அமானுஷ்யன் – 41

ஆனந்திற்குத் தன்னைக் கண்காணிக்கும் ஆட்களின் எண்ணிக்கை அதிகமானது ஏன் என்று புரியவில்லை. சிபிஐ உயர் அதிகாரி ஒருவனுக்குத் தன்னை யாராவது பின் தொடர்ந்தாலோ, கண்காணித்தாலோ தெரியாமல் போக வாய்ப்பேயில்லை என்று தெரிந்தும் அதற்கு ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருக்கிறது என்பது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்படித் தெரிந்தாலும் பரவாயில்லை என்று ஆரம்பத்தில் ஓரிரு ஆட்களை ஏற்பாடு செய்திருந்தவர்கள் இப்போது கூடுதலாக ஆட்கள் போட்டிருப்பது எதனால் என்று யோசித்தும் அவனுக்கு விளங்கவில்லை.

டாக்சியில் சிபிஐ அலுவலகத்திற்குப் போய்க் கொண்டிருந்தவனுக்கு திடீரென்று ஒரு முக்கியமான ஃபைலை அறையிலேயே விட்டு விட்டு வந்தது நினைவுக்கு வர டிரைவரிடம் பழையபடி ஓட்டலுக்கே திருப்பச் சொன்னான். அவனுடைய டாக்சி திரும்பிய போது மூன்று கார்கள் தள்ளி வந்து கொண்டிருந்த கார் ஒன்றும் அப்படியே திரும்பியது.

ஓட்டலில் இறங்கியவன் தன்னைப் பின் தொடர்பவர்களைப் பற்றியே எண்ணிக் கொண்டு தன் அறைக்குச் சென்றான். அறைக் கதவைத் திறந்ததுதான் அவன் அறிவான். அடுத்த கணம் அவன் கட்டிலில் வீசப்பட்டான். என்ன ஏது என்று புரிவதற்குள் ஒருவன் மின்னல் வேகத்தில் அவனருகே வந்து அவன் கழுத்தைத் தொட்டான். தாங்க முடியாத வலியில் கழுத்தை சிறிதும் அசைக்க முடியாத நிலையில் ஆனந்த் இருந்த போது முதலில் அவனுக்குத் தோன்றியது இதுவும் தன்னைப் பின் தொடர்பவர்களின் கைவரிசையே என்பதுதான்.

ஆனால் அவனை இப்படி ஒரு நொடியில் செயலிழக்க வைத்தவன் கேட்ட கேள்வி அவனைத் திகைக்க வைத்தது.

“நீ ஏன் என்னைப் பிடிக்க முயற்சிக்கிறாய்?”

பேசினால் வலி கூடும் என்று தெரிந்திருந்தாலும் வலியைப் பொறுத்துக் கொண்டு ஆனந்த் கேட்டான்.

“யார்.. நீ?”

அக்‌ஷய் அவனருகே வந்தமர்ந்து புன்னகையுடன் சொன்னான்.

“அதை நீதான் சொல்ல வேண்டும்”

“எனக்கெப்படி… நீ யார்…. என்று… தெரியும்?”

“நான் உன் காணாமல் போன தம்பி, நாக மச்சம் இருக்கும், அப்படி இப்படி என்று ஆச்சார்யா மனைவியிடம் கதையளந்தாயே. தெரியாத ஆளைப் பற்றி யாரும் இப்படி கதையளக்க மாட்டார்கள்”

ஆனந்திற்கு தூக்கிவாரிப் போட்டது. அவனுக்குத் தன் காதுகளை நம்ப முடியவில்லை.

“அக்‌ஷய்”

அக்‌ஷய் திகைப்புடன் ஆனந்தைப் பார்த்தான். வருண் வைத்த பெயர் இவனுக்கு எப்படித் தெரியும்? இவர்கள் சஹானா வீட்டில் இருந்தவன்தான் அவன் என்று கண்டு பிடித்து விட்டார்களா?

திடீரென்று அக்‌ஷயின் கண்கள் வெறுமையாயின. அவன் சலனமேயில்லாமல் ஆனந்தைப் பார்த்தான். ஆனால் அந்தக் கணத்தில் அவன் பயங்கரமானவனாகத் தோன்றினான். மிக அமைதியாகக் கேட்டான்.

“அந்தப் பெயர் உனக்கு எப்படித் தெரியும்?”

ஆனந்திற்கு ஏனோ ரத்தம் சில்லிட்டது. ஏதோ ஒரு இனம் புரியாத பயம் அவனை ஆட்கொண்டது. அக்‌ஷய் இந்த அமைதியான தோற்றத்துடன் சலனமே இல்லாமல் கொலையே செய்து விட்டு போக முடிந்தவனாகத் தோன்றினான். ஆனந்த் எத்தனையோ பயங்கரவாதிகளைப் பார்த்திருக்கிறான். ஆனால் இவன் இந்த நேரத்தில் எதையும் பதட்டமேயில்லாமல் கச்சிதமாக செய்து விட்டு வந்த சுவடே தெரியாமல் போகக் கூடிய அமானுஷ்யனாகத் தோன்றினான். இவன் நிஜமாகவே என் தம்பியா? இல்லை.

அக்‌ஷய் தன் வலது கையை லேசாக உயர்த்தியபடி மறுபடி கேட்டான்.

“சொல். உனக்கெப்படி என் அந்தப் பெயர் தெரியும்?”

இப்போது பேசாவிட்டால் அவன் கொலையே செய்து விடுவான் என்று ஆனந்திற்குத் தோன்றியது. கூடவே கோபமும் வந்தது.

“முட்டாளே உன் பெயர்…. உன் அண்ணனுக்குத் தெரியாதா?”

