அமானுஷ்யன் – 112

மறுநாள் காலை தலிபான் தலைவர்கள் மூவரும் அக்‌ஷயைத் தனியாக பேச அழைத்தார்கள். அக்‌ஷயும் போனான். அவர்கள் மூவர் பார்வையும் அவன் மேல் ஆழமாகப் பதிந்திருந்தது. அவனை ஊடுருவிப் பார்ப்பது போல அவர்கள் பார்த்தார்கள்.

“என்ன?” என்று அலட்சியமாகக் கேட்டான் அக்‌ஷய்.

அவனை எப்போதுமே சந்தேகக் கண்ணோடு பார்த்த தலிபான் தலைவன் தான் முதலில் பேசினான். ” அப்துல் அஜீஸ், இரண்டு வருடங்களுக்கு முன் இங்கிலாந்து பத்திரிக்கையாளர்கள் இரண்டு பேரைக் கடத்திக் கொன்றோமே ஞாபகம் இருக்கிறதா?”

“ம்..அதற்கென்ன?”

“அதில் ஒருவன் சாவதற்கு முன் உன்னிடம் ஒன்று சொன்னானே நினைவிருக்கிறதா?”

“இருக்கிறது. ஏன் கேட்கிறாய்?”

சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் எதிர் கேள்வி கேட்டவனை அந்த தலிபான் தலைவன் சந்தேகத்தோடு பார்த்தபடியே சொன்னான்.

“அவன் என்ன சொன்னான் சொல் பார்க்கலாம்”

அக்‌ஷய் பொறுமை இழந்தவன் போல் நடித்துக் கேட்டான். “அந்த பழைய கதை எல்லாம் இப்போது எதற்கு, முதலில் அதைச் சொல்”

அவர்கள் இதை எதிர்பார்த்திருக்கவில்லை என்பது அவர்கள் முகபாவத்தில் இருந்தே தெரிந்தது. அப்துல் அஜீஸாக இருந்தால் பதில் சொல்வான், வேறு நபராக இருந்தால் மென்று விழுங்குவான் என்று எதிர்பார்த்தவர்களுக்கு இந்த மூன்றாவது விதமான எதிர்கொள்ளலை எப்படி எடுத்துக் கொள்வது என்பது விளங்கவில்லை.

ஆரம்பத்தில் இருந்தே அவனை நம்பிய தலிபான் தலைவன் அக்‌ஷயிடம் வெளிப்படையாகவே சொன்னான். “அவனுக்கு நீ அப்துல் அஜீஸ் தானா என்பதில் சந்தேகம். அதனால் தான் அப்படி கேட்கிறான். அவன் கேட்டதற்குப் பதில் தான் சொல்லி விடேன்…”

அக்‌ஷய் எரிமலையாய் வெடித்தான். “சொல்லலாம். ஆனால் அதோடு அவன் சந்தேகம் நிற்காது. அடுத்ததாய் பாகிஸ்தானில் அமெரிக்க தூதரகம் முன் நாம் குண்டு வெடித்தோமே அன்றைக்கு காலையில் என்ன டிபன் சாப்பிட்டோம் என்று சொல்லச் சொல்லுவான். இப்படியே ஒவ்வொன்றாய் கேட்டுக் கொண்டிருப்பான். இந்த முட்டாள்தனமான சந்தேகத்திற்கு எல்லாம் நான் வரிசையாக பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.”

“கொஞ்சம் அமைதியாய் இரு. ஏதோ சந்தேகம் வந்ததால் அவன் சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காக அப்படிக் கேட்டான். அதற்கு நீ இப்படி கோபித்துக் கொள்ளலாமா?”

சிறிது அமைதியடைந்தவன் போல நடித்த அக்‌ஷய் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு கேட்பது போலக் கேட்டான். “எதனால் சந்தேகம் வந்தது என்று நான் தெரிந்து கொள்ளலாமா?”

சந்தேகப்பட்ட தலிபான் தலைவன் நேரடியாகவே சொன்னான். “நீ எங்களுக்குத் தெரிந்த அப்துல் அஜூஸ் அல்ல. நிறையவே மாறி விட்டிருக்கிறாய்”

“இங்கே மாறாமல் இருப்பது யார் அதைச் சொல் முதலில். நான் போன தடவை பார்த்த போது எப்போதும் பான் பராக் உன் வாயில் இருக்கும். இப்போது பான் பராக்கே நீ உபயோகப்படுத்துகிற மாதிரி தெரியவில்லை. அதை வைத்து நீ நீ அல்ல என்று நான் சந்தேகப்பட முடியுமா?”

