வீரேந்திரநாத் ஜம்மு விமான நிலையம் இறங்கிய உடனேயே கிடைத்த செய்தி அவரைத் திகைக்க வைத்தது. அவருக்குத் தெரிந்த வரை இன்றைய தினம் பிரதமருக்கு ஏகப்பட்ட வேலைகள் இருந்த தினம். கலந்து கொள்ள பல நிகழ்ச்சிகள் உள்ள தினம். நேரடியாகப் பேச சில முக்கியமான மனிதர்களுக்கு முன்கூட்டியே அனுமதி தந்திருந்த தினம். அப்படி இருக்கையில் அவற்றில் சிலவற்றை ஒதுக்கி விட்டு திடீரென்று கேசவதாஸை அழைக்கிறார் என்றால்….
உடனடியாக ராஜாராம் ரெட்டிக்குப் போன் செய்து தகவலைச் சொன்னார். “… அந்த ஆள் இது அமானுஷ்யன் விவகாரமாகத் தான் இருக்கும் என்று நினைப்பதாகச் சொல்கிறாராம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”
ராஜாராம் சில வினாடிகள் தாமதித்து விட்டுச் சொன்னார். “இருக்கலாம்…”
வீரேந்திரநாத்திற்குத் தூக்கிவாரிப் போட்டது. “என்ன இப்படி சொல்கிறீர்கள்?”
“என் உள்ளுணர்வு அப்படித் தான் சொல்கிறது”
வீரேந்திரநாத்திற்கு வயிற்றைக் கலக்கியது. அவருக்குத் தெரிந்து ராஜாராம் ரெட்டியின் உள்ளுணர்வு சொன்னது எதுவும் இது வரை பொய்த்ததில்லை. “இப்போது என்ன செய்வது?”
“முதலில் கேசவதாஸ் அவரிடம் பேசி விட்டு வரட்டும். விஷயம் என்ன என்பது தெரியும். பிறகு பார்க்கலாம். கேசவதாஸ் நம்மிடம் சொல்வார் தானே”
“அந்த ஆள் தான் அன்றைக்கே அமானுஷ்யனைக் கொன்று விடச் சொன்னவர். இப்போது கூட “நெருப்பில் மீதம் வைப்பது போல அவனை விட்டு வைத்தது அபாயம்” என்று சொன்னாராம்… அதனால் அவர் கண்டிப்பாக சொல்வார். அவர் குடும்பத்தை ஏதாவது செய்து விடுவேன் என்று அவன் பயமுறுத்தியதை அவர் விரும்பவில்லை….”
“அப்படியானால் நாம் அவர் திரும்பி வரும் வரை பொறுமையாக காத்திருக்கலாம்… அதற்குள் அமானுஷ்யனைக் கொன்று விடுவது நல்லது. திரும்பவும் அவனைப் பற்றி ஏதாவது தகவல் வந்ததா?”
“தலிபான் தலைவன் போன் செய்தால் அந்த சலீம் போனை எடுக்க மாட்டேன்கிறானாம். அவன் ஒரு வேலையில் ஈடுபட்டிருக்கையில் யாரிடமும் தேவை இல்லாமல் பேச மாட்டானாம். யார் பேசுவதும் அவனுக்குப் பிடிக்காதாம். ஆனாலும் தலிபான் தலைவன் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருப்பதாக சொன்னான்…..”
“அவசரமாய் போனில் உன்னிடம் பேச வேண்டும். தயவு செய்து பேசு என்று ஒரு எஸ் எம் எஸ் அனுப்பச் சொல்லுங்கள்…. நம் ஆட்களையும் அங்கே அவனை ஜல்லடை போட்டு தேடச் சொல்லி இருக்கிறேன். கேசவதாஸ் போய் விட்டு தகவல் வந்ததும் எனக்கு உடனடியாகச் சொல்லுங்கள்”
“சொல்கிறேன்… எனக்கு ஒரே ஒரு சந்தேகம்…”
“என்ன?”
