அமானுஷ்யன் – 36

“எனக்கும் ஆரம்பத்தில் அவன் மேல் சந்தேகம் இருந்தது சார். ஆனால் அவன் அந்தத் தீவிரவாதியாகக் கண்டிப்பாக இருக்க முடியாது சார். இவன் ஆக்ராவில் ஒரு முஸ்லீம் பெண்ணைக் காதலித்துக் கொண்டிருக்கும் ரோமியோ சார். வாயைத் திறந்தால் மூட மாட்டேன்கிறான். இவன் அவளைக் கல்யாணம் செய்து கொள்ள தவித்துக் கொண்டிருக்கிறான். இவனை சஹானா பக்கத்து வீட்டுக்காரருக்கெல்லாம் நன்றாகத் தெரிந்திருக்கிறது. இவனை மட்டுமல்ல. இவன் காதலைக் கூட அந்த ஆள் தெரிந்து வைத்திருக்கிறார். இவன் கல்யாணத்தை எப்படியாவது நடத்திக் கொடுக்க அந்த ஆளும் கெஞ்சுகிறார்….”

சிபிஐ மனிதன் சந்தேகம் ஓரளவு தீர்ந்தது. அந்த இளைஞன் அமானுஷ்யனாக இருந்தால் இப்படி எல்லோரிடமும் நட்பு பாராட்டுபவனாகவோ, வாயாடியாகவோ இருக்க வாய்ப்பில்லை. “சரி மேலே சொல்லுங்கள்”

மீசைக்காரர் நடந்தது அனைத்தையும் ஒன்று விடாமல் சொன்னார். கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த சிபிஐ மனிதனுக்கு அந்தப் பெண் சஹானா டிவிக்காரியாக இல்லா விட்டால் இன்னும் ஒழுங்காக விசாரித்திருக்கலாம் என்று தோன்றியது. இப்போதைக்கு ரகசியமே பிரதானமான விஷயமாக இருப்பதால் அவளுக்கு அதிக நெருக்கடி தருவது உசிதமல்ல என்று அவனுக்குத் தோன்றியது. அந்த அதிகப்பிரசங்கி சஹானாவிற்கு ஆலோசனை சொன்னது போல அந்த ரெயின்போ டிவிக்காரர்கள் இதை மேலும் குடைந்து ஒன்று கிடக்க ஒன்று ஆகி விட்டால் பிரச்னை சிக்கலாகி விடும் என்று தோன்றியது.

எல்லாம் கேட்டு முடித்த பின் சிபிஐ மனிதன் சொன்னான். “அவள் வீட்டுக்கு வெளியேயும் காவலுக்கு மாறு வேடத்தில் ஆள்களை நிறுத்துங்கள். அந்த வீட்டு நபர்கள் அந்த புதிய ஆள் உட்பட யார் எங்கே போனாலும் பின் தொடர ஏற்பாடு செய்யுங்கள். அவள் ஃபோனை டேப் செய்யவும் ஏற்பாடு செய்யுங்கள்…”

*********

மீசைக்காரர் வெளியில் ஜீப்பருகே நின்று போனில் நிறைய நேரம் பேசுவதைப் பார்த்து விட்டு வீட்டுக்குள் நுழைந்த அக்‌ஷய் மரகதத்தின் படபடப்பு இன்னும் குறையாததைக் கவனித்தான்.

“என்ன பெரியம்மா! அந்தத் தீவிரவாதியைத்தான் அன்றைக்கே இறக்கி விட்டாயிற்றே. இன்னும் என்ன பயம்?” அக்‌ஷய் சிரித்துக் கொண்டே கேட்டான்.

“உன்னால் எப்படி இவ்வளவு அமைதியாய் இருக்க முடிகிறது என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு மாரடைப்பே வந்து விடும் போல இருந்தது” மரகதம் படபடப்பு நீங்காமல் சொன்னாள்.

