அமானுஷ்யன் – 108

ஜம்மு காஷ்மீர் பாங்க் முன்னால் ஒரு போலீஸ் பட்டாளம் வந்திறங்கியதை அக்‌ஷய் தொலைவில் இருந்தே கவனித்தான். அந்த டாக்சி மட்டும் வழியில் நின்று விட்டிருக்கா விட்டால் இன்னேரம் அவர்களிடம் அகப்பட்டிருக்கக் கூடும் என்பதை உணர்ந்த போது அவன் மனம் ஒரு கணம் கடவுளுக்கு நன்றி செலுத்தியது. எங்கிருந்தோ அவனுக்காகப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் அவன் தாயின் பிரார்த்தனையின் பலன் தான் இது என்று நினைத்துக் கொண்டான்.

அதே நேரம் நாட்டையே காப்பாற்றக் கூடியதாக அவன் நினைத்திருந்த ஒரு பெரிய ஆதாரம் எதிரிகள் கையில் இன்னேரம் கிடைத்திருக்க வேண்டும் என்று எண்ணிய போதோ அவனுக்கு வருத்தமாக இருந்தது. ஆனால் எது நம் கட்டுப்பாட்டில் இல்லையோ அதைப் பற்றி வருத்தப்படுவதிலும் அர்த்தமில்லை என்று எண்ணியவனாக தூரத்தில் இருந்தே ஜம்மு காஷ்மீர் பாங்கை சுற்றி நடப்பதை கூர்மையாக கவனித்தான்.

அங்கே போலீஸ்காரர்கள் மட்டுமல்ல தீவிரவாதிகள் சிலரும் இருந்தார்கள். அவர்கள் வேடிக்கை பார்க்கின்ற மனிதர்களுடன் கலந்து நின்றிருந்தார்கள். சில சிபிஐ அதிகாரிகளும், போலீஸ்காரர்களும் கூட மாறுவேடத்தில் அங்கு நின்று கொண்டிருந்தார்கள். இந்த வேகத்தில் போலீஸும், தீவிரவாதிகளும் சரியாக இங்கு வந்து சேர வேண்டுமென்றால் கண்டிப்பாக இது அவனைப் பின் தொடர்ந்த மனிதனால் தான் என்பதில் சந்தேகமில்லை. அவனுடைய புத்திசாலித்தனத்தை அக்‌ஷயால் மெச்சாமல் இருக்க முடியவில்லை. தூரத்தில் ஒரு டாக்சியில் இருந்து அவன் இறங்கியதையும், செல் போனில் பேசியதையும் கவனித்த அக்‌ஷய் அங்கே இனியும் தங்குவது நல்லதெல்ல என்பதை உணர்ந்து மெல்ல சில அடிகள் பின்வாங்கி அந்த இடத்தை விட்டு வேகமாக நகர்ந்தான்.

********

மந்திரி ராஜாராம் ரெட்டியிடம் சொன்னார். “அவன் கிடைக்கவில்லை. ஆனால் அவன் லாக்கரில் வைத்திருந்த பென் டிரைவ் கிடைத்திருக்கிறது.”

ராஜாராம் ரெட்டி அவசரமாகச் சொன்னார். “அங்கிருக்கிற போலீஸ் அதிகாரிகளிடம் அந்த பென் டிரைவை எந்தக் காரணத்தைக் கொண்டும் திறந்து பார்க்காமல் மிகவும் பாதுகாப்பாக இங்கே அனுப்பி வைக்கச் சொல்லுங்கள். யாரை எல்லாம் நூறு சதவீதம் நம்ப முடியுமோ அவர்களிடம் மட்டுமே அதை இங்கே கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பைத் தர வேண்டும் என்று சொல்லுங்கள்.”

மந்திரி உடனடியாக ஜம்முவில் இருக்கிற தலைமை போலீஸ் அதிகாரிக்கு போனில் அப்படியே கட்டளை பிறப்பித்தார்.

பின் ராஜாராம் ரெட்டியிடம் சொன்னார். “அடுத்த விமானத்திலேயே அதை நமக்கு அனுப்பி வைக்கிறார்களாம்.”

