மகேந்திரன் தன் நம்பிக்கையைத் தளர விடுவதாக இல்லை. அவன் அந்த இணை அமைச்சரிடம் கெஞ்சும் தொனியில் சொன்னான். “மாமா நீங்கள் மனம் வைத்தால் முடியாதது இல்லை. ஏதாவது ஒரு வழி சொல்லுங்களேன்.”
“நானே நேரில் போனால் கூட பிரதமரை சந்திக்க முடியாது என்கிற அளவுக்கு எல்லாம் இடைவெளி இல்லாத முக்கியமான நிகழ்ச்சிகள் என்கிற போது என்ன செய்வது சொல்?”
“மாமா…ஒரு வேளை உங்களுக்கு தனிப்பட்ட அவசரம் ஒன்று இருந்து கண்டிப்பாக பிரதமரைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற நிலைமை இருந்தால் நீங்கள் இந்த சூழ்நிலையில் என்ன செய்வீர்கள்?”
இணை அமைச்சர் ஒன்றும் சொல்லவில்லை.
மகேந்திரன் தொடர்ந்து சொன்னான். “மாமா, எந்த சூழ்நிலையிலும் பிரதமரை சந்திக்க முடிந்த யாராவது ஒருத்தர் உதவியை நாட மாட்டீர்களா? அப்படி யாராவது இருந்தால் அவர்களையாவது நாங்கள் சந்திக்க தயவு செய்து ஏற்பாடு செய்யுங்களேன். எங்களுக்காக கேட்கவில்லை மாமா, எத்தனையோ அப்பாவிகளுக்காகக் கேட்கிறோம்..தயவு செய்யுங்கள்”
“நீ புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாய்…. சும்மா தொந்திரவு செய்கிறாய். எதற்கும் யோசிக்கிறேன், எதாவது செய்ய முடிகிறதா என்று பார்க்கிறேன்” சொல்லி விட்டு அவர் போன் இணைப்பைத் துண்டித்தார்.
கடிகார முள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் வேகமாய் நகர நகர அவர்கள் படபடப்பு அதிகரித்தது.
மது கேட்டான். “அவர் சும்மா நமக்காகச் சொல்கிறாரா, இல்லை நிஜமாகவே எதாவது முயற்சி எடுப்பாரா?”
“முடியவே முடியாது என்றால் அதை என்னிடம் முதலிலேயே சொல்லி இருப்பார். யோசிக்கிறேன் என்றால் நிஜமாகவே யோசிக்கிறார் என்று தான் அர்த்தம். பார்க்கலாம்…”
இருபத்தேழு நிமிடங்களில் அவர் போன் செய்து பேசினார். “மகேந்திரன். நான் கட்சி தலைமைக்குழு உறுப்பினர் சதுர்வேதியிடம் பேசி இருக்கிறேன். அவர் இப்போது தன் வீட்டில் தான் இருக்கிறார். அவரைப் போய் பாருங்கள். அவர் மனம் வைத்தால் பிரதமரை சந்திக்க வைக்கலாம். அவர் உங்களை நம்புவது முக்கியம். அவரும் கை விரித்தால் நான் எதுவும் செய்ய முடியாது. இனி நீ எனக்கு போன் செய்யாதே. நான் எடுக்க மாட்டேன். நான் இதுவரை உங்களுக்கு செய்த இந்த உதவி வீரேந்திரநாத்திற்குத் தெரிந்தால், பிறகு அவர் பிரதமரானால் என் அரசியல் வாழ்க்கைக்கே உலை வைத்து விடுவார். ஆனாலும் துணிந்து நான் இதைச் செய்திருக்கிறேன் என்றால் அது உனக்காகவோ, இந்த தேசத்து அப்பாவிகளுக்காகவோ அல்ல. உன் அப்பாவிற்காகத் தான். ஆனால் இதற்கு மேல் இதில் நான் தலையிட விரும்பவில்லை” அவன் நன்றி சொல்வதற்கு முன் அவர் போன் இணைப்பைத் துண்டித்து விட்டார்.
அவர்கள் சதுர்வேதி வீட்டிற்குப் பறந்தார்கள்.
83 வயதான சதுர்வேதி இளைஞராக இருந்த போது சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். சுதந்திர இந்தியாவில் உத்திரப்பிரதேச மாநிலத்திலும் மத்தியிலும் மந்திரி பதவிகளை வகித்தவர். மக்கள் செல்வாக்கு அதிகமில்லை என்றாலும் கட்சியில் செல்வாக்கு மிகுந்தவர். தற்போது மந்திரி பதவி எதுவுமில்லை என்றாலும் மந்திரிகளைத் தேர்ந்தெடுக்கிற அதிகாரமுள்ள கட்சித் தலைமைக் குழுவின் முக்கியமான உறுப்பினராக இருப்பவர்.
