சஹானா ஒரு ரெடிமேட் ஷோரூம் முன்பு காரை நிறுத்தினாள். அவனை ஆடைகள் வாங்கிக் கொள்ளச் சொன்னாள். அவன் ஆடைகள் தேர்ந்தெடுத்த வேகத்தைக் கண்டு அவள் அசந்து போனாள். பெண்கள் அளவுக்கு ஆண்கள், உடைகளைத் தேர்ந்தெடுக்க நேரம் எடுத்துக் கொள்வதில்லை என்ற போதும் இந்த அளவு மிகக் கச்சிதமான ஆடைகளை மிகக்குறுகிய நேரத்தில் தேர்ந்தெடுக்கிற ஆண்களை அவள் இது வரை பார்த்ததில்லை. பின் அவளே பில் பணத்தைக் கட்டினாள். அவனுக்கு தர்மசங்கடமாக இருந்தது. ஒருவரிடம் எவ்வளவு உதவிதான் பெறுவது! மூத்த பிக்கு தந்த பணத்தை எடுத்து அவளிடம் நீட்டிய போது மறுத்தாள். “எல்லாக் கணக்கையும் எழுதி வைத்துக் கொள்கிறேன். ஒரு நாள் உங்களிடம் இருந்து வாங்கிக் கொள்கிறேன் போதுமா?”
அவன் நன்றியுடன் தலையாட்டினான்.
அவள் கேட்டாள். “வேறெதாவது வாங்க வேண்டுமா?”
அவன் சொன்னான். “மூக்குக் கண்ணாடி வாங்க வேண்டும்”
அவள் அடுத்ததாக கண்ணாடிக் கடை முன் காரை நிறுத்தினாள். அவன் ஒரு தங்க ப்ரேம் போட்ட கண்ணாடி வாங்கிக் கொண்டான். அதற்கும் அவளே பணம் தந்தாள்.
காரில் திரும்ப வந்து உட்கார்ந்தவுடன் அவன் கண்ணாடியை அணிந்து கொண்டு தன் தலைமுடியை வித்தியாசமாக வகிடெடுத்து வாரிக் கொண்டான். அடுத்த நிமிடம் அவன் வித்தியாசமாகக் காட்சியளித்தான்.
அவள் அவனை ஆச்சரியத்துடன் பார்த்தாள். அவன் சொன்னான். “இன்னும் மீசையையும் எடுத்து விட்டால் என்னை அடையாளம் கண்டு பிடிப்பது கஷ்டமே. இல்லையா?”
அவள் ஆமாமென்று தலையாட்டினாள்.
“பெரியம்மா நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று சஹானாவின் மாமியாரிடம் அவன் கேட்டான்.
அவள் அவனை திகைப்புடன் பார்த்தாள். அவன் சொன்னான். “நான் உங்கள் தங்கை மகன் என்றால் எனக்கு நீங்கள் பெரியம்மாதானே?”
சற்று முன் அவனை மாமியாரின் தங்கை மகனாக மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தப் போவதாக சஹானா சொன்னது நினைவுக்கு வர மரகதம் முகத்தில் ஒரு லேசான புன்சிரிப்பு வந்து மறைந்தது.
வருண் சொன்னான், “அங்கிள் நீங்கள் என்னிடம் கேட்கவேயில்லையே.”
“சாரி, வருண். முக்கியமான ஆளை முதலில் கேட்க மறந்து விட்டேன். நீ சொல்” அவன் தன் விரலால் மீசையை மறைத்துக் கொண்டு கேட்டான்.
“மீசை எடுத்தால் உங்களுக்கு நல்லாவே இருக்காது” வருண் பெரிய மனித தோரணையில் தன் கருத்தைச் சொன்னான்.
சஹானா கேட்டாள். “அவர்கள் இங்கும் உங்களைத் தேடுவார்கள் என்று நினைக்கிறீர்களா?”
