ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் சின்னச் சின்ன வித்தியாசங்களுடன் கூடிய வேஷத்தில் தம்பியைப் பார்க்கையில் ஆனந்தால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. ஒரு வேஷத்தில் அவனைப் பார்த்தவர்கள் இன்னொரு வேஷத்தில் அவனை அடையாளம் கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டம் தான்.
அக்ஷய் கேட்டான். “எப்படி அவர்கள் பார்வையில் இருந்து தப்பித்து வந்தாய்?”
ஆனந்த் தப்பித்த விதத்தை விவரித்து விட்டுப் பின் சொன்னான். “இந்த தடவை அவர்களிடம் ஏதோ ஒரு வித்தியாசத்தை நான் உணர்ந்தேன் அக்ஷய். அவர்களிடம் கூடுதலாக ஆக்ரோஷம் இருந்தது. அதை ஒரு விதமான வெறி என்று கூட சொல்லலாம். ஆபத்தான கட்டத்தில் இருக்கிறோம் என்றே எனக்குத் தோன்றுகிறது.”
அக்ஷய் புன்னகையுடன் சொன்னான். “உயிர் இருக்கிற வரை ஆபத்திற்கும் சந்தர்ப்பம் இருக்கத்தான் செய்கிறது. அதை விடு. என் கடந்த காலம் என்ன? அதைச் சொல்.”
ஆனந்த் அந்த ஃபேக்ஸ் தாள்கள் வைத்திருந்த உறையை அவனிடம் நீட்டினான். ”… ஆனால் இதில் இப்போதைய நிலவரத்திற்கான பதில் இல்லை. மூன்று வருடங்கள் முன்பு வரை எல்லா விவரங்கள் மட்டும் தான் இருக்கிறது”
அக்ஷய் ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தான்.
***********
மும்பையில் நாகராஜ முதலியார் என்ற பெயர் மிகப் பிரபலம். தமிழ்நாட்டில் ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த நாகராஜன் என்ற பத்து வயது சிறுவன் குடும்பத்தின் வறுமையில் இருந்து தப்பிக்க 1950ல் திருட்டு ரயிலேறி பிழைப்பைத் தேடி மும்பை வந்து சேர்ந்தான். எடுபிடி வேலை, கூலி வேலை என்று கிடைத்த வேலையைச் செய்து வயிற்றை நிரப்பி வந்த நாகராஜனுக்கு அவனைப் போலவே ஹைதராபாதிலிருந்து ஓடி வந்த இப்ராஹிம் சேட் என்ற சம வயது சிறுவனின் நட்பு கிடைத்தது.
கூர்ந்த அறிவு, அபார தைரியம், தளராத மன உறுதி மூன்றும் நாகராஜனுக்கும், இப்ராஹிமிற்கும் இருந்ததால் அந்த இருவருடைய நட்பு ஒரு வெற்றிகரமான கூட்டணியாக பிற்காலத்தில் மலர்ந்தது. இருவருக்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசம் ஒன்று இருந்தது. நாகராஜனிடம் எதைப் பற்றியும் கவலைப்படாத துணிச்சலான வேகம் இருந்தது என்றால் இப்ராஹிமிடம் எதையும் நன்றாக யோசித்து காய் நகர்த்தும் நிதானம் இருந்தது. சுமார் பதினாறு வயதான போது இருவரும் கூலிப்பிழைப்பையும், சிறு வேலைகளையும் செய்வதை விட்டு சின்னச் சின்ன திருட்டு வேலைகளை ஆரம்பித்தனர். அவர்கள் தலைமையில் பல இளைஞர்கள் சேர்ந்தனர். திருட்டு, பொருள் கடத்தல், பெரிய வியாபாரிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு பாதுகாப்பு தருதல் என்று பிற்காலத்தில் அவர்கள் கூட்டணி பெரிய சாம்ராஜ்ஜியமாகவே மாறியது.
இப்ராஹிம் சாய்ராபானு என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு மூன்று மகன்களுக்கு தந்தையானார். நாகராஜன் திலகவதி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இருக்கவில்லை. கோடிக்கணக்கில் சொத்துகள் சேர்த்தும் ஒரு வாரிசு இல்லாத வருத்தம் மட்டும் நாகராஜன் மனதில் பெரிதாக இருந்தது.
