அமானுஷ்யன் – 56

உயிருக்கு ஆபத்து பின் தொடர்ந்து கொண்டு இருக்கும் அந்தக் கட்டத்தில் அசையாமல் நிற்பது புத்திசாலித்தனம் அல்ல தான். ஆனால் அக்‌ஷய் நின்றான். என்றோ அவனுக்கு யாரோ சொல்லி இருந்திருக்கக் கூடிய அந்த சொற்கள் அவன் மனதில் எதிரொலித்தது.

“என்ன செய்வது என்று குழப்பமாக இருக்கும் கட்டங்களில் எதுவும் செய்யாதே. சும்மாயிரு. சும்மா இருப்பதால் ஏதேதோ விபரீதம் நடந்து விடலாம் என்று உனக்குத் தோன்றலாம். ஆனால் சும்மா அமைதியாய் இருக்கும் போது உனக்குள்ளே ஒரு தீர்வு அல்லது தெளிவு கண்டிப்பாய் பிறக்கும்”

அவன் அந்த வார்த்தைகளில் ஒன்றிப் போய் அப்படியே அசையாமல் நின்ற போது அந்த சுரங்கப்பாதையில் அரையிருட்டில் மறைவாக நின்று கொண்டு இருந்த ஒரு இளைஞன் மின்னல் வேகத்தில் ஓடி வந்து அக்‌ஷயின் அந்த கருப்பு சூட்கேஸை எடுத்துக் கொண்டு முன்னால் ஓடினான்.

அக்‌ஷய் திகைத்துப் போய் அவனைப் பார்த்தபடி அப்படியே ஒரு கணம் நின்ற பின் வேகமாக அந்த அரையிருட்டில் சுவர் ஓரமாக நகர்ந்து நின்றான். அதே நேரத்தில் அக்‌ஷயைப் பின் தொடர்ந்து வந்தவர்கள் சூட்கேஸோடு ஓடும் அந்த இளைஞனைப் பின் தொடர்ந்து ஓடினார்கள். கிட்டத்தட்ட அக்‌ஷயின் வயதும், உடல்வாகும் இருந்த அந்த இளைஞனிடம் கருப்பு சூட்கேஸும் இருந்ததால் முன்னால் ஓடும் அவனையே அக்‌ஷய் என்று அவர்கள் எண்ணினார்கள்.

அதில் ஒரு போலீஸ்காரன் மட்டும் ஒரு மாற்றத்தைக் கண்டு பிடித்து சொன்னான். “அவன் ஷர்ட்டிற்கு மேல் ஏதோ ரெயின் கோட் போட்டு இருக்கிறான்”

அதற்கு மற்ற போலீஸ்காரன் சொன்னான். “அவன் ஒரு மாயாவி என்ன வேண்டுமானாலும் செய்வான், எப்படி வேண்டுமானாலும் தோற்றத்தை மாற்றிக் கொள்வான் என்று சொல்லி இருக்கிறார்கள். அவன் இனி அந்த சூட்கேஸை எங்காவது எறிந்து விட்டுப் போனாலும் போகலாம். இப்படியே ஏதாவது மாற்றங்கள் செய்து கொண்டே போய் வேறு ஆளாய் அந்தப் பக்கம் மேலே வரும் போது இருப்பான். ஜாக்கிரதையாய் இருங்கள்”

அவன் அப்படிச் சொன்னது அந்த தீவிரவாதிகள் இருவருக்கும் கூட சரியென்றே பட்டது. போலீஸ்காரனும், தீவிரவாதியும் சுரங்கப் பாதையின் மறுபக்கத்தில் வந்து நின்றிருந்த தங்கள் சகாக்களுக்கு சூட்கேஸோடு ஓடி வரும் அமானுஷ்யனைப் பற்றி செல் போனில் அவசரமாகச் சொன்னார்கள்.

சுரங்கப்பாதையின் மறுபக்கம் துப்பாக்கிகளோடு நின்றிருந்தவர்கள் கருப்பு சூட்கேஸோடு படிகளில் ஓடி வரும் அந்த இளைஞனைக் குறிபார்த்து சுட்டார்கள். அந்த இளைஞனின் மார்பிலும், வயிற்றிலும் துப்பாக்கி ரவைகள் சரமாரியாக நுழைந்தன. ஒரு துப்பாக்கி ரவை அவன் கன்னத்தைத் துளையிட்டது. அவன் அலறிக் கொண்டே படிகளில் பின்னோக்கி சாய்ந்தான். அங்கிருந்த மக்களில் சிலர் அலறினார்கள். பலரும் அங்கு வந்து சேர்வதற்குள் அவசர அவசரமாக பின்னால் ஓடி வந்த நால்வரும் துடித்துக் கொண்டிருந்த அவன் உடலைத் தூக்கினார்கள். எங்கிருந்தோ வேகமாக வந்து சேர்ந்த ஒரு ஆம்புலன்ஸில் உடலைத் தூக்கிப் போட்டார்கள். நான்கு பேரும் அதில் ஏறிக் கொண்டார்கள். ஆம்புலன்ஸ் பறந்தது. சுட்டவர்கள் அந்த கருப்பு சூட்கேஸை வாரி எடுத்துக் கொண்டு ஒரு டாக்ஸியில் ஏறி வேகமாக அந்த ஆம்புலன்ஸைப் பின் தொடர்ந்தார்கள்.