“இன்றைக்கில்லா விட்டாலும் நாளைக்காவது என்னைத் தேடாமல் இருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. அவர்களிடம் என் புகைப்படமும் இருக்கிறது….. அந்த புகைப்படத்தில் உள்ள நபரை அவர்கள் தேடாமல் இருக்க மாட்டார்கள்….”
ஆச்சார்யாவின் மனைவி லலிதா கணவரை இழந்த துக்கத்திலிருந்து இன்னும் மீளாதவளாக இருந்தாள். ஆனந்த் சிபிஐயிலிருந்து வந்திருப்பதாகவும், சில கேள்விகள் கேட்க வேண்டி இருப்பதாகவும் சொன்ன போது அவள் முகத்தில் களைப்பு தெரிந்தது. வீட்டில் தனியாக இருந்த அவள் தயக்கத்தோடுதான் ஆனந்தை உள்ளே விட்டாள்.
“நான் எல்லாவற்றையும் போலீசில் சொல்லியாகி விட்டது. இனி புதிதாக சொல்ல ஒன்றும் இல்லை” என்றவள் ஆனந்திடம் கேட்டாள், “கொலையாளியைத்தான் போலீஸ் பிடித்தாகி விட்டதே. இனியும் ஏன் விசாரிக்கிறீர்கள்? நீங்களும் அவன்தான் கொலையாளி என்று நம்பவில்லையா?”
ஆனந்த் அந்த நீங்களும் என்ற சொல்லைக் கேட்டு ஆச்சரியத்துடன், “வேறு யார் நம்பவில்லை?” என்றான்
“என் மகள். அவள் டிவியில் அந்தக் கொலையாளியைப் பார்த்தவுடனேயே சொன்னாள். இவனைப் பார்த்தால் பழிவாங்கத் துடிக்கிற ஆள் மாதிரி தெரியவில்லை, பரிதாபமாகத் தெரிகிறான் என்றாள். அவள் ஆபீஸ் போயிருக்கிறாள்”
ஆனந்த் சொன்னான், “நாங்கள் நம்பவில்லை என்று சொல்ல முடியாது. ஆனால் எதையும் உறுதிப்படுத்திக் கொள்வது நல்லதல்லவா? அதனால்தான் எங்கள் பக்க விசாரணையைத் தொடர்கிறோம்”
அவள் தலையாட்டினாள், “எதாவது சாப்பிடுகிறீர்களா?”
“வேண்டாம் நன்றி. நான் உங்கள் நேரத்தை அதிகமாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. அதனால் நேரடியாகவே விஷயத்திற்கு வருகிறேன். ஆச்சார்யா கடைசியாக ஒரு புதிய கேஸை ரகசியமாக விசாரித்துக் கொண்டு இருந்ததாகத் தெரிகிறது. அது பற்றிய விவரம் ஏதாவது தெரியுமா?”
“அவர் ஆபீஸ் விஷயங்களைப் பற்றி எதுவும் என்னிடம் சொன்னதில்லை. எனக்கும் அது பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் இருந்ததில்லை.”
“அவர் பல கேஸ்களுக்கு யாரோ ஒருவரை அல்லது ஒரு சிலரைப் பயன்படுத்தி இருக்கிறார். அவர்களில் யாரையாவது உங்களுக்குத் தெரியுமா?”
“தெரியாது…”
“அம்மா, நன்றாக யோசித்து சொல்லுங்கள். அந்த நபரை அவர் எங்கள் ஆபீசில் சந்தித்துப் பேசி இருக்க வாய்ப்பில்லை. வீட்டிலோ, வெளியிலோதான் அது அதிகம் நடந்திருக்க வேண்டும். நேரில் உங்கள் வீட்டுக்கு வந்து அவருடன் பேசும் நபர், அல்லது ஃபோன் செய்து அவருடன் பேசும் நபராக இருக்கலாம். அதில் யாராவது அந்த நபராக இருக்கக்கூடும் என்று யாரையாவது நினைக்கிறீர்களா?”
