அமானுஷ்யன் – 25

சஹானா வேலைக்கும், வருண் பள்ளிக்கும் சென்று விட்டார்கள். வீட்டில் அக்‌ஷயும், மரகதமும் மட்டுமே இருந்தார்கள். பக்கத்து வீட்டு பஞ்சாபிக்காரர் ஜெய்பால்சிங் வந்து அரைமணி நேரம் அவனிடம் பேசிக் கொண்டிருந்தார். அவனைப் பற்றிய எல்லா விவரங்களையும் கேட்க அவன் சிறிதும் தயக்கமில்லாமல் உளறாமல் எல்லாவற்றிற்கும் பதில் சொன்னான். ஒரு உண்மை கூட சொல்லாமல், பொய் என்பதை அவர் அறியாதபடி சுவாரசியமாக அவன் சொன்ன விதம் மரகதத்தை வியக்க வைத்தது.

தான் இப்போது இருப்பது அலகாபாத்தில் என்றும் அங்கு ஒரு முஸ்லிம் பெண்ணைக் காதலிப்பதாகவும் இரு வீடுகளிலும் கடும் எதிர்ப்பு என்றும் ஆனால் ஒரு நாள் கண்டிப்பாகக் கல்யாணம் செய்து கொள்வோம் என்றும் உறுதிபடக் கூறினான். இந்தக் காதல் விவகாரத்தைக் கேட்டவுடன் ஜெய்பால்சிங் மற்ற அனாவசியக் கேள்விகளை விட்டு விட்டு காதலின் சரித்திரத்தைக் கேட்டார். முதலில் எங்கே எப்போது பார்த்தாய் என்று ஆரம்பித்து யார் முதலில் காதலைச் சொன்னார்கள் என்பது போன்ற கேள்விகள் கேட்டு இனி என்ன செய்வதாக உத்தேசம் என்று கேட்டு மனிதர் அவன் காதல் பற்றிய அனைத்து தகவல்களையும் சேகரித்து விட்டுப் போனார்.

போகும் போது மரகதத்திடம் சொன்னார். “அம்மா நீங்கள் உங்கள் தங்கைக்குப் புத்தி சொல்லுங்கள். காதலைப் பிரிப்பது மகா பாவம். மதம், சாதி எல்லாம் மனிதனாகக் கண்டுபிடித்தது. கடவுள் எல்லாருக்கும் ஒன்று தான். அக்‌ஷய் நல்ல பையன். பெற்றோர் சம்மதத்துடன் தான் திருமணம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறான்……”

மரகதம் தலையாட்டினாள். அவர் போனவுடன் வாய் விட்டுச் சிரித்தாள். அவளுக்குத் தெரிந்து திருமணமான நாளில் இருந்து அவள் வாய் விட்டுச் சிரிப்பது அது தான் முதல் முறை.

அவனும் அவளுடன் சேர்ந்து சிரித்தான். மரகதம் முகத்தில் இருந்த இறுக்கம் குறைந்திருப்பதை உணர்ந்தான். அவள் தன் தந்தையிடமும், கணவனிடமும் பட்ட கஷ்டங்களை எல்லாம் சொன்னதில் இருந்து அவனுக்கு அவள் மீது நிறையவே இரக்கம் தோன்றி இருந்தது. அங்கு வந்ததில் இருந்து அவளைக் கவனித்து வருகிறான். அவள் ஒரு நிமிடம் சும்மா இருந்ததில்லை. ஏதாவது வேலை செய்து கொண்டே இருந்தவள் வேலை இல்லாத நேரங்களில் ஸ்தோத்திரம் படித்துக்கொண்டு இருந்தாள்.

அவள் கை விரல் காயம் இன்னும் ஆறாததைக் கவனித்த அக்‌ஷய் அவளிடம் சொன்னான். “இன்றைக்கு நீங்கள் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். நான் சமையல் செய்கிறேன். என்ன செய்ய வேண்டும். எந்த அளவில் எதைப் போட வேண்டும் என்பதை மட்டும் சொல்லுங்கள். போதும்”

அவள் மறுத்த போது உரிமையுடன் அவளைப் பிடித்து சமையலறையில் இருந்த நாற்காலியில் உட்கார வைத்தான்.

“எனக்கும் பொழுது போக வேண்டும் பெரியம்மா. நீங்கள் என்னை வேறு ஆளாய் நினைக்க வேண்டாம். உங்கள் மகன் போல நினைத்துக் கொள்ளுங்கள்”

அவள் கண்களில் பெருகிய நீரைக் கஷ்டப்பட்டு மறைத்தாள். அவள் மகன் என்றுமே அவள் மீது அக்கறை கொண்டதில்லை…..