டாக்டர் அவனுக்கு கான்சர் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது, இனியும் அதை சாப்பிட்டால் அது மரணத்திற்கு அழைப்பு விடுகிற மாதிரி தான் என்று சொன்னதிலிருந்து அவன் பான் பராக் சாப்பிடுவதில்லை. இது மற்ற இரு தாலிபான் தலைவர்களுக்கும் கூட தெரியும். இது போன்ற விஷயங்கள் வெளியே கசிந்தால் அவர்கள் மேலுள்ள பயம் குறைந்து விடும் என்ற எண்ணத்தில் தங்கள் இயக்கத்தினருக்கே கூடத் தெரியாமல் அவர்கள் பார்த்துக் கொண்டார்கள். அதனால் அதை வாய் விட்டுச் சொல்ல அவன் தயங்கினான்.

அவன் பதில் சொல்ல சில வினாடிகள் பொறுத்து அவன் எதுவும் சொல்லாததால் தானே அக்‌ஷய் கோபம் குறையாமல் தொடர்ந்தான். “நான் எதிலாவது மாறியிருக்கிறேன் என்றால் ஒரு காலத்தில் இருந்தது போல் அதிகமாய் உணர்ச்சி வசப்படாமல் இருப்பது இருக்கலாம். என்னை மாதிரி உங்களில் யார் மரணத்தின் விளிம்பு வரை போய் வந்தாலும் கண்டிப்பாக நீங்களும் மாறி இருப்பீர்கள். எல்லாமே எந்த நேரத்திலும் முடிவுக்கு வந்து விடலாம் என்று உணரும் போது உணர்ச்சி வசப்படுவதற்கும், கவலைப் படுவதற்கும் அர்த்தமில்லை என்பது புரியும்…. உனக்கு அப்படி ஒரு நிலைக்குப் போய் வரும் வரை புரியாது. அதைவிடு… நான் அப்துல் அஜீஸாக இல்லாமலிருந்தால் அவன் வேஷத்தில் இங்கு எதற்காக வர வேண்டும்?”

“ஒற்றனாகக் கூட இருக்கலாமல்லவா?”

அக்‌ஷய் மிகப் பெரிய ஜோக்கைக் கேட்டது போல குலுங்கிக் குலுங்கி சிரித்தான். கண்களில் தண்ணீர் வருகிற வரையில் சிரித்து விட்டு சொன்னான். “ஒற்றனாக வந்து ஒருவன் தெரிந்து கொள்ள நம்மிடம் என்ன இருக்கிறது. நாம் இருக்கிற இருப்பிடம் தெரியாதா நம் எதிரி நாடுகளுக்கு? நாம் அடிக்கடி இந்த வறண்ட மலைப்பகுதியில் இடம் மாறிக் கொண்டே இருந்தாலும் குறிப்பிட்ட இந்த சுற்று வட்டாரத்திலேயே தானே இடம் பெயர்கிறோம். நாம் சமீப காலத்தில் எந்தத் தாக்குதலிலும் ஈடுபடவில்லை என்பதால் இப்போது நம்மை விட அல்கொய்தா போன்ற அமைப்புகளின் மேல் தான் எதிரிகளின் அதிக கவனம் இருக்கிறது. அப்படி இருக்கையில் எந்த ஒற்றனும் இப்போது இங்கே வரக் காரணம் என்ன இருக்கிறது? அதிலும் அல்லா கொடுத்த மூளையைக் கொஞ்சம் நீ உபயோகப்படுத்தி யோசித்திருந்தால் உனக்கு சந்தேகம் வந்திருக்காது…”

“எப்படி உபயோகப்படுத்தி யோசிக்கச் சொல்கிறாய்?”

“நானாகவா இங்கே வந்தேன். இயற்கையோடு இயற்கையாக நான் வளர்ந்த இந்தப் பகுதிகளில் சுற்றலாம் என்ற எண்ணத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த போது நீங்களாகத் தானே என்னைப் பார்க்க வந்து இங்கே கூட்டிக் கொண்டு வந்திருக்கிறீர்கள்?”

