ஜம்முவில் இருந்து டெல்லிக்கு கேசவதாஸுடன் வந்து சேர்ந்த அக்ஷயிற்காக ஆனந்த், மது, மகேந்திரன் மூவரும் காத்திருந்தனர். தம்பியை ஓடிச் சென்று கட்டியணைத்த போது ஆனந்த் கண்கலங்கி விட்டான். அக்ஷய் அண்ணனைத் தட்டிக் கொடுத்துக் கொண்டே மதுவிற்கும், மகேந்திரனிற்கும் நன்றி சொன்னான்.
மகேந்திரன் சொன்னான். “பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதே. நீ செய்ததற்கு முன் நாங்கள் செய்ததெல்லாம் ஒரு விஷயமே அல்ல”
உடனடியாக அக்ஷயை பிரதமர் சந்திக்க விரும்பியதால் அக்ஷய் விமான நிலையத்திலிருந்தே அனைவருடனும் பிரதமர் அலுவலகத்திற்குப் போனான். பிரதமருடன் சதுர்வேதியும் இருந்தார்.
வரவேற்ற பிரதமர் அக்ஷயிற்கு ஒரு மலர்க் கொத்தைத் தந்து விட்டு சொன்னார். “நியாயமாய் பகிரங்கமாய் ஒரு பெரிய விருது தரவேண்டும் உங்களுக்கு. ஆனால் நடந்ததை எல்லாம் வெளியே சொல்ல முடியாத நிலை எங்களுக்கு. அப்படி சொன்னால் நாட்டு நலன், கட்சி நலன் இரண்டுமே பாதிக்கப்படும். ஆனால் விளம்பரம் இல்லாமல் உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். நீங்கள் வாய் விட்டுக் கேட்டால் போதும்…”
அக்ஷய் அடக்கத்துடன் சொன்னான். “எல்லாம் நல்ல படியாய் முடிந்து விட்டதே எனக்கு பெரிய விருது கிடைத்த மாதிரி தான். இனி எதுவும் எனக்கு வேண்டாம்”
பிரதமர் மனம் நெகிழ சொன்னார். “என்னை சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து தான் என்னிடம் வருகிறான். இது பிரதமர் பதவிக்கு வந்தது முதல் என் அனுபவம். ஆனால் முதல் முறையாக நான் என்ன செய்யவும் தயாராக இருக்கிற போதும் எதையும் எதிர்பார்க்காமல் இருக்கிற மனிதனைப் பார்க்கிறேன். உங்களைப் பாராட்ட வார்த்தை இல்லை. கடவுள் உங்களுக்கு எல்லா நன்மையையும் தருவார்…”
சதுர்வேதி அக்ஷயிடம் சொன்னார். “இப்ராஹிம் சேட் உன்னைப் பத்தரை மாற்றுத் தங்கம் என்றார். இரண்டு மகன்களைப் பறி கொடுத்த எதிரி வாயால் அந்த வார்த்தையைக் கேட்க வேண்டும் என்றால் அதை விடப் பெரிய விருது இல்லை….”
அக்ஷய் மனம் நெகிழ சொன்னான். “நான் அவரை எதிரியாக நினைக்கவில்லை. இப்போதும் அவரை என் தந்தை ஸ்தானத்தில் தான் வைத்திருக்கிறேன்….”
சதுர்வேதி ஒரு கணம் பிரமித்துப் போனார். பேச வார்த்தைகள் எழாமல் அவர் அக்ஷயை அணைத்துக் கொண்டார். பிரதமர் தனித்தனியாக மது, மகேந்திரன், ஆனந்த் மூவருக்கும் நன்றி சொன்னார். கேசவதாஸையும் பாராட்டினார். பிரதமரும் சதுர்வேதியும் அவர்களை அனுப்பி விட்டு வீரேந்திரநாத்தைப் பார்க்கக் கிளம்பினார்கள். வீரேந்திரநாத்தை ஜம்முவில் இருந்து டெல்லியில் உள்ள பெரிய மருத்துவமனை ஒன்றிற்கு வரவழைத்திருந்தார்கள். அங்கு சென்று கோமாவிலும் அதிர்ச்சி முகபாவனையிலேயே படுத்திருந்த வீரேந்திரநாத்தைப் பார்த்து விட்டு வெளியே வந்த பிரதமர் பத்திரிக்கையாளர்களிடம் தன் நண்பர் வீரேந்திரநாத் விரைவில் குணமடைவார் என்று நம்புவதாகத் தெரிவித்தார்.
