“ஹலோ”
“ஊம்… சொல்லுங்கள்… அவன் பிணம் கிடைத்ததா?”
“இல்லை, சார். அவன் பிழைத்திருந்தால் அந்த புத்த விஹாரத்தில்தான் இருந்திருக்க வேண்டும் என்று நினைத்து அங்கே பத்து பேரை அனுப்பினேன். அங்கே இரண்டாவது தடவை போனதால் அவங்களுக்கே பயம் வந்து அவர்களின் பாதாள அறையைக் கூடத் திறந்து காட்டியிருக்கிறார்கள்…அங்கேயும் உள்ளே போய் ஆட்கள் பார்த்திருக்கிறார்கள். அவன் இல்லை…. ஏதாவது விலங்கு அவன் உடம்பை எடுத்துக் கொண்டு போய் இருக்கும் என்று என் ஆட்கள் சந்தேகப்படுகிறார்கள்….”
மறுபுறத்தில் இருந்து ஏளனமாக குரல் வந்தது. “உங்கள் ஃபோன் கால் என்று தெரிந்தவுடன் நல்ல சேதிதான் வந்திருக்கும் என்று நினைத்தேன்…..”
CBI மனிதன் தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு சொன்னான். “நல்ல செய்தியை நிதானமாகச் சொன்னாலும் பரவாயில்லை. கெட்ட செய்தியைத்தான் உடனடியாகத் தெரிந்து கொள்வது புத்திசாலித்தனம். ஆச்சார்யா வீட்டில் ஆனந்துக்கு ஏதோ ஒரு தடயம் கிடைத்தது போல் இருக்கிறது..”
“அப்படி இருக்க வாய்ப்பில்லையே… என்ன என்று தெரிந்ததா?”
“ஜெயினும் அவனும் வாயைத் திறக்க மாட்டேன்கிறார்கள். ஆனால் ஏதோ கிடைத்திருக்கிறது என்பது மட்டும் உறுதியாய்த் தெரிகிறது. நாம் ஏதாவது உடனடியாகச் செய்ய வேண்டும்… இல்லை என்றால் சிக்கலாக வாய்ப்பிருக்கிறது”
இந்த விஷயம் மறுபக்கத்தை யோசிக்க வைத்தது போல் தெரிந்தது. சில வினாடிகள் கழித்து “அதற்கு சீக்கிரம் ஒரு ஏற்பாடு செய்கிறேன்….”
“ஆனந்த் நாளைக்கு பெங்களூர் போகிறான்”
“ஏன்?”
“ஆச்சார்யா மனைவியைப் பார்த்துப் பேசப் போகிறான்”
“ஆச்சார்யா மனைவியிடம் எதாவது சொல்லி இருக்க வாய்ப்பிருக்கிறதா?”
“அவர் ஆஃபிஸ் விஷயத்தை மனைவியிடம் சொல்வதில்லை…. ஆனால் அந்த ஆனந்த் கையில் என்ன தடயம் கிடைத்திருக்கிறது என்றும் அது பற்றி ஆச்சார்யாவின் மனைவிக்கு என்ன தகவல் தெரியும் என்றும் தெரியவில்லை”
“ஆச்சார்யா கேஸை நான் சீக்கிரமே முடித்து வைக்கிறேன். நீங்கள் அந்த ஆள் பிணத்தை சீக்கிரம் கண்டுபிடியுங்கள். ஏதோ விலங்கு சாப்பிட்டிருக்கலாம் என்கிற அனுமானம் எல்லாம் வேண்டாம். விலங்கு கூட மனிதனை முழுவதும் சாப்பிடாது. மிச்சம் ஏதாவது வைக்கும். அந்த மிச்சத்தைக் கண்டுபிடியுங்கள்…..”
அவன் மனதில் அந்த பஸ் பயணியின் முகத்தில் தெரிந்த உணர்ச்சியும் பீதியும் சிறிது நேரம் அப்படியே நின்றன. யாரவன்? அவனைத் தேடும் கூட்டத்தில் ஒரு நபரா? இல்லை வேறேதாவது விதத்தில் நன்றாகப் பரிச்சயமானவனா? நன்றாகப் பரிச்சயமானவனாகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் முக்காட்டில் முகம் மட்டும் தெரியும்படியாக இருக்கும் மனிதனை அடையாளம் கண்டு கொள்வது மிக நன்றாகத் தெரிந்தவர்களுக்கு மட்டும்தான் முடியும்… ஏனப்படி அவன் பயப்பட்டான்? உயிருடன் இருக்கிறானே என்ற அதிர்ச்சியை விட பயம் அதிகமாக இருப்பதாக அல்லவா தோன்றுகிறது? ஏதோ பேயைப் பார்த்தது போல் அவன் முகம் மாறியதே….
அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போது ஒரு கார் வந்து நின்றது. டிரைவர் சீட்டில் ஒரு அழகான இளம் பெண் இருந்தாள். அவளும் ஒரு ஆறு வயதுச் சிறுவனும் இறங்கினார்கள். பையன் துறுதுறுவென்று இருந்தான். அப்போதுதான் உறக்கத்திலிருந்து விழித்திருக்கிறான் என்பது பார்க்கையிலேயே தெரிந்தது. ஆனால் கையில் ஒரு பந்துடன் இறங்கியவன் தாயுடன் வீர நடை போட்டு டீக்கடைக்கு வந்தான். பையனுடன் டீக்கடைக்கு வந்த அந்த இளம் பெண் மிகவும் களைத்துப் போனது போல் தெரிந்தாள். காரின் பின் சீட்டில் இருந்து ஒரு வயதான பெண்மணி எட்டிப் பார்த்தாள்.
“உனக்கு டீ வேணுமாடா?” அந்தப் பெண் அவனிடம் தமிழில் கேட்டாள். அவனுக்கு நினைவு வந்த பின் கேட்கும் முதல் தமிழ் பேச்சு அதுதான். அப்போதுதான் அவனுக்கு இன்னொரு உண்மை உறைத்தது. அவன் சிந்திப்பதும் தமிழில்தான். அவன் தமிழ்நாட்டவனோ?
டீக்கு பதிலாக சாக்லேட் கேட்ட மகனை அவள் முறைத்து விட்டு இரண்டு டீ ஆர்டர் செய்தாள். அந்தச் சிறுவன் அந்தக் கடையில் தான் கேட்ட சாக்லேட் இருக்கிறதா என்று எட்டி எட்டி பார்த்து சலித்துப் போனான். அவள் இரண்டு டீ வாங்கிக் கொண்டு ஒன்றை அந்தக் காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த வயதான பெண்மணிக்குக் கொடுக்கப் போக அதே வீர நடையுடன் தாயுடன் அந்தச் சிறுவன் விரைந்தான்.
அந்த நேரத்தில் அந்தச் சிறுவனின் கையிலிருந்த பந்து தவறி விழுந்து தெருவுக்குச் செல்ல, அவன் பந்தை எடுக்க ஓடினான். மேலிருந்து மிக வேகமாக வந்து கொண்டிருந்த ஒரு லாரியின் டிரைவர் திடீரென்று பையனை சாலை நடுவில் எதிர்பார்க்காததால் தடுமாறுவது தெரிந்தது. அந்த ஒரு கணத்தில் டீ குடித்துக் கொண்டிருந்த அவனுக்கு அந்த டிரைவர் அவசரமாக ப்ரேக் போட்டாலும் வண்டி சிறுவனின் மீது ஏறிப் போய்த்தான் நிற்கும் என்பது புலனாக டீ டம்ளரை வீசி விட்டு வேகமாக இயங்கினான். கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் குறுக்கே பாய்ந்து அந்தச் சிறுவனுடன் எதிர்பக்கம் உருள அந்த லாரி சிறிது தூரம் போய் பெருத்த சத்தத்துடன் நின்றது.
நடந்தது என்ன என்று அங்குள்ளவர்களுக்குப் புலனாக சிறிது நேரம் தேவைப்பட்டது. அந்தப் பையனின் தாயும், பின் சீட்டு மூதாட்டியும் அதிர்ச்சியில் உறைந்து போய் பார்த்துக் கொண்டிருக்க, அந்தச் சிறுவன் என்ன நடந்தது என்று உடனடியாக அறிய முடியாமல் திருதிருவென விழித்தான். சிறுவனைத் தூக்கிக் கொண்டு எழுந்த போது அவனுக்கு லேசாக சிராய்ப்புகள் இருந்தன. சிறுவனுக்கு ஒன்றும் ஆகவில்லை. அதிகாலை அரைத் தூக்கத்தில் இருந்தவர்கள் அனவரும் முழுவதுமாக விழித்துக் கொண்டு அது பற்றிப் பரபரப்புடன் பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள். அங்கிருந்தவர்களுக்கு அவன் உடனே ஹீரோ ஆகி விட்டான். பலரும் அந்தச் சிறுவனைக் காப்பாற்றிய அவனுக்குக் கை கொடுத்துப் பாராட்டினார்கள். ஒரு சர்தார்ஜி ஓடி வந்து அவனைத் தழுவிக் கொண்டார். “என்ன டைமிங்…என்ன ஸ்பீட்….அசாத்தியம்”. சிறுவன் அவனைப் பார்த்து சினேகமாகப் புன்னகைத்தான்.