லலிதா சிறிது யோசித்து விட்டு சொன்னாள், “எங்கள் வீட்டுக்கு ஆபீஸ் சம்பந்தப்பட்ட நபர்களோ, அது சம்பந்தமாகப் பேச வருபவர்களோ குறைவு. அவர் வீட்டையும், வேலையையும் பிரித்தே வைத்திருந்தார். கூட வேலை பார்ப்பவர்களில் கூட ராஜாராம் ரெட்டியையும், மகேந்திரனையும் தவிர யாரும் அதிகம் வீட்டுக்கு வந்ததில்லை.”
மகேந்திரன் பெயரைக் கேட்ட ஆனந்த் ஆச்சரியப்பட்டான். ராஜாராம் ரெட்டி சம வயது, சமமான பதவியில் இருப்பவர். ஆனால் மகேந்திரன் இளைஞன். மேலும் அவன் கீழ் உத்தியோகஸ்தன். அப்படி இருக்கையில் அவன் ஏன் அவர் வீட்டுக்குப் போனான்?
“மகேந்திரன் என்ன விஷயமாக அவரைப் பார்க்க வருவான்?”
“அவன் எங்களுக்குப் பக்கத்து வீதியில்தான் இருந்தான். சில சமயம் அவருக்கு கம்ப்யூட்டரில் ஏதாவது சந்தேகமோ, இல்லை கம்ப்யூட்டரில் ஏதாவது கோளாறோ வந்தால் அவனைக் கூப்பிடுவார்….”
அப்படியானால் மகேந்திரனுக்கு ஆச்சார்யாவின் வீட்டு கம்ப்யூட்டர் வரை கூட வந்து பார்க்கும் சுதந்திரம் இருந்திருக்கிறது. ஆனால் ஆனந்திடம் பேசும் போது மகேந்திரன் அது பற்றி சொல்லவில்லை…..
“அம்மா, நேரில் வந்து பேசா விட்டால் கூட போனில் அந்த நபர் அவரிடம் அடிக்கடி பேசுபவராக இருக்கலாம். தெரிந்த நண்பர்களல்லாத யாராவது அவரிடம் அடிக்கடி ஃபோனில் பேசிய ஆள் இருக்கிறார்களா?”
லலிதா யோசித்து விட்டுச் சொன்னாள். “ஒருவர் எப்போதுமே இரவு பத்து மணிக்கு மேல்தான் ஃபோன் செய்வார். அவர் அந்த ஆளின் ஃபோன் வந்தால் உடனேயே மொட்டை மாடிக்குப் போய் விடுவார். இரண்டு பேரும் நிறைய நேரம் பேசுவார்கள். ஆனால் அது நீங்கள் நினைக்கிற ஆளா என்று எனக்குத் தெரியாது…”
ஆனந்த் உற்சாகமாகச் சொன்னான், “பெரும்பாலும் அது அதே நபராகத்தான் இருக்க வேண்டும். அந்த ஃபோனில் பேசிய நபர் பற்றி ஆச்சார்யா உங்களிடம் ஏதாவது எப்போதாவது சொல்லி இருக்கிறாரா? தயவு செய்து நன்றாக யோசித்து சொல்லுங்கள்”
லலிதா சிறிது யோசித்து விட்டுச் சொன்னாள், “எதுவும் அவர் சொன்னதில்லை. ஆனால் பேசி முடித்து விட்டு வரும் போது சில சமயங்களில் பரபரப்பாக இருப்பார்….”
“அது போன்ற சமயங்களில் உங்களிடம் ஏதாவது சொல்லி இருக்கிறாரா?”
“இல்லை. சில சமயங்களில் பேசி முடித்து நேராகப் போய் கம்ப்யூட்டரில் ஏதாவது வேலை செய்வார்.”
“அந்த ஆள் பெயர் ஏதாவது தெரியுமா?”