“பயம்தான் முதல் எதிரி பெரியம்மா. அது மனதில் வந்து விட்டால் நாம் அகப்பட்டுக் கொள்வது நிச்சயம். எதிரிக்குப் பலம் கிடைப்பதே நம் பயத்தால்தான்…..”

“எல்லாம் சொல்லும் போது கேட்க நன்றாய் தான் இருக்கிறது. ஆனால் இது மாதிரியான சந்தர்ப்பம் வரும் போது கைகால் எல்லாம் வெடவெட என்று நடுங்குகிறது…”

மரகதத்தைப் பரிவுடன் அக்‌ஷய் பார்த்ததை சஹானா பார்த்தாள். அவள் கணவன் ஒரு நாளாவது மரகதத்தை அப்படிப் பார்த்ததாக அவளுக்கு நினைவில்லை.

மரகதம் கேட்டாள். “நீ அப்படியானால் இனி இங்கே இருந்து போக வேண்டியதில்லை அல்லவா? அவர்கள் தான் நீ சொன்னதை நம்பி விட்டார்களே”

“இல்லை பெரியம்மா. இனி நான் இங்கிருப்பது ஆபத்து. நான் இனியும் இங்கிருந்து உங்களுக்கெல்லாம் பெரிய ஆபத்தை ஏற்படுத்த விரும்பவில்லை”

மரகதம் முகத்தில் வாட்டம் தெரிந்தது.

அக்‌ஷய் தொடர்ந்தான் “… பெரியம்மா, சஹானா இரண்டு பேரும் நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். நான் இங்கிருந்து போன பின் முடிந்த அளவு எச்சரிக்கையாகத்தான் இருக்கப் போகிறேன். ஆனால் விதி எனக்காக என்ன எழுதி வைத்திருக்கிறது என்று தெரியவில்லை. நான் அவர்களிடம் பிடிபடலாம். இல்லை அவர்களால் கொல்லப்படலாம்….”

சஹானா மரகதம் இருவரும் அவனைத் திகிலோடு பார்த்தார்கள்.

அவன் குரல் மென்மையாகியது. “நெருப்பு என்கிறதால் வாய் வெந்து விடாது. ஒரு பேச்சுக்காகச் சொன்னேன். எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. அதனால் தான் சொன்னேன். ஒருவேளை அப்படி ஆகி விட்டால் நீங்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்பட்டதாகக் காட்டிக் கொள்ளக் கூடாது. நான் உங்களுக்கு வேண்டப்பட்டவன் என்பது போல் யாருக்கும் சந்தேகம் வந்து விடும்படி நடந்து விடக்கூடாது. உங்களைப் பொருத்த வரை வருணைக் காப்பாற்றியதற்காக எனக்கு காரில் நீங்கள் லிஃப்ட் தந்தீர்கள். டிரஸ் வாங்கித் தந்தீர்கள். அதோடு நீங்கள் என்னைத் தலைமுழுகி விட்டீர்கள். நான் போலீசில் மாட்டினாலும், செத்தாலும் அதில் உங்களுக்கு எந்த பெரிய வருத்தமும் இல்லை என்பது போல் நடந்து கொள்ள வேண்டும்”

மரகதத்தின் கண்களில் நீர் திரையிட்டது. சஹானா அவனிடம் கேட்டாள். “ஏன் எங்களை என்னென்னவோ சொல்லி பயமுறுத்துகிறீர்கள்?”

“சஹானா, நான் சொன்னது போல் நீங்கள் நடந்து கொள்ளா விட்டால் உங்களுக்கும் அவர்களிடம் இருந்து ஆபத்து வந்து விடும். நான் செத்தாலும் பரவாயில்லை. ஆனால் என்னால் உங்களுக்கெல்லாம் ஆபத்து வருகிறது என்றால் என்னால் தாங்க முடியாது. இந்த வீட்டில் என்னைத் தங்க வைத்து சாப்பாடு போட்டு இருக்கிறீர்கள். உங்கள் இடத்தில் வேறு யார் இருந்தாலும் அதைச் செய்திருக்க மாட்டார்கள் சஹானா. ஏதாவது பணம் கொடுத்திருக்கலாம். ஆனால் இந்த அளவு தயவு காட்டியிருக்க மாட்டார்கள். உங்களுக்கு திருப்பி நான் எந்த நல்லதை செய்யா விட்டாலும் உங்களுக்கு என்னால் கெடுதலாவது ஆகாமல் இருக்க வேண்டும் என்று மனதார நான் நினைக்கிறேன்…..”

