‘அமானுஷ்யன்’
அந்தப் பெயரே ஆனந்த் மனதில் அன்று முழுவதும் ஒலித்துக் கொண்டிருந்தது. அக்ஷயிற்கு அந்தப் பெயரை வைத்தது யார் என்று அவனுக்குத் தெரியாது. ஆனால் அந்தப் பெயர் அவனுக்கு மிகப் பொருத்தமானது என்பதில் ஆனந்திற்கு சந்தேகமே இல்லை. ஆனந்த் மனதில் அக்ஷயை சந்தித்த அந்த முதல் கணம் வந்து போனது. கண்ணிமைக்கும் நேரத்தில் அவனைத் தூக்கி கட்டிலில் வீசியது எப்படி என்று அவனுக்கு இன்னமும் விளங்கவில்லை. ஏதோ சில அபூர்வ வித்தைகளை அவன் அறிந்திருக்கிறான் என்று புரிந்தது. அவனைப் பற்றி நன்றாக அறிந்த யாரோ தான் அவனுக்கு அந்தப் பட்டப் பெயரை வைத்திருக்க வேண்டும்.
அவன் அந்த இமயமலைச் சாரலில் உள்ள புத்த விஹாரத்தில் வந்து விழுவதற்கு முன் யாராக இருந்தான், எங்கே வசித்தான், என்ன செய்து கொண்டிருந்தான் என்ற கேள்விகள் விடையில்லாமல் ஆனந்தை அலைக்கழித்தன. இப்போது திடீரென்று எதிரிகள் அவனைப் பிடிக்க அதிக தீவிரம் ஏன் காட்டுகிறார்கள் என்பது அவனுக்குப் புரியவில்லை.
ஆனந்த் வீட்டுக்குப் போன் செய்தான். அம்மா உற்சாகமாகப் பேசினாள். இளைய மகன் வந்ததன் மாற்றம் அவள் பேச்சில் நன்றாகவே தெரிந்தது. கடைசியில் அக்ஷயிடம் அவள் போனைத் தந்தாள்.
ஆனந்த் அக்ஷயிடம் கேட்டான். “உனக்கு அமானுஷ்யன் என்ற பெயரைக் கேட்டதும் என்ன தோன்றுகிறது அக்ஷய்”
அக்ஷய் சிறிது நேரம் யோசித்து விட்டு சொன்னான். “ஒன்றுமே தோன்றவில்லை. ஏன் கேட்டாய் ஆனந்த்.”
“அதை நேரில் சொல்கிறேன். நீ முடிந்த வரை சீக்கிரம் வா. எதோ நடக்கப் போகிறது போல எனக்கு தோன்றுகிறது அக்ஷய்”
“நான் நாளைக்கே கிளம்பி வருகிறேன் ஆனந்த்”
“அம்மா….” என்றான் ஆனந்த். இளைய மகன் பல வருடங்கள் கழித்து கிடைத்திருக்கும் இந்த நேரத்தில், வந்த மறு நாளே அவன் கிளம்பினால் அவள் எப்படி எடுத்துக் கொள்வாள்? அவளால் தாங்க முடியுமா? அதுவும் அவனை அவள் மறுபடியும் சந்திக்க முடியும் என்ற நம்பிக்கை ஆனந்தின் அடிமனதில் இருக்கவில்லை.
அவனுடைய ஒரு சொல்லில் அத்தனை அர்த்தங்களும் புரிந்து கொண்டவன் போல் அக்ஷய் சொன்னான். “நீ கவலைப்படாதே. நான் பார்த்துக் கொள்கிறேன்”
***********
நர்மதாவின் போட்டோவை முன்பே பார்த்திருந்ததால் அக்ஷயிற்கு அவளை அடையாளம் கண்டுபிடிப்பது கஷ்டமாக இருக்கவில்லை. போட்டோவில் இருந்ததை விட அழகாக இருந்தாள். கல்லூரி முடிந்து அனைவரும் வெளியே வந்து கொண்டிருந்த நேரத்தில் அவளை இடைமறித்தான்.