இவர்கள் சென்ற போது அவர் வீட்டின் வரவேற்பறையில் கட்சிக்காரர்கள் சிலரிடம் பேசிக் கொண்டிருந்தார். வியர்க்க விறுவிறுக்க அவர்கள் நுழைந்ததைப் பார்த்தவுடன் அவர்கள் யாரென்று அவர் புரிந்து கொண்டது போல இருந்தது. உடனே பேசிக்கொண்டிருந்த ஆட்களிடம் சொன்னார். “சரி நாளைக்கு வாங்க”
திடுதிப்பென்று அவர் அப்படி சொன்னதும் ஏமாற்றமடைந்தாலும் அவர்கள் மறு பேச்சு பேசாமல் எழுந்தனர். அவர்களில் ஒருவன் இவர்களை முறைத்தான். அந்த ஆட்கள் போனவுடன் சதுர்வேதி சொன்னார். “உட்காருங்கள். முதலில் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.”
அவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட போது அவர்களைத் தன் சோடாபுட்டிக் கண்ணாடி வழியே துளைத்து விடுவது போல பார்த்தார். பிறகு அவர்களிடம் எல்லாவற்றையும் ஆரம்பத்திலிருந்து சொல்லச் சொன்னார். அவர்கள் சொல்லச் சொல்ல இரண்டு தடவை கொட்டாவி விட்டார். அவருக்கு அவர்கள் சொல்வது புரிந்ததா என்பதே சந்தேகமாக இருக்கும்படி உணர்ச்சியே இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தார்.
வீரேந்திரநாத்தின் திட்டங்களையும் அதை வெளிப்படுத்தி விடுவான் என்ற பயத்தில் அக்க்ஷயைத் தீவிரவாதியாக விளம்பரப்படுத்தி அழிக்கப் பார்ப்பதையும் விவரமாகக் கேட்ட சதுர்வேதி கடைசியில் சொன்னார். “வீரேந்திரநாத் எங்கள் கட்சியின் விசுவாசமான உறுப்பினர். இந்த நாட்டின் உள்துறை மந்திரி. இப்போதில்லா விட்டாலும் இந்த நாட்டிற்கு இன்னொரு சமயமாவது பிரதமராக வரக்கூடியவர். அவரைப் பற்றி நீங்கள் சொல்வதெல்லாம் நிஜம் தானா? இல்லை அவர் மீது உங்களுக்கு ஏதாவது காழ்ப்புணர்ச்சியா?”
மகேந்திரன் சொன்னான். “அப்படியெல்லாம் இல்லை சார். இது எல்லாம் கற்பனை செய்து சொல்லக்கூடிய விஷயம் அல்ல. அது உங்களுக்கே தெரியும்.”
சதுர்வேதி ஒன்றும் சொல்லாமல் சில வினாடிகள் அவர்களையே பார்த்தார். அவர்களை நம்புவதா வேண்டாமா என்று அவர் இன்னும் தீர்மானிக்காதது போல் இருந்தது. பிறகு கேட்டார். “அந்தப் பையன் பாம்பே நாகராஜன் மகனாய் வளர்ந்தவன் என்று தானே சொன்னீர்கள்”
“ஆமாம் சார்”
சதுர்வேதி மெல்ல எழுந்து தன் தொலை பேசி புத்தகத்தில் ஒரு எண்ணைத் தேடிக் கண்டுபிடித்து அந்த எண்ணிற்கு போன் செய்தார்.
“இப்ராஹிம் நான் சதுர்வேதி பேசறேன்”
“ஐயா என்னை நினைவு வைத்துக் கொள்ள நான் என்ன பாக்கியம் செய்தேன் என்றே புரியவில்லை. பேசி பல வருடங்கள் ஆனதால் என்னை மறந்து விட்டீர்கள் என்றே நினைத்தேன்.”
“அப்படியெல்லாம் இல்லை. கட்சிக்குள் ஏகப்பட்ட பிரச்சினைகள். அதை சமாளிப்பதே பெரும்பாடு ஆகி விடுகிறது. வேறெதற்கும் நேரம் கிடைப்பதில்லை. எனக்கு ஒரு விஷயத்தில் உன் அபிப்பிராயம் தேவைப்படுகிறது..”
“சொல்லுங்கள் ஐயா”
“உன் சிநேகிதன் நாகராஜன் வளர்த்த பையன் இருந்தானே, பெயர் எதோ அக்ஷய் என்றார்கள், அவன் ஆள் எப்படி?”
மறுமுனை மௌனமாகியது.