“அந்த அமானுஷ்யன் சைத்தான் எப்படியாவது டெல்லி போயிருக்க மாட்டானில்லையா?”
“அது மட்டும் நடந்திருக்க வாய்ப்பே இல்லை. நம் ஆட்களிடம் அவனை ஜம்முவில் கண்டுபிடிக்கிறீர்களோ இல்லையோ அவன் ஜம்முவை விட்டு டெல்லிக்கு வராதபடி பார்த்துக் கொள்ளுங்கள் என்று உத்தரவு போட்டிருக்கிறேன். விமான நிலையம், ரயில் நிலையம் என்று நம் ஆட்கள் கண்கொத்திப் பாம்பாய் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவன் ஜம்முவில் இருப்பது உறுதி. அவன் சமாதியும் அங்கேயே இருக்கிற மாதிரி பார்த்துக் கொள்வது நம் எல்லோருக்கும் நல்லது”
ஆனந்த், மகேந்திரன், மது மூவரும் பிரதமரின் அலுவலகத்தில் நுழைந்தவுடன் அவசர அவசரமாக உள்ளே அழைத்து செல்லப்பட்டனர். அறையில் பிரதமருடன் இரண்டு பேர் இருந்தார்கள். அவர்கள் மூச்சு வாங்குவதைக் கண்ட பிரதமர் ஒரு நிமிடம் ஓய்வு எடுக்கச் சொன்னார். “இன்னும் ஒருவர் வர வேண்டி இருக்கிறது. அவர் இரண்டு நிமிடங்களில் வந்து விடுவார்….”
அவர் சொன்ன நபர் டிஐஜி கேசவதாஸ் தான். அவர் சொன்னபடி கேசவதாஸ் இரண்டே நிமிடங்களில் அங்கே வந்து சேர்ந்தார். பிரதமர் அறையில் உளவுத் துறை தலைவரும், வெடிகுண்டு இலாக்கா தலைவரும் இருப்பதைப் பார்த்தவுடன் திடுக்கிட்டவர் அதை வெளியே காண்பித்துக் கொள்ளவில்லை. அடுத்ததாக இது வரை சந்தித்திராத வேறு மூன்று நபர்களைப் பார்த்தார். ஒருவனை மட்டும் எங்கேயோ பார்த்தது போல் இருந்தது. மூளையைக் கசக்கிய போது ஏதோ டிவியில் பார்த்த நினைவு வந்தது. மற்ற இருவரும் அவர் அறியாதவர்கள். ஒரு இருக்கையில் அமர்ந்தவர் பிரதமரைக் கேள்விக்குறியோடு பார்த்தார்.
பிரதமர் அந்த மூவரிடமும் கேசவதாஸையும், மற்ற இரு உயர் அதிகாரிகளையும் அறிமுகப்படுத்தி விட்டு சொன்னார். “நீங்கள் மூவரும் யார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு சொல்ல வந்ததை விவரமாகச் சொல்லுங்கள்”
கேசவதாஸை அங்கு சிறிதும் எதிர்பார்த்திராத மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ஆனால் இனி யோசிக்க நேரம் அவர்களுக்கு இல்லை என்பதால் ஆனந்த் தான் சொல்ல வந்ததை விவரமாகச் சொல்ல ஆரம்பித்தான். அவன் சொல்லச் சொல்ல பிரதமர் உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தது தெரிந்தது. கேசவதாஸின் அதிர்ச்சி நடிப்பா, இல்லை உண்மையா என்று அவர்களுக்குத் தெரியவில்லை.
அவன் முடித்த பின்பும் சிறிது நேரம் அவர்கள் பேச்சிழந்தே இருந்தார்கள். பிரதமர் கேசவதாஸ், உளவுத்துறை தலைவர், வெடிகுண்டு இலாக்கா தலைவர் மூவரிடமும் சொன்னார். “உங்களுக்கு இவர்களிடம் ஏதாவது கேட்க இருந்தால் கேட்கலாம்..”
