அக்ஷய் செல் போனில் பேசிக் கொண்டிருந்த போலீஸ்காரனை ஓரக்கண்ணால் கவனித்தான். போனில் பேசிக் கொண்டிருந்த போது கூட அவன் அக்ஷய் மேல் வைத்திருந்த கண்களை நகர்த்தாமல் இருந்தான். பேசப் பேச அந்தப் போலீஸ்காரன் குனிந்து தன் கால்களைத் தொட்டுப் பார்த்துக் கொண்டது போல இருந்தது. அங்கே அவன் தொட்டுப் பார்த்துக் கொண்டது துப்பாக்கியாக இருக்கலாம். அவன் யாரிடம் பேசிக் கொண்டிருந்தானோ அவன் ‘ஆளை முடித்து விடு’ என்று கட்டளை இட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக அக்ஷயிற்குத் தோன்றியது. இன்னொரு போலீஸ்காரன் போனில் பேசும் தன் சகாவையும் அக்ஷயையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான். தீவிரவாதியும் அக்ஷய் மேல் வைத்திருந்த கண்களை அகற்றவில்லை.
ஒரு ஸ்டாப்பில் ஒரு பெரிய கூட்டமே பஸ்ஸில் முண்டியடித்துக் கொண்டு ஏறியது. உட்கார இடமில்லாமல் நெருக்கமாக பலர் நின்று கொண்டு பயணிக்க மறுபுறம் அமர்ந்திருந்த அக்ஷயைக் கண்காணிப்பதில் போன் பேசிய போலீஸ்காரனுக்குச் சிரமமாய் இருந்தது. அவனுடைய சகா அக்ஷயிற்குப் பின்னால் மூன்றாவது வரிசை சீட்டில் அமர்ந்து கொண்டு இருந்தான். தீவிரவாதி இரண்டாவது வரிசை சீட்டில் அமர்ந்து கொண்டிருந்தான். அவர்கள் இருவரும் அக்ஷயை நன்றாகவே கண்காணிக்க முடியும் என்றாலும் போனில் பேசிய போலீஸ்காரன் அக்ஷய் தன் நேரடிப் பார்வையில் இருப்பது தான் நல்லது என்று நினைத்தவனாய் எழுந்து அக்ஷய் அருகில் வரப் பார்த்தான்.
அப்போது பஸ் ஒரு சிக்னலில் நிற்க அக்ஷய் மின்னல் வேகத்தில் அந்தக் கூட்டத்தில் தனக்கு வழி செய்து கொண்டு பஸ்ஸில் இருந்து இறங்கினான். அவன் திடீரென்று இறங்குவான் என்று எதிர்பார்க்காத மூவரும் ஒரு கணம் திகைத்து அமர்ந்திருந்து விட்டு கூட்டத்தைத் தள்ளி விலக்கிக் கொண்டு பஸ்ஸில் இருந்து இறங்க முற்பட்டார்கள். தீவிரவாதி தன் அவசரத்தில் ஒரு கிழவி காலை மிதித்து விட கிழவி தான் அறிந்த அத்தனை கெட்ட வார்த்தைகளையும் பயன்படுத்தி அவன் மீது வசைமாரி பொழிய ஆரம்பித்தாள். எப்படியோ மூன்று பேரும் கஷ்டப்பட்டு உடனடியாக இறங்கி விட்டார்கள். காலை மிதித்தவன் முழு வசவுகளையும் கேட்காமல் இறங்கினதில் அந்தக் கிழவிக்கு வருத்தம்.
அக்ஷய் வேகமாக தெருவைக் கடந்து அங்கு இருந்த சுரங்கப் பாதையில் இறங்கி வேகமாக நடந்தான். அவனைப் பார்வையில் இருந்து அகன்று விட அனுமதிக்கக்கூடாது என்ற எண்ணத்தில் மூவரும் ஓட்டமாய் அவன் பின் ஓடினார்கள். ஆனாலும் அக்ஷய் வேகமான நடையில் இருந்தானே ஒழிய ஓட முற்படவில்லை. சுரங்கப்பாதையில் இறங்கி அவர்கள் பார்வையில் இருந்து அவன் மறைந்தான்.