பிரதமர் அலுவலகத்திலிருந்து வெளியே வந்த பிறகு கேசவதாஸ் அக்ஷயிடம் சொன்னார். “நீ தீவிரவாதி அல்ல, அப்பாவி, உண்மையான தேசவிரோத சக்திகள் சதித்திட்டமிட்டு உன்னை தீவிரவாதியாகப் பொய்யாய் சித்தரித்திருக்கிறார்கள் என்ற விதத்தில் டிவி, பத்திரிக்கைகளில் அறிவிப்பு செய்திருக்கிறோம். வெடிகுண்டு வெடித்த ஒரு இடத்திலும் பெரிய சேதம் என்று சொல்வதற்கில்லை. ஒன்பது இடங்களில் அவர்கள் சிக்கலான இடத்தில் தான் குண்டு வைத்திருந்தார்கள். ஆனால் படாத பாடு பட்டு அதையெல்லாம் நம் ஆட்கள் கண்டுபிடித்து அதை செயல் இழக்க வைத்திருக்கிறார்கள். அதனால் நாடு பெரிய ஆபத்திலிருந்து உன் தயவால் காப்பாற்றப்பட்டு விட்டது. ” பிறகு அவர் அக்ஷயிற்கு தன் வீட்டுக்கு ஒரு முறை வர அழைப்பு விடுத்தார். “…ஆனால் இந்த முறை வாசல் வழியே வா. உனக்குப் பயந்து என் குடும்பத்தினரை நான் வெளிநாட்டிற்கு அனுப்பி இருந்தேன். அவர்கள் நாளை வந்து விடுவார்கள். அவர்கள் உன்னைப் பார்த்தால் சந்தோஷப்படுவார்கள்…”
சஹானாவின் வீட்டுக்கு அக்ஷயை அழைத்துச் சென்றவர்கள் அவனை இறக்கி விட்டு விட்டு ‘இதோ வந்து விடுகிறோம்’ என்று சொல்லி விட்டு காரில் எங்கேயோ போனார்கள். அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தின் முன் நிற்கையில் அக்ஷய் மனம் லேசாகியது. அந்த வீட்டின் நினைவுகள் இனிமையானவை. அந்த வீட்டின் மனிதர்களும் கூடத்தான்….
பக்கத்து ஃபளாட் ஜெய்பால் சிங் அவன் கண்ணில் படவில்லை. சஹானா வீட்டு அழைப்பு மணியை அழுத்தினான். சஹானா தான் கதவைத் திறந்தாள்.
அக்ஷய் எந்த ஆபத்தும் இல்லாமல் தப்பித்து விட்டான் என்பதை மட்டும் மது சொல்லி இருந்தானே தவிர அக்ஷயின் வரவை மது முன்கூட்டியே தெரிவித்திருக்கவில்லை.
திடீரென்று அவனை அங்கு பார்த்ததும் சஹானா உணர்ச்சிகளின் பிரவாகத்தில் தன்னை மறந்தாள். எத்தனையோ கட்டுப்படுத்திக் கொண்டும் கண்களில் நீர் திரள்வதை அவளால் தடுக்க முடியவில்லை. அவன் அவளையே பார்த்தபடி அமைதியாக நின்றான். இருவராலும் சிறிது நேரம் பேச முடியவில்லை.
உள்ளே நுழைந்த பின் அவனாக மவுனத்தைக் கலைத்தான். “பெரியம்மா இல்லையா?”
“இல்லை. கோயிலுக்குப் போயிருக்கிறார்கள்.”
“வருண்?”
“பள்ளிக்கூடம் போயிருக்கிறான்”
மறுபடியும் சிறு மவுனம். பிறகு அக்ஷய் மெல்லக் கேட்டான். “சஹானா, நான் ஒன்றைக் கேட்டால் நீங்கள் கோபித்துக் கொள்வீர்களா?”
“இல்லை. கேளுங்கள்”
“என்னைத் திருமணம் செய்து கொள்கிறீர்களா?”
