அக்ஷயிற்கு அது கனவா இல்லை கடந்த கால நினைவா என்பது தெரியவில்லை. டெல்லிக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்த போது சிறிது கண்ணயர்ந்த போது தான் அது மனத்திரைக்கு வந்தது.
அவன் ஒரு புத்த விஹாரம் ஒன்றில் இருக்கிறான். அந்த புத்த விஹாரத்தில் ஒரு புத்தர் சிலை முன் மண்டியிட்டு அவன் தாங்க முடியாத துக்கத்தில் அழுது கொண்டிருக்கிறான். ஒரு முதிய பிக்கு புத்தர் சிலைக்கு அருகில் ஒரு பிரதான இருக்கையில் அமர்ந்து ஜபமாலையை உருட்டி தியானம் செய்து கொண்டு இருக்கிறார். அவன் துக்கம் அந்த முதிய பிக்குவை எந்த விதத்திலும் பாதித்தது போலத் தெரியவில்லை. அவன் அங்கே இல்லவே இல்லை என்பது போல் அவர் தன் தியானத்தில் இருக்கிறார். அவனுக்கு இறந்து போக வேண்டும் என்று ஏனோ தோன்றுகிறது. அப்போது அவர் கண்களைத் திறக்காமலேயே சொல்கிறார். “மரணம் எதற்குமே எப்போதுமே ஒரு தீர்வல்ல”.
இன்னொரு இடம். ஒரு அரையிருட்டு ஹாலில் நிறைய பேர் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களுக்கு எதிரில் அவன் நின்று பேசிக் கொண்டு இருக்கிறான். அவனுக்கு அருகில் இரண்டு தாடிக்காரர்கள், இருவருமே மத்திய வயதினர், அமர்ந்திருந்தார்கள். எல்லோரும் மிகுந்த கவனத்துடன் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவன் உருது மொழியில் ஏதோ கவிதை போல சொல்கிறான். கைதட்டல் பலமாக ஒலிக்கிறது.
அவன் விழித்துக் கொண்டான். அவனுக்கு அந்த இரண்டுமே ஒன்றுக்கொன்று சம்பந்தம் இருப்பது போல் தோன்றவில்லை. அவன் குண்டடி பட்டு அடைக்கலம் புகுந்த புத்த விஹாரத்திற்கும், இந்த புத்த விஹாரத்துக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருந்தன. அந்த மூத்த பிக்குவும், இந்த மூத்த பிக்குவும் கூட வேறு வேறு நபர்களே. இதற்கு எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லாத உருதுப் பிரசங்கம் வேறொரு இடத்தில். அதில் அவன் சரளமாகப் பேசுகிறான். பேசியது என்ன என்பதிலும் அவனுக்குத் தெளிவில்லை. ஆனால் கவிதை போன்ற வரிகள் போலத் தான் தோன்றியது. அவனுக்குப் பக்கத்தில் இருந்த தாடிக்காரர்கள் இரண்டு பேர் யார் என்றும் தெரியவில்லை. அவனுக்குக் குழப்பமாக இருந்தது. தலை வலித்தது.
டெல்லியில் இறங்கியவுடன் வேறு ஒரு ஓட்டலுக்குப் போய் தங்கினான். அந்த ஓட்டலும் ஆனந்த் தங்கியிருந்த ஓட்டலும் ஒன்றுக்கொன்று அரை கிலோமீட்டர் தொலைவில் தான் இருந்தன.
**********
ஆனந்த் தங்கி இருந்த ஓட்டலுக்கு ஒரு பெரிய விலை உயர்ந்த கருப்பு சூட்கேஸை எடுத்துக் கொண்டு ஒரு இளைஞன் நுழைந்தான். அவன் கையில் நான்கைந்து தடிமனான புத்தகங்கள் இருந்தன.
லிப்டில் ஏறி முதல் மாடிக்கு வந்து முதல் மாடியில் முதல் அறை 101 கதவைத் தட்டினான். கதவைத் திறந்த ஒரு இளைஞனிடம் ஆங்கிலத்தில் சொன்னான். “எக்ஸ்க்யூஸ் மீ. நான் லைஃப் விஸ்டம் பப்ளிகேசன்ஸ் சேல்ஸ் மேனேஜர். உங்களுக்கு ஆட்சேபணை இல்லா விட்டால் எங்கள் புத்தகங்கள் பற்றி உங்களிடம் இரண்டு நிமிடம் பேசலாமா?”
