அமானுஷ்யன் – 48

“நீ இவ்வளவு வருஷம் எங்கே இருந்தாய் அக்‌ஷய்? எப்படி இருந்தாய்?”

அம்மாவின் அந்தக் கேள்விக்கு அக்‌ஷய் உடனடியாக பதில் சொல்லவில்லை. பின் சிரித்துக் கொண்டே சொன்னான். “அது தான் தெரியவில்லை”

சாரதா தன் இளைய மகனைப் பொய்க் கோபத்தோடு முறைத்தாள். “சும்மா விளையாடாதே. கிண்டலுக்கு ஒரு அளவில்லையா?”

தாயின் மேல் சாய்ந்து அமர்ந்து கொண்டிருந்த அக்‌ஷய் அவள் புடவைத் தலைப்பு நுனியில் முடிச்சு போட்டுக் கொண்டே சொன்னான். “விளையாடலைம்மா. எனக்கு நிஜமாகவே தெரியவில்லை”

புரியாமல் விழித்த தாயிடம் பொய்யையும் உண்மையையும் கலந்து அக்‌ஷய் சொன்னான். “அம்மா எனக்கு நினைவில் இருப்பதெல்லாம் சில நாட்கள் விஷயங்கள்தான். எனக்கு முதலில் நினைவு வந்து விழித்த இடம் ஒரு புத்த விஹாரம். அது இமயமலைச்சாரலில் இருக்கிறது. ஏதோ தலையில் அடிபட்டு நான் மலையிலிருந்து அந்த புத்த விஹார வாசலில் விழுந்திருக்கிறேன். அந்த புத்த விஹாரத்தின் பிக்குகள்தான் என்னைக் காப்பாற்றினார்கள். அவர்கள் நல்ல மனிதர்கள் அம்மா. என்னைக் காப்பாற்றிச் சில நாட்கள் அடைக்கலம் தந்தார்கள். ஆனால் தலையில் அடிபட்ட எனக்குத்தான் பழைய விஷயங்கள் எதுவும் ஞாபகம் இருக்கவில்லை. பெயர் கூட ஞாபகம் இல்லை. அங்கிருந்து கிளம்பி டில்லிக்கு வந்தேன். வரும் வழியில் எனக்கு ஒரு குடும்பம் எனக்கு அறிமுகமானது.”

சஹானா பற்றியும், வருண் பற்றியும், மரகதம் பற்றியும் அக்‌ஷய் சொன்னான். வருணும், மரகதமும் தன்னிடம் காட்டிய பாசத்தைச் சொன்னான். முன்பின் தெரியாத அவனுக்கு அவர்கள் தங்கள் வீட்டில் அடைக்கலம் தந்ததைச் சொன்னான். சஹானா மிக நல்ல பெண் என்பதையும், அவள் கணவன் அவளையும், வருணையும் நன்றாக வைத்துக் கொள்ளவில்லை என்பதை சொன்னான். தனக்கு அவளிடம் ஏற்பட்டிருந்த ஈர்ப்பையும், மற்ற நிகழ்ச்சிகளையும் அவளிடம் சொல்லவில்லை.

“அங்கே காணாமல் போனவர்களைப் பற்றிக் கண்டுபிடிக்கும் ஏஜன்சி ஒன்றிற்கு சஹானா என்னைப் பற்றி தகவல்கள் கொடுத்தாள். என் நாக மச்சத்தை அடையாளமாய் சொன்னாள். அவர்கள் எடுத்த முயற்சி என்னை ஆனந்திடம் கொண்டு வந்துவிட்டது. ஆனால் இது வரை நான் எங்கே இருந்தேன், எங்கே வளர்ந்தேன் என்பதுதான் தெரியவில்லை ….”

சாரதா கண்கலங்கினாள். அக்‌ஷய் கேட்டான். “என்னம்மா?”

“அந்த புத்த பிக்குகளும், சஹானாவும் உனக்கு காட்டின அன்புக்கு நான் என்ன செய்தால் அது கைமாறாகும்னு யோசிக்கிறேன் அக்‌ஷய்”

“நீங்கள் எனக்காக செய்த பூஜைகள், இருந்த விரதங்கள் எல்லாம் வீண் போகலைம்மா”

சாரதா இன்னொரு முறை அழுது ஓய்ந்தாள்.