ஆனந்தின் குரலில் தெரிந்த கோபம் தான் அக்‌ஷயை அடுத்த தாக்குதல் செய்யாமல் தடுத்தது. அந்தக் கோபம் ஒரு சதிகாரனுக்கு கண்டிப்பாக வராது. ஆனால் வருண் தற்செயலாக வைத்த பெயர் எப்படி அவனுடைய உண்மையான பெயர் ஆகும்?

“நீ உண்மையைத் தான் சொல்கிறாய் என்பதை நான் எப்படி நம்புவது?”

ஆனந்த் இவனுக்கு எப்படி புரிய வைப்பது என்று திகைத்தான். கழுத்தை சிறிது அசைத்தாலும் வலியில் உயிர் போவது போல் இருந்தது. அசையாமல் கட்டிலில் விழுந்து கிடந்த அவன் வாயைத் திறக்க முடியாமல் அவஸ்தைப்பட்டான். கண்களாலேயே அதைத் தெரிவித்தான்.

அக்‌ஷய் அவனையே சிறிது நேரம் பார்த்தான். பின் அங்கு மடித்து வைக்கப்பட்டிருந்த டவல்களை எடுத்தான். ஒன்றை எடுத்து அவன் கைகளைப் பின்புறத்தில் இணைத்துக் கட்டினான். இன்னொன்றால் அவனுடைய கால்களைக் கட்டினான். கட்டும் போது ஏற்பட்ட அசைவில் கழுத்து வலி மேலும் அதிகமாகி ஆனந்த் அலறினான். இறுக்கமாகக் கட்டி முடித்த பின் அக்‌ஷய் அவன் கழுத்தை லேசாகத் தட்டி விட்டான். கழுத்து வலி இருந்த இடம் தெரியாமல் பறந்து போயிற்று. ஆனந்த் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

“நீ மறுபடி என்னிடம் ஏதாவது கதையளந்தால் சாவே பரவாயில்லை என்று நீ நினைக்கிற அளவுக்கு ஒரு நிலைமையைக் கொண்டு வந்து விடுவேன். ஜாக்கிரதை! இப்போது சொல் உன்னை எப்படி நான் நம்புவது?”

“நீ வேண்டுமானால் நம் அம்மாவை கேட்டுப் பார்”

அக்‌ஷய் சிரித்துக் கொண்டே கேட்டான்.

“ஓ இந்த நாடகத்தில் அம்மா வேஷத்தில் ஒருத்தியையும் முதலிலேயே ஏற்பாடு செய்து விட்டாயா?”

“என்ன ஆயிற்று உனக்கு? சொல்வதை எல்லாம் சந்தேகப்படுகிறாய்? நம்பிக்கை இல்லா விட்டால் என் செல்போனில் என் வீட்டு நம்பர் இருக்கிறது. அங்கே போன் செய்து கேள்”

அக்‌ஷய் அவநம்பிக்கையுடன் ஆனந்த் பேண்ட் பாக்கெட்டில் இருந்து செல்போனை எடுத்து வீடு என்று குறித்திருந்த எண்ணை அழுத்தினான். ஆனந்திற்கு இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. அம்மாவிடம் இவன் என்ன பேசுவான், எப்படிப் பேசுவான் என்று தெரியவில்லை.அம்மாவிற்குத் தெரியுமா பேசுவது காணாமல் போன இளைய மகன் தான் என்று.

“ஹலோ.”

மறுபக்கத்தில் இருந்து குரல் வந்தது.

“மேடம் ஆனந்த் இருக்கிறாரா?”

“அவன் வேலை விஷயமாய் டெல்லி போயிருக்கிறான். நீங்கள் யார் பேசுவது?”

“நான் காணாமல் போனவர்களைக் கண்டு பிடித்துத் தரும் ஏஜென்சியில் இருந்து பேசுகிறேன். அவர் அவருடைய அண்ணா சின்ன வயதில் காணாமல் போனதாய் சொல்லி இருந்தார்.”

அது வரை சுரத்தே இல்லாமல் பேசிய சாரதாவின் குரலில் திடீரென்று உயிர் வந்தது.

“அவன் அண்ணா இல்லை. தம்பி. என் சின்ன மகன்.”

“ஏதோ மச்ச அடையாளம் சொல்லி இருந்தார். இடுப்பில் ஏதோ தேள் மாதிரி மச்சமோ எதோ சொல்லியிருந்தார்”

“இல்லை.நீங்கள் தப்பாக குறித்து வைத்திருக்கிறீர்கள். என் சின்ன மகன் முதுகின் மேல் பக்கம் நாக மச்சம் இருக்கும் சார்.”

அக்‌ஷய் ஒரு கணம் பேச்சிழந்தான். பின் மெல்ல கேட்டான்.

“அவர் பெயர் என்ன மேடம்?”

“அக்‌ஷய் சார். அவன் அக்‌ஷய திரிதியை அன்றைக்குப் பிறந்தவன்.சார் அவனைப் பற்றி ஏதாவது தகவல் கிடைத்ததா.” அவள் குரலில் தொனித்த துக்கம் அக்‌ஷயை ஏதோ செய்தது.

“இரண்டு நாள்களில் சொல்கிறேன் மேடம்.”

“சார். எதாவது செய்து என் பிள்ளையைக் கண்டு பிடித்துக் கொடுங்க சார். உங்களைக் காலம் பூராவும் கடவுளாய் நான் கும்பிடுவேன்.” சாரதா சொல்லி முடிக்கும்போது அழுதே விட்டாள்.

அக்‌ஷயிற்கு ஏதோ தொண்டையை அடைத்தது. பேச முடியாமல் இணைப்பை துண்டித்தான். அவனுக்கு தலை சுற்றியது.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top