மஹாவீர் ஜெயின் தன் எதிரே அமர்ந்து ·பைலில் மூழ்கியிருந்த ஆனந்தையே பார்த்துக் கொண்டிருந்தார். எத்தனையோ சினிமா கதாநாயகர்களை விட ஆனந்த் அழகாயிருந்தான். வயது 29 என்று ரிகார்டில் இருந்தாலும் இன்னும் இளமையாகத் தெரிந்தான். ஆனால் முகத்தில் ஒரு வித சோகம் கூட இருந்ததாகத் தோன்றியது. ஆச்சார்யாவின் கொலை பற்றிய பைலைப் படித்துக் கொண்டிருப்பதால் ஆச்சார்யாவை நினைத்து சோகமா, இல்லை வேறு ஏதோ வருத்தத்தில் அவன் இருக்கிறானா என்பதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.
அவன் படிப்பதை முடித்த பிறகு கொலை நடந்த இடத்தின் புகைப்படங்களை ஆராய்ந்தான். ஆச்சார்யாவின் பிணத்தின் புகைப்படத்தை விட அதிகமாக அவர் வீட்டுக்கு காவலில் இருந்த போலீஸ்காரர் பிணத்தின் புகைப்படத்தை ஆராய்ந்தான். பிறகு போலீஸ் ரிப்போர்ட்டைப் படித்து விட்டுச் சொன்னான். “போலீஸ் இது ஏதோ பழைய பகை என்று காண்பிக்கவே முயற்சி செய்திருக்கிறார்களே ஒழிய பல விஷயங்களை கண்டுகிட்ட மாதிரியே தெரியலை”
“உதாரணமா…”
“இந்த போலீஸ்காரர் முன்னந்தலையில் பெரிய தடியால் அடித்து அவரைக் கொன்றிருக்கிறார்கள்….”
“ஆமாம். அதற்கென்ன?”
“அப்படியானால் அவர் எதிரே வந்துதான் அடித்திருக்க முடியும்”
“ஆமாம்”
“துப்பாக்கியுடன் காவலுக்கு நிற்கிற ஒரு போலீஸ்காரர் எதிரே யாராவது தடியுடன் வந்தால் சும்மாவா இருப்பார். எவ்வளவு வேகமாக எதிராளி வந்தாலும் குறைந்த பட்சம் துப்பாக்கியையாவது எடுக்காமல் இருப்பாரா. இதில் துப்பாக்கியை எடுத்த மாதிரியே தெரியவில்லையே”
ஜெயினுக்கு அவன் அறிவுக் கூர்மை பிடித்திருந்தது. “அந்தப் போலீஸ்காரருடன் யாராவது பேசிக் கொண்டிருந்தே இருந்து விட்டு திடீர் என்று அவர் எதிர்பார்க்காத போது அடித்திருக்கலாம்….”
“அப்படியானால் அது அந்த போலீஸ்காரருக்கு நன்றாகத் தெரிந்த மனிதராக இருந்திருக்க வேண்டும். பிறகு ஆச்சார்யாவும் வந்தவருக்கு அந்த இரவு நேரத்தில் கதவைத் திறந்திருக்கிறார் என்றால் அவருக்கும் கொலையாளியை நன்றாகவே தெரிந்திருக்க வேண்டும். அப்படியானால் கொலையாளி இரண்டு பேருக்கும் நன்றாகவே தெரிந்த, அவர்கள் சந்தேகப்படாத ஆள். அதனால் கொலையாளி கண்டிப்பா போலீஸ் சந்தேகப்படற மாதிரி முந்தைய பகையாளியாய் இருக்க முடியாது…”
ஜெயின் தலையாட்டினார். அவன் சில நிமிடங்களிலேயே அந்த உண்மையை அடைந்தது அவரை மனதினுள் சபாஷ் போட வைத்தது. தன் தேர்வு சரிதான் என்ற பூரண நம்பிக்கை அவருக்கு வர “ஆனந்த் அந்த ·பைலில் இல்லாத சில விஷயங்களையும் நீ தெரிந்து கொள்ள வேண்டும்….” என்று அவனிடம் மறைக்காமல் ஆச்சார்யா சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் சொன்னார்.
ஆச்சார்யாவின் பழைய வில்லங்கமான கண்டுபிடிப்புகளை வெளியே யாரையோ வைத்து அவர் செய்த விதம், அந்த நபர்கள் யாரென “பாதுகாப்பு” காரணங்களுக்காக வெளியே சொல்ல மறுத்தது, அந்த ஆபிசிலேயே புல்லுருவிகள் இருப்பதாக அவர் சொன்னது, கடைசி நாளில் சாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக அவர் ஃபோன் செய்தது என எல்லாவற்றையும் விளக்கமாகச் சொன்னார்.
