அமானுஷ்யன் – 27

மது சஹானா வீட்டில் நுழைந்த போது ஹாலில் அந்தப் புதிய மனிதன் இருக்கவில்லை. ”எங்கே அந்த ஆள்?” என்று சைகையால் அவன் சஹானாவிடம் கேட்டான்.

சஹானா அக்‌ஷய் இருந்த அறையைக் காட்டினாள்.

”வருண் எங்கே?”

”அவன் நண்பனின் பிறந்த நாள் என்று போயிருக்கிறான். இல்லாவிட்டால் எந்நேரமும் அக்‌ஷய் கூடத்தான் இருப்பான்.”

மரகதம் சமையலறையில் இருந்து எட்டிப் பார்த்துவிட்டு மறுபடித் தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள். சஹானாவின் திருமணத்திற்குப் பிறகு அவன் பல முறை அந்த வீட்டுக்கு வந்திருக்கிறான். ஆனால் என்றுமே மரகதம் அவனிடம் ஓரிரு வார்த்தைக்கு மேல் பேசியதில்லை. அவனைப் பார்த்து புன்னகைத்தது கூட இல்லை. அவனிடம் என்று இல்லை எல்லோரிடமும் அப்படித்தான் என்று சஹானா அவனிடம் சொல்லி சமாதானப்படுத்தி இருக்கிறாள். ஆனால் அப்படிப்பட்டவள் அந்தப் புதிய மனிதனிடம் பாசத்துடன் பழகுகிறாள் என்பதைக் கேள்விப்பட்ட போது மதுவிற்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது.

அந்தப் புதிய மனிதன் சஹானாவின் வீட்டில் தனியறை ஒன்றில் வீட்டில் ஒருவர் போல் செட்டிலாகி விட்டதையும் அவனால் ரசிக்க முடியவில்லை. இத்தனை காலம் அவளுடன் பழகியும் தனக்குக் கிடைக்காத ஒரு சலுகை அவனுக்கு அந்த வீட்டில் கிடைத்ததை ஜீரணிக்க அவனுக்குக் கஷ்டமாக இருந்தது.

சஹானாவைத் தொடர்ந்து அந்த அறையை அடைந்த மது அங்கு அவனை அந்த நிலையில் காண்போம் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை. சஹானாவும் திகைத்துத்தான் போனாள். அறையின் நடுவில் அவன் பத்மாசனத்தில் அமர்ந்து தியானத்தில் இருந்தான். உட்கார்ந்திருந்த விதம் அவனுக்கு இயல்பானது போல சிறிதும் இறுக்கமோ, கஷ்டமோ தெரியாமல் இருந்தது. அவன் முகத்தில் பேரமைதி தெரிந்தது. அவன் அவள் வீட்டில் இல்லாமல் ஒரு மடத்திலோ, மலையிலோ இருந்திருந்தால் மது அவனை ஒரு சாமியாராகத்தான் நினைத்திருப்பான். விழுந்து கும்பிட்டு கூட இருக்கலாம். ஆனால் சஹானா வீட்டில் அவனை அப்படிப் பார்ப்பதில் ஏதோ போலித்தனம்தான் தெரிந்தது.

அவன் உடலில் தேவையில்லாத சதை என்று எதுவும் இல்லாததை மது கவனித்தான். நன்றாக உடற்பயிற்சி செய்பவனாக இருப்பான் என்று நினைத்துக் கொண்டான். தன்னை ஒரு கணம் பார்த்துக் கொண்டான். லேசாக தொப்பை வர ஆரம்பித்திருந்தது. ‘இந்த பாழாய் போன வேலையில் உடற்பயிற்சி செய்ய எங்கே நேரம்?’. மது அவனை மறுபடியும் கூர்ந்து கவனித்தான். அவன் தன்னை விட அழகில் குறைவு தான் என்று தோன்ற மனதில் ஒரு அற்ப சந்தோஷம் வந்து போனது.

