அமானுஷ்யன் – 37

வருணின் பிறந்த நாள் விழாக் கொண்டாட்டத்தின் முழுப் பொறுப்பையும் அக்‌ஷய் தான் மேற்கொண்டிருந்தான். அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தில் உள்ள வருணின் அனைத்து நண்பர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் தன் பிறந்த நாளுக்கு வரும்படி வருண் அழைத்திருந்தான்.

வருணின் தந்தை இருந்த வரை அவன் சில குறிப்பிட்ட வீடுகளை மட்டும்தான் கூப்பிட அனுமதி உண்டு. வருணின் நண்பர்களிலேயே சிலர் பிறந்த நாள் விழாவுக்கு வர அனுமதி கிடையாது. “அந்தப் பையன் பொறுக்கி மாதிரி இருக்கிறான்”, “இந்தப் பையன் அம்மாவின் கேரக்டர் சரியில்லை” என்று பலரும் தட்டிக் கழிக்கப்படுவார்கள். பிறந்த நாள் விழா முழுவதும் ஒருவித இறுக்கத்துடன் நடக்கும். அந்த விழாவில் இரண்டு மூன்று முறையாவது வருண் தந்தையிடம் திட்டு வாங்குவான். ஒரு முறை அனைவர் முன்னிலையிலும் அடி கூட வாங்கி இருக்கிறான்.

இந்த முறை இத்தனை பேரை அழைத்திருப்பது தெரிந்த போது சஹானா வருணிடம் சொன்னாள். “இத்தனை பேருக்கு நம் வீட்டில் இடம் எங்கே இருக்கிறது வருண்?”

“அக்‌ஷய் அங்கிள் இந்த தடவை மொட்டை மாடியில் பிறந்த நாள் கொண்டாடலாம் என்று சொல்லி இருக்கிறார்”

“மொட்டை மாடியில் எல்லாம் கொண்டாட வேண்டும் என்றால் முதலில் செகரட்டரியிடம் அனுமதி வாங்க வேண்டும் வருண்”

“அதை நானும் அங்கிளும் போய் வாங்கி விட்டோம். செக்ரட்டரி அங்கிளையும் கூப்பிட்டிருக்கிறோம்” சொல்லி விட்டு வருண் தாயைப் பார்த்து கண்ணடித்தான். மகன் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தைப் பார்த்து சஹானா புன்னகைத்தாள்.

பிறந்த நாள் அன்று காலையும் வருணுக்கு புதிய ஆடைகள் எல்லாம் போட்டு விட்டது அக்‌ஷய் தான். வருண் பள்ளிக்கூடம் சென்ற பின் ஒரு கணம்கூட அக்‌ஷய் ஓய்வாக உட்காரவில்லை. மொட்டை மாடியில் ஆயத்தங்கள் செய்வதில் இருந்து வேண்டிய உணவு வகைகளை வெளியே ஓட்டலில் இருந்து தருவிப்பது வரைக்கும் எல்லாவற்றையும் அவன் தான் பார்த்துக் கொண்டான். அவன் பலமுறை வெளியே செல்கையில் எல்லாம் சீருடை இல்லாத போலீசார் அவனைப் பின் தொடர்ந்ததை அவன் கவனித்த மாதிரியே காட்டிக் கொள்ளவில்லை.

வருண் பிறந்த நாளை ஒட்டி அக்‌ஷய் மரகதத்திற்கும், சஹானாவிற்கும் கூட ஆடைகள் வாங்கி இருந்தான். மரகதத்திற்கு அழகான அரக்கு நிறத்தில் பட்டுப்புடவையும், சஹானாவிற்கு ரோஸ் நிறத்தில் ஒரு அழகான சுடிதாரும் வாங்கியதை வருண் பள்ளியில் இருந்து வரும்முன் அவன் தந்த போது இருவரும் திகைத்தார்கள்..

மரகதத்தின் கண்களில் நீர் கோர்த்தது. “பிறந்த நாள் வருணுக்குத்தானே. எனக்கெல்லாம் எதற்கு?”

“உங்கள் பிறந்த நாள் எப்போது என்று எனக்குத் தெரியாது. அந்த சமயத்தில் நான் இருக்கவும் மாட்டேன். அதனால்தான் வாங்கினேன். உங்களுக்கு இந்த நிறம் நன்றாய் எடுப்பாய் தெரியும் என்று தோன்றியது பெரியம்மா”

மரகதத்திற்கு தொண்டையில் ஏதோ அடைத்தது. அவளை ஒரு மனுஷியாக நினைத்தவனே அவன் ஒருவன்தான். அவளுக்கு அழகாய் இருக்கும் என்று இது வரை யாரும் எதுவும் வாங்கித் தந்ததாய் அவளுக்கு நினைவில்லை. அவள் அவசரமாக அங்கிருந்து நகர்ந்தாள்.

