அமானுஷ்யன் – 110

அந்த தலிபான் தலைவன் அக்‌ஷயைத் தங்கள் இடத்திற்குக் கூட்டிக் கொண்டு போனான். மற்ற இரண்டு தலிபான் தலைவர்களும் முதலாமவனைப் போல் அல்லாமல் குறைவாகப் பேசுபவர்களாகவே இருந்தார்கள். அவர்களில் ஒருவன் அக்‌ஷையை மிகவும் கூர்ந்து கவனித்தபடியே இருந்தான். அக்‌ஷய் அவனிடம் சிறிதும் தயக்கமில்லாமல் புன்னகையுடன் கேட்டான். “ஏன் அப்படிப் பார்க்கிறீர்கள்?”

“இந்த தடவை உன்னிடம் நிறையவே மாற்றம் தெரிகிறது” சொன்னவன் அவனை இன்னும் கூர்மையாகப் பார்த்தான்.

ஆனால் அக்‌ஷய் முகத்தில் இருந்த புன்னகையில் இம்மியும் குறையவில்லை. “மாற்றம் ஒன்றே மாறாதது அல்லவா?”

அக்‌ஷயைக் கூட்டி வந்த முதலாவது தலைவன் சிரித்துக் கொண்டே சொன்னான். “பேச்சில் மட்டும் உன்னை யாரும் ஜெயித்து விட முடியாது”

“இனி என்ன செய்வதாய் உத்தேசம்?” இன்னொரு தலைவன் கேட்டான்.

“இப்போதைக்கு ஒரு திட்டமும் இல்லை. இனி மேல் பார்க்க வேண்டும்”

அக்‌ஷய் அங்கு இரண்டு நாட்கள் தங்கினான். பழைய கட்டிடங்கள் மட்டுமே இருந்த பகுதியில் தங்கும் வசதி பெரிதாக இல்லை என்றாலும் அனைவரும் அதில் எந்த வருத்தமும் இல்லாமல் வாழ்ந்து வந்ததை ஆச்சரியத்துடன் அக்‌ஷய் கவனித்தான். அடிக்கடி இடம் மாறக்கூடிய அவர்கள் இதை விட மோசமான இடங்களில் வாழ்ந்திருக்கவும் கூடும் என்பதிலும் அவனுக்கு சந்தேகமில்லை. அக்‌ஷயை அந்த இரண்டு நாட்களில் வேறுபல தலிபான் வீரர்களும் வந்து பார்த்தார்கள். அப்துல் அஜீஸ் என்ற மனிதனிடம் அவர்களுக்கு இருந்த ஒரு “ஹீரோ வர்ஷிப்” அவனிடம் அவர்களை வரவழைத்து இருக்கிறது என்பதை அக்‌ஷய் புரிந்து கொண்டான்.

அக்‌ஷய் அவர்களிடம் பொதுப்படையாகப் பேசியே சமாளித்தான். ஆனால் சொல்லி வைத்தது போல் அத்தனை பேரும் ஒரே கேள்வியை அவனிடம் கேட்டார்கள். “கடைசியாக எதிரிகள் தாக்குதலில் இருந்து எப்படித் தப்பித்தீர்கள்?”

அவன் என்ன பதில் சொல்கிறான் என்பதை அறிய அந்த தலிபான் தலைவர்கள் கூட ஆர்வம் காட்டியது தெரிந்தது. ஆனால் அக்‌ஷய் அதற்கு பதில் சொல்ல விருப்பமில்லை என்பதை மறைக்கவில்லை. “சில ரகசியங்கள் வெளியே தெரியாமல் இருக்கும் வரை நல்லது. அதுவே என் எதிர்காலத்திற்கும் பாதுகாப்பு” என்று சிரித்துக் கொண்டே சொன்னான்.

“சொன்னால் நாங்களும் அதைப் பயன்படுத்தலாமல்லவா?”

அவர்களிடம் அக்‌ஷய் சொன்னான். “எப்போது தாக்குதல் வரும் என்று தெரியாதது தான் நம் வாழ்க்கை. வரும் போது இருக்கும் சூழ்நிலைகளை நாம் முன்கூட்டியே யூகிக்க முடியாது. வரும் போது நமக்குக் கிடைக்கும் துரும்பு கூட நமக்கு ஆயுதம் தான். கண நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்து அதைச் செய்து தப்பிக்க வேண்டும். தப்பித்த பிறகு அதைப் பற்றி விவரிக்கிறது அனாவசியமான வேலை…”

அவன் பதில் எல்லோரையும் கவர்ந்தது. அவனை மிகுந்த மரியாதையோடு அந்த தலிபான் தலைவர்களில் இருவர் பார்த்தனர். சந்தேகக் கண்ணோடு ஆரம்பத்தில் பார்த்தவன் மட்டும் அமைதியாக இருந்தான். அங்கேயே இரண்டு நாட்கள் அவர்களுடன் தங்கியும் அவர்களிடமிருந்து அவன் தேடி வந்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. அவனாக அதைப் பேசி அவர்களுடைய சந்தேகத்தைக் கிளப்ப விரும்பவில்லை.