தாயும் மகனும் நீண்ட நேரம் பேசினார்கள். கடிகார முட்கள் அவர்கள் பேச்சைக் கேட்டபடியே நகர்ந்தன. சாரதா தன் பழைய நாட்களைப் பற்றிச் சொன்னாள். ஆனந்தைப் பற்றி நிறைய சொன்னாள். அவன் நன்றாகப் படித்ததைப் பற்றியும், பரிசுகள் வாங்கிக் குவித்ததைப் பற்றியும், அவனுடைய நல்ல குணங்களைப் பற்றியும் சொன்னாள். பழைய போட்டோக்களை எல்லாம் இளைய மகனுக்குக் காண்பித்தாள்.

ஆனந்த் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தங்கப்பதக்கம் வாங்கியதற்கு பள்ளியில் பாராட்டு விழா நடத்தி சாரதாவையும் அழைத்து கௌரவித்து இருந்ததை எடுத்த போட்டோ ஒன்றை அக்‌ஷய் கூர்ந்து பார்த்தான். போட்டோவில் பள்ளி முதல்வர், ஆனந்த் எல்லாம் புன்னகையுடன் சந்தோஷமாகத் தெரிந்தார்கள். ஆனால் சாரதா முகத்தில் மட்டும் ஏதோ ஒரு துக்கம் தெரிந்தது. அந்த துக்கத்திற்குக் காரணம் அவன்தான் என்பது அக்‌ஷயிற்குப் புரிந்து மனம் கனத்தது.

“அம்மா. ஆனந்த் தங்கப்பதக்கம் வாங்கியதற்கான பாராட்டு விழாவில் உங்களைத் தவிர எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள்.”

சாரதா சொன்னாள். “அப்போது என்று இல்லை, உன்னை இன்றைக்குப் பார்த்த நேரம் வரைக்கும் நான் எப்போதும் சந்தோஷமாய் இருந்ததில்லை, அக்‌ஷய்”

“அம்மா நீங்கள் செய்தது நியாயம் இல்லை”

சாரதா அவனைத் திகைப்புடன் பார்த்தாள்.

அக்‌ஷய் பொறுமையாக விளக்கினான். “உங்களுடைய ஒரு குழந்தை காணாமல் போய் விட்டது. அவனுக்கு நீங்கள் கிடைக்கவில்லை. அது விதி. உங்களுடைய இன்னொரு குழந்தை உங்களுடனே தான் இருக்கின்றான். ஆனால் காணாமல் போன குழந்தையையே நினைத்துக் கொண்டு கவலையில், இருக்கிற குழந்தையைக் கவனிக்காமல் இருக்கிறீர்கள். நீங்கள் கூடவே இருந்தும் அவனுக்கு உங்கள் பாசம் கிடைக்கவில்லை. இது நியாயமா?”

சாரதா குழப்பத்துடன் சொன்னாள். “நான் அவன் மேல் பாசம் வைக்கவில்லை என்று யார் சொன்னது?”

“இந்த போட்டோ சொல்கிறது. பாருங்கள். அவனுடைய சந்தோஷமான நேரத்தில் நீங்கள் கூடவே நின்றாலும் உங்கள் மனம் வேறெங்கேயோ இருக்கிறது. முகத்தில் துளி சந்தோஷம் இல்லை. ஆனந்த் மனம் எப்படி இருந்திருக்கும் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்”

சாரதா ஒன்றும் சொல்லாமல் அவனையே பார்த்தாள். பின் அவனிடம் அழுது கொண்டே சொன்னாள். “அவன் ஒவ்வொரு வெற்றியிலும் நான் சந்தோஷப்படாமல் இல்லை அக்‌ஷய். அதே நேரத்தில் அம்மாவுக்கு இன்னொரு குழந்தை படிக்கிறதா, விளையாடுகிறதா, வேலை செய்கிறதா, பிச்சை எடுக்கிறதா என்று தெரியாமல் இருக்கும் போது துக்கம் வராமல் என்னடா செய்யும். என் நிலைமையில் இருந்து கொஞ்சம் யோசித்துப் பார்”

அக்‌ஷய் சொன்னான். “ஆனாலும் அம்மா, இல்லாததையே நினைத்து துக்கப்பட்டு, இருப்பதன் அருமை தெரியாமல் இருப்பது ஒரு முட்டாள்தனம் இல்லையா?”