சதுர்வேதி தொடர்ந்து சொன்னார். “உன் இரண்டு மகன்கள் சாகக் காரணமாக இருந்தவனைப் பற்றிக் கேட்கிறேன் என்று நினைக்காதே. அவன் ஒரு தீவிரவாதி என்று இங்கே போலீஸ் தேடிக் கொண்டிருக்கிறது. அதனால் தான் எனக்கு நம்பிக்கையான உன்னிடம் கேட்கிறேன். சொல் அவன் தீவிரவாதியாக மாறி விட்டான் என்பதில் ஏதாவது உண்மை இருக்குமா?”
இப்ராஹிம் சேட் உணர்ச்சி பூர்வமாகச் சொன்னார். “அவனைத் தீவிரவாதி என்று யார் சொன்னாலும் அல்லா மன்னிக்க மாட்டார் ஐயா! செத்துப் போன என் மகன்கள் மேல் ஆணையாக சொல்கிறேன். அவன் பத்தரை மாற்றுத் தங்கம் ஐயா”
“நன்றி இப்ராஹிம். இன்னொரு நாள் நான் சாவகாசமாகப் பேசுகிறேன்”
இப்ராஹிம் சேட்டிடம் பேசி முடித்த பிறகு சிறிதும் யோசிக்காமல் சதுர்வேதி பிரதமரின் செகரட்டருக்கு போன் செய்தார். “நான் சதுர்வேதி பேசுகிறேன். இப்போது பிரதமர் என்ன செய்து கொண்டிருக்கிறார்.”
“அவர் அருணாசலப்பிரதேச முதலமைச்சருடன் ஏதோ முக்கிய விஷயமாக பேசிக் கொண்டிருக்கிறார். இன்னும் அரை மணி நேரம் அவருக்கு அப்பாயின்மெண்ட் இருக்கிறது ஐயா”
அருணாசலப் பிரதேச முதலமைச்சர் அவர்கள் கட்சிக்காரர் தான். சதுர்வேதி சொன்னார். “உடனடியாக பிரதமருக்குப் போனைக் கொடு. நாட்டு பாதுகாப்பு விவகாரம் பற்றி அவசரமாகப் பேச வேண்டி இருக்கிறது….”
சதுர்வேதி ஆணையை மீற முடியாத செகரட்டரி உடனடியாக பிரதமருக்கு இணைப்பைத் தந்தார்.
பிரதமரின் குரல் மரியாதையுடன் கேட்டது. “ஐயா சொல்லுங்கள்”
சதுர்வேதி தற்போதைய பிரச்சினையை ரத்தினச் சுருக்கமாக ஐந்தே நிமிடத்தில் சொன்னார். அவரைப் பார்த்துக் கொண்டிருந்த மூவரும் அந்தக் கிழவர் முக்கியமான செய்திகள் எதையும் விட்டு விடாமல் அதே நேரத்தில் குழப்பாமல் முழுமையான நிலவரத்தை சுருக்கமாகச் சொன்ன விதத்தை எண்ணி அதிசயித்தார்கள். கொட்டாவி விட்டுக் கொண்டு கேட்ட போதிலும் மனிதர் முழு கவனத்துடன் கேட்டிருக்கிறார்.
கடைசியாக சதுர்வேதி சொன்னார். “…நான் அந்தப் பையனுக்கு வேண்டப்பட்ட மூன்று பேரை அனுப்புகிறேன். கேட்டு என்ன செய்ய வேண்டுமோ செய்யுங்கள். முதலிலேயே நம் ஆட்சி மேல் மக்களுக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. இவர்கள் சொல்வது போல் குண்டும் வெடித்தால் அது நம் நிலைமையை இன்னும் மோசமாக்கி விடும். நமக்கு இப்போது நேரம் அதிகம் இல்லை…. அவர்கள் உடனடியாக அங்கே வருவார்கள். பாதுகாப்பு அதிகாரிகளிடம் சொல்லி வையுங்கள்….”
போனை வைத்து விட்டு சதுர்வேதி மூவரிடமும் சொன்னார். “எதற்கும் உடனடியாக பிரதமரைப் பாருங்கள். இனி என்ன செய்ய வேண்டும் என்று அவர் தான் தீர்மானிக்க வேண்டும். அந்த ஆள் கையாலாகாத ஆள் என்று பெயர் எடுத்திருந்தாலும் முட்டாள் அல்ல. நாளைக்கு மக்களுக்கு பதில் சொல்லப் போவது அவர் தான் என்பதால் ஏதாவது சரியான முடிவெடுப்பார்.”