வெடிகுண்டு இலாக்கா தலைவர் கேட்டார். “வெடிகுண்டு வெடிக்க இருக்கும் இடங்கள் என்று நீங்கள் சொன்ன இடங்கள் ஒவ்வொன்றிலும் குறிப்பாக எங்கே வெடிக்கும் என்பது உங்கள் தம்பிக்குத் தெரியவில்லையா?”
“அந்த இடங்களைத் தீர்மானித்த போது அவன் அவர்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்திருக்கிறான். ஆனால் அதிலும் குறிப்பாக எங்கே என்று அவர்கள் தீர்மானித்த சமயத்திற்கு முன்பே அவனை அவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள். அதனால் அந்த குறிப்பான இடங்கள் தெரியவில்லை….”
பிரதமர் கேசவதாஸையும், உளவுத்துறை தலைவரையும் பார்த்தார். அவர்கள் தங்களுக்குக் கேட்க எதுவுமில்லை என்று தலையாட்டினார்கள். பிரதமர் ஆனந்த் பக்கம் திரும்பினார். ” ஒரு நாட்டின் உள்துறை மந்திரி மீது குற்றம் சாட்டி இருக்கிறீர்கள். நீங்கள் சொன்னதை எல்லாம் எனக்கு இப்போதும் நம்ப முடியவில்லை. ஆனாலும் வெடிகுண்டுகள் விஷயத்தில் நான் அலட்சியமாக இருக்க விரும்பவில்லை. அதனால் நீங்கள் சொன்ன இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்காமல் இருக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் கண்டிப்பாக நாங்கள் செய்வோம் என்பதை உங்களுக்கு நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்…. உங்கள் தகவலுக்கு நன்றி. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நாடே உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது. நீங்கள் கிளம்பலாம். இனி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்”
மூவரும் நன்றி சொல்லி விட்டுக் கிளம்பினார்கள்.
அவர்கள் போனவுடன் பிரதமர் அந்த அதிகாரிகளைப் பார்த்துக் கேட்டார். “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவர்கள் சொன்னதை நம்புகிறீர்களா?”
உளவுத்துறை தலைவர் சொன்னார். “அந்த அமானுஷ்யன், அது தான் அந்த அக்ஷய், தீவிரவாதி அல்ல என்பதில் எங்கள் துறைக்கு எந்த சந்தேகமும் இல்லை. அதை நான் உள்துறை மந்திரியிடமே தெரிவித்தும் இருக்கிறேன். அவருக்கு அவன் மேல் ஏதாவது தனிப்பட்ட விரோதம் இருக்கலாம். மற்றபடி அவர் இந்த அளவு நாட்டையே அழிக்கக் கூடிய வேலைக்குப் போவாரா என்பதில் எனக்கு இன்னும் சந்தேகம் இருக்கிறது”
வெடிகுண்டு இலாக்கா தலைவர் கவனமாகச் சொன்னார். “உள்துறை மந்திரி பற்றி அவர்கள் சொன்னது எந்த அளவு உண்மை என்பது எனக்குத் தெரியாது. ஆனால் வெடிகுண்டு சம்பந்தப்பட்ட விஷயத்தில் அவர்கள் சொன்னதில் உண்மை இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் சாதாரணமாக பொய்யாய் அங்கே வெடிகுண்டு வைக்கப்பட்டு இருக்கிறது, இங்கே வெடிகுண்டு வைக்கப்பட்டு இருக்கிறது என்கிற வதந்தி ஏதாவது ஓரிடத்தைச் சொல்லி தான் வரும். இப்போது சில நாளாக எல்லா இடங்களையும் சொல்லி வருகிற தொடர் வதந்திகளைப் பற்றி யோசித்தால் ஏதோ சில உண்மையாக வெடிக்கப் போகிற இடங்களை மறைக்க எல்லா இடங்களையும் சொல்கிறது பொருத்தமான திட்டமாகத் தான் தெரிகிறது.”