“தெரியாது”
“ஆச்சார்யாவுக்கு அந்த ஆள் ஃபோன் செய்யும் எல்லா நேரங்களிலும் ஆச்சார்யாவே ஃபோனை எடுத்திருக்க முடியாதல்லவா? அவர் அந்த இடத்தில் இல்லாமல் இருந்து நீங்கள் கூட ஃபோன் எடுத்துப் பேசியிருக்கலாம் அல்லவா?”
“பெரும்பாலும் அந்த ஆள் இரவு பத்து மணியிலிருந்து பத்தரைக்குள் ஃபோன் செய்வது வழக்கம். அந்த நேரத்தில் இவர் காத்திருப்பார்…. நீங்கள் சொன்ன மாதிரி ஓரிரு முறை அவர் பாத்ரூமிலோ, வெளியிலோ இருந்த போது நானும் பேசியிருக்கிறேன். அந்த ஆள் ஒரு இளைஞன்தான். அவன் அவரைக் கேட்பான். நான் கூப்பிட்டு அவரிடம் ஃபோனைக் கொடுத்து விடுவேன்.”
“அவன் அந்த சமயத்தில் யார் பேசுவதாகச் சொல்வான்?”
“அவருடைய நண்பன் பேசுவதாகச் சொல்வான். பெயர் சொன்னதில்லை. நான் கூட அவரிடம் கிண்டல் செய்வதுண்டு. உங்கள் நண்பனுக்குப் பெயர் எதுவும் கிடையாதா என்று கேட்பேன். அவர் சிரித்துக் கொண்டே ஒரு தடவை சொன்னார். ‘அவனுக்கு நிறைய பெயர்கள் இருக்கின்றன. அதில் எதை சொல்வது என்று தீர்மானிக்க முடியவில்லை போலிருக்கிறது’. ஆனால் அவரும் பெயரைச் சொன்னதில்லை.”
“அந்த ஆள் ஃபோன் செய்ய ஆரம்பித்து எத்தனை காலம் இருக்கும்?”
“இரண்டு மூன்று வருடங்கள் இருக்கலாம்”
“நீங்கள் அது யார் என்று அவரிடம் எப்போதுமே கேட்டதில்லையா?”
“கேட்டிருக்கிறேன். அவரும் அவனைப் போலவே “என் நண்பன்” என்று சிரித்துக் கொண்டே சொல்வார். ஆனால் அவர் அவனிடம் பேசிய போதெல்லாம் முகத்தில் ஒரு பிரகாசம் இருக்கும். என் மகளிடம் பேசும் போது எப்படி இருப்பாரோ அப்படித்தான் அவனிடம் பேசும் போதும் இருப்பார். சில சமயம் நான் அவனைத் தன் மகனாகவே நினைக்கிறாரோ என்று கூட எண்ணுவேன். அதனால் அந்த நண்பன் நீங்கள் சொன்னது போல் கேஸ் சம்பந்தமாகத் தகவல் தரும் ஆளாக இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை….”
ஆனால் ஆனந்திற்கு சந்தேகமேயில்லை. அந்த இளைஞன் அவர்களுக்கு வேண்டிய அதே நபர்தான். “அந்த ஆள் பற்றி வேறெதாவது எப்போதாவது சொல்லி இருக்கிறாரா?”
“அவன் ஒரு அசாதாரணமான மனிதன் என்று ஒரு தடவை என்னிடம் சொல்லி இருக்கிறார். அவனிடம் பல சக்திகள் இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்”
“வேறு ஏதாவது தகவல் எப்போதாவது சொன்னதாக நினைவிருக்கிறதா?”
அவள் யோசித்து விட்டுச் சொன்னாள், “இது எந்த அளவுக்கு உங்களுக்கு உபயோகப்படும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒரு தடவை அவர் என்னிடம் அந்த சக்திகள் எல்லாம் அவனிடம் இருக்கக் காரணம் அவன் முதுகின் மேற்புறம் இருக்கும் நாக மச்சம்தான் என்று சொன்னார்”
ஆனந்த் மின்சாரம் தாக்கியது போல உணர்ந்தான்.
(தொடரும்)