ஆனந்த் ஜெயின் தன்னை அழைத்து ஆச்சார்யா கொலை வழக்கை ஒப்படைத்ததில் இருந்து ஆரம்பித்து விவரமாகச் சொல்ல அக்ஷய் உன்னிப்பாக அனைத்தையும் கேட்டான். ஆச்சார்யா வீட்டில் அவர் புதிதாக வாங்கி இருந்த ஒரு ஜென் புத்தகத்தினுள் டெல்லி வரைபடத்தில் ஏழு இடங்கள் குறிக்கப்பட்டிருந்தது என்று ஆனந்த் சொன்னபோது, அக்ஷய் அந்த இடங்களைச் சொல்லும்படி ஆர்வமாகச் சொன்னான்.
ஆனந்த் சொன்னான். “சாந்த்னி சௌக், ரயில்வே ஸ்டேஷன், பாரகம்பா ரோடு, லோட்டஸ் டெம்பில், சன்சாத் மார்க், கனாட் ப்ளேஸ், இந்தியா கேட்.”
அக்ஷய் அந்த இடங்களைக் கேட்டவுடன் உள்ளே ஏதாவது பொறி தட்டுகிறதா என்று பார்த்தான். எந்த நினைவையும் அந்த இடங்கள் ஏற்படுத்தவில்லை.
ஆனந்த் ஆர்வமாக அவனைப் பார்த்தான். ‘அக்ஷய் ஏமாற்றத்துடன் ஒரு நினைவும் வரவில்லை’ என்ற பொருளில் தலையாட்டினான்.
ஆனந்த் தான் விட்ட இடத்தில் இருந்து மறுபடி தொடர்ந்தான். மகேந்திரனைப் பற்றி அவன் சொன்னபோது அவன் ஏற்படுத்திய சந்தேகத்தைச் சொன்னான்.
அக்ஷய் சொன்னான். “எனக்கு அவனைப்பற்றி விவரமாய்ச் சொல்”
“அரசியல் செல்வாக்கால் வேலை கிடைத்து வந்தவன், அடுத்தவர் தனிப்பட்ட விஷயங்களை வேவு பார்ப்பவன், கம்ப்யூட்டரில் புலி, ஆச்சார்யாவுடன் மிக நெருக்கமாக இருந்தவன், அடிக்கடி அவர் வீட்டுக்கு போய் வந்தவன், நான் சிபிஐ ஆபிசில் உள்ளே நுழைந்தாலே என்னை கழுகுப் பார்வையால் பார்ப்பவன்.”
“உங்கள் டைரக்டர் ஜெயின் எப்படி?”
“ஆள் நல்ல மாதிரி”
“வேறு யாரும் ஆச்சார்யாவுடன் நெருக்கமாக இருந்ததில்லையா?”
“ராஜாராம் ரெட்டி கிட்டத்தட்ட ஆச்சார்யா வயது தான். பதவியும் இருவருடையதும் ஒரே மாதிரி தான். அவர் கூட ஆச்சார்யாவுடன் ஓரளவு நெருக்கமாய் இருந்தவர்தான்”
“அவர் எப்படி?”
“மிக நாணயமானவர். இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஒரு மந்திரியின் கிரிமினல் நடவடிக்கைகளை வெளியே கொண்டு வந்தவர். ஆனால் அந்த மந்திரி செல்வாக்கினால் கோர்ட்டில் அந்த கேஸ் புஸ்வாணமாகியது. அதில் அவர் நிறையவே மனம் உடைந்து விட்டார். ஆபிஸிற்கே நிறைய நாள் வராமல் இருந்தாராம். பின் எப்படியோ அவரை சமாதானப்படுத்தி மறுபடி கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் அவர் இப்போது எதிலும் அவ்வளவு தீவிரமாய் ஈடுபாடு காட்டுவதில்லை”
“நீ என்னைப் பற்றி உங்கள் ஆபிசில் யாரிடமாவது சொன்னாயா?”
“இல்லை. ஜெயினிடம் கூட சொல்லவில்லை”
திடீரென்று அக்ஷய் உதடுகளில் விரலை வைத்து எச்சரித்தான்.
ஆனந்த் குழப்பத்துடன் மெல்ல கேட்டான். “என்ன?”
