அக்ஷய் மும்பை வந்து சேர்ந்த போது அவன் பெற்றோர் இருவரும் உயிருக்குப் போராடிய நிலையில் ஆஸ்பத்திரியில் இருந்தார்கள். அக்ஷய் அவர்களைப் பார்க்கும் முன் டாக்டரைப் பார்த்து கேட்டான். “டாக்டர் அவர்கள் இரண்டு பேரும் உயிர் பிழைக்க ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா? ஏதாவது செய்து காப்பாற்ற முடியுமா?”
டாக்டர் அவனை வருத்தத்துடன் பார்த்து சொன்னார். “இல்லை. அவர்கள் இந்த நேரம் வரை பிழைத்திருப்பது கூட மருந்தின் சக்தியால் அல்ல. இறப்பதற்கு முன் உன்னைப் பார்த்தாக வேண்டும் என்று கஷ்டப்பட்டு உயிரைத் தக்க வைத்துக் கொண்டிருப்பது போல் இருக்கிறது தம்பி. முதலில் அவர்களைப் பார்க்க சீக்கிரம் போ.”
அக்ஷய் முதலில் திலகவதியைப் பார்த்தான். திலகவதி பேசும் நிலைமையில் இருக்கவில்லை. மகனை மலர்ந்த முகத்துடன் கண்ணாரப் பார்த்தாள். ”அம்மா” என்று அழுகையினூடே அவன் அழைத்ததைக் கேட்டு பதிலாக லேசாகப் புன்னகை செய்தபடியே இறந்து போனாள்.
நாகராஜன் தன் சர்வ சக்தியையும் திரட்டிக் கொண்டு மகனிடம் விட்டு விட்டுப் பேசினார். “உனக்குப் பிடிக்காத தொழிலை… விட்டு விட நினைத்தேன்…விட்டு விட்டு உன்னுடன் அமைதியாக வாழ ஆசைப்பட்டோம்….. விதி விடவில்லை….”
அக்ஷய் அவரது கைகளைப் பிடித்துக் கொண்டு குழந்தையைப் போல அழுதான். அவர் அழக்கூடாதென்று தலையசைத்தார். “இதில் வருத்தப்பட எதுவுமில்லை. துப்பாக்கி எடுத்தவனுக்கு….. ….. துப்பாக்கியால் தான் சாவு வரும்…அப்படி தான் எனக்கு வந்து விட்டது…. ஆனால் உன் அம்மா நல்லவள். அவளுக்கு முடிவு இப்படி வந்திருக்க வேண்டாம்….”
அக்ஷய் விதியின் கொடுமையை நினைத்து உருகினான். பின் சொன்னான். ”அப்பா… நான் ஏதாவது உங்களுக்கு வருத்தம் தருகிற மாதிரி நடந்திருந்தால் மன்னித்து விடுங்கள் அப்பா”
நாகராஜன் மனப்பூர்வமாக சொன்னார். “அப்படிச் சொல்லாதே. எங்கள் வாழ்க்கையில் நடந்த ஒரே நல்ல விஷயம் நீ தான்….. நாங்கள் பெருமைப்படுகிற ஒரே சொத்தும் நீ தான்… அழாதே… உன் அழுகையைப் பார்க்கிற சக்தி எனக்கில்லை…. சந்..தோஷ…..மா….ய்……இ..ரு………..”
அதற்கு மேல் அவரால் பேச முடியவில்லை. மூச்சிரைக்க ஆரம்பித்தது. பத்து நிமிடங்களில் அவரும் இறந்து போனார்.
நாகராஜன் தம்பதியரின் உடல்களுக்கு மரியாதை செய்யவும், துக்கம் விசாரிக்கவும் பல தரப்பட்ட மக்கள் வந்தார்கள். இப்ராஹிம் சேட் குடும்பம் கூட வந்தது. இப்ராஹிம் சேட் உடல்கள் தகனம் வரை அக்ஷயின் கூட இருந்தார். அக்ஷய் தீ மூட்டிய போது வாய் விட்டு அழுதார்.
அவர் மயானத்திலேயே அக்ஷயிடம் சொன்னார். “நாகராஜன் எனக்கு நண்பன் மட்டுமல்ல, சகோதரன் மாதிரி தான். இந்தக் கொலையை யார் செய்திருந்தாலும் கண்டு பிடித்து பழி வாங்கும் வரை நான் ஓய மாட்டேன்…..”
அக்ஷய் சலனமே இல்லாமல் அவரைப் பார்த்தான்.
அவருக்கு அவனைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆஸ்பத்திரியில் இருந்து பிணங்கள் வீட்டுக்கு வந்த நிமிடம் முதல் அவனை அவர் கவனித்தபடி இருந்தார். அவன் இப்படித் தான் சலனமே இல்லாமல் இருந்தான். ’நிஜமாகவே இஸ்மாயில் சொன்னது போல இவன் சாமியாராகி விட்டானா? உணர்ச்சியே இல்லாமல் இருக்கிறானே?’
போலீசார் விசாரிக்க வந்த போதும் அப்படியே பட்டும் படாமலும் இருந்தான். யார் மீதாவது சந்தேகப்படுகிறீர்களா என்று அவர்கள் கேட்ட போது அமைதியாக யார் மேலும் சந்தேகம் இல்லை என்றான்.
கிளம்பும் போது இப்ராஹிம் சேட் சொன்னார். “என்ன உதவி வேண்டுமானாலும் நீ என்னிடம் தயக்கம் இல்லாமல் கேள் அக்ஷய்…”
அக்ஷய் தலையாட்டினான்.