சஹானா எரிச்சலுடன் இடைமறித்தாள். “நான் நேர்மாறாய் நினைக்கிறேன். உங்கள் உயிரைப் பணயம் வைத்து என் குழந்தையைக் காப்பாற்றி இருக்கிறீர்கள். வாழ்நாள் எல்லாம் உங்களை இங்கே தங்க வைத்து சாப்பாடு போட்டாலும் அந்தக் கடனை என்னால் தீர்க்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை…”

அவன் ஒரு பெருமூச்சு விட்டு விட்டுக் கெஞ்சும் குரலில் சொன்னான். “எது எப்படியோ. நான் சொன்னதற்கு சரி என்று தயவு செய்து இரண்டு பேரும் ஒத்துக் கொள்ளுங்கள்”

சஹானா தலையசைத்தாள். மரகதம் சொன்னாள். “உனக்கு ஒன்றும் ஆகாது”

அவன் புன்னகை செய்தான். சிறிது நேரம் மூவரும் மௌனமாக இருந்தார்கள். பின் சஹானா கரகரத்த குரலில் சொன்னாள். “வருண் எப்படி நீங்கள் போவதை எடுத்துக் கொள்வான் என்று தெரியவில்லை. இந்த சில நாட்களில் அவன் உங்களுடன் நிறையவே ஒட்டிக் கொண்டு விட்டான். அவனுக்கு நீங்கள் தான் எப்படியாவது சொல்லிப் புரிய வைக்க வேண்டும்.”

அக்‌ஷய் தலையசைத்தான்.

சஹானா கேட்டாள். “இங்கிருந்து போன பிறகு எங்கிருக்கிறீர்கள் என்பதையாவது தெரிவிப்பீர்களா?”

“நான் பொய் சொல்ல விரும்பவில்லை சஹானா. நான் உங்களைத் தொடர்பு கொள்வது உங்களுக்கு ஆபத்தில் தான் முடியும். அதனால் என்னிடமிருந்து அதை எல்லாம் எதிர்பார்க்காதீர்கள்”

சஹானா ஒன்றும் சொல்லவில்லை. மரகதம் எழுந்து சமையலறைக்குப் போய் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

வருண் வந்த பிறகு அக்‌ஷய் அவனை அழைத்துக் கொண்டு மொட்டை மாடிக்குச் சென்றான். அங்கு அந்த நேரத்தில் யாரும் இருக்கவில்லை. அவனைக் கீழே உட்கார வைத்துத் தானும் அவன் எதிரே உட்கார்ந்தான்.

“வருண். இன்றைக்கு என்னைத் தேடிக் கொண்டு போலீஸ் உங்கள் வீட்டிற்கே வந்து விட்டார்கள்…”

வருண் கண்களில் பயம் தெரிந்தது. “அப்புறம்….”

“நான் உன் பாட்டியின் தங்கை மகன் என்கிற மாதிரி பேசி நம்ப வைத்து விட்டேன்….”

வருண் முகத்தில் நிம்மதி தெரிந்தது.

“ஆனால் நான் இனியும் உங்கள் வீட்டில் இருப்பது ஆபத்து வருண். நான் உன் பிறந்த நாள் முடிந்து போய் விடப் போகிறேன்”

வருண் முகத்தில் ஓங்கி அறைந்தது போன்றதொரு வலி தெரிந்தது. ‘போக வேண்டாம்’ என்று அவனைக் கெஞ்சி சம்மதிக்க வைக்க வருண் எண்ணினான். ஆனால் அக்‌ஷய் முகத்தில் தெரிந்த உறுதி அவன் இனி முடிவை மாற்றிக் கொள்ள மாட்டான் என்பதைப் புரிய வைத்தது.