அவளுக்கு காதில் விழுந்தது நிஜம் என்று நம்ப முடியவில்லை. அளவிட முடியாத சந்தோஷம் ஒரு நாள் தனக்கு கிடைக்கும் என்பதை அவள் நம்புவதை விட்டு நாட்கள் பல ஆகியிருந்தன. கனவல்ல என்பதை அவள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. அப்படி உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு குரல் தழுதழுக்கச் சொன்னாள். “இப்படி ஒரு நாள் கேட்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு கனவில் மட்டுமே இருந்திருக்கிறது…”
பின் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு வருத்தத்துடன் சொன்னாள். “….ஆனால் ஒத்துக் கொள்வதில் எனக்கு ஒரு நெருடல் இருக்கிறது”
“அது என்ன?”
“நான் ஒருவனுடன் வாழ்ந்தவள். எனக்கு ஒரு மகன் இருக்கிறான். நீங்கள் கல்யாணமாகாதவர் மட்டுமல்ல எந்தப் பெண்ணிடமும் நெருங்கிக் கூட பழகாதவர். பொருத்தம் நியாயமாகத் தோன்றவில்லை….”
“பொருத்தம் மனதைப் பொருத்தது சஹானா. நீங்கள் கல்யாணம் செய்து கொண்ட மனிதன் உங்கள் உடலைத் தொட்டிருக்கலாம். ஆனால் உங்கள் மனதைத் தொட்டதில்லை. இந்த நேசம், இந்தக் காதல் நம் இரண்டு பேருக்குமே புதியது தான். வருணைப் பொருத்தவரை அவனை நான் நேசிக்கிறேன் சஹானா. என் மகனைப் போல இப்போது மட்டுமல்ல எப்போதும் நேசிப்பேன். நாம் திருமணம் செய்து கொண்டால் என்றுமே அவன் தான் என் மூத்த மகனாக இருப்பான்….”
சஹானா அவன் அன்பான வார்த்தைகளில் கரைந்து போனாள். பெருகி வழிந்த கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறியவள் ஓடி வந்து அவனைக் கட்டி அணைத்துக் கொண்டாள். “இப்போது இவ்வளவு அன்பு காட்டுகிற நீங்கள் அன்றைக்கெல்லாம் ஏன் பட்டும் படாமலும் இருந்தீர்கள்?”. அவளுக்குக் கேட்காமல் இருக்க முடியவில்லை.
அவளை அணைத்துக் கொண்டபடி அக்ஷய் சொன்னான். “சஹானா, நான் உயிரோடு திரும்புவேனா என்பதே எனக்கு சந்தேகமாய் இருந்த போது நான் எப்படி என் மனதில் இருந்ததை உன்னிடம் காண்பிக்க முடியும். யோசித்துப் பார். முதலிலேயே நீ வாழ்க்கையில் நிறையவே அடிபட்டிருக்கிறாய். திரும்பவும் வாழ்க்கையில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி மறுபடியும் பெரிய அடி விழுந்தால் நீ தாங்க மாட்டாய். அதனால் தான் அப்போதெல்லாம் அப்படி நடந்து கொண்டேன்….”
அவன் பன்மையைக் கை விட்டு ஒருமையில் பேசியதைக் கேட்ட போது அவள் அணைப்பு இறுகியது. அவள் மீது அவனுக்கிருந்த அந்த கரிசனம் மனதிற்கு அதிக இதமாக இருந்தது.
ஆனாலும் ஒரு ஆதங்கம் அவளுக்கு இருந்தது. “எடுத்தவுடன் கல்யாணத்தைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்’ என்று ஒரு வாக்கியத்தை சொல்லத் தெரியவில்லையா?”
“சொல்லாமலேயே நாம் இருவரும் மானசீகமாக உணர்ந்த விஷயம் அல்லவா அது.”
அவள் பொய்க் கோபத்துடன் அவனைக் கடிந்து கொண்டாள். “என்ன தான் உணர்ந்தாலும் ஒரு பெண் காதலன் வாயால் அதைக் கேட்காமல் திருப்தி அடைய மாட்டாள். என்ன பெரிய அமானுஷ்யன். எத்தனையோ தெரிந்து வைத்திருக்கிறீர்கள், இந்த சின்ன அடிப்படை விஷயம் கூடத் தெரியவில்லையே”
அக்ஷய் அழகாய் புன்னகை செய்து அவள் மனதை ஒருமுறை கிறங்க வைத்தபடி சொன்னான். “எனக்கு நிறைய விஷயம் தெரியாது தான். இனிமேல் தான் தெரிந்து கொள்ள வேண்டும்…”
அவள் காதலுடன் அவனைப் பார்க்க அவளுடைய சிவந்த உதடுகளில் அவன் தன் உதடுகளைப் பதித்தான். அவர்கள் காலத்தை மறந்தார்கள்…..