கவனமாக எல்லாவற்றையும் கேட்ட ஆனந்த், “அவர் கண்டுபிடிக்கப் பயன்படுத்திய வெளியாள் யாராக இருக்கும் என்று ஏதாவது யூகம் இருக்கிறதா?” எனக் கேட்டான்
“இல்லை”
“ஆபிசில் வேறு யாருக்காவது தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கா?”
“இல்லை”
“அவர் கடைசியா போனில் சொன்னதை அப்படியே சொல்லுங்க சார்”
“சார், நாட்டையே அதிர வைக்கிற மாதிரியான சில தகவல்களை ஆதாரத்தோட வைத்திருக்கிறேன். நாளைக்குக் காலையில் உங்க டேபிள்ல வைக்கிறேன்னார்”
“அவர் இறந்தது இரவு ஒன்றரை மணிக்கு. உங்களுக்குப் ஃபோன் செய்தது எத்தனை மணிக்கு?”
“சுமார் பத்து இருக்கும்”
“அப்படின்னா அவர் வைத்திருக்கிறதா சொன்ன ஆதாரங்கள் அவர் கையிலேயோ வீட்டிலேயோதான் இருந்திருக்க வாய்ப்பு அதிகம்”
“ஆமாம். அந்த ஆதாரங்கள் அவர் வீட்டிலேயே இன்னமும் இருக்க வாய்ப்பு இருக்கா?”
“பெரும்பாலும் அந்த ஆதாரங்கள் அந்தக் கொலையாளிகள் கையில் கிடைத்து அவர்கள் எடுத்துக் கொண்டு போயிருப்பாங்கன்னு தோணுது.”
*********
இரவு மணி பதினொன்று. டில்லி நகரின் புறப்பகுதியில் ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் ஒரு கார் தனியாக நின்றிருந்தது. CBI மனிதன் தன் காரை அரை கிலோ மீட்டர் தள்ளியே நிறுத்தி நடந்து வந்து அந்தக் காரை அடைந்தான். யாரும் அவனைப் பின் தொடரவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு அந்தக் கார் ஜன்னலைத் தட்டினான். முன் கதவு திறக்கப்பட்டது. உள்ளே நுழைந்து அமர்ந்தான். உள்ளே விளக்கு இல்ல. தூரத்து தெரு விளக்கின் அரைகுறை வெளிச்சத்தில் சரியாகப் பார்க்க அவனுக்கு சில வினாடிகள் தேவைப்பட்டன.
டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்த நபரை நேரில் சந்திப்பது அதுவே முதல் முறை. வயது அதிகபட்சம் இருபத்தொன்று இருக்கலாம். குறுந்தாடியுடன் சிவப்பாக இருந்தான். அந்த மனிதன் CBI மனிதனை உணர்ச்சியே இல்லாமல் கூர்ந்து பார்த்தான். அவன் முகம் இறுகி இருந்தது. CBI மனிதன் அவனைப் பார்த்து “ஹலோ” என்றான். அந்த நபர் அவனுடைய ஹலோவை அங்கீகரிக்கவில்லை. பார்வையைத் திருப்பிக் கொள்ளவுமில்லை.
பின் சீட்டில் இருந்து குரல் கேட்டது. “உங்க ஆள்கள் அங்கே இருந்து ஃபோன் செய்தாங்களா?”
CBI மனிதன் பின்னால் திரும்பி வணக்கம் சொன்னான். பின்னால் இருந்த மனிதர் வெறுமனே தலையசைத்தார்.