அழும் குரலில் வருண் கேட்டான். “திரும்பி வருவீர்களா அங்கிள்”

‘மாட்டேன்’ என்று சொல்ல முனைந்த அக்‌ஷய் வருண் முகத்தைப் பார்த்து அதைச் சொல்ல சக்தி இல்லாமல் “தெரியவில்லை வருண்” என்றான்.

வருண் அவன் மடியில் ஏறி உட்கார்ந்து விசித்து விசித்து அழ ஆரம்பித்தான்.

அக்‌ஷய் கண்களும் லேசாகக் கலங்கின. என்ன சொல்லித் தேற்றுவதென்று அவனுக்குத் தெரியவில்லை. அவனைக் கட்டியணைத்துக் கொண்டு அவனை அழ விட்டான். வருண் அழுகை சிறிது நேரத்தில் குறைந்தது.

“நான் நாளைக்குத் தான் உன்னிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். பிறகு உன் பிறந்த நாளில் நீ அழவோ, சோகமாக இருக்கவோ கூடாது என்று தான் சொல்ல வேண்டாம் என்று விட்டேன். எனக்கும் உன்னை விட்டுப் போவது வருத்தம் தான் வருண். ஆனால் நான் இனி இங்கு இருப்பது எனக்கும் ஆபத்து. உங்களுக்கும் ஆபத்து. அதனால் தான் போகிறேன். ஆனால் எங்கு போனாலும் என்ன ஆனாலும் உன் ஞாபகம் என் மனதில் என்றைக்கும் இருக்கும். நீயும் என்னை மறக்க மாட்டாய் தானே”

மீண்டும் கண்களில் அருவியாய் கண்ணீர் பெருக வருண் மறக்க மாட்டேன் என்று தலையசைத்தான்.

“எனக்கு உன் ஞாபகம் வரும் போதெல்லாம் நாம் சேர்ந்து சந்தோஷமாய் இருந்த சமயத்தை எல்லாம் நினைத்து சந்தோஷப் படுவேன். நீயும் அதே மாதிரி என் ஞாபகம் வரும் போதெல்லாம் அதையே நினைத்து சந்தோஷப்பட வேண்டும். சரியா?”

அது எத்தனை கஷ்டமான காரியம் என்பதை உணராத வருண் சரி என்று வெகுளித்தனமாகத் தலையசைத்தான்.

“நீ இன்றைக்கே உன் மனதை சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டும். நாளைக்கு முழுவதும் நாம் சந்தோஷமாக உன் பிறந்த நாளைக் கொண்டாடப் போகிறோம். நம் வாழ்க்கையில் நாம் நினைத்துப் பார்க்க ஒரு மிக சந்தோஷமான நாளாய் உன் பிறந்த நாள் இருக்கப் போகிறது. சரியா?”

“எனக்கு நீங்கள் ஒரு சத்தியம் பண்ணித் தந்தால் தான் நான் சந்தோஷமாய் இருப்பேன்”

“என்ன சத்தியம்”

“நீங்கள் கண்டிப்பாய் ஒரு நாள் திரும்பி வருவீர்கள் என்று சத்தியம் செய்யுங்கள்” வருண் தன் கையை நீட்டினான்.

அக்‌ஷய் அவனையே சிறிது நேரம் பார்த்து விட்டு சத்தியம் செய்தான். “நான் உயிரோடிருந்தால் கண்டிப்பாக ஒரு நாள் திரும்பி வருவேன்”

வருணுக்கு அவன் சொன்ன வாக்கியத்தின் முதல் பகுதியின் முழு அர்த்தம் சரியாக விளங்கவில்லை என்றாலும் பிற்பகுதி சத்தியத்தால் அவன் மனம் அப்போதைக்கு அமைதியடைந்தது.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top