அக்ஷயிற்கு கேட்டதை எல்லாம் மனதளவில் ஜீரணிக்க சற்று நேரம் தேவைப்பட்டது. அந்தத் தாயின் குரலில் தொனித்த துக்கமும், அவள் மிகச் சரியாக சொன்ன விவரங்களும் அவனை திகைப்பில் ஆழ்த்தியிருந்தன. கடந்த காலம் என்ன என்று தெரிந்துகொள்ள ஆசைப்பட்டவனுக்கு, கடந்த காலத்தின் கடந்த காலம் தெரிய வந்தது அவனை நிலை குலைய வைத்தது. ஆழ்ந்த சிந்தனையால் அவன் சிலைபோல் அமர்ந்திருந்தான்.
ஆனந்த் குழப்பத்தோடு அக்ஷயைப் பார்த்தான். ‘இன்னும் என்ன யோசிக்கிறான்?’ என்று நினைத்தவனாய் மெல்ல கேட்டான்.
“இந்தக் கட்டை அவிழ்த்து விடுகிறாயா?
சில வினாடிகள் ஆனந்தையே ஏதோ யோசனையுடன் வெறித்துப் பார்த்த அக்ஷய் சிந்தனையில் இருந்து மீண்டு புன்னகைத்தான். அவன் புன்னகைத்த போது அவனிடம் அழகான மாற்றத்தை ஆனந்த் கவனித்தான். ஆனால் ஏதோ வேஷத்தில் இருக்கிறான் என்பதை முதலிலேயே ஊகித்திருந்தவன் அவனது உண்மையான தோற்றம் எப்படியிருக்கும் என்று யோசித்தான்.
அக்ஷய் அவனுடைய கட்டுக்களை அவிழ்த்தபடி சொன்னான்.
“எனக்கு சினிமா ஹீரோ மாதிரி அழகாய் ஒரு அண்ணன் இருக்கிறான் என்பதே தெரியாமல் போய்விட்டது பார்”
அவன் பாராட்டால் எந்தவித பாதிப்பும் அடையாமல் கட்டுகளில் இருந்து விடுதலையாகி நிம்மதிப் பெருமூச்சு விட்ட ஆனந்த் எழுந்து கைகால்களை நன்றாக அசைத்து இயல்பு நிலைக்கு வந்தான்.
அவனுக்கு ஒரு பக்கம் மிக மிக சந்தோஷமாக இருந்தது. தம்பி கிடைத்தான் என்பது அவன் மனதில் இருந்த ஒரு பெரிய பாரத்தைப் போக்கியது. ஆனால் இன்னொரு பக்கம் அவன் மனதில் பயம் எழுந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அவனை எடுத்துக் கட்டிலில் வீசிய மனிதன், லேசாகத் தொட்டவுடனே உயிர் போகும் வலியை கழுத்தில் ஏற்படுத்திய மனிதன், சாவே பரவாயில்லை என்கிற அளவுக்கு ஒரு நிலையைக் கொண்டு வந்து விடுவேன் என்று உண்மையாகவே மிரட்டிய மனிதன் தன் சகோதரன் என்று நினைக்கும் போது என்ன மனிதனிவன் என்ற பயம் கலந்த திகைப்பு எழுந்தது.
அக்ஷய் அவன் எண்ணங்களைப் படிக்க முடிந்தவன் போல,
“சாரி. நான் நிஜமாகவே நீ என் அண்ணன் என்று நம்பவில்லை. அதனால் தான்…..” என்று மன்னிப்பு கேட்டபடி அவனை கட்டியணைத்துக் கொண்டான்.
உடனடியாக வேறு ஒரு மனிதனாக மாறித் தன்னை அன்புடன் கட்டிக் கொண்டவன் உண்மையாகவே தன் தம்பிதானா என்பதை ஒருமுறை உறுதி செய்து கொள்வது நல்லது என்ற எண்ணம் ஆனந்திற்கு வந்தாலும் அதை வாய் விட்டு அவனிடம் கேட்க முடியவில்லை. இன்னும் அரைகுறை திகைப்பு ஆனந்திடம் மிஞ்சியிருந்தது.
அக்ஷய் சொன்னான்.
“ஆரம்பத்தில் இருந்து சொல். நான் எப்போது எப்படி காணாமல் போனேன்”
தன்னை சுதாரித்துக் கொண்ட ஆனந்த் சொல்ல ஆரம்பித்தான். ஒரு பிள்ளையார் சதுர்த்தி சமயத்தில் பிள்ளையார்கள் ஊர்வலமாய் சென்று கொண்டிருந்த நாளில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த மூன்று வயது அக்ஷய் காணாமல் போனதில் இருந்து ஆரம்பித்தான். நடைப்பிணமாய் மாறிய தாயின் தேடல் முயற்சிகளையும், மேற்கொண்ட கணக்கில்லாத விரதங்களையும் சொன்னான். அந்த தாயின் வாழ்க்கையில் காணாமல் போன மகனே மையமானதைச் சொன்னான்.
கூர்ந்து கவனித்தபடி கேட்டுக் கொண்டிருந்த அக்ஷயிற்கு அவன் குரலில் ஒரு ஆற்றாமையை உணர முடிந்தது. காணாமல்போன மகன் என்ன ஆனானோ என்ற கவலையில் அந்தத் தாய் இருக்கின்ற மகனை சரிவர கவனிக்கத் தவறி விட்டாள் என்பது புரிந்தது.
