ஜெயின், ஆச்சார்யா கொலை வழக்கில் கைதானவனைப் பற்றிய அனைத்துத் தகவல்களும் தன் மேசையில் 24 மணி நேரத்திற்குள் வர வேண்டும் என்று தன் டிபார்ட்மென்டில் திறமை வாய்ந்த இருவரிடம் பொறுப்பை ஒப்படைத்திருந்தார். 23 மணி நேரம் 25 நிமிடத்தில் அவர் மேசையில் அந்தத் தகவல்கள் இருந்தன. அந்த இரண்டு பேரும் ஓரிரு மணி நேரம் அன்று தூங்கியிருந்தால் அது அதிகம். ஆனால் மிக முக்கியம் என்று தலைமை கருதும் விஷயங்களை அந்த கெடுவுக்குள் முடித்துத் தரும் திறமையாளர்கள் தகுந்த விதத்தில் கவனிக்கப்படுவதால் அந்த சந்தர்ப்பத்தை விவரமறிந்தவர்கள் நழுவ விடுவதில்லை.
தன் முன் வைக்கப்பட்ட விவரங்கள் முழுவதையும் பொறுமையாகப் படித்த ஜெயின் ஆனந்திடம் அவற்றைக் காண்பித்தார். பெயர்- கிஸான்சந்த், வயது-39, போதை மருந்தில் பிடிபட்ட கும்பலின் தலைவன் ப்ரகாஷ்சந்தின் இளைய சகோதரன் என்று ஆரம்பித்து சொல்லப்பட்ட விவரங்கள் பலவும் அவன் பெற்றோர், உடன்பிறந்தோர், பழக்க வழக்கங்கள், படித்த பள்ளிக்கூடம், மனைவி, குழந்தைகள், அவர்களைப் பற்றிய விவரங்கள் என்று பக்கம் பக்கமாக இருந்தன. ஆனால் ஆனந்தைக் கவர்ந்த விவரங்கள் இரண்டு மூன்றை அவன் சிவப்பு மசியால் கோடிட்டான். அவன் கோடிட்ட இடங்கள்:
போதை மருந்து கடத்தலைக் காட்டிலும் அதிகமாக அவன் போதை மருந்தை உட்கொள்வதில் ஈடுபட்டான். போதை மருந்தை உட்கொண்டு பொது இடங்களில் தகராறு செய்வதில் பல முறை போலீசில் பிடிபட்டு அண்ணன் ப்ரகாஷ்சந்தால் வெளியே கொண்டுவரப் பட்டிருக்கிறான்.
குடும்பத்தாரால் பலவீனமானவனாகக் கருதப்பட்டான்.அவனுக்குத் தற்போது கேன்சர் கடைசிக் கட்டத்தில் இருக்கிறது. அதிகபட்சம் ஒரு வருடத்திற்கு மேல் தாங்குவது கஷ்டம் என்று மருத்துவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
அவன் கோடிட்ட இடங்களைப் பார்த்து புன்னகைத்தார் ஜெயின். ஏகப்பட்ட தேவையற்ற தகவல் சமுத்திரத்தில் வேண்டிய தகவல் முத்தை மட்டும் எடுப்பது மிகப்பெரிய கலை. அவன் அந்த விதத்தில் சாமர்த்தியசாலியாக இருந்தான். அவனுடைய பல மேலதிகாரிகளும் அவனை மிகவும் மெச்சியிருப்பது எதனால் என்று புரிந்தது.
ஆனந்த் சொன்னான். “எப்படியும் ஒரு வருடத்தில் சாகப்போகிறவனைப் பேரம் பேசி பிடித்திருக்கிறார்கள். அந்தக் கும்பல் சம்பந்தப்பட்ட ஒருவன் என்பதால், அவனே ஒப்புக் கொண்டு விட்டான் என்பதால் இதை யாரும் அலசிப் பார்க்க மாட்டார்கள் என்று நினைத்திருக்கிறார்கள். இந்த வழக்கு விசாரணை முடிவதற்குள் அவனே செத்து விடுவான். ஆளும் முடிவான், வழக்கும் முடியும் என்பது அவர்கள் கணக்கு…..”
“அதனால்…?”
“அதனால் அதிகார வர்க்கத்தினர் ஆசீர்வாதத்துடன்தான் ஆச்சார்யா கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதில் நமக்கு சந்தேகமில்லை. இப்போது நம் கேள்வி யார் அந்த அதிகார வர்க்கம்?”
ஜெயின் பதில் ஒன்றும் சொல்லாமல் அமர்ந்திருந்தார். அவர் மனம் கனக்க ஆரம்பித்திருந்தது. அவருடைய சக அதிகாரியை, நாட்டுப் பற்று, நேர்மை, நாணயம், மிக்க ஒரு உயர் அதிகாரியைக் கொல்ல ஆனந்த் சொன்னது போல அதிகார வர்க்கமே கூட்டு நின்றால் இந்தப் பாதகத்தை என்னவென்று சொல்வது?…
இப்படியே போய்க் கொண்டிருந்தால் நேர்மையான அதிகாரிகள் எத்தனை பேர் மிஞ்சுவார்கள்?