அவன் சொன்னதில் இருந்த உண்மைகள் அவர்களை யோசிக்க வைத்தது போல் இருந்தது. அவர்கள் ஆழ்ந்த யோசனையுடன் அவனைப் பார்க்க அவன் எழுந்து வெளியே போக முற்பட்டான்.

“எங்கே போகிறாய்?”

“எங்கேயோ போகிறேன். எனக்கு மனம் சரியில்லை. சிறிது நாள் இப்படியே சுற்றி விட்டு தேவைப்படுகிற போது ஏதாவது செய்கிறேன். நான் ஆரம்பத்தில் இருந்தே அப்படித்தானே…”

“அஜீஸ் நான் இன்றைக்கு இரவு வீரேந்திரநாத்தை சந்திக்கப் போகும் போது நீயும் வா என்றேனே நீ கூட வருவதாய் ஒப்புக் கொண்டாயே”

“அதெல்லாம் இவன் என்னை சந்தேகப்படும் முன்பு. இப்போதைய மனநிலையில் உங்கள் எந்த வேலையிலும் மூக்கை நுழைக்க எனக்கு மனம் இல்லை. நீங்கள் எல்லோரும் போய் அந்த வேலையை வெற்றிகரமாக முடித்து விட்டு வாருங்கள்.”

“அவன் சொன்னதைப் பெரிதுபடுத்தாதே. வீரேந்திரநாத்தை சந்தித்துப் பேசும் போது நீ இருந்தால் நன்றாக இருக்கும், வா…..”

“ஆளை விடு நண்பனே. ஒரு வேளை நான் அங்கே வந்தால் அதை வேவு பார்க்கத் தான் இங்கே வந்தேன் என்று கூட இவன் நினைக்க ஆரம்பிக்கலாம்…”

அவர்கள் அவனை விடுவதாயில்லை. அக்ஷய் மனம் மாற மேலும் அரை மணி நேரம் எடுத்துக் கொண்டான். கடைசியில் கேட்டான். “இப்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறாய்?”

“நீயும் எங்களுடன் வா”

அக்‌ஷய் சம்மதம் என்று களைப்புடன் தலையசைத்தான். “ஆனால் நான் ஒன்றை இந்த நேரத்திலும் சொல்கிறேன் நண்பனே. எனக்கென்னவோ அந்த இந்திய மந்திரி மேல் நம்பிக்கை இல்லை. அவர் வேலை முடிந்த பின் வசதியாக நம்மை மறந்து விடும் வாய்ப்பு இருக்கிறது.”

“ஒரு தலிபான் இயக்கத்திற்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டு எந்த மனிதனாவது குடும்பத்துடன் சந்தோஷமாக இருந்து விட முடியும் என்று நினைக்கிறாயா நண்பனே”

“நான் நினைக்கவில்லை. ஆனால் அந்த ஆள் நினைக்கலாம்…”

“அதற்கு என்ன செய்யலாம் என்கிறாய்?”

“அந்த ஆளுடன் பேசுவதை வீடியோ எடுத்து விடலாம் என்கிறேன் ஒரு வேளை அந்த ஆள் பேச்சு மாறினால் அந்த டேப்பை பத்திரிக்கைகளுக்கும் டிவி சேனல்களுக்கும் அனுப்பி விடுவதாக நாம் பயமுறுத்தலாம். நாம் ஏதாவது செய்து விடுவோமோ என்பதை விட ஆட்சி போய் விடுமோ என்கிற பயம் அதிக வலிமையுடன் வேலை செய்யும்”

அவர்கள் மூவரும் அவனை மரியாதையுடன் பார்த்தனர். அவன் முன்யோசனை அவர்களுக்குப் பிடித்திருப்பது போலத் தெரிந்தது. சந்தேகப் பட்ட தலிபான் தலைவன் கூட தன் சந்தேகத்தை ஒதுக்கி விட ஆரம்பித்திருந்தான்.

அக்‌ஷய் கேட்டான். “அவருடன் நாம் சந்திக்கும் இடம் அவர் தேர்வு செய்யும் இடமா, இல்லை நாம் தேர்வு செய்யும் இடமா?”

“நாம் தேர்வு செய்திருக்கும் இடம் தான்….”