ஆனந்த், நர்மதா திருமணமும், அக்ஷய், சஹானா திருமணமும் எளிமையாய் ஒரு கோயிலில் நடந்தன. நர்மதாவின் உறவினர்கள் சிலர், கேசவதாஸ் மற்றும் அவர் மனைவி, ஆச்சார்யாவின் மனைவி லலிதா, இப்ராஹிம் சேட், அவர் மனைவி சாய்ரா பானு, மது, மகேந்திரன், ஜெய்பால் சிங், மஹாவீர் ஜெயின், அவர் மனைவி ஆகியோர் திருமணத்திற்கு வந்திருந்தனர்.
மஹாவீர் ஜெயினின் கோமா, மருந்தால் ஏற்பட்டதால் மாற்று மருந்தாலேயே குணப்படுத்த முடியும் என்று உணர்ந்து அக்ஷய் தன் திபெத்திய குரு ஒருவரிடம் சென்று தக்க மூலிகை மருந்தைக் கொண்டு வந்து கொடுத்து அவரை குணப்படுத்தி இருந்தான். குணமான பின்னும் மஹாவீர் ஜெயினிற்கு ராஜாராம் ரெட்டி இப்படி எல்லாம் செய்தார் என்பதை ஜீரணிக்கக் கஷ்டமாகத் தான் இருந்தது. ராஜாராம் ரெட்டியின் தற்கொலைக்குத் தனிப்பட்ட காரணம் என்றே செய்திகளை வெளியிட்டிருந்தார்கள். மேல்மட்டத்தில் சில பேரைத் தவிர வேறு யாரும் நடந்ததை எல்லாம் அறிந்திருக்கவில்லை.
இப்ராஹிம் சேட்டிடம் சதுர்வேதி போன் செய்து அக்ஷய் அவரைத் தகப்பன் ஸ்தானத்திலேயே வைத்திருப்பதாய் சொன்னதைச் சொன்ன போது அவர் அடைந்த துக்கம் கொஞ்ச நஞ்சமல்ல. அன்று அவர் தொழுகை நடத்திய போது அல்லாவிடம் மனமுருக அழுதார். அவன் திருமணம் பற்றிய தகவல் கிடைத்த உடனேயே மனைவியுடன் கிளம்பி வந்தவர் அவனை மனமார வாழ்த்தினார்.
சாய்ரா பானு சாரதாவிடம் சொன்னாள். “இது போல் ஒரு பிள்ளையைப் பெற நீங்கள் நிறைய புண்ணியம் செய்திருக்கிறீர்கள். தங்கமான மனசு”
மஹாவீர் ஜெயினின் மனைவி சாரதாவிடம் சொன்னாள். “உங்கள் மகன் எனக்குக் கடவுள் மாதிரி தான். அவர் இல்லை என்றால் இப்போதும் அவர் கோமாவில் தான் இருந்திருப்பார்.”
மரகதம் கடைசி காலத்தில் தனக்கு ஒரு மகன் கிடைத்திருக்கிறான் என்று சாரதாவிடம் நிறைவுடன் சொல்லிக் கொண்டாள். அவனை சந்தித்திரா விட்டால் கடைசி வரை ஜடமாகவே வாழ வேண்டி இருந்திருக்கும் என்று சொல்லி கண்கலங்கினாள்.
ஒவ்வொருவரும் தனித்தனியாக மகனைப் புகழ்ந்ததில் சாரதா அடைந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை. காலமெல்லாம் இருந்த விரதத்திற்கு கடவுள் அவன் மகனிற்கு இத்தனை நேசத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் என்று மனதார சொல்லிக் கொண்டாள். ‘இதற்கு நன்றிக்கடனாக இனி ஏதாவது ஒரு விரதம் இருக்க வேண்டும்…’
ஜெய்பால் சிங் அக்ஷயிடம் ஆதங்கத்துடன் சொன்னார். “ஒரு கற்பனையான முஸ்லீம் பெண்ணைக் காதலிப்பதாகச் சொல்லி நம்ப வைத்து என்னை ஒரு காமெடியனாக்கி விட்டாயே”
வருண் அனைவரையும் விட உற்சாகமாகவும், சந்தோஷமாகவும் இருந்தான். அவன் அக்ஷயை விட்டு சிறிதும் நகராமல் அக்ஷய் அருகிலேயே பெருமிதத்துடன் இருந்தான். ஜெய்பால் சிங்கிடம் வருண் மெல்ல சொன்னான். “எனக்கும் நிறைய சக்தி இருக்கிறது என்று நினைக்கிறேன்…தெரியாமலேயே நான் அக்ஷய் என்று அவர் பெயரையே அவருக்கு எப்படி சரியாக வைத்தேன் பார்த்தீர்களா?”