அந்த இளைஞன் “நான் பிசியாக இருக்கிறேன்” என்று சொல்லி கதவைத் தடாலென்று சாத்தினான்.
அந்த சேல்ஸ் மேனேஜர் அடுத்த கதவைத் தட்டினான். அதில் ஆட்கள் இல்லை. அடுத்த கதவைத் தட்டினான். அரை மணி நேரத்தில் அவனுடைய புத்தகங்களைப் பார்க்கவாவது ஒப்புக் கொண்ட ஒரே நபர் 108ல் இருந்த ஒரு கிழவர் தான். அந்த அறையில் அரை மணி நேரம் இருந்து விட்டு வந்த சேல்ஸ் மேனேஜர் மற்ற அறை நபர்களில் சிலரிடம் திட்டு வாங்கிக் கொண்டு இரண்டாவது மாடிக்குப் போனான்.
201ல் ஆள் இல்லை. 202ல் கதவைத் திறந்த ஒரு ஆங்க்லோ இந்தியப் பெண்மணி தோட்டக்கலை சம்பந்தமான புத்தகங்கள் இருக்கிறதா என்று கேட்டாள். “அது இல்லை மேடம். வேறு….” என்று அவன் சொல்வதற்குள் “சாரி. தேவையில்லை” என்று கதவைத் தாளிட்டாள்.
203 அறைக் கதவைத் தட்டினான். மற்ற அறைக் காரர்களிடம் சொன்னதையே இங்கும் சொன்ன அவனை ஆனந்த் எரிச்சலோடு துரத்த முற்பட்ட போது வந்தவன் “ப்ளீஸ்” என்று சொல்லிக் கண்ணடித்தான். அப்போது தான் ஆனந்திற்கு வந்தது தன் தம்பி என்று புரிந்தது. ஆனால் காட்டிக் கொள்ளாமல் வேண்டா வெறுப்பாக உள்ளே விடுவதைப் போல உள்ளே விட்டு கதவைத் தாளிட்டான்.
“நீ இப்போது எங்கே தங்கி இருக்கிறாய்?” ஆனந்த் தாழ்ந்த குரலில் கேட்டான்.
ஓட்டல் பெயரையும், அறை எண்ணையும் அக்ஷய் சொன்னான்.
“நல்லது. இங்கே இப்போது கண்காணிப்பு கூடி இருக்கிறது. எதிர் அறை 210ல் மூன்று ஆட்கள் இருக்கிறார்கள். நீ இப்போது தட்டிய போது கூட அவர்கள் பார்த்துக் கொண்டே இருந்தார்கள்”
அக்ஷய் அதைப் பற்றி கவலைப்படவில்லை. “நான் முதல் மாடியில் இருந்தே ஒவ்வொரு அறைக் கதவாய் தட்டி விட்டு தான் வருகிறேன். அதை விடு. நீ அமானுஷ்யன் என்ற ஏதோ ஒரு பெயரைச் சொல்லி ஏதாவது ஞாபகம் வருகிறதா என்று கேட்டாயே. ஏன்”
ஆனந்த் ஜெயின் சொன்ன எல்லாவற்றையும் விவரமாய் சொன்னான். “உனக்கு அவர்கள் வைத்திருக்கிற பெயர் அது தான்” என்று சொல்லி முடித்தான்.
எல்லாவற்றையும் கேட்டு விட்டு அக்ஷய் அமைதியாய் யோசித்தான்.
ஆனந்த் கேட்டான். “உனக்கு பழையது ஏதாவது ஞாபகம் வந்ததா?”
அக்ஷய் விமானத்தில் அரைத்தூக்கத்தில் வந்த அந்த நிகழ்ச்சிகளைச் சொன்னான். “அது கனவா இல்லை நனவா என்று தெரியவில்லை”
ஆனந்த் உடனே சொன்னான். “கனவாய் இருக்க வாய்ப்பில்லை. உன்னைப் பற்றி மூன்று வருஷங்களுக்கு முன் விசாரித்த போது அந்த சாது கூட நிறைய புத்த பிக்குகளைப் பார்த்த மாதிரி தான் சொன்னார்”
“அப்படியானால் அந்த உருதுவில் பேசினது?”