அவள் சொல்லச் சொல்ல அவன் சமைத்தான். அவளுக்கு சும்மா உட்கார்வது மிகவும் சிரமமாய் இருந்தது. அவள் சொன்னாள். “எனக்கு வேலை செய்வது சிரமமில்லை. சும்மா உட்கார்வது தான் கஷ்டம். வேலை செய்யும் போது மனதிற்கு வேலை இருக்காது. சும்மா இருந்தால் மனம் வேண்டாததைப் பற்றி எல்லாம் நினைக்க ஆரம்பிக்கும். எனக்கு நினைக்க நல்ல விஷயங்கள் எப்போதுமே இருந்ததில்லை”

அவனுக்குப் புரிந்தது. “வேலை இல்லாத போது ஏதாவது ஸ்தோத்திரம் படித்துக் கொண்டே இருக்கிறீர்களே. கடவுளிடம் என்ன கேட்பீர்கள்?”

“வேலை செய்ய முடிகிற வரையில் மட்டும் என்னை உயிரோடு வை கடவுளே. அது முடியாமல் போவதற்குள் என்னை கூட்டிக்கொண்டு போ என்று தான்.”

அவன் அதற்கு மேல் அவளை எதுவும் கேட்கவில்லை. அவள் அவன் வேலை செய்யும் லாவகத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள். அவனுடைய எந்த ஒரு அசைவும் அனாவசியமானதாகவோ ஒரு நேர்த்தியில்லாததாகவோ இருக்கவில்லை. எடுத்த பொருளைக் கையொடு அந்தந்த இடத்தில் வைப்பதில் இருந்து அவனுடைய ஒவ்வொரு வேலையும் கச்சிதமாக இருந்தது. அதிகம் அலட்டிக் கொள்ளாமல், பதற்றமே இல்லாமல் வேகமாக எல்லாவற்றையும் செய்து முடித்தான். அவனிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறையவே இருக்கிறது என்று அவள் நினைத்தாள்.

அவளை உட்கார வைத்து அவனே பரிமாறினான். அவள் மறுத்த போது சொன்னான். “இன்றைக்கு ஒரே நாள்…”

அவள் முதல் கவளத்தை வாயில் வைத்த போது அவள் கண்கள் கலங்கின.

அவன் கரிசனத்தோடு கேட்டான். “என்ன பெரியம்மா காரம் அதிகமாய் விட்டதா?”

அவள் பேசினால் அழுது விடுவோமோ என்று பயந்து தலையை மட்டும் இல்லை என்று அசைத்தாள். அவன் யார் என்ன என்று தெரியா விட்டாலும் ஒன்று மட்டும் அவளுக்குத் தெளிவாகத் தெரிந்தது. “இவனைப் பெற்றவள் பாக்கியசாலி.”

*********

“ஹலோ” என்றார் மஹாவீர் செயின்.

டிவியிலும், பத்திரிக்கைகளிலும் காட்டியிருந்த தீவிரவாதியைப் பற்றி ஏதாவது தகவல் கிடைத்தால் தெரிவிக்கச் சொல்லி தனக்கு மிகவும் நெருக்கமான, அந்த குறிப்பிட்ட துறை போலீஸ் அதிகாரி ஒருவரிடம் மஹாவீர் ஜெயின் முன்பே போன் செய்திருந்ததற்கு அந்த அதிகாரி திரும்ப செய்த போன் கால் தான் அது.

“சார். அந்தத் தீவிரவாதியை நேரில் ஒரு பெண்ணுடன் பார்தததாக யாரோ போன் செய்திருந்தார்கள். ஆனால் போன் செய்த அந்த ஆளை ரகசியமாக விசாரித்திருக்கிறார்கள். டிபார்ட்மெண்டுக்குள்ளேயே பல பேருக்கு அந்த விவரம் தெரிவிக்கவில்லை. சம்பந்தப்பட்ட விசாரணை ஆள்களுக்கே தெரியாமல் மூடு மந்திரமாக ஏதோ நடக்கிறது. அந்த ஆள் என்ன சொன்னான், மேற்கொண்டு என்ன செய்யப் போகிறார்கள் என்பது தெரியவில்லை…”

எல்லாத் துறைகளிலும் மிக மிக ரகசியமான சில தகவல்கள் வெளியே கசிந்தால் விசாரணை தடைப்பட்டுப் போகும் என்பதால் இப்படி மூடி மறைப்பது உண்டு என்பதால் ஜெயின் அதைப் பற்றிப் பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் போன் செய்த அதிகாரியும் அதை அறியாதவர் அல்ல என்பதால் கேட்டார். “சில சமயங்களில் நாம் எல்லோருமே அப்படி செய்கிறோமே, இதில் என்ன ஆச்சரியம்?”