சில நிமிடங்களில் அக்‌ஷய் நிதானமாக நடந்து அங்கு வந்து சேர்ந்த போது இப்படி எல்லாம் நடந்திருக்கிறது என்பதற்கு சாட்சியாகப் படிகளில் படிந்திருந்த ரத்தக்கறைகள் மட்டுமே இருந்தது. யாரோ போலீஸிற்குப் போன் செய்தார்கள். அங்கிருந்த மக்கள் அவர்களுக்குள் பரபரப்பாகப் பேசிக் கொண்டார்கள். அக்‌ஷயிடம் ஒரு பெரியவர் அங்கலாய்த்துக் கொண்டார். “காலம் ரொம்பவும் கெட்டுப் போய் விட்டது. கலி முற்றி விட்டது. அதற்கான அறிகுறி தான் இதெல்லாம்”.

தலையாட்டிய அக்‌ஷய் அங்கிருந்து அமைதியாக நடக்க ஆரம்பித்தான். இறந்து போன இளைஞனுக்காக அவன் மனம் வேதனைப்பட்டது.

**********

சிபிஐ மனிதன் இசைக்கும் செல் போனை பரபரப்புடன் எடுத்தான். “ஹலோ”

“சார் அவனை சுட்டு விட்டோம்”

சிபிஐ மனிதனுக்குத் தன் காதுகளை நம்ப முடியவில்லை. “உடல்…”

“உடலை ஒரு ஆம்புலன்ஸில் வைத்து போய்க் கொண்டு இருக்கிறோம். அவர்களும் எங்களுடன் தான் இருக்கிறார்கள். உடல் எங்களுக்கு வேண்டும் என்றால் அவர்கள் ஒத்துக் கொள்ள மாட்டேன்கிறார்கள். உடல் அவர்களுக்கு வேண்டுமாம்”

சிபிஐ மனிதன் பற்களைக் கடித்துக் கொண்டு சொன்னான். “காட்டு மிராண்டிகள். சொன்னால் கேட்க மாட்டார்கள். சரி விடுங்கள். நீங்கள் இறங்கிக் கொள்ளுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்”

அவர்களிடம் பேசி முடித்த சிபிஐ மனிதன் மந்திரியிடம் உடனடியாகப் பேசித் தகவலைத் தெரிவித்தான். மந்திரிக்கு சந்தோஷம் தாங்கவில்லை. “என் வயிற்றில் பால் வார்த்தீர்கள்”

சிபிஐ மனிதன் சொன்னான். “ஆனால் அவன் உடலை அவர்கள் தரமாட்டேன்கிறார்கள். அவர்களுக்கு வேண்டுமாம்”

“விடுங்கள். அந்த சனியன்கள் என்னவோ செய்து கொண்டு போகட்டும்”

“இல்லை. அந்த உடலை நாம் நம் கண்ணால் பார்த்தால் தான் நமக்கு உறுதியாய் சொல்ல முடியும். நாம் சந்தேகத்தின் பேரில் தான் அந்த புஸ்தக சேல்ஸ்மேனைக் கொல்லச் சொன்னோம். அவன் அமானுஷ்யனாகவே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை”

மந்திரிக்கு அது எச்சரிக்கை மணி அடித்தது. “நீங்கள் சொல்வதும் சரிதான். அவன் விஷயத்தில் நாம் நேராகப் பார்க்காமல் எதையும் சொல்ல முடியாது.

