அவன் காலை எழுந்தவுடன் மீசையை மழித்துக் கொண்டான். கண்ணாடியில் பார்க்கையில் இன்னும் வித்தியாசமாகத் தெரிந்தான். பக்கத்து வீட்டு ஜெய்பால்சிங் செய்தித்தாளை வாங்கும் சாக்கில் வந்தவர் அவனை வித்தியாசமாய் பார்த்தார். “அக்ஷய் உங்களுக்கு என்ன ஆயிற்று?”
அவன் கண்ணடித்துக் கொண்டே சொன்னான். “ஒரு பந்தயத்தில் தோற்று விட்டேன்…” அவர் வாய் விட்டு சிரித்தார். “என்ன பந்தயம்….?”
“அது வெளியே சொல்ல முடியாத பந்தயம்… ” என்று பிடி கொடுக்காமல் பேசிய அக்ஷய் செய்தித்தாளில் என்ன விசேஷம் என்று கேட்க அவர் பாராளுமன்ற அமளியைப் பற்றி உற்சாகமாகச் சொல்ல ஆரம்பித்தார். நல்ல வேளையாக அவர் மனைவி டீ சாப்பிடக் குரல் கொடுக்க அவர் போய் விட்டார்.
செய்தித்தாளில் அவனுடைய புகைப்படத்தோடு நேற்று டிவியில் சொன்ன செய்திகள் வந்திருந்தன. ஒரு வரி விடாமல் படித்தான். புதிதாக ஒன்றுமில்லை. அதை ஜெய்பால்சிங் படித்திருக்க வேண்டும். அவருக்கு சந்தேகம் எதுவும் வராதது அவனுக்குத் திருப்தியைத் தந்தது.
வருண் காலையில் எழுந்து அவனைப் பார்த்தவுடன் சொன்னான். “நீங்கள் மீசை எடுத்தது நன்றாகவே இல்லை. நான் அப்போதே சொன்னேனல்லவா?”
அக்ஷய் அதைக் கேட்டவுடன் முகம் வாடியது போல் நடிக்க வருண் அவசரமாகச் சொன்னான். “இல்லை..இல்லை. சும்மா தான் சொன்னேன். இப்போது வேறு மாதிரியாக நன்றாகத் தான் தெரிகிறீர்கள்”
சஹானா காலை எழுந்தவுடன் கூட மகன் தன்னருகே அதிகம் வராதத்தைக் கவனித்தாள். வருண் எழுந்ததிலிருந்து அவனுடனேயே இருந்தான். அவன் எங்கு சென்றாலும் அவன் பின்னாலேயே செல்வது, அவனுடனேயே சேர்ந்து சாப்பிடுவது, பள்ளிச்சீருடையுடன் கழுத்தில் டை கட்ட அவனிடமே கொண்டு வந்து தருவது என்று அவனை விடவேயில்லை. அவன் வருணுக்கு டை கட்டிக் கொண்டு இருந்த போது சஹானா அவர்களையே பார்த்துக் கொண்டு நிற்பதைக் கண்டான். அவள் முகத்தில் தெரிந்த திகைப்பும், அதனுடனே தெரிந்த இனம் புரியாத உணர்ச்சியும் அவனுக்கு அபாய மணி அடித்தது. அவளுடைய உரிமைகளை அவன் பறித்துக் கொள்வதாக நினைத்துக் கொள்கிறாளோ? ஆனால் தன்னோடு விடாப்பிடியாக ஒட்டிக் கொள்ளும் குழந்தையோடு ஒட்டாமல் இருந்து அந்தப் பிஞ்சு மனதைப் புண்படுத்தவும் அவனுக்கு மனமில்லை. அவன் தன்னைக் கவனித்ததை உணர்ந்த சஹானா அங்கிருந்து நகர்ந்தாள்.
காலை பள்ளிக்கூட பஸ்ஸில் ஏற்றி விடக்கூட வருண் அக்ஷயையே அழைத்துக் கொண்டு சென்றான். அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசித்த மற்ற வீட்டுக்காரர்கள் வருணுடன் வந்த புதிய மனிதன் மீது பெரிய ஆர்வமோ, சந்தேகமோ கொள்ளவில்லை. அவரவருக்கு அவரவர் வேலைகளே தலைக்கு மேல் உள்ள பெருநகரத்து வாழ்க்கை முறையில் அதற்கு மேல் யாருக்கும் நேரமில்லை, மனமுமில்லை. ஓரிருவர் மட்டும் வருணிடம் நட்புடன் யாரது என்று கேட்டார்கள். வருண் பெருமையுடன் சொன்னான். “என் அங்கிள். பெயர் அக்ஷய்”. அவன் வைத்த பெயரென்பதால் அதைச் சொல்வதில் அவனுக்கு ஒரு தனி சந்தோஷம்.
