அமானுஷ்யன் – 39

அக்‌ஷய் தன்னைப் பின் தொடரும் போலீஸ்காரனை ஆரம்பத்தில் இருந்தே கவனித்து வந்தாலும் அதைக் காண்பித்துக் கொள்ளாமல் நடந்தான். சுமார் 15 நிமிடங்கள் வேகத்தைக் குறைத்தும், அதிகரித்தும் அவன் நடந்தபோது அந்த போலீஸ்காரனும் அதே போல் செய்து கிட்டத்தட்ட ஐம்பது அடி தூரத்திலேயே இருந்தான்.

அந்த போலீஸ்காரன் பார்வையில் இருந்து மறைவது அக்‌ஷயிற்கு முடியாத காரியம் இல்லை. ஆனால் அப்படி மறைந்தால் அவன் மேல் சந்தேகம் அவர்களுக்கு அதிகரிக்கும். அவனைப் பற்றி அதிகமாக சஹானாவிடம் குடைவார்கள். அவளைத் தொந்திரவு செய்வார்கள். அதே நேரத்தில் அவன் போகுமிடம் அந்தப் போலீஸ்காரன் அறிவதை அவன் அனுமதிக்கவும் முடியாது. என்ன செய்வது என்று யோசித்தவன் ஒரு முடிவுக்கு வந்தவனாக அருகில் இருந்த டெலிபோன் பூத்திற்கு நுழைந்தான்.

அந்த மீசைக்காரப் போலீஸ்காரருக்குப் போன் செய்தான். “ஹலோ சார்! நான் அக்‌ஷய் பேசுகிறேன். ரெயின்போ டிவி சஹானா வீட்டில் பார்த்தீர்களே அந்த அக்‌ஷய் தான். சார், நான் இப்போது தான் சஹானா வீட்டிலிருந்து கிளம்பிப் போய்க் கொண்டிருக்கிறேன். என்னை ஒருவன் பின்தொடர்ந்து கொண்டே இருக்கிறான் சார்”

மீசைக்காரர் என்ன சொல்வது என்று யோசிப்பது அக்‌ஷயிற்குப் புரிந்தது.

அக்‌ஷய் தொடர்ந்தான். “எனக்கென்னவோ அவன் அந்த தீவிரவாதியாகவோ இல்லை அவன் அனுப்பிய ஆளாகவோ இருக்கலாம் என்று சந்தேகமாயிருக்கிறது சார். நான்தான் அவனைப் பற்றி எல்லா தகவல்களும் உங்களிடம் சொல்லி விட்டேன் என்பது தெரிந்து பழி வாங்க என்னைப் பின் தொடர்கிற மாதிரி இருக்கிறது சார்.”

ஏதாவது கேட்க வேண்டுமே என்பதற்காக மீசைக்காரர் அவனிடம் கேட்டார். “பார்க்க எப்படி இருக்கிறான்”

“பார்க்க குல்ஃபி ஐஸ் விற்கிறவன் வேஷத்தில் இருக்கிறான். அவனுடைய தொப்பி, அழுக்கு பைஜாமா, குர்த்தா எல்லாம் பார்த்தால் அப்படித் தான் இருக்கிறது. அப்புறம் எனக்கு இன்னொரு சந்தேகமும் இருக்கிறது சார்”

“என்ன?”

“அந்த ஆள் மும்தாஜோட அப்பா அனுப்பிய ஆளாகக் கூட இருக்கலாம் என்கிற பயமும் எனக்கு இருக்கிறது.

“யாரது மும்தாஜ்”

“என் காதலி சார். ஆக்ராவில் இருக்கிறதாய் சொன்னேனே அவள்தான்”

“பயப்படாதீர்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் இப்போது எங்கே இருந்து பேசுகிறீர்கள்?”

அக்‌ஷய் இடத்தைச் சொன்னான்.

“நான் எங்கள் ஆட்களை உடனே அனுப்புகிறேன். அதுவரை அவனை சமாளியுங்கள். நீங்கள் இப்போது எங்கே போய்க் கொண்டிருக்கிறீர்கள்”

“இப்போது ஆக்ராவுக்கு போய்க் கொண்டிருக்கிறேன் சார். மும்தாஜைப் பார்த்துப் பேசி இனி என்ன செய்வதென்று யோசிக்க வேண்டும். சார் அங்கே உங்களுக்கு யாராவது போலீஸ் நண்பர்கள் இருக்கிறார்களா சார்? இருந்தால் எனக்கு உதவச் சொல்லுங்கள் சார். ஹலோ! ஹலோ!”