ஒரு நாள் அவரும் அவர் மனைவியும் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது சுமார் மூன்று வயது சிறுவன் ஓடி வந்து அவர் பக்கத்தில் நின்று கொண்டான். ”அவன் என்னை அடிக்கிறான்” என்று கண்ணீர் மல்க அந்தச் சிறுவன் தமிழில் சொன்னான். யார் என்று நாகராஜன் எட்டிப் பார்த்தார். ஒரு முரட்டு ஆசாமி அந்த சிறுவனைத் தேடி வந்து கொண்டிருந்தான். அந்த முரடனின் தோற்றத்திற்கும், அந்த சிறுவனின் தோற்றத்திற்கும் சம்பந்தமே இல்லாததைப் பார்த்த நாகராஜன் அந்த முரடனிடம் “யாரிந்த பையன்?” என்று கேட்டான்.
“என் மகன் சார்” என்றான் அந்த முரடன்.
“உங்கப்பாவா இது” என்று அந்த சிறுவனைக் கேட்டார் நாகராஜன்.
“இல்லை” என்று பையன் மறுத்து தலையாட்டினான்.
”சும்மா சொல்றான் சார்” என்ற அந்த முரடன் அந்த சிறுவனைப் பிடித்து இழுத்தான்.
நாகராஜன் அந்த முரடனைத் தடுத்து சொன்னார். “சரி பையனை போலீஸில் ஒப்படைக்கிறேன். உன் மகனாய் இருந்தால் நிரூபித்து அவனை அவர்களிடம் இருந்து கூட்டிக் கொண்டு போ”
அந்த முரடனுக்குக் கோபம் வந்து விட்டது. “யோவ் நீ உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்யா” என்று அவர் கையைத் தட்டி விட்டான்.
அடுத்த கணம் இடியாய் விழுந்த அடியில் அந்த முரடன் ஆடிப்போனான். அவனும் திருப்பி ஒரு அடி அடித்தது அவனுக்கு வினையாக மாறியது. நாகராஜன் இள வயதிலேயே அடிதடி சண்டை என்று பழக்கப்பட்டவர் என்பதால் அவனை அடித்துப் புரட்டி ஓடும் ரயிலில் இருந்து வீசி எறிந்தார். அந்த முரடனின் கூட்டாளிகள் இருவர் இதைப் பார்த்து சந்தடியில்லாமல் நழுவினர்.
நாகராஜன் மீண்டும் தன் இருக்கைக்கு வந்த போது அந்த சிறுவன் திலகவதி மடியில் இருந்தான்.
நாகராஜன் தமிழிலேயே அவனிடம் கேட்டார். “உன் பெயர் என்ன?”
”அக்ஷய்”
”யாரவன்? உன்னை ஏன் அடித்தான்?”
அக்ஷயிற்கு யார் என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் அந்த முரடன் ஏன் அடித்தான் என்பதைச் சொன்னான். “அவன் எல்லார் கிட்டேயும் காசு கேட்கச் சொல்கிறான்”
இந்த சிறுவனைக் கடத்திக் கொண்டு வந்து பிச்சை எடுக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார்கள் என்பது நாகராஜனுக்குப் புரிந்தது. அக்ஷயிடம் விசாரித்த போது அவனுக்குத் தன் பெயரைத் தவிர வேறு எதுவும் சொல்லத் தெரியவில்லை. அவன் திலகவதியிடம் ஒட்டிக் கொண்டு அமர்ந்த விதத்தைப் பார்த்த அந்தக் கணத்தில் அவனைத் தன் மகனாக்கிக் கொள்வது என்று நாகராஜன் முடிவு செய்து விட்டார். திலகவதியும் சந்தோஷத்துடன் ஒத்துக் கொண்டாள். அக்ஷய் அவர்களுடைய மகனாக மும்பைக்குச் சென்றான்.