அவனை எழுப்பலாமா வேண்டாமா என்று இருவரும் யோசித்துக் கொணடிருந்த போது அவன் கண்களைத் திறக்காமல் தெளிவான குரலில் சொன்னான். ”01126734678”

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அவன் மெள்ள கண்களைத் திறந்தான். மறுபடியும் அதே எண்களைச் சொன்னான். அவர்களைப் பார்த்தும் எந்த உணர்ச்சியும் முகத்தில் காட்டாமல் எழுந்து மேசையில் வைத்திருந்த ஒரு பென்சிலை எடுத்து அருகில் இருந்த காகிதத்தில் அந்த எண்களை எழுதினான். பின் அவர்களைப் பார்த்து புன்னகைத்தான். அடுத்த கணமே அவன் மிக அழகானவனாக மாறிப் போனான். மதுவுக்கு மீண்டும் பொறாமை வந்து போனது.

”நீங்கள் தான் மது என்று நினைக்கிறேன்….” அருகில் வந்து அவன் கை குலுக்கிய போது மது அவன் கைகளின் உறுதியை உணர்ந்தான்.

”ஹலோ” – மதுவின் குரல் வேண்டா வெறுப்பாய் வெளி வந்தது.

சஹானா கேட்டாள். ”அந்தக் காகிதத்தில் என்ன எழுதினீர்கள்?”

”ஆச்சார்யா பற்றி யோசித்துக் கொண்டே இருந்து விட்டுத் தியானம் செய்ய ஆரம்பித்தேன். அப்போது இந்த நம்பர் மனதில் கிடைத்தது” அக்‌ஷய் சொன்னான்.

அந்தக் காகிதத்தை எடுத்துப் பார்த்த மது ”இது எதோ போன் நமபர் போல தெரிகிறது” என்றான்.

சஹானாவும் அந்த எண்ணைப் பார்த்தாள். ”011 டெல்லியின் எஸ்.டி.டி கோட். மீதி இருப்பது போன் நம்பர்….”

பரபரப்புடன் போனை எடுத்தான் மது. அந்த எண்களை அழுத்தினான். ”இந்த எண் உபயோகத்தில் இல்லை” என்ற தகவல் வந்தது.

”எதற்கும் இந்த நம்பரை நான் நாளைக்கு விசாரிக்கிறேன்” என்ற மது அந்தக் காகிதத்தை மடித்து பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான். பின் ”மிஸ்டர்…..” என்று ஆரம்பித்தான்.

”அக்‌ஷய். இப்போதைக்கு அது தான் எனக்குப் பெயர்” அக்‌ஷய் சொன்னான்.

”அக்‌ஷய் நாம் இருவரும் வெளியே போய் பேசலாமா?”

அக்‌ஷய் சரியென்று தலையசைக்க சஹானா ஒருவித தர்மசங்கடத்துடன் இருவரையும் பார்த்தாள். இருவருக்கும் ஒத்துப் போகப் போவதில்லை என்ற உள்ளுணர்வு அவளுக்கு முன்பே ஏற்பட்டிருந்ததால் அவர்கள் தனியாகச் செல்வது அவளுக்கு நெருடலாக இருந்தது. ஆனால் அவள் எதுவும் சொல்வதற்கு முன்பே இருவரும் வெளியே செல்லத் தயாராகி விட்டார்கள்.

வெளியே வந்தவர்கள் தெருவில் நடக்க ஆரம்பித்தார்கள். சந்தடி குறைந்த பகுதிக்கு வரும் வரை இருவரும் எதுவும் பேசவில்லை. பிறகு மது சொன்னான். ”அக்‌ஷய். கிட்டத்தட்ட நாம் இருவரும் ஒரே வயதினராக இருப்பதால் ஒருமையில் பேசுவதில் தவறில்லை என்று நினைக்கிறேன். உன்னை எனக்குப் பிடிக்கவில்லை”

அக்‌ஷய் அவனை லேசான புன்னகையுடன் பார்த்தான். ஆனால் ஒன்றும் சொல்லவில்லை.