இரண்டு நாட்கள் கழித்து அவர்களில் முக்கியமானவர்கள் எல்லாம் ஒரு ரகசிய இடத்திற்குப் பயணித்தார்கள். ஜீப்பில் இரண்டு மணி நேரம் பிரயாணம் செய்து ஓரிடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். “எங்கே போகிறோம்?” என்று அவன் கேட்டதற்கு “முக்கிய கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்திருக்கிறோம்” என்று மட்டும் சொன்னார்கள். அக்‌ஷயாக அதற்கு மேல் விசாரிக்கவில்லை. அந்தக் கூட்டத்திற்கு பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா நாடுகளில் இருந்தும் ஆட்கள் வந்திருந்தார்கள். வந்திருந்தவர்களில் பலர் அக்‌ஷயைப் பார்த்தவுடன் ஆச்சரியப்பட்டார்கள். சிலர் சந்தோஷப்பட்டார்கள். அப்துல் அஜீஸை நேரில் பார்க்க முடிந்த திருப்தி அவர்களிடம் தெரிந்தது.

ரகசிய இடத்தில் நடந்த அந்தக் கூட்டத்தில் முதலில் அமெரிக்காவிற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் தலைக்கனத்தைக் குறைக்க ஏதாவது விரைவில் செய்தாக வேண்டும், இல்லா விட்டால் புனிதப் போராளிகளின் தைரியம் குறைந்து விடக்கூடும் என்று சிலர் தெரிவித்தார்கள். சிலர் எந்த சக்தி புனிதப் போராளிகளின் தைரியத்தையும், உறுதியையும் குறைத்து விட முடியாது என்று சொன்னார்கள். அதைத் தொடர்ந்து சில நிமிடங்கள் சர்ச்சைகள் தொடர்ந்தன.

அமெரிக்காவிற்கு அடுத்ததாக இந்தியாவிற்கு கண்டனம் தெரிவித்தார்கள். காஷ்மீர் பிரச்னை பற்றி பேசினார்கள். சிலர் பாகிஸ்தான் அரசின் இரட்டை வேடத்தை சாடினார்கள். இப்படியே மற்ற நாடுகள் பற்றியும் பேச்சு வந்தது. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பேசிய பேச்சுகளில் அவரவர் கருத்துகளை ஆணித்தரமாகச் சொன்னார்கள். அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி பல கருத்துகள் பரிமாறப்பட்டன.

கடைசியில் அக்‌ஷயை முதலில் சந்தித்த தலிபான் தலைவன் பேசினான். பேச்சு மற்றவர்களின் கருத்துக்களுக்கு பதிலாக இருந்தது. முடிவில் சொன்னான். “… உங்கள் கருத்துகளை எப்படி செயலாக்குவது என்பது பற்றி நாங்கள் ஆலோசித்து முடிவெடுத்து பின்னர் தெரிவிக்கிறோம். இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினர் ஒருவர் வந்துள்ளார். யார் என்று உங்களுக்கே தெரியும். அவர் நம் இயக்கத்தில் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் சுதந்திரமாக இயங்குபவர். எமனையே ஏமாற்றி விட்டு வந்தவர்……” நிறைய அடைமொழிகளுடன் அப்துல் அஜீஸைப் புகழ்ந்து விட்டு அப்துல் அஜீஸ் பேசுவார் என்று கடைசியில் அறிவித்தான்.

அக்‌ஷய் பேச எழுந்தான். பலத்த கைதட்டல் கேட்டது. அக்‌ஷய் தூய்மையான உருதுவில் பேச ஆரம்பித்தான். அவர்கள் திட்டிய நாடுகளை எல்லாம் அவனும் திட்டினான். அவர்கள் திட்டிய தலைவர்களை அழித்து விட வேண்டும் என்று அவனும் வீர வசனம் பேசினான். கடைசியில் காஷ்மீர் பிரச்சினையைப் பற்றி தீவிரமாகப் பேசி காஷ்மீர் சுதந்திரம் பெறுவது முக்கியம் என்று விளக்கினான். இடையிடையே கவிதைகள் இழையோட அவன் பேசிய பேச்சு இடையிடையே பெரும் கைதட்டல்கள் பெற்றன.

அந்த தலிபான் தலைவன் அன்றிரவு அவனைத் தனியாக அழைத்துச் சொன்னான். “உன்னைப் போன்ற பேச்சாளர்கள் நான்கு பேர் நம் இயக்கத்தில் இருந்தால் போதும் நாம் உலகத்தில் அசைக்க முடியாத சக்தியாகி விடுவோம். புதிய இளைஞர்களை நம் இயக்கத்தின் தீவிர உறுப்பினர்களாக மாற்ற உன்னைப் போன்ற பேச்சாளர்கள் தான் தேவை….”