“அது தெரியவில்லை. அது வேறு ஒரு இடத்தில் நீ இருந்து பேசின உண்மை சம்பவமாகக் கூட இருக்கலாம். உனக்கு உருது தெரியுமா?”
அக்ஷய் யோசித்து விட்டு சொன்னான். “தெரியும். ஆனால் கவிதை சொல்கிற அளவுக்கு ஞானம் இருப்பது போல தெரியவில்லை. சரி விடு. அடுத்ததாக நாம் என்ன செய்யலாம். நான் அந்த கேசவதாஸைப் போய் பார்த்தால் என்ன?”
“அந்த ஆளுக்கு எவ்வளவு தூரம் தெரியும் என்று நமக்குத் தெரியாது அக்ஷய். அந்த ஆளுக்குக் கீழ் உள்ள சில அதிகாரிகள் தான் உன்னைப் பற்றிய கேஸை ரகசியமாய் கையாள்கிறார்கள். வேண்டுமென்றே இந்தக் கேஸை பல பிரிவுகளாய் பிரித்து ஒவ்வொரு பிரிவையும் ஒவ்வொரு அதிகாரிகளிடம் கொடுத்த மாதிரி இருக்கிறது. ஒருவருக்குத் தெரிந்த விவரம் இன்னொருவருக்குத் தெரியக்கூடாது என்பதில் அவர்கள் மிக கவனமாக இருப்பது போல தெரிகிறது.”
அக்ஷய் கடிகாரத்தைப் பார்த்து விட்டு எழுந்தான். “இனி நான் இதற்கு மேல் இங்கே இருந்தால் அவர்களுக்கு சந்தேகம் வரும். நான் போகிறேன். எனக்கு ஏதாவது தெரிவிக்க வேண்டி இருந்தால் நீ என் அறைக்கு எப்படியாவது தகவல் அனுப்பு. மற்றவர்களுக்கு தெரியாமல் எங்கிருந்தாவது போன் செய்ய முடியும் என்றால் இந்த செல்லிற்கு போன் செய்.” அக்ஷய் ஒரு செல் நம்பரைத் தந்தான். “மனப்பாடம் செய்து விட்டு இதை எரித்து விடு. உன் பாக்கெட்டிலோ, ரூமிலோ வைக்காதே. நான் உனக்கு ஏதாவது தகவல் சொல்ல வேண்டுமென்றால் எப்படியாவது தெரிவிக்கிறேன்”
அக்ஷய் கிளம்பினான்.
ஆனந்த் தம்பியை அணைத்துக் கொண்டு சொன்னான். “ஜாக்கிரதையாய் இரு அக்ஷய்.”
அக்ஷய் தலையசைத்தான். ‘நான் நர்மதாவைப் பார்த்தேன்”
ஆனந்த் ஒரு கணம் பேச்சிழந்தான்.
அக்ஷய் புன்னகைத்தான். “அழகாய் இருக்கிறாள். நல்ல பெண்ணாய் இருக்கிறாள். நீ இனி தாமதிக்காதே. அவளை மாதிரி ஒரு நல்ல பெண் உனக்கு கிடைக்காது. சீக்கிரமே அவளைக் கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விடு. வரட்டுமா?”
ஆனந்த் திகைப்பில் இருந்து மீள்வதற்குள் அக்ஷய் கதவைத் திறந்து வெளியே போய் விட்டான். “தேங்க்யூ சார். தேங்க் யூ வெரிமச்.” என்று தலை குனிந்து சொல்லி விட்டு கதவை சாத்தினான்.
வெளியே வந்தவன் எதிர் அறை 210 வாசலில் நின்று கொண்டிருந்தவனைப் பார்த்து மிக மரியாதையாக வணக்கம் சொன்னான். “சார் நான். லைஃப் விஸ்டம் பப்ளிகேசன்ஸ்ல இருந்து வருகிறேன்….’
210 வாசலில் நின்றிருந்தவன் அதற்கு மேல் அவனைப் பேச விடவில்லை. “ஓடிப் போய் விடு” என்று சுருக்கமாக எச்சரித்தான்.
அதே நேரத்தில் அந்த எச்சரித்த மனிதனுக்கு சிபிஐ மனிதனிடம் இருந்து போன் வந்தது.
(தொடரும்)