அமானுஷ்யன் – 23

“ஹலோ சஹானா” மதுவின் குரல் பரபரப்பாகக் கேட்டது.

“சொல்லு மது”

“அவன் இருக்கிறானா?”

“இல்லை. வெளியே போயிருக்கிறான்.”

“எங்கே?”

“அவனாகச் சொல்லவில்லை. நானாகக் கேட்கவில்லை”

“ஒவ்வொரு நாளும் இரவானால் வெளியே போகிறான். இன்று போனது எங்கே என்று உனக்குத் தெரியவில்லை. நேற்று போனவன் என்ன செய்தான் என்றும் தெரியவில்லை. அவனைத் தீவிரவாதி என்று போலீஸ் வேறு தேடுகிறது. நீ ஆபத்தை விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறாய் சஹானா, தெரியுமா?”

“மது. எனக்குப் புரிகிறது. ஆனால் என் மகன் பிழைத்திருப்பது அவனால் தான். அதனால் அவனுக்கு ஒரு பாதுகாப்பான இடத்தைத் தயார் செய்யாமல் நான் அனுப்பப் போவதில்லை. என்ன ஆனாலும் சரி”

மது பெருமூச்சு விட்டான். “சஹானா, நான் இன்றைக்கு அவன் தான் வெடிகுண்டு வைத்தவன் என்று அடையாளம் காட்டிய பையன் வீட்டுக்குப் போயிருந்தேன்….”

“சொல் மது. அவர்கள் வீட்டில் என்ன சொன்னார்கள்”

“அங்கே அந்தப் பையன், அவனுடைய அப்பா, அம்மா மூன்று பேருமே ஏதோ பேயைப் பார்த்த மாதிரி பயந்து போயிருக்கிறார்கள். அந்த வீடே ஒரு மாதிரியாய் இருக்கிறது. நான் டிவி சேனலில் இருந்து வருகிறேன் என்று சொன்னதும் அந்தப் பையனின் அம்மா ஒருத்தி தான் வாயைத் திறந்தாள். அதுவும் “தயவு செய்து எதுவும் கேட்காதீர்கள்” என்று சொல்லத்தான். சொல்லச் சொல்ல அழுதே விட்டாள். அந்தப் பையனும், அவன் அப்பாவும் ஏதோ பெரிய ஆபத்தை நான் கொண்டு வந்திருப்பது போல் என்னை கலவரத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். எந்நேரமும் எதுவும் ஆகலாம் என்று பயந்தது மாதிரி தெரிந்தது. இதெல்லாம் உன் ஆள் போய் வந்ததன் விளைவு தான் என்பதில் சந்தேகமில்லை”

மகனும் மாமியாரும் அருகில் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின் சஹானா குரலைத் தாழ்த்திக் கொண்டு சொன்னாள். “மது. எனக்கு நீ சொல்வதை நம்ப முடியவில்லை. என் வீட்டில் நேர்மாறாக நடந்திருக்கிறது. என் மகன் அவன் இருக்கிற வரை அவனுடனே அட்டை போல் ஒட்டிக் கொண்டிருக்கிறான். என் மாமியாரை உனக்குத் தெரியுமே எப்போதும் ஒரு எந்திரம் மாதிரி தான் இருப்பார்கள். இன்றைக்கு அவரே நிறைய மாறியிருப்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவனை அவர் பாசத்துடன் பார்த்தது போல் அவருடைய மகனைப் பார்த்ததாக எனக்கு நினைவில்லை….”

“சஹானா. அப்படியானால் அவன் பெரிய புதிராக இருக்கிறான். அவனை நான் கண்டிப்பாய் பார்க்க வேண்டும். நாளைக்கே.”

சஹானா சற்று யோசித்து விட்டு சொன்னாள். “சரி மது. நான் நீ என் நண்பன். வேறு ஒரு விஷயமாய் வீட்டுக்கு வருகிறாய். உன் மூலமாய் விஷயம் போகாது என்று சொல்லி அவனைத் தயார் செய்து வைக்கிறேன். வா”

போனை வைத்த பிறகு சஹானா நிறைய நேரம் அவனைப் பற்றியே யோசித்தாள். யாரவன்? ஒரு குடும்பத்தைக் கிலியின் பிடியிலும் இன்னொரு குடும்பத்தை அன்பின் பிடியிலும் கட்டிப் போட முடிந்த, பெயர் கூடத் தெரியாத அந்த அசாதாரண மனிதன் உண்மையில் யார்? ஏன் அவனைக் கொல்லச் சிலர் முயற்சிக்கிறார்கள்? ஏன் போலீஸ் தேடுகிறது?