“அப்படியானால் நல்லதாய் போயிற்று. அதற்கு ஏற்பாடு செய்யும் படி நம் ஆட்களிடம் சொல்லலாம். ஆனால் இது பரம ரகசியமாக இருக்க வேண்டும்…”

அப்படியே ஏற்பாடு செய்யப்பட்டது.

***************

வீரேந்திரநாத் கையில் அந்த பென் டிரைவ் கிடைத்த பிறகு தான் அவர் நிம்மதி அடைந்தார். எல்லோரையும் வெளியே அனுப்பி விட்டு அந்த பென் டிரைவை அவருடைய கம்ப்யூட்டரில் போட்டுப் பார்த்தார். அவர் அந்த தலிபான் தலைவர்களைச் சந்தித்த அந்த நிகழ்ச்சி முழுவதும் அதில் பதிவாகி இருந்தது. முழு வீடியோவும் அவரையே மையப்படுத்தி இருந்தது. அன்று அவரிடம் அதிகமாகப் பேசியதெல்லாம் அப்துல் அஜீஸ் என்ற வேடத்தில் வந்த அமானுஷ்யன் தான். அவருடைய அரசியல் வாழ்வை அஸ்தமிக்க என்ன எல்லாம் அவர் சொல்ல முடியுமோ அதை எல்லாம் அவர் வாயாலேயே சொல்ல வைத்து அதை வீடியோ எடுக்க வைத்திருந்தான். படபடக்கும் மனத்துடன் அந்த வீடியோவைப் பார்த்தார்.

ஓரிடத்தில் அமானுஷ்யன் அவரிடம் கேட்டான். “சார் எந்த இந்திய அரசியல்வாதியும் வாய் விட்டு சொல்ல முடியாத வாக்குறுதியை எங்களுக்கு நீங்கள் தந்து இருக்கிறீர்கள். காஷ்மீரத்தை விட்டுக் கொடுக்கிறோம் என்று. அதை உங்கள் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா?”

அவர் தன் திட்டத்தைப் பெருமையுடன் சொன்னார். “அப்துல் அஜீஸ். அந்த விஷயத்தில் நீங்கள் என்னை முழுவதும் நம்பலாம். நான் ஆட்சிக்கு வந்தவுடன் காஷ்மீர் பள்ளத்தாக்கில் நீங்கள் சில கலவரங்களை ஏற்படுத்த நான் உதவுகிறேன். பின் பேச்சு வார்த்தைக்கு நானே வருகிறேன். மக்கள் கருத்தை உருவாக்க பல பிரபல பத்திரிக்கையாளர்களையும் என்னால் வாங்கி விட முடியும். அமைதி நீடிக்க வேறு வழி இல்லாமல் காஷ்மீரத்தை விட்டுக் கொடுப்பதாக நான் முடிவெடுக்க வெளிநாடுகளும் எனக்கு அறிவுறுத்துகிற நிலைமைகளை நானே ஏற்படுத்துகிறேன். கடைசியில் வருத்ததுடன் அதை செய்வது போல செய்து முடிக்கிறேன். பாகிஸ்தான் உட்பட உலக நாடுகள் என்னைப் பாராட்டும்… யார் கண்டது, அமைதிக்கான நோபல் பரிசு கூட அடுத்த வருடம் எனக்குக் கிடைக்கலாம்…” சொல்லி விட்டு அவர் சிரித்த சிரிப்பை இன்று அவரால் ரசிக்க முடியவில்லை.

அவன் அவரிடம் கேட்டான். “சார் நாங்கள் உங்கள் நாட்டினுள்ளே நுழைந்து டெல்லியில் வெடிகுண்டுகள் வைப்பது பெரிய விஷயமில்லை. ஆனால் உங்கள் ரகசிய இலாக்காக்கள் எங்கள் செயல்களை மோப்பம் பிடித்து எங்களைத் தடுத்து விட்டாலோ, பிடித்து விட்டாலோ என்ன செய்வது?”

“நிர்வாகத்தில் முக்கியமான இலாக்காக்கள் அனைத்திலும் மேல் மட்டத்தில் என் ஆட்கள் தான் இருக்கிறார்கள். முக்கியமான எல்லாத் துறையிலும் எனக்கு சாதகமான என் ஆட்களை தலைமைப் பொறுப்பில் வைத்திருக்கிறேன் அல்லது இரண்டாம் இடத்திலாவது வைத்திருக்கிறேன். இதை நான் சில ஆண்டுகளாகவே திட்டமிட்டு செயல்படுத்தி வெற்றிகரமாக முடித்திருக்கிறேன். போலீஸ், சிபிஐ, உளவுத்துறை மூன்றிலுமே இரண்டாம் நிலையில் என் ஆட்களே இருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியாமல் ஒன்றும் அங்கே நடக்காது. வெகு சீக்கிரம் அவர்கள் முதலிடத்திற்கும் வருவார்கள். அதனால் அதைப்பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்….”