“சார். என்ன யோசிக்கிறீர்கள்?”
“ஆச்சார்யா ரகசியமாய் வேலைகள் செய்து கடைசியில் திடுதிப்பென்று தன் கண்டுபிடிப்புகளைச் சொல்வது எனக்கு என்றுமே பிடித்ததில்லை, ஆனந்த். ஆனால் அவர் போல் நல்ல திறமையான மனிதர்களைப் பார்ப்பது கஷ்டம். அவரைக் கொன்றவர்களைத் தப்பிக்க விடுவது நம் துறைக்கே அவமானம். அவருக்கு ரகசியத் தகவல் தரும் மனிதன் அல்லது மனிதர்கள் நமக்குக் கிடைத்தாலும் போதும். நாம் உண்மையை நெருங்கி விடுவோம். அதைப் பற்றி எதாவது நீங்கள் யோசித்தீர்களா ஆனந்த்?”
“இது போன்ற விஷயங்களில் பெரும்பாலும் தகவல் தருபவன் தனி மனிதனாகவே இருக்கிறான். ஆச்சார்யாவைக் கொன்றவர்கள் அவர் கையில் இருந்த தகவலுக்காகத்தான் அவரைக் கொன்றார்கள் என்றால் அவனை மட்டும் விட்டு வைப்பார்கள் என்று நான் நம்பவில்லை. அவனையும் அவர்கள் கொன்று இருப்பார்கள் என்றுதான் தோன்றுகிறது சார்…”
“ஒரு வேளை அவன் அவர்களிடம் சிக்காமல் தப்பித்திருந்தால்….?” ஜெயின் கேட்டார்.
“அப்படியிருக்க வாய்ப்பு இருப்பதாகத் தோன்றவில்லை. ஆனாலும் அவனைப் பற்றி நாம் தெரிந்து கொள்வது அவசியம்தான். ஆச்சார்யாவின் மனைவிக்கு ஏதாவது தெரிந்திருக்கலாம். அவர்களைப் பார்த்துப் பேசினால் தெரிய வரலாம்…..”
சஹானாவின் செல் போன் அடிக்க அவள் எடுத்து பேசினாள். “ஹலோ”
“சஹானா. நான் மது…”. மதுசூதனன் அவளுடைய நண்பன். அவளுடன் பணி புரிபவன். இமயமலைச்சாரலில் வசிக்கும் சில மலைவாழ் மக்களைப் பற்றிய நிகழ்ச்சி ஒன்றின் படப்படிப்புக்காக சஹானாவுடன் வந்த குழுவில் அவனும் ஒருவன். சஹானா அந்த படப்படிப்பு முடிந்து அருகில் இருந்த ஒரு கோயிலுக்கு மாமியாரையும் மகனையும் அழைத்துச் சென்று காண்பித்து விட்டுத் திரும்பி விட்டாள். மதுவும் மற்றவர்களும் வேறொரு இடத்தையும் பார்த்து வரப் போனதால் சற்று தாமதமாக திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள்.
“சொல்லு, மது”
“சஹானா எதாவது பிரச்சனையா?”
சஹானா திகைத்தாள். “இல்லையே. ஏன்?”
“இங்கே மலைப்பாதையில் உன் காரை விவரித்து உன்னைப் பற்றி சிலர் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் கேட்டேன்.”
சஹானா தன் பின்னால் அமர்ந்திருந்த அவனைப் பார்த்தபடியே கேட்டாள். “என்ன என்று விசாரிக்கிறார்கள், மது…”
“உன் காரை யாராவது பார்த்தார்களா என்று விசாரிக்கிறார்கள். உன்னைத் தெரியுமா என்று கேட்கிறார்கள். உன் காரில் வேறு யாராவது ஒரு இளைஞன் இருந்ததைப் பார்த்தவர்கள் உண்டா என்று கேட்கிறார்கள்…”
“நீ எதுவும் சொல்லி விடவில்லையே….”
“இல்லை. ஒரு தீவிரவாதி உன் காரில் ஏறியிருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக சொல்கிறார்கள். நான் என் விசிட்டிங் கார்டைக் காண்பித்து விட்டு முழுத் தகவலும் சொல்லச் சொன்னேன். தொலைக்காட்சி என்றவுடன் அவர்கள் ஜகா வாங்கி விட்டார்கள்…. என்ன விஷயம் சஹானா?”
“ஒன்றுமில்லை. நான் நேரில் பார்க்கிற போது சொல்கிறேனே”
“பிரச்சினை எதுவும் இல்லையே?”
“இல்லை. பயப்படாதே” என்று சொல்லி இணைப்பைத் துண்டித்தாள் சஹானா.
பின்னால் இருந்த அவன் கேட்டான். “அவர்கள் என்னை உங்கள் காரில் தேட ஆரம்பித்து விட்டார்கள். அப்படித்தானே?”
ஆமாம் என்று தலையசைத்த அவள் தன் நண்பன் சொன்னதை அப்படியே சொன்னாள்.