எல்லோரும் சென்ற பிறகு அக்ஷய் நாகராஜனின் நெருங்கிய நண்பர்கள் சிலருக்குப் போன் செய்து பேசினான். அவர்களில் சிலர் இப்ராஹிம் சேட்டிற்கும் நண்பர்கள். அவர்கள் ஒருவித தர்மசங்கடமான மௌனத்தைக் கடை பிடித்தார்கள். நாகராஜனுக்கு மட்டும் நண்பர்களாக இருந்த ஓரிருவர் நடந்ததற்கு எல்லாம் பின்னணியில் இருந்த நபர்கள் சிலரின் பெயரைச் சொன்னதோடு இதற்கு இப்ராஹிம் சேட்டின் மூத்த இரு மகன்கள் தான் தூண்டுகோல் என்று வெளிப்படையாகச் சொன்னார்கள்.
அப்படிச் சொன்னவர்கள் ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்ட போது அக்ஷய் அமைதியாகச் சொன்னான். “வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன்.”
அக்ஷய் போன் செய்து பேசிய நபர்களில் இப்ராஹிம் சேட்டிற்கும் நண்பர்களாக இருந்தவர்கள் அக்ஷய் போன் செய்து பேசியதை இப்ராஹிம் சேட்டிற்கும் தெரிவித்தார்கள். இப்ராஹிம் சேட்டின் மூளையில் அபாய மணி அடித்தது. எதற்கும் அசராமல் அமைதியாக இருந்த அக்ஷயின் நடவடிக்கையின் பின்னணியில் ஒரு எரிமலை வெடிக்கக் காத்திருப்பது போல் அவர் உணர்ந்தார்.
மகன்களை அழைத்துச் சொன்னார். “நீங்கள் மூன்று பேரும் சிறிது நாட்களுக்கு ஏதாவது வெளிநாடு போய் விட்டு வருவது நல்லது என்று எனக்குப் படுகிறது”
இஸ்மாயில் வாய் விட்டு குலுங்க குலுங்க சிரித்தான். “தனி மரமாய் அவன் நிற்கிறான். அவனைப் பார்த்துப் பயப்பட்டு நாங்கள் ஓடி ஒளிவதா? அவன் என்ன செய்து விட முடியும் என்று நினைக்கிறீர்கள்? குங்க்ஃபூ சண்டைக்கு வருவானா? இல்லை குரானில் கேள்வி கேட்டு போட்டிக்குக் கூப்பிடுவானா? அவனிடம் சண்டை போட்டு நாங்கள் தோற்றதெல்லாம் சின்ன வயதில். இப்போது நாங்கள் குங்க்ஃபூ சண்டைக்குப் போக மாட்டோம். எங்கள் துப்பாக்கி தான் பேசும். அவன் அப்பன் போன இடத்திற்கே போக ஆசையிருந்தால் அவன் வரட்டும். நாங்கள் சந்தோஷமாக அனுப்பி வைக்கிறோம்”
மகன் சொன்னது போல் அவன் தனிமரம் என்பதில் அவருக்கு ஒருவித ஆசுவாசம் இருந்தது. அவன் உதவிக்கு நாகராஜன் நண்பர்கள் சிலர் சேர்ந்தாலும் அவருடைய சாம்ராஜ்ஜியத்திற்கு முன் அவர்கள் ஒன்றுமில்லை. ஆனாலும் அவருக்கு ஏதோ ஒரு சின்ன பயம் அடிமனதை விட்டு அகலவில்லை. மகன்களுக்குத் தெரியாமல் சில அடியாட்களை அழைத்து மகன்கள் அருகில் எப்போதும் இருக்க வேண்டும் என்றும் பாதுகாக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டார்.
அக்ஷய் மூன்றே நாளில் தன் தந்தைக்கெதிராக பின்னப்பட்ட சதிவலையின் முழுத் தகவல்களும் அறிந்தான். வேலையாள் பீம்சிங் சொன்ன அடையாளங்களும், நாகராஜனின் நண்பர்கள் சொன்ன பெயர்களும் வைத்துக் கொண்டு தன் தந்தையின் பழைய அடியாட்களையும் விசாரித்து அனைத்தையும் தெரிந்து கொண்டான்.
நாகராஜனின் அடியாட்களில் சிலர் அக்ஷயிடம் சொன்னார்கள். “உங்கப்பா உப்பைத் தின்று வளர்ந்தவர்கள் நாங்கள். அவருக்காக உயிரையும் விடத் தயாராக இருக்கிறோம். நாங்கள் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்”
இப்ராஹிம் சேட்டின் மகன்கள் பயன்படுத்திய கொலையாளிகளின் தங்குமிடம் போக்குவரத்து போன்ற விவரங்கள் மட்டும் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட அக்ஷய் “மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று சொன்னான்.
நாகராஜனின் அடியாட்களும் அவருடைய நண்பர்களும் அக்ஷயிற்காக இரக்கப்பட்டார்கள். இப்ராஹிம் சேட்டின் பலத்தின் முன் இப்போது அக்ஷய் வெறும் ஒரு துரும்பு என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். அவன் அவர்கள் உதவியைக் கூட மறுத்து தனியாக எதையும் சாதிக்க முடியாது என்பதில் அவர்களுக்கு சந்தேகமில்லை.
அவர்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டார்கள். “இந்தத் தொழிலில் இருந்து விட்டுப் பின் விலகினால் எதிராளிகளிடம் இருந்து தப்பிக்க முடியாது என்பதற்கு நாகராஜனே ஒரு நல்ல உதாரணம்”
அக்ஷய் மிக அமைதியாகத் தனியறையில் நான்காம் நாள் முழுவதையும் கழித்தான். அலட்டிக் கொள்ளாமல் திட்டம் தீட்டினான். சரியாக ஐந்தாம் நாள் தன் வேலையை ஆரம்பித்தான்.
அவன் எதிரிகள் அரண்டு போனார்கள்.
(தொடரும்)