“செய்தாங்க. ஆனா அவன் பிணம் இன்னும் கிடைக்கலை…”
குறுந்தாடியும், பின்னால் இருந்த மனிதரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அதைக் கவனிக்கத் தவறாத CBI மனிதன் பொறுமையாகச் சொன்னான். “பாருங்க… அவனைப் பற்றி நான் அவங்க கிட்ட தெளிவாய் சொல்லியிருக்கேன். நீங்க சொன்ன மாதிரி அவன் பயங்கரமானவன், அவனுக்குப் பல பேர் இருக்கு, பல வேஷம் போடுவான். அதனால சின்ன அலட்சியம் கூட இருக்கக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன். அவங்களும் அதை மனசுல வச்சுதான் தேடிகிட்டிருக்காங்க. ஆனா பர்சனலா எனக்குத் தோணறதை மறுபடியும் சொல்றேன். என்னதான் அசகாய சூரனே ஆனாலும் உயிர் இருந்தாத்தானே நாம் கவலைப்படணும். குண்டடி பட்ட அவன் கீழே தண்ணியிலேயோ, மணல்லயோ விழுந்தா பிழைக்க வாய்ப்பு இருக்கு. மலையில இருந்து விழுந்திருக்கான்கிறப்ப……”
பின்னால் இருந்த நபர் அவனுடைய சைகையாலேயே நிறுத்தினார். தன் கோபத்தை அடக்கிக் கொண்டு சொன்னார். “எங்களைப் பொறுத்த வரை அவன் உடம்பு கிடைக்கிற வரை நிம்மதியாய் இருக்க முடியாது. அவனைப் பத்தி முழுவதும் தெரிஞ்சாதான் உங்களுக்கு எங்க கவலை புரியும்…. முதல்ல இந்த பேப்பர்ஸைப் படிங்க”
சொன்னது அவரென்றாலும் அந்தக் காகிதங்களை குறுந்தாடிதான் நீட்டினான். வாங்கிக் கொண்ட காகிதங்கள் பல இருப்பதைப் பார்த்த CBI மனிதன் “நான் வீட்டுக்குப் போய்ப் படிக்கிறேனே” என்றான். இந்த அரையிருட்டில் படிப்பதுதான் எப்படி. மேலும் இவர்களையே இந்த அளவு பயமுறுத்துபவன் வித்தியாசமானவனாக இருப்பான் போல் இருக்கிறது. புரிந்து கொள்ள நிதானமாய்த்தான் படிக்க வேண்டும்.
பின்னால் இருந்தவர் சொன்னார். “இங்கேயே படிங்க”
தன் கையில் இருந்த டார்ச் லைட்டை அந்தக் காகிதங்களில் அடித்து அவன் படிக்க குறுந்தாடி வசதி செய்தான். அந்தக் காகிதங்களைத் தன்னிடம் தந்தனுப்ப விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொண்ட CBI மனிதன் அந்த டார்ச் லைட் வெளிச்சத்தில் படிக்க ஆரம்பித்தான்.
படிக்க ஆரம்பித்தவன் சிறிது நேரத்தில் மற்ற எல்லாவற்றையும் மறந்தான். சரியாக நாற்பது நிமிடங்கள் படித்து அவன் முடித்த போது அந்தக் குளிரிலும் அவனுக்கு முத்து முத்தாக வியர்த்தது. “என்னால நம்ப முடியலை…..”
“காரணம் நீங்க அவனைப் பார்த்ததில்லை. நாங்க பார்த்திருக்கோம்….”
குறுந்தாடி கண்களில் ஏதோ ஒரு அழுத்தமான உணர்ச்சி வந்து போனது. பயமா? கோபமா?
CBI மனிதன் அதைக் கவனித்தபடியே கேட்டான். “இதுல இருக்கறதுல எல்லாமே உண்மையா?” அவன் அதில் பாதியாவது பொய்யாயிருக்கலாம் என்று எண்ணினான்.
“இதுல உண்மையை வடிகட்டி எழுதியிருக்கிறாங்க. வடிகட்டிப் பார்க்காத விஷயங்க நிறைய இருக்கு. அதையும் எழுதறதுன்னா ஒரு புஸ்தகம் பத்தாது…” பின் சீட்டிலிருந்தவர் சொன்னார்.
அமானுஷ்யன் என்ற பெயர் அந்த செத்துப் போன மனிதனுக்கு மிகவும் பொருத்தம்தான் என்று தோன்றியது. ஒரு வேளை தப்பித் தவறி அந்த அமானுஷ்யன் இறந்து போகாமல் இருந்தால்…. CBI மனிதன் கைக்குட்டையால் வியர்வையைத் துடைத்துக் கொண்டான். இவர்கள் பயத்தின் காரணம் மெள்ள புரிய ஆரம்பித்தது.
அவனையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த குறுந்தாடி முதல் முறையாக வாயைத் திறந்தான். “அவன் பிணத்தைக் கண்ணால் பார்த்து எரிச்சு சாம்பலாகிறதையும் கண்ணால் பார்த்தால் ஒழிய அவன் செத்துட்டான்னு பல பேர் நம்ப மாட்டாங்க. அதனால அவன் செத்துட்டான்கிறதை எப்படியாவது உறுதிப்படுத்துங்க”
(தொடரும்)