தீவிரவாதி உடனடியாக செல்போனை அழுத்தினான். தாங்கள் இருக்கும் இடத்தையும் அந்த சுரங்கப் பாதையில் அவன் இறங்கியதையும் சொன்ன அவன் சுரங்கப் பாதையின் மறுபக்க வாயிலுக்கு ஆட்களைச் சேரச் சொன்னான். அதையேதான் போலீஸ்காரனும் செய்தான். பைக்கில் வந்து கொண்டிருந்த மற்ற தீவிரவாதியும் இவர்களுடன் வந்து சேர்ந்தான். சுரங்கப்பாதையில் இந்தப் பக்கம் நான்கு பேர் இறங்க, அதன் இன்னொரு வாயிலில் உடனடியாக இரண்டு தீவிரவாதிகளும், இரண்டு போலீஸ்காரர்களும் வந்து சேர்ந்தார்கள். இரு பக்கத்தினரும் கைகளில் துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு தயார் நிலையில் இருந்தனர்.
சுரங்கப் பாதையில் அக்ஷய் வெளிச்சம் குறைவான இடத்தில் ஒரு கணம் நின்றான். சுரங்கப் பாதையில் ஒரு சில ஆட்களே நடந்து கொண்டிருந்தார்கள். பின்னால் ஓடி வரும் காலடிகளின் ஓசை கேட்டது. தன் கையில் வைத்திருந்த அந்தப் புத்தகங்கள் அடங்கிய கருப்பு சூட்கேஸைக் கீழே வைத்து சிலை போல் நின்று யோசித்தான்.
**********
ஃபேக்ஸில் வந்து கொண்டே இருந்த நீண்ட காகிதக் கற்றையைப் பார்த்து ஆனந்தும், மஹாவீர் ஜெயினும் திகைத்தனர்.
“நம் ஆள் மும்பையில் இவ்வளவு பிரபலமானவனாய் இருப்பான் என்று நான் நினைக்கவில்லை.” என்று ஜெயின் ஆச்சரியப்பட்டார்.
ஆனந்த் மனக் கொந்தளிப்பில் ஒன்றும் சொல்லவில்லை. ஃபேக்ஸ் மெஷின் தன் வேலையை முடித்தவுடன் இருவரும் சேர்ந்து அந்த தகவல்களைப் படிக்க ஆரம்பித்தனர். இருவரும் காலத்தையும் தங்களையும் மறந்து போனார்கள் என்றே சொல்ல வேண்டும். ஒரு சுவாரசியமான வித்தியாசமான கதையைப் படிப்பது போல் இருந்தது.
படித்து முடித்த பின் ஜெயின் சொன்னார். “இவன் ஒன்றும் வெடிகுண்டு வைக்கிற தீவிரவாதி அல்ல. பின் ஏன் இவனை இவர்கள் அப்படி விளம்பரப் படுத்தினார்கள்.”
ஆனந்த் ஒன்றும் சொல்லவில்லை. அவனால் பேச முடியவில்லை. அமானுஷ்யன் என்பது அக்ஷயிற்கு மிகப் பொருத்தமான பெயர் என்பதில் சந்தேகம் இல்லை. படித்ததை எல்லாம் பார்க்கும் போது அவன் மீது எதிரிகளுக்கு பயம் எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்று புரிந்தது. அவனைப் போன்றவன் பகையாக மாறினால் ஒருவனால் அவனை அழிக்கும் வரை நிம்மதியாக இருக்க முடியாது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இன்று அதிகார வர்க்கமே அவனுக்கு எதிரியாக இருக்கிறதால் அவன் நிலைமை கேள்விக்குரியது தான் என்று நினைக்கையில் மனதை ஏதோ பலமாக அழுத்தியது.
இத்தனை பக்கங்களில் அவன் பழைய சரித்திரம் எல்லாம், கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு முன்பு வரை தெரிந்து விட்டது. ஆனால் அதற்குப் பிறகு அவனைப் பற்றிய தகவல்கள் இதில் இல்லை. அதற்குப் பிறகு அவன் என்ன செய்தான் என்பதில் தான் இப்போதைய கேள்விகளுக்கான விடை இருக்கிறது. ஆச்சார்யாவை அவன் எப்படி சந்தித்தான், அவருக்காக அவன் என்னவெல்லாம் செய்து தந்தான், இப்போதைய சிக்கலில் ஆச்சார்யாவும் இவனும் எப்படிச் சிக்கினார்கள், இவர்களது எதிரிகள் யார் என்ற கேள்விகளுக்கு இப்போதும் பதில் இல்லை.