”சஹானா உன்னை நம்பும் அளவுக்கு நான் உன்னை நம்பவுமில்லை. ஏதோ கதையில் வருகிற மாதிரிதான் உன் ஞாபக மறதியும் எனக்குத் தோன்றுகிறது”

அக்‌ஷய் அமைதியாகச் சொன்னான். ”மது நீ வெளிப்படையாகப் பேசுவது எனக்குப் பிடித்து இருக்கிறது”

தெருவோரப் பூங்கா ஒன்றின் வெளியே போட்டிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்த மது அவனையும் அருகில் உட்காரக் கை காண்பித்தான். மதுவுக்கு அவன் பிடித்திருக்கிறது என்று சொன்னது ஏனோ ஒருவித எரிச்சலைக் கிளப்பியது. அதை வெளியே காண்பிக்காமல் இருக்க முயன்றபடி மது அவனிடம் கேட்டான்.

”சஹானாவைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?”

”மிகவும் நல்ல பெண்…..”

”ஆனால் வாழ்க்கையில் அவள் நிறையவே அடிபட்டவள். அந்த நல்ல மனதுக்கு இது வரை எந்த நல்லதும் நடந்ததில்லை. சின்ன வயதில் அம்மாவை இழந்தாள். கல்யாணம் ஆனவுடன் அப்பாவை இழந்தாள். பிறந்த வீட்டில் இருக்கும் ஒரே உறவான அண்ணன் ஒரு ஜப்பான் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டான். அவன் இவள் கல்யாணத்திற்குப் பிறகு ஒரே தடவை தான் போன் செய்து பேசியிருக்கிறான். ”என்னால் ஏதாவது உதவி வேண்டுமென்றால் கேள்” என்றான். உதவி எதுவும் தேவையில்லை என்ற பின் போன் செய்வதும் இல்லை…..”

சொல்லச் சொல்ல மதுவின் முகத்தில் தெரிந்த கோபத்தை அக்‌ஷய் கூர்மையாகக் கவனித்தான். தெருவில் நடந்து போகும் ஒரு ஜோடி அவனைப் பார்த்துக் கொண்டே போனதையும் கூட அவன் கவனிக்கவில்லை.

அவன் தொடர்ந்தான். ”….அவளுடைய கல்யாணம் ஒரு பெரிய நரகத்தில் அவளைத் தள்ளி விட்டது. அவள் கணவன் பார்க்க சுமாராய் இருப்பான். நல்ல படிப்பு, கை நிறைய சம்பளம், என்று எல்லாம் இருந்தாலும் அவன் நல்ல கணவனாய் இருக்கவில்லை. அவன் சந்தேகப்பிராணியாய் இருந்தான். அவள் எந்த ஆணிடம் பேசினாலும் சந்தேகப்பட்டான். தெருவில் போகும்போது அவளை யாராவது ஒரு ஆண் பார்த்துக் கொண்டே போனால் போதும். வீட்டிற்குப் போனவுடன் வார்த்தைகளாலே அடிப்பான். பல பேர் பார்ப்பதற்காகத் தான் அவள் நன்றாக டிரஸ் செய்வதாய் சொல்வான். அவள் நன்றாக டிரஸ் செய்வதையே விட்டு விட்டாள். ஆனாலும் சில பேர் பார்த்தார்கள். அதற்கும் அவன் அவளை ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பான். அவள் வேலைக்குப் போவதும் அவனுக்குப் பிடிக்கவில்லை. கல்யாணத்திற்கு முன்பிருந்தே இருந்த வேலையை மட்டும் விட அவள் தயாராக இருக்கவில்லை. அதற்கு அவனிடம் அவள் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. நரக வாழ்க்கைதான் வாழ்ந்தாள். அவன் அந்த விபத்தில் அடிபட்ட பின் மூன்று நாள் ஆஸ்பத்திரியில் இருந்தான். அவன் கடைசியாக அவளிடம் சொன்னது என்ன தெரியுமா?”

அக்‌ஷய் அவனையே பார்த்தான். மது பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னான். ”நான் செத்த அடுத்த நாளே யார் கூடவாவது படுக்கப் போய் விடாதே. என் மகனை நன்றாக வளர்க்கப் பார்” என்று சொன்னான் அந்த…..”
அவன் வாயிலிருந்து கெட்ட வார்த்தை ஆக்ரோஷமாய் வந்தது.