சஹானாவுக்கு அந்த ரோஸ் நிற சுடிதார் மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அவன் அதை வாங்கித் தருவதை எண்ணும் போது அவளுக்கு கோபம்தான் அதிகம் வந்தது. இங்கிருந்து நாளை போய்விடப் போகிறவன், இனி எப்போதும் தொடர்பு கொள்வது முடியாது என்று வெளிப்படையாகச் சொன்னவன், என்றைக்குமாய் விலகி விடப் போகிறவன் இதை மட்டும் எந்த உரிமையில் வாங்கித் தருகிறான்?

சஹானா சற்று கோபத்துடன் கேட்டாள். “இதெல்லாம் எதற்கு?”

“ஏன் நீங்கள் மட்டும் தான் எனக்கு வாங்கித் தர வேண்டுமா? நான் வாங்கித் தரக்கூடாதா?”

“நான் வாங்கித் தந்ததற்கு நீங்களும் வாங்கித் தந்து கணக்கைத் தீர்க்கப் போகிறீர்களா?”

“இங்கே இருந்த கணக்கை நான் இந்த ஜென்மத்தில் தீர்க்க முடியும் என்று நினைக்கவில்லை சஹானா” அவன் அமைதியாகச் சொன்னான்.

‘உண்மையில் அந்த வசனம் நான் சொல்ல வேண்டியது’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். அவன் வந்த பின் அவளுடைய மகன் முகத்தில் தெரிந்த சந்தோஷம், மாமியார் முகத்தில் தெரிந்த சந்தோஷம் எல்லாம் அதற்கு முன் இருந்ததில்லை. ஏன் இந்த வீடே அவன் வரவால் மகிழ்ச்சிகரமாக மாறி விட்டது. வருணின் உயிரைக் காப்பாற்றியதோடு இதையும் சேர்த்துக் கொண்டால் தராசின் மறுபக்கத்தில் எதை எவ்வளவு வைத்தாலும் சரியாகாது என்று நினைத்துக் கொண்டாள்.

“உங்களுக்குப் பிடித்திருக்கிறதா” அவன் ஆர்வத்துடன் கேட்டான்.

அந்த சுடிதாரைப் பிரித்துப் பார்த்த அவள் அதை ரசித்தபடி தலையசைத்தாள். திருமணத்திற்குப் பின் அவள் அழகான ஆடைகளை வாங்கியதாக அவளுக்கு நினைவில்லை. அவள் கணவன் தான் எப்போதும் அவளுக்காக ஆடைகளைத் தேர்ந்தெடுப்பான். எந்த விதத்திலும் தான் தேர்ந்தெடுக்கும் ஆடை தன் மனைவியின் அழகை அதிகப்படுத்தி விடக் கூடாது என்பதில் அவன் மிகவும் கவனமாக இருந்தான்.

அவளுக்கு சற்றும் பொருத்தமில்லாத ஆடைகள் வாங்கி வந்து அவளிடம் அக்‌ஷய் கேட்டது போலத்தான் கேட்பான். “பிடித்திருக்கிறதா?”

கேட்டு விட்டு அவளைக் கூர்ந்து கவனிப்பான். திருமணமான ஆரம்பத்தில் அதெல்லாம் அவளை மிகவும் வருத்தப்படுத்தியது, முகம் சுளிக்க வைத்தது என்றாலும் நாளாக நாளாக அவளுக்கு அந்தக் கசப்புகள் எல்லாம் குறைந்து கொண்டே வந்தது. அவன் சந்தேக புத்தியால் ஏற்பட்ட காயங்கள் பட்டு பட்டு மனம் மரத்தே போனது. அவளுக்குள் இருந்த அழகுணர்ச்சி செத்தே போயிருந்தது.

அவனிடம் வாய் திறந்து பேசக்கூட அவளுக்கு வெறுப்பாக இருக்கும். வெறுமனே தலையாட்டுவாள்.

ஆனாலும் அவன் விட மாட்டான். கடை பில்லைக் காட்டுவான். “அந்தக் கடையில் இருந்ததிலேயே இது தான் விலை அதிகம்”

அதற்கும் அலட்சியமாகத் தலையாட்டுவாள். அதிக விலையில் மோசமான ஆடைகள் கிடைக்காதா என்ன!

அவளுக்கு அதைத் தூக்கி அவன் முகத்தில் எறியத் தெரியாமல் இல்லை. ‘எனக்கு என் டிரஸ் தேர்ந்தெடுக்கத் தெரியும். நீ உன் வேலையைப் பார்’ என்று சொல்லத் தெரியாமல் இல்லை. அதை வைத்து வாய்க்கு வந்தபடி பேசுவான். கத்துவான். குத்திக் காட்டுவான். ஆபாசமாகப் பேசுவான். வருண் வளர ஆரம்பிக்கும் கட்டத்தில் மகன் முன் இந்த அசிங்கங்களை அரங்கேற்ற அவளுக்குப் பிடிக்கவில்லை. ‘இனி என்ன ஆக வேண்டும் எனக்கு’ என்ற மனோபாவம் அவளுக்குப் பலப்பட ஆரம்பித்திருந்தது.