அந்தச் சிறுவனின் தாயிற்கு அதிர்ச்சி விலக சில வினாடிகள் தேவைப்பட்டன. கண்ணீர் வழிய ஓடிச் சென்று மகனைக் கட்டிக் கொண்டாள். மகனுக்கு ஒன்றும் ஆகவில்லை என்று உறுதிப்படுத்திக் கொண்ட பின்பு அவன் பக்கம் திரும்பிய அந்தப் பெண் கண்களில் இன்னும் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. தன் கைகள் இரண்டையும் கூப்பி வணங்கினாள். “நீங்கள் கடவுள் மாதிரி….” என்று ஹிந்தியில் குரல் தழுதழுக்கச் சொன்னாள். அவளுக்கு அவன் தமிழன் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அந்தக் கைகூப்பலும், வார்த்தைகளும், மற்றவர்களின் பாராட்டுகளும் அவனை தர்மசங்கடப்படுத்தின. அவனுக்கு உண்மையில் தான் பெரிதாக சாதித்தது போல் தெரியவில்லை. மேலும் அவன் பலர் கவனத்தையும் ஈர்த்து விட்டதும் ஒரு அபாய நிலையை அங்கு உருவாக்கியதாக அவனுக்குத் தோன்றியது. பஸ்ஸில் அவனைப் பார்த்த பயணி யாரிடம் கூப்பிட்டு சொல்வான், இனி யார் எப்போது அவனைத் தேடி வரப் போகிறார்கள் என்பதெல்லாம் அவனுக்குத் தெரியவில்லை.
அவன் வந்த லாரியின் டிரைவரும் க்ளீனரும் கிளம்பினார்கள். அங்கிருந்த அத்தனை பேர் கவனமும் அவன் மீது இருந்ததால் மறைவாகச் சென்று அந்த லாரியில் ஏறிக் கொள்வது சாத்தியமில்லை. டூரிஸ்ட் பஸ்ஸ¤ம், வேனும் கூடக் கிளம்பத் தயாராயின. அந்தப் பெண்ணும் அவனிடம் நூறாவது தடவையாக நன்றி சொல்லி விட்டுக் கிளம்பத் தயாரானாள். அவனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. மறைவாக இருக்கவும், மறைவாகப் பயணம் செய்யவும் இரவு நேரம் உகந்தது. ஆனால் நன்றாக விடிந்து விட்ட இந்த நாள் இனி என்ன செய்யப் போகிறான்?
குறுந்தாடி மனிதன் அன்று காலை சற்று தாமதமாகத்தான் எழுந்தான். முந்தைய தினம் இரவு ரகசிய சந்திப்பு ஒன்றில் அவன் உட்பட ஏழு பேர் கலந்து பேசி முடிய நள்ளிரவைத் தாண்டி இருந்தது. அவர்கள் திட்டம் எல்லாம் கச்சிதமாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அந்த அமானுஷ்யன் பிணமும் பார்க்கக் கிடைத்து விட்டால் கவலையில்லாமல் முன்னேறலாம். அவன் தன் காலைக் கடன்களை எல்லாம் முடித்து விட்டுத்தான் காலை எட்டரைக்கு செல் ஃபோனைப் பார்த்தான். யாரோ 17 முறைகள் அழைத்திருந்தார்கள். ஸ்விட்ச் ஆ·ப் செய்து விட்டு உறங்கி இருந்தான். யாரெல்லாம் அழைத்திருக்கிறார்கள் என்று பார்த்தான். எல்லாம் ஒரே எண். அவர்கள் இயக்கத்தின் ஒரு உறுப்பினர்தான் அத்தனை முறை அழைத்திருந்தான். காலை ஆறு பத்திலிருந்து விடாமல் தொடர்ந்து அழைத்திருக்கிறான்.
குறுந்தாடி மனிதன் அந்த எண்ணைத் தொடர்பு கொண்டான்.
“அந்த சைத்தான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறான்.” எந்த முன்னுரையும் இல்லாமல் படபடப்பாக தகவல் வந்தது.
தலையில் இடி விழுந்தது போல குறுந்தாடி உணர்ந்தான். “உனக்கு ஆள் மாறாட்டம் ஆகவில்லையே”
“அவன் போல இன்னொரு சைத்தான் இருக்க முடியுமா? காலையில் ஐந்தரை மணிக்கு அவனைப் பார்த்தேன். பார்த்தவுடனே ஃபோன் செய்யலாம் என்றால் டவர் கிடைக்கவில்லை. டவர் கிடைத்த போது நீங்கள் எடுக்கவில்லை. …..”
எதிர்முனையில் தெரிந்த படபடப்பு அவனை நம்பச் சொன்னது. அவன் சொன்னது போல் அவன் போல் இன்னொரு சைத்தான் கண்டிப்பாக இருக்க முடியாது. “எங்கே அவனைப் பார்த்தாய்? எப்போது பார்த்தாய்? ஒரு சின்ன தகவல் கூட விடாமல் எனக்கு விவரமாய் சொல்”
(தொடரும்)