ராஜாராம் ரெட்டி திருப்தியுடன் தலையசைத்தார். பின் அங்கிருக்கும் தன் ஆட்களுக்குப் போன் செய்து அமானுஷ்யனை அந்த சுற்று வட்டாரங்களில் சல்லடை போட்டு தேடச் சொன்னார். போலீஸ் பட்டாளத்தை விமான நிலையம், ரயில்நிலையம், பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் குவித்து அவனைக் கண்டுபிடிக்கச் சொன்னார். எப்படியும் அவன் டில்லி திரும்பாமல் இருக்க மாட்டான் என்பதில் சந்தேகமில்லை. “அமானுஷ்யனை நாலா பக்கங்களில் இருந்தும் ஆட்கள் நெருங்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஒரு பக்கம் அந்த சர்வதேசக் கொலையாளி, ஒரு பக்கம் போலீஸ், ஒரு பக்கம் சிபிஐ ஆட்கள், இன்னொரு பக்கம் தீவிரவாதிகள். இந்த முறை அமானுஷ்யன் அவர்களிடம் இருந்து தப்ப முடியாது”

********

சலீம் அந்த இடத்திலேயே அமானுஷ்யன் இருப்பதை உணர்ந்தான். அமானுஷ்யன் அந்த அளவுக்கு அவன் உள்ளுணர்வில் ஐக்கியமாகி விட்டிருந்தான். கண்களை மூடினால் போதும் அவன் எந்தப் பக்கம் இருக்கிறான் என்பதை அவனுடைய உள்ளுணர்வு சொல்லி விடும். சலீம் கண்களை மூடினான். அவன் உள்ளுணர்வு பொய்க்கவில்லை. அவனுக்கு எதிர்புறம் எங்கோ ஒரு மூலையில் இருக்கிறான்…உணர உணர ஏதோ ஒரு இழை அறுந்தது. அமானுஷ்யன் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டான். சலீம் தன் எதிரே இருந்த ஜனக்கூட்டத்தைப் பார்த்தான். அவர்களில் அவனைப் போலவே அமானுஷ்யனைத் தேடிய ஆட்கள் நிறைய இருப்பதை அவன் கவனித்தான். ஆனால் அவர்கள் அந்தக் கூட்டத்தில் அவனைத் தேடிக் கொண்டிருந்தார்களே ஒழிய அவன் அங்கிருந்து நகர்ந்து விட்டிருந்ததை உணரவில்லை. அந்தக் கூட்டத்தில் புகுந்து விரைவாக எதிர்பக்கத்தை அடைய எண்ணிய சலீம் உடனடியாக லாவகமாகவும் வேகமாகவும் இயங்கினான்.

*******

அக்‌ஷய் எந்தப் பக்கம் போவது என்று தீர்மானிக்காமலேயே வேகமாக அங்கிருந்து சென்றான். அவன் கால்கள் தானாக அவனை ஏதேதோ தெருக்களில் அழைத்துச் சென்றன. கடைசியில் ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஓரிடத்திற்கு வந்து சேர்ந்தான். அங்கு நெடுஞ்சாலையின் வலது பக்கம் இருந்த புல்வெளியில் ஒரு ஒற்றையடிப் பாதை போக ஆரம்பித்தது. அவன் கால்கள் தானாக அந்த ஒற்றையடிப் பாதையில் நடக்க ஆரம்பித்தன. அவன் தன் பொய்த் தாடியை எடுத்து பக்கத்தில் இருந்த புதரில் தூக்கி எறிந்து விட்டு வேகமாக நடந்தான். ஒரு மைல் தூரம் சென்ற பின் சற்று தொலைவில் ஒரு புத்த விஹாரத்தை அவன் பார்த்தான். சற்று முன் அந்த மசூதி எழுப்பியதைப் போலவே இந்த புத்த விஹாரமும் சில நினைவலைகளை எழுப்பின. அவன் இங்கு நிறைய நாட்கள் இருந்திருக்கிறான்…. ஆனால் அவனுடைய போதாத காலம் எந்த நினைவலைகளும் சங்கிலித் தொடராக மற்ற தேவையான நினைவுகளைக் கொண்டு வரவில்லை…

அவன் அந்த புத்த விஹாரத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அதை நெருங்கிய போது ஒரு வயதான புத்த பிக்கு புத்த விஹாரத்திற்கு முன்னால் இருந்த சிறிய தோட்டத்தில் களைகளைப் பிடுங்கிக் கொண்டிருந்தார். அந்த புத்த பிக்குவின் முதுகுப் புறம் மட்டுமே அவனுக்குத் தெரிந்தது என்றாலும் அவரை அவன் நன்றாக அறிவான். அவர் அவனுக்குக் குருவாக இருந்திருக்கிறார். அவனுடைய காலடி ஓசையைக் கேட்ட பிறகும் அவர் திரும்பவில்லை. அவர் வேலையை நிறுத்தவுமில்லை. ஆனால் அவன் நெருங்கிய போது சொன்னார். “அக்‌ஷய்”

அவர் அவன் காலடி ஓசையை வைத்தே கண்டுபிடித்தது அவனுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. அவர் ஒரு அதிசய மனிதர்.