அவனுடைய முதுகின் மேற்புறத்து இருந்த அந்த நாகமச்சம் வித்தியாசமாக இருந்ததால் அதைச் சொல்லி விளம்பரப்படுத்தி இருந்தால் அக்ஷயை கண்டிப்பாக அவன் பெற்றோரிடம் சேர்த்து வைத்திருந்திருக்கலாம். ஆனால் நாகராஜன் தமிழர்களான தங்களிடம் தமிழ் பேசும் அந்தக் குழந்தை வந்து சேர்ந்தது தெய்வமாகத் தங்கள் வேண்டுதலுக்குத் தந்த வரம் என்று ஆழமாக நம்பினார்.
திலகவதிக்கு மட்டும் அவனைச் செல்லமாக சீராட்டி வளர்த்த போதும் ஒரு உறுத்தல் இருந்தது. இவனைப் பெற்ற தாய் எவ்வளவு பாடுபடுவாள் என்பதை ஒரு பெண்ணான அவளால் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவள் நாகராஜனிடம் தன் உறுத்தலைச் சொன்ன போது அவர் சொன்னார்.
“திலகா, இந்தக் குழந்தை நம் பார்வையில் பட்டிருக்காவிட்டால் எங்கேயாவது பிச்சை எடுத்துக் கொண்டு வளர்ந்திருக்கும். ஒரு கட்டத்தில் இந்தக் குழந்தையின் கை கால் எதையாவது வெட்டிக் கூட அந்த கும்பல் வெட்டிப் போட்டு இருக்க வாய்ப்பு இருக்கிறது. நாம் அதை ஒரு ராஜா மாதிரி வளர்க்கிறோம். இந்தத் தமிழ் பேசும் குழந்தை அந்த ரயிலில் எத்தனையோ நூற்றுக் கணக்கான ஜனங்கள் இருக்கையில் நம்மிடம் மட்டும் வந்து ஏன் சேர வேண்டும். யோசித்துப் பார். இது தெய்வமாக நம்மிடம் அனுப்பியது மாதிரி தான் எனக்குத் தோன்றுகிறது. இந்த நாக மச்சம் இருக்கிற குழந்தை நாகராஜனான என்னிடம் வந்தது விதி. இந்தக் குழந்தை இனி நம்முடையது. நீயாக தேவையில்லாமல் எதை எதையோ நினைத்து என்னிடம் வந்து சொல்லிக் கொண்டிருக்காதே. இனி இது பற்றி வேறு மாதிரியாக உன்னிடம் இருந்து நான் கேட்கக் கூடாது”
திலகவதி அதற்குப் பிறகு அதைப் பற்றி அவரிடம் பேசியதில்லை. ஆனாலும் அந்தக் குழந்தை வளர்ந்து செய்த குறும்புகளைப் பார்த்த போதும், அது புத்திசாலித்தனமாக எதாவது செய்யும் போதும் பெருமிதம் அடைந்த போதெல்லாம் அந்த உறுத்தல் மட்டும் வராமலில்லை. ’இதையெல்லாம் கண்டு மகிழ்ந்து அனுபவிக்க வேண்டிய இந்தக் குழந்தையின் தாய் எவ்வளவு துக்கத்துடன் தன் மகனைத் தேடிக் கொண்டிருக்கிறாளோ?’
அவர்கள் இருவரும் அக்ஷய் மீது உயிரையே வைத்திருந்தார்கள். அவனும் அவர்களிடம் மிகவும் பாசமாக இருந்தான். பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்த பின் அவன் என்றும் வகுப்பில் முதல் மாணவனாக வந்தான். ஆசிரியர்கள், சக மாணவர்கள் எல்லோரும் அவனை மிக நேசித்தார்கள். இதெல்லாம் நாகராஜனுக்கும் திலகவதிக்கும் மிகப் பெருமையாக இருந்தது. அவனை யாராலும் நேசிக்காமல் இருக்க முடியாது என்று பெருமையாக நினைத்தனர். ஆனால் அவன் பெரியவனாக வளர வளர அவர்கள் ஒரு பிரச்னையை எதிர்நோக்க வேண்டியிருந்தது.
(தொடரும்)