ஆனந்த் கண்கலங்கியே விட்டான். இந்த அளவு இந்த மனிதர் உதவக்கூடும் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. “உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை சார்”
உணர்ச்சிவசப்பட்டு பேசின அவனைத் தட்டிக் கொடுத்தபடி சதுர்வேதி சொன்னார். “நான் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டவன். மக்கள் எதிர்பார்க்கிற அளவுக்கு நான் மகா உத்தமனாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாட்டையே அழிக்கக் கூடிய சக்தியைக் கண்டிப்பாக ஆதரிக்க மாட்டேன்…சீக்கிரம் போங்கள்”
பிரதமர் சதுர்வேதியிடம் பேசி முடித்த பிறகு அருணாசலப் பிரதேச முதல்வரிடம் சொன்னார். “சதுர்வேதி ஐயா ஒரு முக்கியமான விஷயமாய் பேசினார். நாட்டு பாதுகாப்பு சம்பந்தமான திடீர் பிரச்சினை ஒன்று வந்திருக்கிறது…..”
அருணாசல முதல்வர் உடனடியாக எழுந்து கொண்டார். “சரி சார். மீதியை நாம் கடிதம் அல்லது போன் மூலமாக முடித்துக் கொள்ளலாம். வருகிறேன்”
பிரதமர் உடனடியாக தன் செகரட்டரியை அழைத்து சொன்னார். “உளவுத்துறை தலைவர், டிஐஜி கேசவதாஸ், வெடிகுண்டு இலாக்கா தலைவர் மூன்று பேரையும் கால் மணி நேரத்திற்குள் இங்கே வந்து சேரச் சொல்லுங்கள். தேசியப்பாதுகாப்பு சம்பந்தமான விஷயம் என்று சொல்லுங்கள். அடுத்த அப்பாயின்மெண்டை அந்தக் காரணம் சொல்லியே கேன்சல் செய்யுங்கள்…”
செகரட்டரி ஓடினார்.
பிரதமர் அலுவலகத்தில் இருந்து போன் வந்ததும் டிஐஜி கேசவதாஸ் பிரதமர் பேசப்போவதில் அமானுஷ்யன் விவகாரம் கண்டிப்பாக இருக்கும் என்று யூகித்தார். தீவிரவாதியாக அவனை சித்தரித்து உயிரோடோ, பிணமாகவோ அவனைப் பிடித்துத் தருபவர்களுக்கு தரும் பரிசுத் தொகையை நாளுக்கு நாள் உயர்த்திக் கொண்டே போனதைப் பார்த்து வரும் அவருக்கு அதை யூகிக்க அதிக நேரமாகவில்லை.
பிரதமர் கேட்டால் “எனக்கே முழுவதும் தெரியாது, எல்லாம் எனக்கு அடுத்த நிலையில் இருப்பவர்களுக்குத் தான் தெரியும் என்று சொல்வதை விட வெட்கக்கேடான விஷயம் ஒன்றும் இருக்க முடியாது” என்று நினைத்தவர் உடனடியாக சம்பந்தப்பட்ட தன் அடுத்த நிலை அதிகாரிக்குப் போன் செய்தார்.
“பிரதமர் ஆபிசில் இருந்து போன் வந்திருக்கிறது. உடனடியாக என்னை வரச் சொல்லி இருக்கிறார்கள். எதைப் பற்றி என்று தெரியவில்லை. போனால் தான் தெரியும். எனக்கு அமானுஷ்யன் விவகாரமாக இருக்கலாமோ என்று சந்தேகம் வருகிறது. உண்மையில் என்ன தான் நடக்கிறது?”
இந்த செய்தி மறுமுனைக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது என்பது அவர் திக்கித் திணறி ஏதேதோ அர்த்தமில்லாமல் பேசியதைக் கேட்கையிலேயே தெரிந்தது. எரிச்சலடைந்த கேசவதாஸ் சொன்னார். “நான் முன்பே மந்திரி வீரேந்திரநாத்திடம் சொல்லி இருந்தேன். அவனைப் போன்றவர்கள் அபாயமானவர்கள் என்று. அவர் அலட்சியமாக இருந்து விட்டார். இப்போது தேவை இல்லாமல் நான் பதில் சொல்ல வேண்டி இருக்கிறது. அவனைப் போன்றவர்களை விட்டு வைப்பதும், பற்றி எரியும் தீயை அணைக்காமல் இருப்பதும் ஒன்று தான்…. சரி நம் ரிக்கார்டு படி அவனைப் பற்றி என்ன சொல்ல வேண்டும் சொல்லுங்கள்….”
என்ன எல்லாம் எழுதி வைத்திருக்கிறார்களோ அதை அப்படியே வாசித்துக் காட்டினார் அந்த உயர் அதிகாரி.
“சரி சரி…. நான் அங்கே இருந்து வந்தவுடன் கூப்பிடுகிறேன்” என்று எரிச்சலுடன் சொன்ன கேசவதாஸ் பிரதமர் அலுவலகத்திற்குக் கிளம்பினார்.
கேசவதாஸிடம் பேசி முடித்த அந்த அதிகாரி உடனடியாக மந்திரி வீரேந்திரநாத்திற்கு இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
(தொடரும்)