அக்‌ஷய் சொன்னான். “எனக்கு பேச்சை விட செயல் தான் நரம்புகளை முறுக்கேற்றுகிறது. மூளைக்கு முழு வேலை கொடுக்கிறது. அதனால் அது மாதிரி வேலை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்”

அவனிடம் உடனடியாக எதையும் சொல்லாமல் சிறிது நேரம் அவனையே பார்த்து விட்டு தலிபான் தலைவன் சொன்னான். “நீ இந்த அளவு காஷ்மீர் பிரச்சினையில் ஆர்வம் காட்டுவதால் ஒரு இரகசியம் சொல்கிறேன். இன்னும் சீக்கிரமாகவே காஷ்மீர் பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்து விடும்”

அக்‌ஷய் ஏளனமாகச் சொன்னான். “கவிஞன் நானாக இருந்தாலும் என்னை விட உனக்கு கற்பனை அதிகமாக இருக்கிறது நண்பனே…”

தலிபான் தலைவன் சிரித்துக் கொண்டே சொன்னான். “உண்மையைத் தான் சொல்கிறேன்.”

“எப்படி காஷ்மீர் பிரச்சினை தீரும். இந்தியாவே மனம் மாறி நமக்கு காஷ்மீரத்தைத் தந்து விடுமா?”

“அப்படித் தருவதற்கான சூழ்நிலைகள் இனி உருவாக ஆரம்பிக்கும்”

“கனவு காண எல்லோருக்கும் உரிமை உண்டு” அக்‌ஷய் சொல்லி விட்டுச் சிரித்தான்.

தான் சொல்வதை இவன் நம்ப மாட்டேன்கிறானே என்று தலிபான் தலைவனுக்கு லேசாகக் கோபம் வந்தது போலிருந்தது. லேசாக முகம் மாறியது. “இந்தியாவின் அடுத்த பிரதமர் நமக்கு உறுதியளித்து விட்டார்”

இதென்ன புதிய கதை என்பதைப் போல அக்‌ஷய் அவனைப் பார்த்தான்.

“வீரேந்திரநாத் தெரியுமா உனக்கு?” தலிபான் தலைவன் கேட்டான்.

“இந்தியாவின் உள்துறை மந்திரி”

“அந்த ஆள் தான் அடுத்த பிரதமர் ஆகிறார். அவர் அப்படி ஆக நாம் உதவப் போகிறோம். பதிலுக்கு அவரும் நமக்கு உதவப் போகிறார்…..”

அக்‌ஷய் தன் அதிர்ச்சியை சிறிதும் வெளிக்காட்டாமல் சொன்னான். “நண்பனே. யாரை வேண்டுமானாலும் நம்பு. ஆனால் அரசியல்வாதியை மட்டும் நம்பாதே.”

“இந்த ஆளைக் கண்டிப்பாக நம்பலாம். இந்த ஆள் பிரதமராக பெற்ற தாயை விலைக்குக் கொடுப்பான்.”

அக்‌ஷய் கேள்விக்குறியோடு தலிபான் தலைவனைப் பார்க்க தலிபான் தலைவன் விளக்கமாய் சொல்ல ஆரம்பித்தான்…..

*****************

உள்துறை மந்திரி வீரேந்திரநாத் அந்த பென் டிரைவிற்காகப் பொறுமை இல்லாமல் காத்திருந்தார். வர வர அவருக்கு பொறுமையாக இருப்பது பெரும் கஷ்டமாக இருக்கிறது. அவருடைய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய காலம் மிக அருகில் இருக்கிறது. அது மட்டும் நடந்து விட்டால் இந்த நாட்டின் பிரதமர் நாற்காலியில் அவர் கண்டிப்பாக அமர்ந்து விடுவார். அதன் பிறகு அவர் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. எல்லாம் கச்சிதமாக நடக்கப் போகிறது என்று போட்ட அப்பழுக்கற்ற திட்டத்தில் அமானுஷ்யன் நுழையாமல் இருந்திருந்தால் எல்லாமே கச்சிதமாக நடந்து முடிந்திருக்கும். அவன் நினைவு வந்தவுடன் “எல்லாம் விதி” என்று சொல்லி அவர் பெருமூச்சு விட்டார்.