துண்டிக்கப்பட்ட இணைப்பிற்கு நன்றி சொல்லி விட்டு வெளியே வந்த அக்‌ஷய் அவசரமாக தெருவைக் கடந்தான். பின் தொடர்ந்தவன் தானும் தெருவைக் கடக்க யத்தனிக்கையில் ஒரு லாரி வேகமாக வரவே சற்று தாமதித்தான். லாரி கடந்து போன பின் பார்த்தால் எதிர்ப்புறத்தில் அக்‌ஷய் காணவில்லை. அங்கும் இங்கும் ஓடி அவனைத் தேடி அந்த போலீஸ்காரன் களைத்துப் போன போது அவன் செல்போன் அலறியது.

பேசியது மீசைக்கார அதிகாரி தான். “ப்ரேம். அவன் நீ பின் தொடர்வதைத் தெரிந்து கொண்டு விட்டான். எனக்கு போன் செய்தான். நான் வேறு ஆளை அனுப்புகிறேன். உனக்கு பதிலாக அவன் இனி பின்தொடரட்டும். அவன் வரும்வரை உன் பார்வையிலேயே அவனை வைத்திரு”

வியர்வையைத் துடைத்துக் கொண்டு அந்த போலீஸ்காரன் சொன்னான். “அவன் போன் செய்து விட்டு வெளியே வந்தவன் எங்கே போனான் என்றே தெரியவில்லை சார். எப்படியோ தப்பி விட்டான்.”

***********

சிபிஐ மனிதன் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். அவன் எதிரே ஆச்சார்யாவின் மகள் வீட்டிற்கு வந்த போன் எண்களும், அங்கிருந்து பேசப்பட்ட போன் எண்களும் கொண்ட விவரங்கள் இருந்தன. அந்த விவரங்களில் இரண்டு தகவல்கள் அவனை அதிகமாய் சிந்திக்க வைத்துக் கொண்டிருந்தன. சில நாட்களுக்கு முன் டெல்லி டெலிபோன் பூத் ஒன்றிலிருந்து ஒரு போன்கால் அங்கு போயிருக்கிறது. அந்த போன்கால் பேசி முடிக்கப்பட்டவுனேயே அங்கிருந்து ஆனந்தின் செல்போனில் பேசியிருக்கிறார்கள்.

ஏதோ ஒரு தகவல் ஆச்சார்யாவின் மகளுக்கோ, மனைவிக்கோ கிடைத்து அதை உடனடியாக அவர்கள் போன் செய்து ஆனந்திற்குத் தெரிவித்திருக்கிறார்கள். என்ன செய்தி அது? டெல்லி டெலிபோன் பூத்திலிருந்து போன் செய்தது யார்? அமானுஷ்யனாக இருக்குமோ?

நேற்று ஆனந்த் மறுபடி பெங்களூரிற்குப் போன் செய்து பேசியிருக்கிறான். தங்களுக்குத் தெரியாத ஏதோ ஒரு தகவல் பற்றி ஆனந்திற்கு லலிதாம்மா சொல்லியிருக்கிறாள், அதுபற்றித்தான் மீண்டும் நேற்று ஆனந்த் போன் செய்து பேசியிருக்கிறான். டெல்லி டெலிபோன் பூத்தில் இருந்து போன் செய்தது அமானுஷ்யனாக இருந்தால் அதையே லலிதாம்மா ஆனந்திற்குத் தெரிவித்திருந்தால்? நினைக்கும் போதே ஒருவித பயம் எழ ஆரம்பித்தது.

ஆனந்த் செல்லில் இருந்து போன வேறு எண்களை எல்லாம் பார்த்தான். வித்தியாசமாக எதுவும் இல்லை. ஆனந்த் செல்லிற்கு வந்த எண்களும் வித்தியாசமாக எதுவும் இல்லை. முக்கியமாய் டெல்லி டெலிபோன் பூத்தில் இருந்தோ, வேறு பொது தொலைபேசியிலிருந்தோ எந்த போன் காலும் ஆனந்திற்கு வரவில்லை.

சிபிஐ மனிதனின் சிந்தனைகளை தொலைபேசி அலறிக் கலைத்தது.