மேலும் அந்த அழகில்லா ஆடைகளை உடுத்துவதிலும் ஒரு உபயோகத்தை அவள் கண்டு வைத்திருந்தாள். கூட வேலை செய்யும் சில வழியல் ஆண்களிடமிருந்தும், கூடப்பயணம் செய்யும் சில காமாந்தகர்களிடம் இருந்தும் அவளுக்கு அதிகம் உபத்திரவம் இருக்கவில்லை.

அக்‌ஷய் அவளுடைய நினைவுகளைக் கலைத்தான். “இன்றைக்கு சாயங்காலம் நீங்களும், பெரியம்மாவும் நான் கொடுத்த டிரஸ் தான் போட்டுக் கொள்ள வேண்டும். சரியா”

அவள் தலையசைத்தாள். என்றோ அவளுள் இறந்து போயிருந்த சில அழகான உணர்வுகள் மீண்டும் தளிர் விட ஆரம்பித்திருந்தன. அவன் அவளைக் கூர்மையாகப் பார்க்கும் போதெல்லாம், புன்னகை பூக்கும் போதெல்லாம் அதை அவள் உணர ஆரம்பித்திருந்தாள். ஆனால் எல்லாம் இன்றோடு ஒரு முடிந்து விடப் போகிறது என்று நினைக்கும் போது மனம் கனத்தது.

*************

சிபிஐ மனிதனுக்கு என்னவோ மனதில் ஒரு நெருடலாகவே இருந்தது. சஹானாவுடன் காரில் வந்த அமானுஷ்யன் அவளிடம் பணமும், உடைகளும் வாங்கியது, ஒரு சிக்னலில் இறங்கி மாயமானது எல்லாம் உண்மையாக இருக்கக் கூடியவையே என்றாலும் இதையெல்லாம் அவள் சொல்லாமல் அவள் மாமியாரின் தங்கை மகன் சொன்னது திருப்தியளிக்கவில்லை. அங்கு சென்று விசாரித்த அந்த போலீஸ் சொல்வதைப் பார்த்தால் அவன் வாயாடியாகத் தோன்றினான். காதல் கல்யாணம் செய்யப் போகிறவன், அவளுடைய பக்கத்து வீட்டுக்காரனுக்குக் கூட அந்தக் காதல் சமாச்சாரம் எல்லாம் தெரியும் என்பதெல்லாம் அந்தப் புதிய ஆள் மீது சந்தேகத்தை வெகுவாகக் குறைத்தது என்றாலும் ஒரு மூலையில் இன்னும் சந்தேகம் சிறிது இருக்கத் தான் செய்தது. உடனடியாகப் போனில் பேசினான்.

“ஹலோ. நான் தான் பேசுகிறேன். சஹானாவின் அந்த சொந்தக்காரன் அங்கே இருக்கிறானா இல்லை போய் விட்டானா?”

“இருக்கிறான் சார். நேற்று பேசிய போதே அந்த சின்னப்பையன் பிறந்தநாள் முடிந்து நாளைக்குத் தான் போகிறதாய் சொன்னான். இன்றைக்கு காலையில் இருந்தே கடைகளுக்குப் போவதும், சாமான்கள் வாங்குவதுமாய் இருக்கிறான்”

“சஹானா?”

“அந்தப் பெண் வெளியே எங்கேயும் போகவில்லை சார். வீட்டிலேயே தான் இருக்கிறாள்”

“போன் டேப் செய்ய ஏற்பாடெல்லாம் செய்தாகி விட்டதல்லவா?”

“செய்தாகி விட்டது சார். நமக்குத் தேவையான தகவல் எதுவும் இது வரை போன் பேச்சில் கிடைக்கவில்லை….”

“அந்த பிறந்த நாள் விழா எப்போது?”

“இன்றைக்குத்தான் சார். சாயங்காலம் மொட்டை மாடியில் கொண்டாடுகிறார்கள் போல் இருக்கிறது. அலங்காரம் எல்லாம் அந்த ரோமியோதான் செய்து கொண்டிருக்கிறான்.”

“எதற்கும் அந்த விழாவில் யார் யார் வருகிறார்கள் என்று கவனியுங்கள். அந்த சொந்தக்காரன் ரோமியோ நாளைக்குக் போனால் கண்டிப்பாக அவனைப் பின் தொடர ஆள்களை ஏற்பாடு செய்யுங்கள். அவன் மேல் கண் இருப்பது நமக்கு நல்லது என்று எனக்கு படுகிறது”.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top