“நீங்கள் நர்மதா தானே?”
“ஆமாம். நீங்கள்?”
“நான் ஆனந்தின் தம்பி”
அவளுக்கு சட்டென்று புரியவில்லை. எந்த ஆனந்தின் தம்பி என்பது போல பார்த்தாள்.
“இப்போது சிபிஐயில் வேலை பார்க்கிறானே ஒரு ஆனந்த். அவன் தம்பி நான்”
அவள் அப்படியே சிலை போல சில வினாடிகள் நின்றாள். அவள் சுதாரித்துக் கொண்ட போது முகத்தில் சந்தோஷம் தெரிந்தது. “அவரின் காணாமல் போன தம்பியா?”
“ஆமாம்”
அவள் நீங்கள் எப்படிக் கிடைத்தீர்கள்? இவ்வளவு நாட்கள் எங்கிருந்தீர்கள் என்ற கேள்விகளை எழுப்பக்கூடும் என்று அக்ஷய் எதிர்பார்த்தான். ஆனால் அவள் பழைய கதைகளைக் கிளறாமல் இப்போதைய விஷயத்தை மட்டும் பேசினாள். ஆனந்தும் அம்மாவும் எவ்வளவு சந்தோஷப்படுவார்கள் என்பதை நினைக்கையில் சந்தோஷமாக இருக்கிறது என்று மட்டும் மனதாரச் சொன்னாள்.
அவன் சொன்னான். “நான் உங்களிடம் கொஞ்சம் தனியாகப் பேச வேண்டும்”
பக்கத்தில் இருந்த ஒரு ஓட்டலுக்கு காபி சாப்பிட இருவரும் சென்றார்கள். செல்லும் போது கேட்டாள். “ஆனந்த் எப்படி இருக்கிறார்?”. கேட்கும் போது அவளையும் மீறி அவள் முகத்தில் ஒரு ஆழமான துக்கம் வந்து போனது.
“நன்றாய் இருக்கிறான். இப்போது ஒரு கேஸ் விஷயமாய் டெல்லியில் இருக்கிறான்”
ஓட்டலில் பெரிதாகக் கூட்டம் இருக்கவில்லை. காபிக்கு ஆர்டர் செய்து விட்டு அவனிடம் சொன்னாள். “சொல்லுங்கள்”
அவன் சுற்றி வளைக்காமல் கேட்டான். “நீங்கள் அவனை இன்னும் காதலிக்கிறீர்களா?”
அவள் முகத்தில் ஒரு அடிபட்ட வலி தெரிந்தது. இந்தக் கேள்வியை அவனிடம் இருந்து அவன் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை என்பது தெரிந்தது. அன்று காதலை மறுத்தவன் அதைப் பெருமையாய் தம்பியிடமும் சொல்லி இருக்கிறான் என்ற விதத்தில் அவள் நினைத்த மாதிரி தெரிந்தது.
சற்று கோபத்துடனும் சுய பச்சாதாபத்துடனும் சொன்னாள். “நான் ஒரு பைத்தியம். நட்புக்கும் காதலுக்கும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. அதற்கு என்னை மன்னித்து விடச் சொல்லுங்கள்”
“அவன் தான் பைத்தியம். நட்பு என்று உங்களிடம் சொல்லி விட்டு உங்கள் போட்டோவை எங்கே போனாலும் எடுத்துக் கொண்டே போகிறான்.”
அவள் அவனை திகைப்புடன் பார்த்தாள். தான் கேள்விப்பட்டதை அவளால் நம்ப முடியவில்லை போலத் தெரிந்தது.
அக்ஷய் சொன்னான். “நான் காணாமல் போனதில் இருந்து அந்த வீடு ஏதோ இழவு வீடு மாதிரி இருக்கிறது. உங்களைக் கல்யாணம் செய்து கொண்டு அந்த மாதிரி ஒரு துக்ககரமான சூழ்நிலையில் உங்களைத் தள்ள அவன் ஆசைப்படவில்லை. நீங்களாவது எங்கேயாவது சந்தோஷமாய் இருக்க வேண்டும் என்று நினைக்கிற அளவுக்கு உங்களை அவன் காதலிக்கிறான்……”
அவளால் பேச முடியவில்லை. அவள் கண்கள் நிறைந்தன. அந்த ஓட்டலில் அழுது விடக் கூடாது என்று அவள் அரும்பாடுபட்டாள்.