“ஹலோ”

மீசைக்கார போலீஸ்காரர் இன்று காலை அக்‌ஷய் கிளம்பியதில் இருந்து ஆரம்பித்து அவன் காணாமல் போன வரை ஒன்று விடாமல் ஒப்பித்தார். சிபிஐ மனிதனுக்கு அவனைப் பற்றி கேட்ட விஷயங்கள் நெருடலாக இருந்தன. மேற்போக்காகப் பார்த்தால் எல்லாம் இயல்பாக இருந்தன. ஒருவன் பின் தொடர்கிறான் என்பதைக் கண்டுபிடித்த அந்த இளைஞனுக்கு அவன் தீவிரவாதியாகவோ, அவன் அனுப்பிய ஆளாகவோ, இல்லை காதலியின் அப்பா அவனைப் பின் தொடர ஏற்பாடு செய்த ஒரு ஆளாகவோ சந்தேகம் வந்ததில் தவறில்லை. ஆனால் அவன் மின்னல் வேகத்தில் மறைந்த விதம் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. அது அமானுஷ்யனுடைய திறமைக்குப் பொருந்துவதாக இருந்தது. நிஜமாகவே அவன் அமானுஷ்யனாக இருந்தால் அவன் அந்த போலீஸ் அதிகாரிக்குப் போன் செய்து ஏன் சொல்ல வேண்டும்?

ஆரம்பத்தில் இருந்தே அந்த இளைஞன் சந்தேகத்தையும் கிளப்பி, ‘சேச்சே அப்படியிருக்காது’ என்று நினைக்க வைக்கிறவனாகவும் இருந்தான். போலீசைப் பார்த்தவுடன் பதுங்காமல் இருந்தது, போலீசிடம் அவன் முதலிலும், இப்போதும் வெளிப்படையாகப் பேசியது, முன்பே இந்த நாள்தான் போவேன் என்று சொல்லி அப்படியே கிளம்பியது, அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு அவனை நன்றாகத் தெரிந்திருந்தது எல்லாம் அவன் அமானுஷ்யனாக இருக்க முடியாது என்று நம்ப வைத்தன. ஆனாலும் கூட சிபிஐ மனிதனின் மனதில் ஏனோ இன்னும் நெருடல் இருந்து தான் வந்தது. இப்போது அவன் மாயமான விதம் அந்த நெருடலை அதிகப்படுத்தியது.

அவன் போனில் கேட்டான். “அவன் ஆக்ராவில் எங்கே போவதாகச் சொன்னான்.”

“அதைச் சொல்லவில்லை. விட்டால் அவனுடைய காதல் கல்யாணத்தை என்னையே நடத்தி வைக்க சொல்வான் போல இருந்ததால் நானே பேச்சை வளர்த்தாமல் போனை வைத்து விட்டேன். வாய் திறந்தால் மூடாத ரகம் சார் அவன்.”

“எதற்கும் சஹானாவிடம் ஆக்ரா விலாசத்தை வாங்குங்கள். வேண்டாம். சஹானா இல்லாத போது அவள் மாமியாரிடம் பேசிப் பாருங்கள். அவன் அந்தம்மாளுக்குத் தானே நெருங்கிய உறவு. அந்தப் பெண் மும்தாஜ் விலாசத்தையும் வாங்கி அவனைக் கண்டுபிடித்து யாராவது ஒரு ஆள் அவன் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருங்கள்.”

சிபிஐ மனிதன் போன் இணைப்பைத் துண்டித்தான். மனம் அமானுஷ்யனை சுற்றியே இருந்தது. சற்று முன் எழுந்த சந்தேகத்தின்படி ஆச்சார்யா குடும்பத்திற்கு டெல்லி டெலிபோன் பூத்திலிருந்து போன் செய்தது அமானுஷ்யனாக இருக்குமானால் அவன் பெங்களூருக்குச் சென்று லலிதாம்மாவையோ, இல்லை டெல்லியில் ஆனந்தையோ தொடர்பு கொள்ள சாத்தியம் அதிகம்.

சிபிஐ மனிதன் இந்த அனுமானத்திற்கு வந்தவுடன் போன் செய்து ஆனந்தைக் கண்காணிக்கும் ஆட்களை அதிகப்படுத்தினான். ஆனந்த் தங்கி இருக்கும் ஓட்டல் பகுதியில் அமானுஷ்யனைப் போன்ற தோற்றம் உள்ள நபர் நடமாடினால் உடனே பிடித்து விசாரிக்க கட்டளையிட்டான்.

சிபிஐ மனிதன் சந்தேகப்பட்டது போலவே அக்‌ஷய் ஆனந்த் தங்கியிருக்கும் ஓட்டலை நெருங்கிக் கொண்டிருந்தான்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top