மதுவிடம் கூட சொல்லாத இன்னொரு விஷயமும் அவளை அலைக்கழித்தது. வருணும், மரகதமும் மட்டுமல்ல அவளும் கூட அவனால் அதிகம் மாறிக் கொண்டிருக்கிறாள். அவனிடம் ஒருவித காந்த சக்தி இருப்பதாக உணர ஆரம்பித்திருந்தாள். அவன் புன்னகை பூத்த போதெல்லாம் அவள் இதயம் ஒரு கணம் துடிக்க மறந்தது. அவன் பேசுவது, உட்கார்வது, நடப்பது எல்லாவற்றிலும் ஒரு அழகு கலந்த கம்பீரம் இருப்பதாகத் தோன்ற ஆரம்பித்திருந்தது. மது சொன்ன ஆபத்தை விட இது பேராபத்து என்று தோன்ற ஆரம்பித்தது.

********

ஆச்சார்யா கடைசிக் கேஸில் உபயோகித்த நபர் தன் தம்பியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஆனந்த் ஜெயினிடம் கூடச் சொல்லவில்லை. டெல்லி வந்தவுடன் மறுபடியும் லலிதாவிற்குப் போன் செய்து அந்த விஷயத்தை எக்காரணத்தைக் கொண்டும் சிபிஐ உட்பட யாரிடமும் இனி சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ள அவளும் ஒத்துக் கொண்டாள்.

ஜெயினிடம் வந்து அந்த நபரைப் பற்றிச் சொன்ன போது யாரோ ஒரு இளைஞன் ஆச்சார்யாவிடம் தினமும் இரவு பத்து மணிக்கு மேல் அடிக்கடி பேசினான், அவன் பெயர் சொன்னதில்லை என்பது மட்டும் சொன்னான்.

ஜெயின் ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்தார். வெடிகுண்டுத் தாக்குதல் டெல்லியில் பல இடங்களில் வெடிக்கப் போகிறது என்ற அளவில் மட்டும் தெரிந்த செய்தி மேற்கொண்டு எந்தத் தகவலும் இல்லாமல் தலைக்கு மேல் கத்தியாகத் தொங்கிக் கொண்டிருந்தது. எந்த நாள், யாரால் வைக்கப்படலாம் என்பதை அறிந்த அந்த நபர் உயிருடன் இருக்கிறானா இல்லையா என்பது கூடத் தெரியவில்லை…..

“ஆனந்த். நேற்று டெல்லி புறநகர் பகுதியில் குண்டு வைத்ததாக ஒரு தீவிரவாதியின் படத்தை வெளியிட்டிருந்தார்கள். அவனும் நாம் வெடிகுண்டு வைக்கப் போவதாக நினைக்கும் கூட்டத்தில் உள்ள ஆளாக இருக்கலாமோ”

“நானும் பார்த்தேன். இருந்தாலும் இருக்கலாம். ஆனால் நாம் தேடிக் கொண்டிருக்கும் கூட்டம் டெல்லியின் முக்கியமான பகுதிகளில் வைக்கப் போகிற கூட்டம் என்று சந்தேகப்படுகிறோம். இந்தக் குண்டு வைத்த இடம் அந்த அளவு முக்கியமான பகுதி அல்ல. அதனால் இது வேறு கூட்டமாக இருக்கலாம். ஆனால் எதற்கும் அந்த தீவிரவாதி பற்றி வேறெதாவது தகவல் கிடைக்கிறதா என்று பார்த்து முடிவு செய்யலாம்”

“அதுவும் சரி தான்” என்றவர் போனை எடுத்தார்.

*********

இரண்டு முறை அடித்து ஓய்ந்த செல் போனை எடுத்துப் பார்த்தான் சிபிஐ மனிதன். இரவு மட்டுமே பேசக் கூடிய அந்த நபர் அலுவலக நேரத்தில் போன் செய்கிறார் என்றால் அது மிக முக்கியமான விஷயமாகத் தான் இருக்க வேண்டும். அமைதியாக எழுந்து பாத்ரூமிற்குச் சென்றான். உள்ளே தாளிட்ட பின் தன் செல் போனை எடுத்து சிம்மை மாற்றினான். சமையலறையில் துவரம்பருப்பு டப்பாவில் தனியாக வைத்திருந்த செல் போன் சிம்மிற்கு இப்போது அமானுஷ்யனால் வேலை கூடி விட்டது. சதா காலமும் தன்னுடனேயே வைத்திருக்க வேண்டிய கட்டாயம் சிபிஐ மனிதனுக்கு வந்து விட்டது.

