான் பாய் இப்ராஹிம் சேட்டிடம் தயவு தாட்சண்யம் இல்லாமல் சொன்னார். “இப்ராஹிம், நம் தொழில் சுத்தமில்லாதது தான். ஆனால் நமக்கு கூட சொல்லப்படாத சில விதிமுறைகள் இருக்கின்றன. நாம் நண்பர்களிடமும், நம்மை நம்பி வந்தவர்களிடமும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டியவர்கள். நாகராஜன் உங்களை ஏமாற்றவில்லை, காட்டிக் கொடுக்கவில்லை, உங்கள் வழியில் குறுக்கே நிற்கவில்லை. ஆனாலும் நீங்கள் அவரைக் கொன்றதை நீங்கள் எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. அவர் மகன் நடவடிக்கை எதிலும் நான் தவறு காணவில்லை. இன்னும் சொல்லப் போனால் எனக்கு அவனைப் பாராட்டவே தோன்றுகிறது. அவன் மட்டும் நம் தொழிலில் இருந்திருந்தால் அவனை எப்பாடு பட்டாவது என் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளப் பார்த்திருப்பேன்.”

உஸ்மான் பாயின் சொற்கள் ஈட்டியாக இப்ராஹிம் சேட் மனதில் பாய்ந்தன. மகன்கள் பேச்சைக் கேட்டு நடந்து கொண்ட விதத்திற்காக அந்தக் கணம் உண்மையாகவே வருந்தினார். ஆனால் இனி நடந்தது எதையும் மாற்ற இயலாத நிலையில் ஆரம்பித்ததை முடித்தே விட வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்தார். அக்‌ஷயிடம் இருந்து தன் குடும்பத்தைக் காப்பாற்றுவது எப்படி என்று யோசிக்க ஆரம்பித்தார்.

உஸ்மான் பாய் கூட கை விரித்து விட்டார் என்று கேள்விப்பட்டவுடன் இப்ராஹிம் சேட்டின் மகன்கள் தந்தைக்குத் தெரியாமல் கலந்தாலோசித்தனர். இஸ்மாயில் தம்பிகளிடம் சொன்னான். “அவன் வர்மக்கலையில் எல்லா வித்தைகளையும் இமயமலையில் இருந்து கற்றுக் கொண்டு வந்திருக்கிறான் என்று ஆட்கள் சொல்கிறார்கள். நாம் எதிர்பார்த்ததை விட அவன் சாமர்த்தியசாலியாகத் தான் இருக்கிறான். ஆனாலும் நாம் இப்படி வீட்டில் அடைபட்டு உட்கார்ந்து கொண்டிருப்பது எத்தனை நாளுக்கு நடக்கும். நம் ஆட்கள் கூட நம்மை கேலியாகப் பேசுகிறார்கள். அவன் எப்போது வருவான் என்று பயந்து பயந்து ஒளிந்திருப்பதை விட அவனைக் கொன்று விட்டு நாம் நிம்மதியாக இருப்பது தான் புத்திசாலித்தனம்.”

அமானுல்லா சொன்னான். “ஆனால் அவனைக் கொல்ல யாரும் முன் வர மாட்டேன்கிறார்களே.”

இஸ்மாயில் சொன்னான். “அப்படியானால் நாமே அந்த வேலையைச் செய்ய வேண்டியது தான். அவனுக்கு அவன் அப்பனைக் கொன்றதில் நம் பங்கு இருக்கிறது என்பது தெரிந்த பிறகு அவனிடம் நாம் நடிக்க என்ன அவசியம் இருக்கிறது?.”

“சரி நாம் அவனை எப்படிக் கொல்வது?”

“அவன் தூங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் நாம் அவன் வீட்டுக்குப் போய் சுட்டுக் கொன்று விடுவது தான் சுலபமான வழி. அவன் விழித்துக் கொண்டிருக்கும் போது தானே அபாயமானவன்.”

“அவன் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவனுக்குத் தெரியாமல் வீட்டுக்குள்ளே போவதெப்படி?”

இஸ்மாயில் பெருமையாகச் சொன்னான். “அதற்கு நான் ஒரு வழி கண்டு பிடித்திருக்கிறேன்.”

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top