“உன் அறைக்கு வெளியே யாரோ இருக்கிறார்கள். கதவு பக்கம் நின்றுகொண்டு இருக்கிறார்கள்”
ஆனந்த் மெல்ல சொன்னான். “என்னை பின் தொடர்ந்து வந்த ஆட்களாய் இருக்கலாம். என்ன செய்யலாம்?”
“எப்படியும் உள்ளே வர முயற்சி செய்வார்கள். பிடித்து கட்டிப்போட்டு கேட்கிற விதத்தில் கேட்டால் யார் அனுப்பி வந்தார்கள் என்பதை சொல்லப் போகிறார்கள்.”
ஆனந்த் தாழ்ந்த குரலில் சொன்னான். “அவர்கள் எல்லாம் ப்ரொஃபசனல்ஸ். உயிரே போனாலும் வாய்விட்டுச் சொல்ல மாட்டார்கள். அவர்களைத் தேர்ந்தெடுக்கும் போது அவர்களுக்குத் தரப்படும் முதல் கட்டளையே அதுதான். அவர்களைக் கண்டுபிடித்து விட்டோம் என்று தெரிந்தால் அவர்களுக்குப் பதிலாக வேறு ஆட்களை நியமிப்பார்கள். அதனால்தான் நான் கண்டும் காணாத மாதிரி இருக்கிறேன்”
அவன் சொல்வதும் உண்மை என்று அக்ஷயிற்குப் பட்டது. “அப்படியானால் அவர்களை அனுப்பி விட்டு வா”
ஆனந்த் எழுந்து கதவைத் திறக்கச் சென்றான். இரண்டு பேர் கதவருகே நின்று உள்ளே ஏதாவது சத்தம் கேட்கிறதா என்று கேட்கும் முயற்சியில் காதுகளை கதவில் வைத்துக் கொண்டு நின்றிருந்ததால் கதவு திடீரென்று திறக்கப்பட்டவுடன் ஆனந்த் மேல் சாய்ந்து பின் சமாளித்துக் கொண்டு நின்றார்கள்.
ஆனந்த் கேட்டான். “யார் வேண்டும்”
இருவரில் ஒருவன் சமயோசிதமாக “மிஸ்டர் ஸ்ரீவாஸ்தவ்?” என்றான்.
“இல்லையே. உங்களுக்கு எந்த ரூம் வேண்டும்?”
“ரூம் நம்பர் 208”
“இது ரூம் 205”
அப்போதுதான் அறை எண்ணை கவனித்தவர்கள் போல் நடித்து விட்டு “தொந்திரவுக்கு மன்னிக்கவும்” என்று சொல்லி விட்டு வேகமாக அங்கிருந்து நகர்ந்தார்கள்.
கதவை சாத்திவிட்டு வந்த ஆனந்த் சொன்னான். “அவர்கள் தான்”
அக்ஷய் தலையசைத்து விட்டு கேட்டான். “சரி அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?”
ஆனந்த் சொன்னான். “நீ முதலில் அம்மாவைப் போய் பார்த்து விட்டு வா?”
“உன் சூட்கேஸில் இருந்ததுதானே அம்மாவின் ஃபோட்டோ”
“ஏன் அப்படி சோகமாக இருக்கிற ஃபோட்டோவை எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறாய்”
“எப்போதாவது சந்தோஷமாகவோ, சிரித்தாலோ தானே அதை ஃபோட்டோ எடுக்க முடியும். எனக்கு நினைவு தெரிந்தது முதல் அம்மா அப்படித்தான் இருக்கிறார்கள். இனி உன்னைப் பார்த்த பிறகாவது மாறுகிறார்களா என்று பார்க்க வேண்டும்”
அக்ஷயிற்கு மனம் என்னவோ செய்தது. ஒரு நாளல்ல இரண்டு நாளல்ல கிட்டத்தட்ட 24 வருடங்கள் இப்படி இருப்பதென்றால்.
அக்ஷய் ஆனந்திடம் கேட்டான். “நான் உயிருடன் இருக்கிறேன் என்று அம்மா எப்படி நம்புகிறார்கள்?”