“எங்கிருந்தோ தப்பித்து வந்திருக்கிறாய் போலிருக்கிறது நீ ஓட்டமும் நடையுமாய் வந்த விதம்”

“ஆம் குருவே” சொன்னவன் அவர் காலில் விழுந்து வணங்கினான்.

ஒரு நிமிடம் அவன் பக்கம் திரும்பி கண்களை மூடி ஆசிர்வதித்த அவர் அவன் எழுந்த போது அவன் முகத்தில் இருந்த களைப்பைப் பார்த்து அவன் ஏதோ ஒரு பிரச்னையில் இருக்கிறான் என்று யூகித்தார். அவருடைய சிஷ்யர்களில் இவனளவு யாருமே அவரிடமிருந்து கற்றுக் கொண்டவர்களில்லை. சிறிது நேரமே தூங்கினாலும் ஆழ்ந்த தூக்கம் தூங்கி எழுந்து எப்போதும் புத்துணர்ச்சியுடனும் இருக்கும் அவனுடைய களைப்பு உறக்கக் குறைவால் அல்ல என்று அவர் அறிவார். வேலைகள் செய்வதில் அமைதியான லயத்துடன் செய்கின்ற அவன் எத்தனை வேலைகள் செய்தாலும் வேலையால் களைத்துப் போகிறவனும் அல்ல என்பதையும் அறிவார்.

அமைதியாக அவனிடம் கேட்டார். “என்ன ஆயிற்று உனக்கு?”

வெளியே இருப்பது ஆபத்து என்பதை உணர்ந்த அக்‌ஷய் அவரை உள்ளே அழைத்துக் கொண்டு போய் அனைத்தையும் சொல்ல ஆரம்பித்தான். தற்போதைய சிக்கல் வரை சொல்லி அவன் முடித்த போது அவர் கையில் ஜபமாலை அமைதியாக சுழன்று கொண்டிருந்தது. அவர் எந்த உணர்ச்சியும் காண்பிக்கவில்லை. எதுவும் சொல்லவுமில்லை.

அக்‌ஷய் சற்று பொறுத்து விட்டு சொன்னான். “குருவே எத்தனையோ உயிர்கள் அபாயத்தில் இருக்கின்றன. இந்த வெடிகுண்டுகள் வெடித்தால் என்ன ஆகும் என்று தெரியவில்லை. வெடிகுண்டுகள் வெடிக்கப் போகின்றது என்பதை ஆதாரமில்லாமல் சொன்னால் இப்போது நம்ப ஆளில்லை. இருக்கின்ற ஒரு ஆதாரமும் கையில் கிடைக்காமல் போய் விட்டது. எனக்கு இந்தப் பிரச்சினைக்குக் காரணமான பழைய நினைவுகள் ஞாபகமும் வர மாட்டேன்கிறது. காலமோ அதிகமில்லை… எத்தனையோ வித்தைகள் தெரிந்த எனக்கு என் கடந்த காலத்தின் ஒரு பகுதியை நினைவுபடுத்திக் கொள்ளும் வித்தை மட்டும் ஏனோ தெரியவில்லை குருவே” சொல்லும் போது அவன் குரலில் ஒருவித கையாலாகாத வருத்தம் தெரிந்தது.

அந்த புத்தபிக்கு அமைதியாகச் சொன்னார். “அடிபட்டதில் நினைவுகள் அழிந்து போவது ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஆனால் உன்னைப் போல எல்லாம் கற்றுத் தேர்ந்தவனுக்கு அவற்றை நினைவுபடுத்திக் கொள்ள முடியாமல் போனதற்குக் காரணம் அது மிக முக்கியம் என்கிற நினைவோடு, தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் சேர்ந்து, பதட்டத்தோடு நீ முயன்றது தான் அக்‌ஷய். எனவே தவறு உன் அணுகுமுறையில் தான் இருந்திருக்கிறது.”