“இதில் மேல் மட்ட அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதி யாருக்கோ ஆர்வம் இருக்கிறது என்றும் அவர் உத்தரவுப்படிதான் எல்லாமே நடக்கிறது என்றும் நம்பத் தகுந்த வட்டாரத்தில் இருந்து எனக்குத் தகவல் கிடைத்தது. வெடிகுண்டு விசாரணைகளில் அரசியல்வாதிகள் பின்னால் இருந்து காய் நகர்த்துவது நாம் அதிகம் பார்க்காதது….”

ஜெயினுக்கும் அது ஆச்சரியமாகத் தான் இருந்தது. “யார் அந்த அரசியல்வாதி என்று தெரிந்ததா?”

“அது பரம ரகசியமாக இருக்கிறது”

“நன்றி. வேறு ஏதாவது புதிய தகவல்கள் கிடைத்தால் கண்டிப்பாகச் சொல்லுங்கள். நான் இதில் ஆர்வம் காட்டுவது யாருக்கும் தெரிய வேண்டாம்”

*******

அதே நேரத்தில் சிபிஐ மனிதன் அந்த அரசியல்வாதிக்குப் போன் செய்தான்.

“ஹலோ சொல்லுங்கள்” – மறுபக்கத்தில் குரல் களைப்பாகக் ஒலித்தது.

“சார். ஏதாவது புதிய தகவல் கிடைத்ததா?”

“இல்லை. அந்தத் தாடிக்காரன் ஒரு நாளைக்கு நாலு தடவை போன் செய்கிறான். அந்த அமானுஷ்யனைக் கண்டு பிடித்து விட்டீர்களா என்று கேட்டுக் கொண்டே இருக்கிறான். நீங்கள் எதாவது கண்டு பிடித்தீர்களா…”

சிபிஐ மனிதன் சொன்னான். “அந்தப் பெண்ணைப் பற்றிய தகவல்கள் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. அது வேலைக்குப் போகிற பெண்ணாய்த்தான் இருக்க வேண்டும். ஆனால் டெல்லியில் தேடுவது அவ்வளவு சுலபமாயில்லை. ஆனால் இன்னொரு முக்கிய தகவல் இருக்கிறது. அமானுஷ்யனை அடையாளம் கண்டு சொன்னதாய் ஒரு பையனை விளம்பரப்படுத்தினோமே அவனும் அவன் குடும்பமும் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. நேற்று இரவோடு இரவாக எங்கேயோ போய் விட்டார்கள். அவர்கள் எங்கே போனார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை…..”

“என்ன ஆயிருக்கும்?”

சிபிஐ மனிதன் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அடுத்த தகவலைச் சொன்னான். “அந்த இன்ஸ்பெக்டர் ப்யாரிலால் இன்றைக்கு வேலைக்கு வரவில்லையாம். போய்ப் பார்த்த ஏட்டு அந்த ஆள் எதோ பேயைப் பார்த்த மாதிரி இருப்பதாய் சொல்கிறான்”

மறுபக்கம் தாழ்ந்த குரலில் சொன்னது. “அமானுஷ்யன்..?”

“அப்படித் தான் தோன்றுகிறது. இன்னும் ப்யாரிலால் அந்தப் பையன் போல் தலைமறைவு ஆகவில்லை. அதற்கு முன் அவனைப் பார்த்து நாம் பேசுவது நல்லது….”

“நாம் நேரடியாக ஈடுபட வேண்டாம் என்று நினைக்கிறேன். நீங்களும் அப்படித் தான் சொன்னதாய் ஞாபகம். வேண்டுமென்றால் தகுந்த ஆட்களை நீங்களே அனுப்புங்கள்”

“அமானுஷ்யனைப் ப்யாரிலால் நேரில் பார்த்திருக்கிறான் என்றால் ப்யாரிலாலிடம் நாம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. சில விஷயங்களுக்கு நாம் நேரில் போவது போல் அடுத்தவரை அனுப்பினால் ஆகாது….அதே நேரத்தில் நாம் யார் என்பதைப் ப்யாரிலால் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது அவசியமில்லை”

“அதெப்படி?”

சிபிஐ மனிதன் என்ன செய்ய வேண்டுமென்பதை விளக்கினான்.

மறுபக்கம் திருப்தியுடன் சொன்னது. “சரி அப்படியே செய்கிறேன்”

“இன்னொரு விஷயம்”

“என்னது?”

“டிஐஜி கேசவதாசை ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லுங்கள். பாதுகாப்பை அதிகப்படுத்திக் கொள்ளச் சொல்லுங்கள்”

“அவனிடம் ப்யாரிலால் அவர் பற்றி சொல்லி இருப்பான் என்று நினைக்கிறீர்களா?”

“ப்யாரிலாலும் மனிதன் தானே’

“கடவுளே….”

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top