வருண் போன பின் டிபன் சாப்பிடும் போது சஹானா அக்ஷயிடம் முந்தைய தினம் அந்தச் சிறுவனின் வீட்டுக்குப் போனதைப் பற்றிக் கேட்ட போது ‘எவ்வளவு குறைவாக தெரிந்து கொள்கிறீர்களோ அவ்வளவு நல்லது’ என்று மட்டுமே சொன்னான். அவள் அதிகம் அறிவது வீணே பயத்தை உண்டாக்கும் என்று நினைத்தான். அனாவசியமாக தன் விஷயங்களில் இதற்கு மேலும் அதிகம் அவர்களை ஈடுபடுத்துவது சரியல்ல என்று அவனுக்குத் தோன்றியது. அவளும் அதற்கு மேல் அவனிடம் எதுவும் கேட்கவில்லை.
சஹானாவும் வருணும் போன பின் அவனும் மரகதமும் மட்டுமே வீட்டில் இருந்தார்கள். அவன் வந்ததில் இருந்து மரகதம் பேசிக் கேட்ட வார்த்தைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். பெரும்பாலும் அவள் சமையலறையில் வேலையில் இருந்தாள். வீட்டில் இருப்பதே தெரியாத வண்ணம் இருந்த அவளிடம் சஹானாவும், வருணும் கூட அதிகம் பேசாதது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
சமையலறைக்கு சென்று எட்டிப் பார்த்தான். அவள் காய்கறிகளை எடுத்து நறுக்க அப்போது தான் உட்கார்ந்திருந்தாள். அவள் விரலில் ஒரு பேண்ட் எய்டு ப்ளாஸ்டர் போடப்பட்டு இருந்தது.
“உங்கள் விரலில் என்ன காயம்?”
திடுக்கிட்டு அவனை நிமிர்ந்து பார்த்த அவள் மெல்லச் சொன்னாள். “நேற்று காய் நறுக்கும் போது காயமாகி விட்டது”
“கொடுங்கள் நான் காய் நறுக்குகிறேன்”
“ஐயையோ வேண்டாம்” என்று அவள் அவசரமாக மறுத்தாலும் அவன் பலவந்தமாக அவளிடமிருந்து காய்கறிகளையும் கத்தியையும் வாங்கினான். “பரவாயில்லை கொடுங்கள் நான் உங்கள் மகன் மாதிரி. உட்கார்ந்து தின்றால் எனக்கும் செரிக்காது.”
அவன் கச்சிதமாக காய்கறிகளை வேகமாக நறுக்கியதைப் பார்த்த போது அவன் தன் வீட்டில் தன் தாயிற்கோ, மனைவிக்கோ தினசரி காய்கறி நறுக்கித் தருபவனாக இருக்க வேண்டும் என்று மரகதம் நினைத்துக் கொண்டாள். ஆனால் ஒரு ஆணிடம் இந்த வேலையைத் தந்து விட்டது அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.
“வீட்டுப் பெண்கள் மற்றவர்கள் கண்கள் படும்படி வளைய வரக்கூடாது” என்பது சிறுவயதில் அவள் தந்தையின் கடுமையான விதியாக இருந்தது. அவள் தாயும், அவளும் வீட்டின் முன் பகுதிகளுக்கு வருவதே அவளுடைய தந்தையில்லாத சமயமாகப் பார்த்து தான். சத்தமாய்ப் பேசக்கூடாது என்பது அவருடைய அடுத்த கட்டளை. அதனால் சிறு வயதில் இருந்தே மெல்லப் பேசியே மரகதம் பழகி விட்டாள். திருமணம் ஆகி வாழ்க்கைப்பட்டதோ ஒரு கோபக்கார, குடிகாரக் கணவனிடத்தில். எதிர்த்துப் பேசினாலோ, பிடிக்காததைச் செய்தாலோ கையில் கிடைத்ததை எடுத்து எறியும் பழக்கம் அவனிடத்தில் இருந்தது. அதற்குப் பயந்து அப்போதும் வீட்டுக்குள்ளே மறைந்தும், மௌனமாகவும் இருந்தே பழகி விட்டது. மகன் அவளை ஒரு பொருட்டாக என்றும் மதித்ததில்லை. படிப்பறிவில்லாத, பட்டிக்காடான தாயிடம் அவனுக்கும் பேச மனம் இருந்ததில்லை.
அப்படியே வாழ்ந்து வந்து விட்ட மரகதத்திடம் முதல் முதலில் அன்பான கரிசனம் காட்டிய ஆண் அக்ஷய் தான்.
“உங்களுக்கு வேறெதாவது வேலை செய்து தர வேண்டுமா?”