மகன் சொன்னதில் இருந்த நியாயம் ஒருபுறம் அவள் இதய ஆழத்தைத் தொட்டது. தன் மூத்த மகனுடைய உணர்வுகளை இவ்வளவு காலம் அலட்சியப்படுத்தி விட்டோமோ என்ற குற்ற உணர்வு எழ ஆரம்பித்த அந்த வேளையில், இன்னொரு புறம் அக்‌ஷய் சொன்ன விதத்தில் இருந்த ஒருவித எளிமை கலந்த கம்பீரம் அவளைப் பெருமை கொள்ள வைத்தது. என் மகன்!

**********

ஆனந்த் மஹாவீர் ஜெயினை நேரில் சென்று சந்திக்கும் வரை ஒருவித படபடப்புடனேயே தான் இருந்தான். சிபிஐ அலுவலகத்தில் நுழைந்த போது மகேந்திரனின் கழுகுப்பார்வையையும் ஆனந்த் கவனித்தான். மகேந்திரன் கையை உயர்த்தி அவனைப் பார்த்து புன்னகைக்க ஆனந்தும் புன்னகைத்து விட்டு ஜெயினின் அறைக்குள் நுழைந்தான்.

“என்ன சார்?”

“அந்த வெடிகுண்டு வைத்தவன் பற்றி நடக்கிற விசாரணை இன்னும் மிகவும் ரகசியமாய் தான் நடக்கிறது. குறைவான ஆட்கள், அதுவும் ஒரு குறிப்பிட்ட அதிகாரிக்கு நம்பிக்கையான ஆட்களை வைத்துத்தான் விசாரணையை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். அந்த ஃபைல் கூட அவர்களைத் தவிர வேறு யார் கையிலும் கிடைத்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்களாம்”

ஆனந்த் தலையசைத்தான்.

“அங்கே இருக்கும் எனக்கு வேண்டப்பட்ட ஒரு அதிகாரியிடம் நான் சொல்லி இருந்தேன். ஏதாவது முக்கியமான தகவல்கள் கிடைத்தால் சொல்லுங்கள் என்று. அவர் யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி ஏதாவது தகவல் கிடைக்கிறதா என்று பல விதங்களில் விசாரித்துப் பார்த்து இருக்கிறார். நேற்று அந்த விசாரிக்கும் ஆட்களிடம் வழக்கத்திற்கு மாறாக அவசரமும், பரபரப்பும் அதிகமாய் இருந்ததை அவர் பார்த்தவுடனே அவருக்கு சந்தேகம் அதிகமாய் இருக்கிறது. அந்த ஆட்களில் ஒருவனுடைய நண்பர் இவருக்கும் நண்பர். அவரிடம் இவர் ‘ஏன் உங்கள் நண்பர் இவ்வளவு பரபரப்பாக இருக்கிறார்?’ என்று கேட்டிருக்கிறார்.”

“அந்த நண்பர் “அந்த வெடிகுண்டு வைத்தவனை உடனடியாகக் கண்டுபிடிக்க வேண்டும் என்று மேலிடத்தில் பிரசர் அதிகப்படுத்துகிறார்கள். அதுதான்” என்று சொல்லி இருக்கிறார்.”

ஆனந்த் இதயத்தில் படபடப்பு கூடியது. திடீரென்று பிரசர் அதிகப்படுத்த என்ன காரணம் என்பது அவனுக்குப் பிடிபடவில்லை. திடீரென்று எதாவது புதிய நிகழ்வு நடந்திருக்கிறதா?

ஜெயின் தொடர்ந்தார். “அந்தப் பொதுவான நண்பர் இவரிடம் இன்னொரு விஷயத்தைச் சொல்லி இருக்கிறார். “அந்த வெடிகுண்டு ஆள் கொஞ்சம் விவகாரமான ஆளாய் தான் இருப்பான் போல் இருக்கிறது. அந்த ஃபைலின் அட்டையில் இருந்த பெயர் வித்தியாசமாக இருந்ததைப் பார்த்து இது என்னடா இப்படி ஒரு பெயர் என்று கேட்டேன். அதற்கு அவன் இது அந்த குற்றவாளியின் பட்டப்பெயர் என்று சொல்லி விட்டுப் போய்விட்டான்” என்று. ஆனந்த் அந்த பட்டப்பெயர் எனக்கும் வித்தியாசமாய் தான் தெரிந்தது. அந்தப் பட்டப் பெயர் என்ன தெரியுமா?”

ஆனந்த் கேட்டான். “என்ன சார்?”

“அமானுஷ்யன்”

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top