அவன் சொன்னான். “நான் உங்களைப் பார்க்க வந்தது அவனுக்குத் தெரியாது. அந்த முட்டாளைக் கல்யாணம் செய்து கொள்ள உங்களுக்கு சம்மதம் தானே? நான் முறைப்படி உங்கள் வீட்டில் பேச அம்மாவையும் அவனையும் அவன் சென்னை வந்தவுடன் அனுப்புகிறேன்”
அவள் அழுதே விட்டாள்.
*********
சிபிஐ மனிதன் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். மந்திரியின் போன் ஒரு மணிக்கு ஒரு தடவை வந்து கொண்டிருந்தது. “அவனைப் பற்றி ஏதாவது தகவல் கிடைத்ததா?” என்று கீறல் விழுந்த ரிகார்டு போல ஒரே கேள்வியை ஒவ்வொரு தடவையும் கேட்டார்.
இல்லை என்று பதில் சொல்லியே சிபிஐ மனிதன் சலித்துப் போனான். போலீஸ் தரப்பில் இருந்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. அவனுடைய ஆட்களும் எந்தப் புது தகவலுடனும் வரவில்லை.
அவனுக்கு ஆனந்தின் நடவடிக்கை பெருத்த சந்தேகத்தைக் கிளப்பியது. இன்று அவசர அவசரமாக வந்து ஜெயினைப் பார்த்து விட்டுப் போனவன் வேறு யாரிடமும் பேச்சுத் தரவில்லை. அவன் வேறு எங்கும் சென்று எவரையும் சந்திக்கவும் இல்லை. அந்த ஓட்டலில் அடைபட்டுக் கிடந்தான். அவன் போன் செய்ததும் சென்னையில் இருக்கும் அவன் வீட்டுக்குத் தான். வேறு யாருக்கும் போன் செய்யவுமில்லை.
ஜெயினும் அவனும் என்ன பேசினார்கள் என்பது அவனுக்குத் தெரியா விட்டாலும் ஆச்சார்யா கொலை வழக்கு சம்பந்தப்பட்ட பேச்சாகத் தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஜெயின் அது சம்பந்தமாக வேறு யாரிடமும் பேசக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தது போல் தெரிந்தது.
இனி நாட்கள் அதிகம் இல்லை என்கிற நிலையில் அமானுஷ்யன் பிடிபட்டால் ஒழிய நிம்மதியுடன் காயை நகர்த்த முடியாது என்று மந்திரி, தாடிக்காரன், அவனுடைய கோஷ்டியினர் எல்லோரும் அபிப்பிராயப்பட்டனர். இது வரை ஒன்றும் செய்ய முடியாத அமானுஷ்யன் இனியும் ஒன்றும் செய்ய முடியாது என்று அவனுக்குப் புரிந்தாலும் மனதின் உள்ளே ஏதோ ஒரு நெருடல் அவனுக்கும் இருந்து வந்தது.
ஆனந்தும், அமானுஷ்யனும் சந்தித்திருக்க வேண்டும் அல்லது கூடிய சீக்கிரம் சந்திக்கக் கூடும் என்று அவன் உள்மனம் சொன்னது. அவன் உள்மனம் இது வரை பொய்த்ததில்லை. அவன் நீண்ட சிந்தனைக்குப் பின் ஒரு முடிவுக்கு வந்தவனாக போன் செய்தான். வெளியே இருந்து கண்காணிக்க ஆட்கள் இருப்பது போலவே ஆனந்த் அறைக்குப் பக்கத்திலேயே ஒரு அறை எடுத்துத் தங்கி ஓரிருவர் தொடர்ச்சியாகக் கண்காணிக்க கட்டளையிட்டான். மனம் ஓரளவு நிம்மதியடைந்தது.
(தொடரும்)