“ஹலோ”

“சொல்லுங்கள் சார்”

“அவன் அந்தப் பெண்ணுடன் தன் கடைக்கு வந்ததாக டெல்லியில் உள்ள ஒரு ரெடிமேட் கடைக்காரன் போன் செய்திருக்கிறான். அவன் சில ஆடைகள் வாங்கியதாகவும் அதற்கு அந்தப் பெண் தான் பணம் தந்தாள் என்றும் அவன் சொல்கிறான்…”

சிபிஐ மனிதன் மூளை மின்னல் வேகத்தில் கணக்குப் போட்டது. இருக்கலாம்.

“அவனிடம் அந்தப் பெண் பற்றியும் எல்லா விவரங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அந்த பெண்ணின் அடையாளங்களை வைத்து வரையக் கூடிய ஆட்களையும் அனுப்புங்கள். அந்தக் கடை விலாசத்தைச் சொல்லுங்கள்” கேட்டு மனதில் அப்படியே குறித்துக் கொண்டான்.

மறுபக்கம் ஆவலோடு கேட்டது. “அப்படியே அந்தப் பெண்ணின் படத்தையும் டிவியிலும், பத்திரிகைகளிலும் போட்டு விளம்பரம் செய்தால் என்ன?”

“வேண்டாம். அது ஆபத்து. அவளை விளம்பரப்படுத்தி அவள் கிடைத்து அந்த அமானுஷ்யன் குண்டு வைத்த தீவிரவாதியாக இருக்க முடியாது என்று சொல்லி அதுவும் பத்திரிக்கைகளிலும், டிவியிலும் வந்தால் நம் திட்டத்திற்கே ஆபத்து”

“யார் அவளை நம்புவார்கள்? நாம் அவளையும் அவன் கூட்டாளி என்று சொல்லி விடலாம். அதற்கு போலீசை வைத்து ஆதாரங்களையும் தயார் செய்தால் போயிற்று”

“சார். நாம் விளம்பரப்படுத்திய அவனுடைய படத்தை, அந்த இமயமலைப் பாதையில் இருந்த டீக்கடை முன் நிறுத்தப்பட்டிருந்த டூரிஸ்ட் பஸ்ஸில் வந்து டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தவர்கள் கூடப் பார்த்திருப்பார்கள். அவனாக இருக்கலாம் என்று சந்தேகம் வந்தால் கூட, அந்த நேரத்தில் அவன் இங்கிருந்தான். அதனால் டெல்லியில் வெடிகுண்டு வைத்திருக்க முடியாது, அதனால் இது வேறு யாரோ என்று விட்டிருப்பார்கள். இவளையும் விளம்பரப்படுத்தி இவளும் அதைச் சொன்னால் ஆமாம் பார்த்தோம், நாங்கள் சாட்சி என்று டீக்கடைக்காரனும், அந்த ஆட்கள் சிலரும் சேர்ந்து சொன்னால் நாம் உருவாக்கி வைத்த இந்தக் கேஸ் பிசுபிசுத்துப் போகும். அதனால் நீங்கள் அவசரப்பட்டு எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதையும் செய்து விடாதீர்கள். அப்புறம் இன்னொரு விஷயம் அந்த ரெடிமேட் கடைக்காரன் அமானுஷ்யன் பற்றியும் அந்தப் பெண் பற்றியும் சொன்ன தகவல்கள் எல்லாம் உங்களுக்கு நம்பிக்கையான போலீஸ் அதிகாரிகள் தவிர, போலீசிலேயே மற்றவர்களுக்கு அதிகம் தெரியாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். அந்தப் பெண் படம் வரையப்பட்ட பிறகு எனக்கு ஒரு நகல் அனுப்பி வையுங்கள். நான் வேறு வழியில் அதை துப்பறிகிறேன். எப்போதாவது அவனையோ, அவளையோ பார்க்க நேர்ந்தால் உடனடியாக அந்த ரெடிமேட் கடைக்காரனைத் தெரிவிக்கச் சொல்லுங்கள். தாராளமாய் பரிசுப்பணம் கிடைக்கும் என்று சொல்லுங்கள்”

“சரி அப்படியே செய்கிறேன். போலீசில் எனக்கு வாக்கு கொடுத்திருக்கிறார்கள். அமானுஷ்யனை இன்னும் இரண்டு மூன்று நாளில் பிடித்துக் கொடுக்கிறோம் என்று”

“அப்படி செய்வது எல்லோருக்கும் நல்லது. ஒரு காலத்தில் அவனை விட்டு வைத்த அவன் எதிரிகள் யாரும் மிஞ்சவில்லை என்பதை நீங்கள் கொடுத்த ஃபைலில் படித்ததாய் ஞாபகம். சரித்திரம் திரும்பாமல் பார்த்துக் கொள்ளுங்கள்”

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top