ஜெய்பால்சிங் வாய் விட்டு சிரித்தார்.
மது அக்ஷயிடம் சொன்னான். “அக்ஷய். நான் சஹானாவை இப்படி ஒரு சந்தோஷத்தில் என்றுமே பார்த்ததில்லை. உனக்கு எப்படி நன்றி சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை.”
அக்ஷய் மனைவியிடம் சொன்னான். “சஹானா, இப்படி ஒரு நண்பன் கிடைக்க நீ நிறையவே கொடுத்து வைத்திருக்க வேண்டும்”.
சஹானா அவர்கள் இருவரையும் பெருமிதத்துடன் பார்த்தாள்.
அக்ஷய் தன் குடும்பத்தினர் எல்லோரையும் ஜம்முவில் இருந்த தன் புத்த பிக்கு குருவிடம் கூட்டிக் கொண்டு போய் வணங்கினான். அவர் அவன் வரவில் மகிழ்ந்தார். சஹானாவைத் தனியாக அழைத்து சொன்னார். “நான் ஒன்று சொன்னால் நீ வருத்தப்படக்கூடாது”
“சொல்லுங்கள்”
“அக்ஷய் சாதாரணமான மனிதனில்லை. அவனை யாரும் சாதாரணமாக மாற்றி விடவும் கூடாது என்பது தான் என் பிரார்த்தனையும் கூட. என்றாவது ஒரு நாள், உன் குழந்தைகள் எல்லாம் வளர்ந்து பெரிதான பிறகு அவன் கடமைகளை எல்லாம் முடித்த பிறகு அவன் மனதில் கண்டிப்பாக ஆன்மிகத் தேடல் பெரிதாக எழும். அந்த நேரத்தில் நீ அவனை உன் அன்பால் கட்டுப்படுத்தி தடை செய்ய நினைக்கக் கூடாது. அவனை நீ சந்தோஷமாக அனுப்பி வைக்க வேண்டும். அவனால் இனியும் ஆக வேண்டியது நிறைய இருக்கிறது. அந்தக் காலத்தில் நான் இருக்க மாட்டேன். அதனால் தான் இப்போதே சொல்கிறேன்”
அந்த முதிய பிக்குவிடம் மனதார சஹானா சொன்னாள். “அவருடன் சில காலம் வாழ்ந்தாலும் கூட எனக்கு அது போதும். மீதியுள்ள காலத்திற்கு அந்த நினைவுகளுடனேயே நான் கழித்து விடுவேன். நான் அவரை சந்திக்கும் வரை சந்தோஷம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவள். இன்றைக்கு நான் நிறையவே சந்தோஷமாக இருக்கிறேன். எனக்கு இது போதும். அவருடைய எந்த ஒரு தேடலுக்கும் நான் எப்போதும் இடைஞ்சலாக இருக்க மாட்டேன்”
முதிய பிக்கு கனிவுடன் அவளைப் பார்த்துச் சொன்னார். “அக்ஷய் மனதில் இடம் பிடிக்க ஒரு சாதாரண பெண்ணால் முடியாது என்று நான் நினைத்து இருந்தேன். நான் நினைத்தது பொய்யாகவில்லை. புத்தர் அருள் உனக்குப் பரிபூரணமாய் கிடைக்கட்டும்.”
அடுத்ததாக தன் குடும்பத்தினரை ஆரம்பத்தில் தனக்கு அடைக்கலம் கொடுத்த புத்த விஹாரத்திற்கு அக்ஷய் அழைத்துக் கொண்டு போனான். அவனைக் குடும்பத்தினரோடு பார்த்த புத்த பிக்குகள் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைந்தார்கள். இளைய பிக்கு சின்னக் குழந்தை போல ஓடி வந்து அக்ஷயைத் தழுவிக் கொண்டார். மூத்த பிக்கு அவரைக் கண்டிப்பான பார்வை பார்க்க பின் மெள்ள விலகினார்.