அதே விதி தான் அரசியலில் நுழைந்த சமயத்தில் அவருக்கு நிறையவே சாதகமாக இருந்தது. ஒவ்வொரு படியாக மின்னல் வேகத்தில் அவரை ஏற்றியதும் அதே விதி தான். இனிமையான பேச்சு, யாரையும் மரியாதையாக நடத்தும் விதம், அரசியலில் கவனமாகக் காய்களை நகர்த்தும் விதம், யாரையும் தனக்கு ஏற்ற மாதிரி உபயோகப்படுத்திக் கொள்ள தயங்காத மனம், மனசாட்சியை என்றோ இழந்திருந்த நிலை- எல்லாமாக விதியுடன் சேர்ந்து அவரை மத்திய மந்திரி பதவி வரை அழைத்து வந்திருந்தது. கடந்த தேர்தலின் முடிவில் பிரதமராகக் கூட அவர் ஆகியிருப்பார். ஆனால் விதி அடுத்த மனிதருக்கு சாதகமாக செயல்பட ஆரம்பித்தது.

கட்சித் தலைமை பிரதமர் பதவிக்கு அவர் பெயரையும் இன்னொருவர் பெயரையும் பரிசீலித்த போது தலைமைக் குழுவில் பலரும் இன்னொருவரையே சிபாரிசு செய்தனர். வீரேந்திரநாத்திற்கு எதிராக ஒரு தலைவர் வெளிப்படையாகச் சொன்னார். “இந்த ஆள் பேராசை பிடித்தவர். பேச்சு கண்ணியமாய் இருக்கும். ஆனால் செயல் எதிர்மாறாக இருக்கும். இந்த ஆளைக் கட்டுப்படுத்துவது கஷ்டம். பதவியைக் கொடுத்து விட்டால் கண்டிப்பாக நமக்கு அடங்க மாட்டார். நமக்கு இப்போது வேண்டியது நாம் சொன்னபடி கேட்கக் கூடிய, அதே நேரம் மக்களிடம் நல்ல பெயர் வைத்திருக்கக் கூடிய ஆள். அதற்கு வீரேந்திரநாத் சரிவர மாட்டார்”

அதைப் பலரும் அங்கீகரிக்க பிரதமர் பதவி கையை விட்டுப் போனது. ஆனால் ஒரேயடியாக ஒதுக்கி விட முடியாத வீரேந்திரநாத்திற்கு உள்துறை மந்திரி பதவி கிடைத்தது. ஏமாற்றமாக இருந்தாலும் அவர் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் பிரதமர் பதவிக்கு வந்தவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு சரிய ஆரம்பித்த போது, எந்த முடிவையும் உறுதியாக எடுக்கத் தெரியாதவர், நிர்வாகத் திறமை போதாதவர் என்றெல்லாம் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து கருத்துகள் வர ஆரம்பித்த போது வீரேந்திரநாத்திடம் பிரதமர் பதவி ஆசை மீண்டும் வலுப்பெற ஆரம்பித்தது. கட்சித் தலைமையிடம் அது பற்றிப் பேசிப் பார்த்தார். அவர்களிற்கும் பிரதமர் மீது இருந்த பழைய நம்பிக்கை போக ஆரம்பித்திருந்தது. ஆனாலும் உடனடியாக அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் “பொறுங்கள் பார்ப்போம்” என்று சொல்லும் நிலைக்கு வந்திருந்தார்கள். பிரதமர் பதவி இப்போது ஆட்டம் கண்டு விட்டது என்று உணர்ந்ததும் ஏதாவது செய்து அந்த ஆளை அந்தப் பதவியில் இருந்து தள்ளிவிட்டு அந்த பதவியில் அமர ஆசை அவருள் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. அப்படி என்ன செய்வது என்று அவர் அலைபாய்ந்து கொண்டு இருந்த சமயத்தில் தான் தலிபான்கள் தொடர்பு கிடைத்தது. அவருக்கு ஒரு வழி பிறந்தது.

**********

அமானுஷ்யனைத் தேடி வந்த சலீம் அந்த நெடுஞ்சாலையின் வலது பக்கம் இருந்த ஒற்றையடிப்பாதையில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பார்த்தான். பாதையில் மரங்கள் தெரிந்ததே தவிர வேறு எதுவும் தெரியவில்லை. அமானுஷ்யன் இந்த வழியாகப் போயிருப்பானோ? சிந்தனையுடன் மறுபடி நெடுஞ்சாலையைப் பார்த்தான். நெடுஞ்சாலை நீண்டதே தவிர வேறு எந்த பாதைகளும் சுற்றும் முற்றும் இல்லை. மறுபடி அந்த ஒற்றையடிப் பாதையை ஆழ்ந்த யோசனையுடன் பார்த்த போது தான் சற்று தள்ளி இருந்த புதரில் ஏதோ ஒட்டிக் கொண்டிருந்து காற்றில் அசைந்து கொண்டிருந்தது தென்பட்டது. அருகில் சென்று பார்த்தான். அது அமானுஷ்யன் வைத்துக் கொண்டிருந்த ஒட்டுத்தாடி!

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top