சரி…நாம் இரண்டு பேரும் நேரடியாக அந்த உடலை அவர்கள் இடத்திலேயே போய் பார்ப்போம்”

சிபிஐ மனிதன் அந்த தீவிரவாதிகள் பார்வையில் பட விரும்பவில்லை. மிகவும் பாதுகாப்பாகவே இயங்கும் அவன் அந்த தீவிரவாதிகளும் தன்னை அறியத் தேவையில்லை என்று நினைத்தான். மந்திரியிடம் சொன்னான். “நான் அங்கெல்லாம் வரவில்லை. நீங்களே போங்கள். இல்லாவிட்டால் உங்களுக்கு நம்பிக்கையான ஆள் யாரையாவது அனுப்புங்கள். அவன் முதுகின் மேல்பக்கத்தில் நாக மச்சம் இருக்கிறதா என்று உறுதி செய்து விட்டுச் சொல்லுங்கள்”

*********

ஆனந்த் தன் ஓட்டல் அறைக்கு வரும் போது வழக்கமான கண்காணிப்பாளர்களைக் கவனிக்கத் தவறவில்லை. இந்த அளவிற்குக் கண்காணிப்பாளர்களை வைத்துக் கொண்டு இவர்களுக்குத் தெரியாமல் தம்பியிடம் பேசுவது எப்படி என்று குழம்பினான். செல் போனில் அவன் தங்கி இருக்கும் ஓட்டலுக்கு தொடர்பு கொண்டு பேசுவது கூட ஆபத்தானது என்றும் தோன்றியது.

பின் ஒரு யோசனை தோன்ற ஒரு காகிதத்தில் “உன் விலாசம், உன் போன் நம்பர்” என்று எழுதி அதற்கு நேராக அவன் விலாசத்தையும் போன் நம்பரையும் எழுதினான். இது போல் வேறு தகவல்களும் கிடைத்திருக்கின்றன. முடிந்தால் என்னிடம் எப்படியாவது பேசு என்று அதற்குக் கீழே எழுதினான். அந்தக் காகிதத்தை மடித்து உறையில் இட்டு அந்த உறையை ஒட்டினான். உறையில் அக்‌ஷய் தங்கி இருக்கும் ஓட்டல் பெயர், அறை எண் எல்லாம் எழுதினான்.

பின் ரிசப்ஷனுக்குப் போன் செய்து “ஒரு காபி ப்ளீஸ்” என்றான்.

ஐந்து நிமிடத்தில் ஒரு ரூம் பாய் அவனுக்குக் காபி கொண்டு வந்தான். அவன் தான் பெரும்பாலும் அவன் அறைக்கு அதிகம் வருபவன். போன வாரம் தான் அவன் பெயரைக் கேட்டு வைத்திருந்தான். பெயர் பவன்குமார். வயது சுமார் இருபதுக்குள் இருக்கும்.

“பவன் எனக்கு ஒரு சின்ன உதவி செய்ய முடியுமா?” ஆனந்த் கேட்டான்.

“சொல்லுங்கள் சார்”

அந்த உறையை அவனிடம் காட்டி ஆனந்த் சொன்னான். “இந்த ஓட்டலில் என் நண்பன் தங்கி இருக்கிறான். அவனிடம் முக்கியமாய் இந்த லெட்டரைத் தர வேண்டி இருக்கிறது. அவனிடம் சேர்த்து விட முடியுமா?”

“அவசரமா சார். எனக்கு ஏழு மணிக்கு தான் டியூட்டி முடிகிறது. அப்போது போய் கொடுத்தால் போதுமா”

“போதும். அவன் அறையில் இருந்தால் அவனிடம் நேராகக் கொடுத்து விடு. இல்லா விட்டால் ஓட்டல் ரிசப்ஷனில் அவன் வந்தவுடன் கொடுக்கச் சொல். செய்வாயா”

“கண்டிப்பாக சார்”

அந்த உறையுடன் ஒரு நூறு ரூபாய் தாளையும் சேர்த்து ஆனந்த் தர பவன் குமார் முகத்தில் ஒரே சந்தோஷம். மிக அருகில் இருக்கும் ஓட்டல் ஒன்றிற்கு போய் தருவதற்கு நூறு ரூபாயா என்று எண்ணி மகிழ்ந்தபடி வாங்கிக் கொண்டான். “தேங்க்ஸ் சார்” என்றான்.

‘இதைப் பற்றி வேறு யாரிடமும் நீ எதுவும் சொல்ல வேண்டாம் சரியா”

இந்த வேலையில் ரகசியம் தான் முக்கியம் என்பதை உணர்ந்த பவன்குமார் அந்த உறையை பத்திரமாகத் தன் பேண்ட் பாக்கெட்டினுள் வைத்துக் கொண்டான்.

“யாரிடமும் இதைப் பற்றி வாயே திறக்க மாட்டேன் சார். கொடுத்து விட்டு உங்களிடம் அப்போதே வந்து சொல்லணுமா சார். இல்லை, நாளைக்கு டியூட்டிக்கு வரும் போது சொன்னால் போதுமா சார்”

“நாளை சொன்னால் போதும்”

பவன் குமார் நகர்ந்தான்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top