ஆனந்த் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த மஹாவீர் ஜெயினுக்கு இந்த அமானுஷ்யனைப் பற்றிய தகவல்கள் ஆனந்தை மிகவும் பாதித்திருப்பது போல் தெரிந்தது. ஆனால் ஏன், எப்படி என்பது தான் தெரியவில்லை. ஆனந்த் எதையோ சொல்லாமல் மறைக்கிறான் என்று எண்ணிய மஹாவீர் ஜெயின் அதைப் பற்றி நேரடியாகவே அவனிடம் கேட்க நினைத்தார். ஆனால் பின் தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டார். சொல்லக் கூடாது என்று அவன் தீர்மானித்திருந்தால் அதை அவன் எக்காரணத்தை வைத்தும் சொல்லக் கூடியவன் அல்ல என்று இந்த சில நாள் பழக்கத்தில் அறிந்திருந்ததால் கேட்காமல் இருந்து விட்டார். ஆனாலும் பொதுவாக அவனிடம் கேட்டார். “ஆனந்த், நீங்கள் அமானுஷ்யனைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”
ஆனந்த் உண்மையைச் சொன்னான். “இந்த தகவல்கள் எல்லாம் நம் மும்பை ஆபிசில் இருந்து வந்திருக்கா விட்டால் நான் இதை உண்மை என்று நம்பியிருக்க மாட்டேன்”
“நானும் தான். அவனை ஒரு தடவை நான் நேரில் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது ஆனந்த். உங்களுக்கு அப்படித் தோன்றவில்லையா?”
உண்மையாகவே இப்போது உடனடியாக அக்ஷயைப் பார்க்க வேண்டும் என்று ஆனந்திற்கு இருந்தது. அவனிடம் மூன்று வருடங்கள் முன்பு வரை உன் சரித்திரம் இதுதான் என்று சொல்ல வேண்டும் என்று எல்லாவற்றையும் ஆனந்த் சொல்லத் துடித்தான். ‘ஒரு வேளை இந்தத் தகவல்கள் எல்லாம் அவன் தெரிந்து கொண்டால், கூடவே அவனுக்கு இதன் தொடர்ச்சி நினைவுகள் வந்தாலும் வரலாம்’ என்ற எண்ணம் அவனுக்கு வர அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை.
மஹாவீர் ஜெயின் தன் பதிலுக்காகக் காத்திருக்கிறார் என்பது அவர் முகத்தைப் பார்த்தவுடன் அவனுக்கு திடீரென்று உறைக்க சொன்னான். “எனக்கும் அப்படித் தான் தோன்றுகிறது சார்”
அவன் மீது வைத்த கண்களை எடுக்காமல் மஹாவீர் ஜெயின் கேட்டார். “இந்த அமானுஷ்யனுக்கும் ஆச்சார்யா கேஸிற்கும் ஏதாவது தொடர்பு இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா ஆனந்த்”
ஆனந்த் மிகக் கவனமாகப் பதில் சொன்னான். “இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் சார். ஆனால் இருக்கலாம் என்கிற கோணத்தில் நாம் விசாரித்துப் பார்ப்பது நல்லது”
பின் மெல்ல அந்த காகிதக் கற்றையைத் தன் பக்கம் இழுத்து அமானுஷ்யனின் மும்பை வீட்டு முகவரி மற்றும் டெலிபோன் எண்ணை எழுதிக் கொண்டான்.
‘அந்த வீட்டில் தற்போது யாருமே இருக்க வாய்ப்பில்லை என்றாலும் அந்த வீட்டில் அவனுடைய கடந்த மூன்றாண்டுகள் பற்றிய விவரங்கள் இருக்க வாய்ப்பு இருக்கிறது’ என்று தோன்றியது.
(தொடரும்)