“அப்படியானால் உங்கள் திறமையான ஆட்கள் அத்தனை பேரையும் அவர் சொன்ன அந்த இடங்களில் குவியுங்கள். இடங்களைக் கண்டுபிடித்து வெடிகுண்டு எதுவும் வெடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். நம்மிடம் இப்போது நேரம் அதிகமில்லை. வெடிக்கப் போகும் நாள் மட்டும் தான் இப்போது தெரிந்திருக்கிறதே தவிர நேரங்கள் தெரியவில்லை… இதில் நம்பிக்கையான ஆட்களைப் பயன்படுத்த வேண்டும். நாம் உஷாரானது தெரிந்தால் அவர்கள் நிச்சயித்து விட்ட நேரத்திற்கும் முன்னாலேயே வெடித்து விடும் சாத்தியம் இருக்கிறது. நீங்கள் உடனடியாகப் புறப்படுங்கள். உங்கள் வேலை ஆக எந்த உதவி வேண்டுமானாலும் நீங்கள் கேளுங்கள். மறு கேள்வி கேட்காமல் உடனடியாக அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டியது என் பொறுப்பு..”
வெடிகுண்டு இலாக்கா தலைவர் எழுந்தார்.
பிரதமர் சொன்னார். “வீரேந்திரநாத் விவகாரம் உண்மையோ, பொய்யோ தெரியவில்லை. ஆனால் நம்மைத் தவிர வேறு யாருக்கும் இது கசிந்து விடக்கூடாது. நாட்டு நலன் மேல் அக்கறை இருக்கிற உங்கள் மூவருக்கும் இதற்கு அதிகமாக நான் சொல்லத் தேவை இல்லை என்று நினைக்கிறேன்..”
மூவரும் தலையாட்டினார்கள். வெடிகுண்டு இலாக்கா தலைவர் வேகமாக வெளியேறினார். பிரதமர் கேசவதாஸைப் பார்த்தார். வந்ததில் இருந்து வாய் திறக்காத அவர் வேறு வழியில்லாமல் கவனமாகப் பேச ஆரம்பித்தார். “அமானுஷ்யன் விவகாரம் என் நேரடிப் பார்வையில் துப்பு துலக்கப்படவில்லை என்பது உண்மை. ஆனால் அதைச் செய்து எனக்கு ரிப்போர்ட் செய்கிற அதிகாரிகள் உள்துறை மந்திரியால் விலைக்கு வாங்கப்பட்டவர்களா என்பதில் எனக்கு இன்னமும் சந்தேகம் இருக்கிறது. இருந்திருக்க முடியாது என்பதையும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. இனி ஆழமாக அலசினால் மட்டுமே உண்மை தெரியும்”
“அந்த சிபிஐ டைரக்டர் ஜெயினை ராஜாராம் ரெட்டி தான் கோமாவிற்கு போகச் செய்தார் என்கிறார்கள். அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். அந்த ராஜாராம் ரெட்டி நல்லவர் என்று முன்பு கேள்விப்பட்டிருக்கிறேன்…..”
கேசவதாஸ் உளவுத்துறை தலைவரைப் பார்த்தார். உளவுத் துறை தலைவர் சொன்னார். “அது எந்த அளவு உண்மை என்று தெரியாது. ஆனால் இந்த அமானுஷ்யன் விஷயத்தில் அவர் ஈடுபாடு காட்டுவது தெரியும். வீரேந்திரநாத்திற்கு இப்போது அவர் நெருக்கமாக இருப்பதும் தெரியும்.”
பிரதமர் கேசவதாஸிடம் கேட்டார். “இனி எப்படி இந்த விஷயத்தை கையாள்வது என்றிருக்கிறீர்கள்?”