இந்த வீடியோவில் இருப்பது நானல்ல, போலி என்று சொல்ல முடியாதபடி விலை உயர்ந்த நுட்பமான கருவி மூலம் தெளிவாகப் படம் எடுத்திருந்தார்கள். அவர் தோற்றமும், பேச்சும் கச்சிதமாகப் படம் எடுத்திருந்தார்கள். அவர் தர்மசங்கடத்துடன் நெளிந்தார்.

அவர் பேசிக் கொண்டே இருக்கையில் அவர் பின்னால் பாதுகாவலுக்கு நின்றிருந்த அதிகாரி அவர் தோளைத்தொட்டு ஏதோ சொல்லக் குனிந்ததும் குனிந்தவர் மின்னல் வேகத்தில் அமானுஷ்யனால் தாக்கப்பட்டு சரிந்ததும் கூட அதில் பதிவாகி இருந்தது. படபடத்த இதயத்துடன் அந்த வீடியோவைப் பின்னோக்கி ஓட்டி மறுபடியும் பார்த்தார். சில வினாடிகள் தான் அந்த நிகழ்வு நீடித்தது. அமானுஷ்யனின் அமானுஷ்யத்தனத்தின் முதல் அனுபவம் அவருக்கு அப்போதே கிடைத்து விட்டிருந்தது.

அவருடைய பாதுகாவலர் அவர்கள் வீடியோ எடுப்பதை எப்படியோ பார்த்திருக்க வேண்டும் என்றும், அதைச் சொல்லத் தான் குனிந்திருக்க வேண்டும் என்றும் பின்னர் தான் அவர் ஊகிக்க முடிந்தது. அந்த நேரத்தில் அவர் துப்பாக்கி மூலம் தலிபான் தலைவர்களைச் சுட்டுக் கொல்ல குனிவதாக நினைத்து தான் அவரைத் தாக்கியதாக அப்போது அமானுஷ்யன் சொன்னான். விழுந்து கிடக்கும் பாதுகாவலரை ஒன்றும் புரியாமல் பார்த்த வீரேந்திரநாத் “பரவாயில்லை… அவரை எழுப்புங்கள்” என்று பொதுவாகச் சொன்னார். எல்லோரும் அவரை எழுப்பி உட்கார வைத்தார்கள். உடலில் எந்தக் காயமும் இருக்கவில்லை, உயிர் இருந்தது என்றாலும் அவர் கோமா நிலையில் இருப்பது போல எந்த உணர்வும் இல்லாமல் இருந்தார்.

எல்லோரையும் போல ஆச்சரியத்துடன் அமானுஷ்யனும் அந்த ஆளைப் பார்ப்பதும் அதில் பதிவாகி இருந்தது. இப்போது நினைத்தாலும் வீரேந்திரநாத்திற்கு திக்கென்று தான் இருந்தது. அவருடன் பேசிக் கொண்டே இருந்த அமானுஷ்யன் எப்படி ஒருசில வினாடிகளில் அந்தப் பாதுகாவலரை கோமா நிலைக்குப் போக வைத்தான் என்பது புதிராகவே இருந்தது. அவன் நகர்ந்தது போலவே தெரியவில்லை. ஆனால் கண்மூடித் திறப்பதற்கு முன் அவன் அருகில் அதை முடித்து விட்டு அமைதியாக நின்றிருந்தான். அவனைப் பின்னர் தலிபான்கள் சைத்தான் என்று அழைத்தது நினைவுக்கு வந்தது. உண்மையில் அவன் சைத்தான் தான். அந்த சைத்தான் சாகிற வரை அவருக்கு நிம்மதியில்லை. இந்த பென் டிரைவ் கிடைத்தது போல அவன் பிணமும் அவருக்குப் பார்க்கக் கிடைத்து விட்டால் அவர் இனி எதைப்பற்றியும் கவலைப்படத் தேவை இல்லை….

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top