எல்லோரும் அந்த பிக்குகளை வணங்கி ஆசிகளைப் பெற்றார்கள். சாரதா அந்த மூத்த பிக்கு காலில் விழுந்து வணங்கி கை கூப்பி அழுதாள். “அக்ஷய் நீங்கள் எல்லாம் அவனை எப்படி காப்பாற்றினீர்கள் என்று சொன்னான். என் பிள்ளையைக் காப்பாற்றியதற்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை”
மூத்த பிக்கு எல்லாம் அந்த புத்தரின் சித்தம் என்பது போல மஹா புத்தரின் திருவுருவச் சிலையைக் காட்டினார்.
இளைய பிக்குவிடம் அக்ஷய் சொன்னான். “என்னிடம் இப்போதும் நீங்கள் கொடுத்த சால்வை பத்திரமாக இருக்கிறது. உங்கள் நட்பின் அடையாளமாக நான் அதை என் வாழ்நாள் முழுவதும் விலை மதிக்க முடியாத பொருளாய் வைத்திருப்பேன்”
இளைய பிக்கு சொன்னார். “உனக்கு என்ன ஆயிற்றோ என்று நான் நினைக்காத நாளில்லை. இந்த தனிப்பட்ட பாசம் நல்லதல்ல, பிக்குகளுக்கு உகந்ததல்ல என்று குரு அடிக்கடி சொல்வார். ஆனாலும் என் மனத்திலிருந்து உன்னை விலக்க முடிந்ததில்லை. இப்போது உன்னை நேரில் பார்த்த பிறகு உனக்கு இனி ஆபத்தில்லை என்று தெரிந்த பிறகு மனம் நிம்மதியாகி விட்டது. இனி ஒழுங்காக தினமும் தியானம் செய்வேன்”
அக்ஷயிற்கு கண்கள் கலங்கி விட்டன.
அங்கிருந்து விடை பெற்ற போது அவன் மனம் லேசாக இருந்தது. சில நாட்களுக்கு முன் ஒரு நள்ளிரவில் இங்கு குண்டடி பட்டு விழுந்த அவன், இன்னொரு நள்ளிரவில் கடுங்குளிரில் இங்கிருந்து போகுமிடம் தெரியாமல், சுய விவரம் தெரியாமல் அனாதையாய் கிளம்பியும் இருக்கிறான். ஆனால் நேசிக்கின்ற மனிதர்களும், குடும்பமும் சூழ்ந்திருக்க இங்கு வந்து கிளம்பும் இப்படி ஒரு நாள் இவ்வளவு சீக்கிரம் வரும் என்று எண்ணியிருக்கவில்லை.
இந்த புத்த பிக்குகள், அம்மா, பெரியம்மா எல்லோரும் சேர்ந்து செய்த பிரார்த்தனையின் பலன் தான் இது என்பதில் அவனுக்கு சந்தேகமில்லை.
வெளியே நல்ல குளிராக இருந்தது. ஒரு புறம் சஹானாவும், இன்னொரு புறம் வருணும் அவனை ஒட்டியபடி நடந்தார்கள். பின்னால் ஆனந்தும், நர்மதாவும் இயற்கை அழகை ரசித்தபடி வர, அவர்களுக்கும் பின்னால் சாரதாவும், மரகதமும் பேசிக் கொண்டு வந்தார்கள். பின்னால் திரும்பி அவர்களைத் திருப்தியுடன் புன்னகையுடன் பார்த்து விட்டு அக்ஷய் மனைவியையும், மகனையும் தன்னுடன் மேலும் இறுக்கமாக சேர்த்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்.
சஹானா அவளுக்குப் பிடித்த பாடலை அவனுக்கு மட்டும் கேட்கும்படி பாடினாள்.
You’re here, there’s nothing I fear
and I know that my heart will go on.
We’ll stay, forever this way
you are safe in my heart
and my heart will go on and on.
மனைவியைக் காதலுடன் பார்த்த அக்ஷயிற்கு அந்த நேரத்தில் தோன்றியது. “சொர்க்கம் என்பது எங்கோ இருக்கும் தனி இடமல்ல. நேசிப்பவர்களுடன் சேர்ந்திருக்கும் இந்த இடம் தான்….”
(முற்றும்)