“நானே தனிப்பட்ட முறையில் இந்த அமானுஷ்யன் விவகாரத்தை எடுத்துக் கொள்ளலாம் என்றிருக்கிறேன் சார். அவர்கள் சொன்னது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இதை நாம் கையாள்வதில் சிறிய தவறு வந்தாலும் அதற்கு நாம் பெரிய விலை தர வேண்டி இருக்கும்….”
“சரி அப்படியானால் நீங்கள் போகலாம். எனக்கு அவ்வப்போது என்ன நிலவரம் என்று தெரிவித்துக் கொண்டிருங்கள்….”
டிஐஜி கேசவதாஸ் கிளம்பினார்.
அவர் போனவுடன் பிரதமர் உளவுத்துறை தலைவரிடம் கேட்டார். “இத்தனை விஷயங்கள் நடந்திருக்கின்றன. எப்படி இதெல்லாம் உளவுத்துறையின் கவனத்திற்கு வராமல் போயிருக்கிறது?”
உளவுத்துறைத் தலைவர் சொன்னார். “ஏதோ சில நாசவேலை சக்திகள் நம்மைத் தாக்கலாம் என்று எங்களுக்குத் தெரிய வந்தது. ஆனால் உள்துறை மந்திரியே சம்பந்தப்பட்டிருப்பார் என்ற அளவுக்கு என்னால் சிந்திக்க முடியவில்லை. ஆனால் சமீப காலமாக அவர் நடந்து கொள்வது கொஞ்சம் சந்தேகமாகத் தான் இருக்கிறது…”
தொடர்ந்து சலீம் என்ற சர்வ தேச வாடகைக் கொலையாளி விவகாரத்தை உள்துறை மந்திரிக்குத் தெரிவிக்கப் போனதை விவரித்து சொன்னார்.
“…நான் அவன் நாசவேலை ஏதோ செய்ய இங்கே வந்திருக்கிறானோ என்று சந்தேகப்பட்டேன். இப்போது யோசித்தால் அந்த அமானுஷ்யனைக் கொல்லக் கூட இருக்கலாம் என்று தோன்றுகிறது. சலீம் விஷயத்தை உள்துறை மந்திரி அப்படியே அமுக்கப் பார்த்தது அந்த சந்தேகத்தை உறுதி செய்கிறது”
வெளியே கிளம்பின அக்ஷயை நிறுத்திய வயதான பிக்கு சொன்னார்.
“அக்ஷய். முதலில் நான் போகிறேன்….”
“எதற்கு?”
“இந்த புத்த விஹாரத்தைத் தேடி ஒரு விருந்தாளி வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிற மாதிரி தெரிகிறது. நான் சென்று சில வார்த்தைகள் பேசா விட்டால் அது மரியாதையாக இருக்காது” சொல்லி விட்டு அவனை ஆழமாகப் பார்த்தார்.
அவர் பார்வையைப் படிக்க முடிந்த அக்ஷய் மறுத்து எதுவும் சொல்வதற்கு முன் அவர் வெளியே சென்று விட்டார்.
புத்த விஹாரத்திலிருந்து ஒரு கிழட்டு பிக்கு வெளியே வருவதைக் கண்ட சலீம் அவரை நோக்கி வர ஆரம்பித்தான்.
கையில் ஜபமாலையைச் சுழற்றியபடியே வந்த மூத்த பிக்கு குனிந்து அவனை மரியாதையுடன் வணங்கினார். “வாருங்கள், வாருங்கள். உள்ளே வாருங்கள்”
சலீம் அவரை ஊடுருவிப் பார்த்தபடி சொன்னான். “நான் என் நண்பன் ஒருவனைப் பின் தொடர்ந்து வந்தேன். அவன் இப்போது உங்கள் புத்த விஹாரத்திற்குள் இருக்கிறான். அவனுக்காகத் தான் காத்திருக்கிறேன். அவனை உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். அவன் பெயர் அக்ஷய். அவனை அமானுஷ்யன் என்றும் கூப்பிடுவார்கள்”
(தொடரும்)