அக்‌ஷய் அதை ஒத்துக் கொண்டு தலையசைத்தான். அவனை அவர் மிகவும் கனிவுடன் பார்த்தார். தலைக்கனம் என்ற ஒரு முட்டாள்தனத்தை அவனைப் போல் பரிபூரணமாக இழந்த ஒருவனை அவர் சந்தித்திருப்பதாக அவருக்கு நினைவில்லை. அதுவும் இளமையிலேயே குறுகிய காலத்தில் அவன் கற்றுக் கொண்டிருந்த வித்தைகள் எதுவும் சாதாரணமானதல்ல. எல்லாவற்றையும் அறிந்த பிறகும் அவனுக்கிருந்த அடக்கத்தையும், தனது தவறுகளை ஒத்துக் கொள்வதில் அவனுக்குத் தயக்கமில்லாதிருந்ததையும் எல்லா சீடர்களுக்கும் அவர் உதாரணமாகச் சொல்லத் தயங்கியதில்லை. இப்போதும் அவன் நிலைமையில் அவன் இத்தனை நிதானம் தவறாமல் இருப்பதே பெரிய விஷயம் என்றாலும் கூட அவர் தவறைச் சுட்டிக் காட்டிய போது என் நிலைமை அப்படி என்கிற மாதிரியான விவாதங்களை அவன் செய்யாததை அவர் கவனிக்கத் தவறவில்லை.

“வெடிகுண்டுகள் வெடிப்பதும் பல மனிதர்கள் சாவதும் உன் கையில் இல்லை அக்‌ஷய். இதை நீ தீர்மானிக்கப் போவதுமில்லை. ஒரு செயல் நடந்தே ஆக வேண்டும் என்றால் அது நடந்தே தீரும். உன் மூலம் அது தவிர்க்கப்பட வேண்டும் என்று இருந்தால் அதுவும் அப்படியே தவிர்க்கப்படும். இதில் நீ தீர்மானிக்க ஒன்றும் இல்லை. நீ கருவி மாத்திரம். கருவிகள் காரியங்களைத் தீர்மானிப்பதில்லை. காலம் அதிகமில்லை என்று சொன்னாய். ஒரு யுக காலமே ஒருவனிடம் இருந்தாலும் நடக்க முடியாததை நடத்த முடியாது. நடக்க வேண்டும் என்று என்று இருந்தால் ஒரு வினாடி காலம் இருந்தாலும் அது தாராளமாகப் போதும். எனவே குழப்பிக் கொள்ளாமல் போய் அந்த மகா புத்தர் முன்னால் சென்று தியானம் செய். எதையும் எதிர்பார்க்காதே. எதையும் மறுக்கவும் செய்யாதே. பிரார்த்தனை செய்து தியானத்தை ஆரம்பி. நடக்க வேண்டியதை அவர் நடத்துவார்….”

அவர் வார்த்தைகள் அக்‌ஷயின் மனதில் விவரிக்க முடியாத ஒரு பேரமைதியை ஏற்படுத்தின. மறுபடி அவரை அவன் வணங்கினான்.

மகாபுத்தர் சிலையின் முன் அமர்ந்து பிரார்த்தித்து விட்டு தியானத்தில் ஆழ்ந்தான். அடுத்த சில நிமிடங்களில் அவன் அனைத்தையும் மறந்தான். வெடிக்கப் போகும் வெடிகுண்டுகளை மறந்தான். அவன் நேசிக்கின்ற மனிதர்களை மறந்தான். அவனுடைய எதிரிகளை மறந்தான். பழைய நினைவுகள் வர வேண்டும் என்கிற வேண்டுதலையும் மறந்தான். எதையும் எதிர்பார்க்காத, எதையும் மறுக்காத மனநிலையுடன் தியானத்தில் லயித்துப் போனான்.

அவனையே பார்த்துக் கொண்டு அந்த வயதான பிக்கு நின்றிருந்தார். அவர் கையில் ஜபமாலை சுற்றிக் கொண்டிருந்தது.

அதே நேரம் சலீம் அக்‌ஷய் வந்திருந்த வழியே வந்திருந்து அந்த நெடுஞ்சாலையில் சிந்தித்தபடி நின்றிருந்தான். வருகின்ற வழியில் வழிப்போக்கர்களிடம் தாடி வைத்திருந்த அக்‌ஷயின் அடையாளங்களைச் சொல்லி அவனைப் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டு ஆமென்று சொன்னவர்கள் காட்டிய வழியில் பயணித்து இது வரை வந்து விட்டான். ஆள் நடமாட்டமே இல்லாத இந்தப் பகுதியில் இனி யாரைக் கேட்பது என்று சுற்றும் முற்றும் பார்த்தான்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top