அவன் அவளிடம் சொன்னான். “தயவு செய்து என்னை இங்கேயே இறக்கி விடுங்கள். நான் உங்களுக்கு இதற்கு மேலும் ஆபத்து விளைவிக்க விரும்பவில்லை.”
அவள் சொன்னாள், “அவர்கள் உங்களை இன்னும் மலைப்பாதையில்தான் தேடுகிறார்கள். மலைப்பாதையிலிருந்து இறங்கி விட்டால் எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அவர்கள் உங்களைத் தேடுவது ரகசியமாகவே இருக்கட்டும் என்று நினைக்கிற மாதிரி தெரிகிறது. காரணம் தெரியவில்லை. அவர்களுக்கு என் வண்டி எண்ணோ, என்னைப் பற்றிய வேறு தகவல்களோ தெரியவில்லை என்பது அவர்கள் கேள்வியில் இருந்தே தெரிகிறது….”
அவன் அவளுக்கு எப்படி உணர்த்துவது என்று புரியாமல் விழித்தான்.
“கவலைப்படாதீர்கள். எங்கள் வீட்டில் சில நாட்கள் இருங்கள். அதற்குள் உங்களுக்கு நினைவு திரும்பலாம். அப்படியில்லா விட்டாலும் ஒரு பாதுகாப்பான இடத்தைஏற்பாடு செய்து உங்களை அங்கே அனுப்பி விடுகிறேன். இது உங்களுக்காக நான் செய்வதாக நினைக்காதீர்கள். எனக்காகவேதான் செய்கிறேன். உங்களை இங்கேயே இறக்கி விட்டுப் போனால் என் மனசாட்சி காலம் பூராவும் என்னை சித்திரவதை செய்யும்.”
“நீங்கள் அக்கம் பக்கத்தாரிடம் என்னை என்ன என்று சொல்வீர்கள்?”
“எங்கள் மாமியாரின் தங்கை மகன் என்று சொல்வேன்”
அவளுடைய மாமியார் அப்போதும் வாய் திறக்காததை அவன் கவனித்தான்.
“நீங்கள் நன்றாக யோசித்துதான் சொல்கிறீர்களா?”
“ஆமாம்”
அவன் பெருமூச்சு விட்டான்.
எந்த பீடிகையும் இல்லாமல் அவர் கேட்டார். “ஏதாவது தகவல்…?”
போனில் சிபிஐ மனிதன் அமைதியாகச் சொன்னான், “இல்லை. நாம் தேட ஆரம்பிப்பதற்குள் அவள் நிறைய தூரம் போயிருக்க வேண்டும்”.
சிறிது நேரம் அமைதியாய் இருந்து விட்டு மறுபக்கம் சொன்னது. “வேறு வழியில்லை. நாம் ரகசியமாய் அவனைத் தேட முடியாவிட்டால் பத்திரிக்கைகளிலும் டிவியிலும் அவன் படத்தைப் போட்டு விளம்பரப் படுத்த வேண்டியதுதான். என்ன சொல்கிறீர்கள்?”
“வேறு வழி இருக்கிற மாதிரி எனக்கும் தெரியவில்லை. ஆனால் இதில் கவனமாக நான் அடியெடுத்து வைக்க வேண்டும். அவனுக்கும் ஆச்சார்யாவிற்கும் இடையே இருக்கிற தொடர்பு மட்டும் வெளியே வந்து விட்டால் நமக்குத்தான் ஆபத்து”
“அப்படியானால் என்ன செய்யச் சொல்கிறீர்கள்?”
“அவனைப் பற்றி ஒரு கதை உருவாக்கிப் பின்னால் விளம்பரப்படுத்தினால்தான் யாருக்கும் சந்தேகம் வராது. அதை நான் யோசித்து என்ன செய்ய வேண்டும் என்று இரண்டு நாளில் சொல்கிறேன். அது வரையில் பொறுங்கள்….”
“ஏன் இப்போதே யோசித்து சொல்லக் கூடாது?” அவர் பொறுமையிழந்து கேட்டார்.
“அவனை விளம்பரப்படுத்தும் போது பலரும் அவனைப் பற்றிக் கேட்பார்கள். ஏன் என்ன எப்படி என்று வரும் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் போது நாம் கவனமாக பதில்களைத் தயாரித்திருக்க வேண்டும். பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்கள் எல்லாம் சேர்ந்து கேட்பார்கள். நாம் எந்த விதத்திலும் பதில்களில் ஓட்டை இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம்….”
“அதற்குள் அவன் ஏதாவது செய்து விட்டால்…?”
“அவன் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால் முன்பே செய்திருக்கலாம். இனி செய்வது சந்தேகம்தான். ஆனால் ஒரு விஷயம்”
“என்ன?”
“எதையும் அவன் செய்யாமல் இருப்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது….. ஏன் என்பது என் அறிவிற்கு எட்டவில்லை. சரி அவனை விடுங்கள்….. ஒரு முக்கியமான தகவல்- ஆனந்த் இன்று பெங்களுர் போகிறான். ஆச்சார்யாவின் மனைவியைப் பார்த்துப் பேச”
(தொடரும்)