“ஐயோ வேண்டாம். இதுவே அதிகம்”
அவன் சென்று சிறிது நேரம் டிவி செய்திகள் பார்த்தான். பிறகு அறைக்குச் சென்று தியானத்தில் அமர்ந்தவன் காலத்தை மறந்தான். சிறிது நேரம் கழித்து அவன் என்ன செய்கிறான் என்று மெள்ள எட்டிப்பார்த்தாள் மரகதம். ஆழ்ந்த தியானத்தில் இருந்த அவன் முகத்தில் ஏதோ ஒரு தேஜஸ் தெரிந்தது.
மரகதம் சத்தமில்லாமல் நகர்ந்தாள்.
மதியம் சாப்பிட அழைக்க வரும் போது அவன் விழித்திருந்தான். “சாப்பிட வருகிறீர்களா?”
எழுந்து அவளைப் பின் தொடர்ந்து வந்தவன் சாப்பிடும் போது கேட்டான். “உங்களுக்கு நான் இங்கு வந்தது பிடிக்கவில்லையா?”
“ஐயோ அப்படியெல்லாம் இல்லை”
“பின் ஏன் பேசவே மாட்டேன்கிறீர்கள்?”
“அதிகமாய் பேசி பழக்கமில்லை”
“ஏன்?” அவன் விடுவதாய் இல்லை.
அவனிடம் தன் தந்தையைப் பற்றியும், கணவனைப் பற்றியும் மனம் விட்டுச் சொன்னாள். மகனைப் பற்றி மட்டும் சொல்லவில்லை. அவன் அவள் சொன்னதையெல்லாம் பொறுமையாகக் கேட்டான். ‘இன்னும் இந்த நாட்டில் இப்படி ஒடுக்கப்பட்ட பெண்கள் இருக்கிறார்கள்’ என்று நினைக்கையிலேயே மனம் கனத்தது. ‘என்ன வாழ்க்கை இது’.
“உங்கள் மகனிடம் கூட அதிகம் பேச மாட்டீர்களா?” கடைசியில் கேட்டான்.
“அவனும் அதிகம் பேசாத ரகம். படிப்பு வேலை என்று இருப்பான்”. அதற்கு மேல் பேசினால் மகனைப் பற்றியும் எல்லாம் சொல்லி விடுவோம் என்று பயந்த மரகதம் “வருண் பள்ளியில் இருந்து வரும் முன் மத்தியானம் ஒரு குட்டித் தூக்கம் போடுகிற பழக்கம்…” என்று எழுந்து விட்டாள். ஆனால் எழுந்த போது அவள் மனம் லேசாக இருந்தது. மனம் விட்டுப் பேச முதல் முறையாகக் கிடைத்த மனிதனான அவன் மீது ஒரு தனிப்பாசம் பிறந்திருந்தது.
சஹானா வரும் போது இரவு எட்டு மணியாகி இருந்தது. வரும் போதும் வருண் அக்ஷயுடம் அமர்ந்து வீட்டுப்பாடம் எழுதிக் கொண்டிருந்தான். மாமியார் முகத்தில் தெரிந்த மாற்றம் அவளை ஆச்சரியப்பட வைத்தது. எப்போதுமே இறுக்கமாகவே இருக்கும் மாமியார் முகத்தில் இறுக்கம் காணாமல் போகக் காரணம் புது மனிதனாகவே இருக்க வேண்டும் என்பதில் அவளுக்கு சந்தேகம் இல்லை. ‘எவ்வளவு சீக்கிரம் எல்லோரையும் தன் பக்கம் இழுத்துக் கொள்கிறான்’ என்று அவள் வியந்தாள்.
அவன் ஒரு வித்தியாசமான மனிதன் என்பதில் சந்தேகமேயில்லை அவனைப் பார்க்க வேண்டும் என்று மது சொன்ன போது “தற்போது வேண்டாம். பின்னொரு நாளில் பார்க்கலாம்” என்று சொல்லி சமாளித்திருந்த சஹானா அவன் இவனைப் பார்த்த பின் என்ன சொல்வான் என்று யோசித்தாள்….
அந்த ரெடிமேட் கடைக்காரன் பத்திரிக்கையில் பிரசுரமாகி இருந்த அந்தப் புகைப்படத்தைக் கூர்ந்து பார்த்தான். சந்தேகமேயில்லை. இது நேற்று அவன் கடைக்கு ஆடைகள் வாங்க ஒரு பெண்ணுடன் வந்திருந்த அதே ஆள் தான். அவன் தீவிரவாதி, தகவல்கள் சொல்பவருக்கு பணம் என்பதை எல்லாம் படித்த அவன் ஆர்வமாகப் போலீசுக்கு போன் செய்ய ஆரம்பித்தான்.
(தொடரும்)