ஆனந்த் கேட்டான். “சரி நீ சொல். நீ எங்கே எப்படி வளர்ந்தாய்?”
அக்ஷய் லேசாக புன்னகைத்தபடி சொன்னான்.
“நான் அதையும் இனிதான் கண்டுபிடிக்கணும்”
ஆனந்த் எரிச்சலடைந்தான். “விளையாடுவதற்கு நேரம் காலம் இல்லையா?”
“விளையாடவில்லை. உண்மையைத் தான் சொன்னேன்” என்ற அக்ஷய் ஒரு நள்ளிரவில் துப்பாக்கிக் குண்டடி பட்டு புத்தவிஹாரத்தில் கண்விழித்ததைச் சொன்னான். “அது தான் எனக்கு நினைவு தெரிந்த முதல் கணம்.”
தொடர்ந்து தன்னைத் தேடிவந்தவர்களைப் பற்றி சொன்னான். புத்த பிக்குகள் காப்பாற்றியதைச் சொன்னான். அங்கிருந்து கிளம்பியதைச் சொன்னான். வருண், சஹானா, மரகதம் பற்றி சொன்னான். அவர்கள் புகலிடம் தந்ததைச் சொன்னான்.
ஆனந்திற்கு ஏதோ சினிமாக் கதை கேட்பது போல் இருந்தது. அந்த புத்த பிக்குகளிடமும், சஹானாவிடமும் மனதார நன்றி சொன்னான். அம்மாவின் விரதங்களும் பிரார்த்தனைகளும் வீண் போகவில்லை என்று தோன்றியது.
“அப்படியானால் நீ ஆச்சார்யாவுடன் எப்படி சம்பந்தப்பட்டாய்?”
“தெரியவில்லை”
பழையது எதுவும் நினைவுகள் இல்லாதவனிடம் இந்தக் கேள்வியைக் கேட்டது அபத்தம் என்று ஆனந்திற்குத் தோன்றியது.
“சாரி”
“பரவாயில்லை. சரி நீ சொல். ஆச்சார்யாவைக் கொலை செய்தது அந்த பிடிபட்ட ஆள்தான் என்று நீயும் நம்புகிறாயா?”
“இல்லை” என்ற ஆனந்த் தங்கள் தரப்பு விவரங்களை தம்பிக்கு சொல்ல ஆரம்பித்தான்.
ஆனந்த் உள்ளே சென்று நிறைய நேரம் ஆகியும் திரும்பாதது அவனுக்காக வெளியே காவல் காத்து நின்றவர்களுக்கு பெரிய சந்தேகத்தைக் கிளப்பியது. ஒருவருக்கொருவர் செல்லில் பேசிக் கொண்டார்கள்.
“அவன் நாம் பின் தொடர்வதைக் கண்டுபிடித்திருப்பான் என்று தான் தோன்றுகிறது. அதனால்தான் அவன் திடீரென்று ஓட்டலுக்கே திரும்பி வந்து விட்டான்.”
“இருக்கலாம். ஆனால் உள்ளே போனவன் ஏன் வெளியே வரவில்லை. அவன் சுபாவப்படி அவன் அப்படி அறையில் அடைபட்டு கிடக்கும் ரகம் அல்லவே?”
“ஒரு வேளை அவன் வேறு வழியாகப் போயிருப்பானோ”
“இந்த ஓட்டலில் இருந்து வெளியே போக இது ஒன்று தான் வழி”
“வேறெதாவது வேஷம் போட்டுக்கொண்டு போயிருந்தால்.”
“அப்படியும் போனமாதிரி தெரியவில்லை. எதற்கும் நாம் என்ன செய்வது என்று மேலிடத்தில் கேட்பது நல்லது என்று நினைக்கிறேன்”
“சரி”
உடனே அவர்களில் ஒருவன் சிபிஐ மனிதனுக்குப் போன் செய்தான். நடந்ததை எல்லாம் கேட்டபோது சிபிஐ மனிதனுக்கு உள்ளுணர்வு எச்சரித்தது. நடப்பது எதுவும் நல்லதாக அவனுக்குப் படவில்லை.
“அவன் வேறு வழியாகவோ, வேறு வேஷத்திலோ போயிருக்க வாய்ப்பு இருக்கிறதா?”
“இல்லை சார். இந்த ஓட்டலில் இருந்து வெளியே போக வேறு வழி எதுவும் இல்லை. வேறு வேஷத்திலும் போயிருக்க வாய்ப்பில்லை. இந்த இரண்டு மணி நேரத்தில் ஓட்டலுக்குள்ளே வந்தவர்கள் மட்டும் வெளியே போய் இருக்கிறார்கள். மற்றபடி வெளியே போன இரண்டு மூன்று ஆட்கள் இந்த ஓட்டலில் இரண்டு நாளாய் தங்கி இருக்கிற ஆட்கள் தான்”
“வெளியே இருந்து அவன் அறையைப் பார்த்தீர்களா?”
‘பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஜன்னல் திரை அவன் முன்பு கிளம்பிய போது போடப்பட்ட மாதிரியே தான் இருக்கிறது. அவன் அறைக்குப் போனபிறகு அதை விலக்கவில்லை”
சிறிது யோசித்து விட்டு சிபிஐ மனிதன் சொன்னான்.
“உடனடியாக அவனுடைய அறைக்குப் போய்ப்பாருங்கள். இனி தாமதிக்க வேண்டாம்”
(தொடரும்)