அகஷயிற்கு சஹானாவை நினைக்கையில் பாவமாக இருந்தது. அவள் ஏனொ தானோவென்று உடை உடுத்துவதன் காரணம் இப்போது தான் அவனுக்குப் புரிந்தது.

மது தொடர்ந்தான். ”….அவன் செத்தது எவ்வளவு நிம்மதியை எனக்குத் தந்தது என்று என்னால் சொல்ல முடியாது அக்‌ஷய். ஒன்றாம் வகுப்பில் இருந்தே அவள் கூடப் படித்தவன் நான். இத்தனை வருடங்கள் பழகிய நான் அவளைப் போல அவ்வளவு நல்ல ஒரு பெண்ணைப் பார்த்ததில்லை. அவள் கஷ்டப்பட்டால் என்னால் தாங்க முடியாது. இப்போது உன்னால் அவளுக்கு ஆபத்து வரும் என்று நினைக்கையில் எனக்குத் தாங்க முடியவில்லை”

அக்‌ஷய் அமைதியாக மதுவிடம் கேட்டான். ”நீ ஏன் அவளைக் கல்யாணம் செய்து கொள்ளவில்லை. அவளை இவ்வளவு தூரம் நேசிக்கிறாய். நீ அவளுக்கு நல்ல கணவனாக இருந்திருப்பாய்”

மதுவுக்கு அந்தக் கேள்வி தூக்கிவாரிப் போட்டது. ஒரு நிமிடம் ஒன்றும் சொல்லவில்லை. பின் மெல்ல சொன்னான். ”அவள் அப்பா தங்கள் ஜாதியிலேயே அவளுக்குக் கல்யாணம் செய்து தர வேண்டும் என்றிருந்தார். அப்புறம் நானும் அவளும் நல்ல நண்பர்கள் தான்…..”

”நீ அவளைக் காதலித்திருக்கிறாய் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது”

எரிச்சலுடன் மது அவனைப் பார்த்தான். ஆனால் அக்‌ஷயின் அமைதியான பார்வை அவனைப் பலவீனமாக ஒத்துக்கொள்ள வைத்தது. ”அவள் என்னை நல்ல நண்பனாகத்தான் என்றுமே பார்த்தாள். அதனால் நான் அவளிடம் அதைச் சொல்லி நட்பை இழக்க விரும்பவில்லை.. நண்பனாக இருக்கவே தீர்மானித்தேன். ஒருவிதத்தில் பார்த்தால் காதலை விடவும் நட்பு உயர்ந்தது இல்லையா?”

அக்‌ஷய் தலையசைத்தான். சிறிது நேரம் இருவரும் பேசவில்லை. பிறகு அக்ஷய் கேட்டான். ”உங்கள் நட்பை சஹானாவின் கணவன் சந்தேகப்படவில்லையா?”

”தெருவில் போகிறவனையே சந்தேகப்படுகிறவன் என்னைச் சந்தேகப்படாமல் இருப்பானா? கூடவே வேலை பார்க்கிறேன், சிறு வயதிலேயிருந்தே நண்பன் என்றெல்லாம் ஆன பிறகு முதல் சந்தேகமே என் மேல் தான். அவன் சந்தேகத்தைப் போக்கவே நான் ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டேன். அப்படியும் அவன் சந்தேகம் போகவில்லை. ஆனால் சஹானா அதை சட்டை செய்யவில்லை. என்னிடம் பேசாமலோ, பழகாமலோ இருந்ததில்லை……”

”உன் மனைவி சந்தேகப்படவில்லையா?”

”எல்லாம் சொல்லித்தான் அவளைக் கல்யாணம் செய்து கொண்டேன். அவள் மிகவும் நல்ல பெண். சஹானாவுக்கும் அவள் நல்ல தோழி. இப்போது பிரசவத்திற்குப் போயிருக்கிறாள்…..”

அக்‌ஷய் ஆத்மார்த்தமாய் சொன்னான். ”மது உன்னை எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது, நீ மிக நல்லவன்”

மது அவனையே வெறித்துப் பார்த்தான். இப்படிப்பட்டவனை வெறுக்கவும் அவனுக்குக் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனாலும் அவனை ஏற்றுக் கொள்ள மதுவால் முடியவில்லை.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top