“வேறு விதமாய் நினைக்கும் தைரியம் அவர்களுக்கு இல்லை. மூன்று வருஷங்கள் முன்னால் ஒரு சாதுவிடம் போய்க்கேட்டபோது அவரும் நீ உயிரோடு இருப்பதாய் சொன்னார்.”
அக்ஷய் உற்சாகத்துடன் கேட்டான். “சாதுவா? யாரது? அவரை உனக்கு எப்படி தெரியும்? நீ சந்தித்தபோது அவர் என்ன சொன்னார் என்பதை ஒன்று விடாமல் சொல் பார்க்கலாம்?”
ஆனந்த் தயக்கத்துடன் முதல் முறை அந்த சாது சொன்னதை எல்லாம் ஒன்று விடாமல் அப்படியே சொன்னான்.
“வேறேதோ தேசத்தில் இருக்கிறான். நிறைய புத்த துறவிகள் தெரிகிறார்கள். அவன் ஏதோ கற்றுக் கொண்டிருக்கிறான்.அவனை அபாயம் சூழ்ந்திருக்கிறது.”
இந்த தகவல்கள் அக்ஷயை யோசிக்க வைத்தன. மூன்று வருடங்களுக்கு முன்பே அவனுக்கு புத்த துறவிகளுடன் தொடர்பு இருந்ததும் அப்போதே தனக்கு அபாயம் சூந்துள்ளதை அந்தச் சாது சொல்லி இருந்ததும் அவனுக்கு திகைப்பாய் இருந்தன.
அவன் கேட்டான். “அந்தச் சாதுவை நீ பிறகு பார்க்கவேயில்லையா?”
ஆனந்த் இரண்டாம் முறை பார்த்ததை சொல்வதா வேண்டாமா என்று குழம்பினான். ஆனால் அவன் தயக்கத்தை வைத்தே அவன் அந்த சாதுவை மறுபடி பார்த்திருக்க்றான் என்பதை யூகித்த அக்ஷய் கேட்டான். “சரி சொல். இரண்டாவது தடவை பார்த்த போது அவர் என்ன சொன்னார்.”
ஆனந்த் எச்சிலை விழுங்கினான். அவன் முகத்தில் துக்கம் படர்ந்தது. அவன் தன் தம்பியிடம் எப்படி இதை சொல்வான். எத்தனையோ வருடங்கள் கழித்து அவன் கிடைத்திருக்கிறான். இன்னும் பேசியே முடியவில்லை.
அக்ஷய் விடாமல் கேட்டான். “பரவாயில்லை சொல். என்ன சொன்னார்?”
ஆனந்த் இனி மறைப்பதில் அர்த்தமில்லை என்று எண்ணியவனாக தயங்கித் தயங்கி அவர் சொன்னதை அப்படியே சொன்னான்.
கேட்டவுடன் அக்ஷய் முகத்தில் புன்னகை அரும்பியது. இரத்த வெள்ளத்தில் கிடப்பதாக சாது ஞானக்கண்ணால் பார்த்தார் என்பதை வேதனையுடன் சொன்னதைக் கேட்டு தம்பி புன்னகைத்தது ஆனந்திற்குக் கோபம் வந்தது.
“ஏன் சிரிக்கிறாய். அவர் சொன்னதை நீ நம்பவில்லையா?”
“நாக மச்சம் முதற்கொண்டு சரியாகச் சொன்ன ஆள் இதை தப்பாய் சொல்வார் என்று நான் நினைக்கவில்லை”
“பின் ஏன் சிரித்தாய்?”
“இல்லை நீ அவசரமாய் அம்மாவை ஒரு முறை பார்த்து விட்டு வா என்றது சாவதற்குள் அம்மாவைப் பார்த்து விட்டு வா என்கிற அர்த்தத்தில் என்று புரிந்த போது சிரிப்பு வந்தது”
ஆனந்த் கண்கள் லேசாகக் கலங்கின. அக்ஷய் சொன்னதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் அப்படி நினைக்க நேர்ந்ததே, அவனும் அதைப் புரிந்து கொண்டானே என்று நினைக்கையில் இதயம் ரணமானது. வாய் வார்த்தைக்காவது மறுக்க முயற்சித்தவன் அக்ஷயின் கூர்மையான பார்வையில் அதைச் செய்ய முடியாமல் தவித்தான்.
(தொடரும்)