டிக்கெட்டுடன் வெளியே வந்த அக்ஷய் அடுத்த தெருவில் இருந்த ஒரு பொதுத் தொலைபேசியில் மதுவை அழைத்துப் பேசினான். அவன் குரலைக் கேட்டவுடன் மது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
“அக்ஷய். அங்கே இருந்து தப்பித்து விட்டாயா? நிஜமாகவே எங்கள் பிரார்த்தனை வீண் போகவில்லை. முக்கியமாய் உன் அம்மாவின் பிரார்த்தனை…”
அந்த சந்தோஷம் அவன் மனதை நெகிழ வைத்தாலும் அப்போதைய அவசர நிலை காரணமாக அக்ஷய் அவன் வருணையும், தாயையும் காப்பாற்ற எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்காக மனமார நன்றி சொல்லி விட்டு உடனடியாக விஷயத்திற்கு வந்தான். “…மது உடனடியாக ஆனந்தை இப்போது இருக்கும் ஏரியாவில் இருந்து வேறெங்காவது போய் விடச் சொல். கண்டிப்பாக அவர்கள் அவன் இருக்கும் பகுதியை இன்னேரம் தெரிந்து கொண்டிருப்பார்கள்…. இனி அவன் செல்போனில் பேசாமல் இருப்பது தான் நல்லது. அப்புறம், வருணையும், சஹானாவையும் பாதுகாப்பாக வைத்துக் கொள். பக்கத்து வீட்டு ஜெய்பால்சிங்கிடமும் மற்ற அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களிடமும் சொல்லி வை. யாராவது சந்தேகப்படுகிற மாதிரி வந்தால் கொஞ்சம் கவனிக்கச் சொல்.”
“சரி அக்ஷய். உனக்கும் ஒரு பாதுகாப்பான இடத்தை நான் பார்த்து வைத்திருக்கிறேன்….” என்று சொல்லி அந்த இடத்தை விவரிக்க முயன்ற மதுவை அக்ஷய் இடைமறித்தான்.
“மது எனக்கு முக்கியமான வேலைகள் நிறைய இருக்கின்றன. அதையெல்லாம் முடிக்காமல் நான் பாதுகாப்பாக எங்கேயும் ஒளிய முடியாது. நான் இப்போது ஜம்மு போய்க் கொண்டிருக்கிறேன்….”
“அங்கே தான் நீ சொன்ன தடயத்தை ஒளித்து வைத்திருக்கிறாயா? அந்த இடமெல்லாம் உனக்கு ஞாபகம் வந்து விட்டதா?”
“அதெல்லாம் அவர்களுக்காக ஆனந்திடம் சொன்ன கதை. நான் அந்த ஊரில் எங்கே வைத்திருக்கிறேன் என்றெல்லாம் எனக்கு நினைவுக்கு வரவில்லை. அங்கே போனால் எனக்கு ஞாபகம் வரலாம். போய் தான் பார்க்க வேண்டும். சரி நீங்கள் எல்லாம் ஜாக்கிரதையாய் இருங்கள். ஏதாவது புதிய தகவல் கிடைத்தால் கண்டிப்பாக போன் செய்கிறேன்….”
அடுத்ததாக மகேந்திரனுக்குப் போன் செய்தான். மதுவின் அதே அதீத சந்தோஷம் மகேந்திரனிடமும் தெரிந்தது. அவனிடமும் நன்றி தெரிவித்து விட்டு அக்ஷய் சொன்னான்.
“மகேந்திரன். எனக்கு அவர்கள் படுகிற அவசரத்தைப் பார்த்தால் ஏதோ முக்கியமாய் இரண்டு மூன்று நாளில் நடந்து விடும் போல தான் தோன்றுகிறது. அவர்கள் ஏதோ ஒரு குறிப்பிட்ட நாளைக் குறித்து வைத்திருக்கிறார்கள் என்றால் அது ஏதாவது விசேஷ நாளாய் இருக்கலாம். இந்த வாரத்தில் அது போல் ஏதாவது முக்கிய நினைவு நாளோ, யாராவது முக்கிய புள்ளி டெல்லிக்கு வரும் நாளோ இருக்கிறதா என்று பார்த்து வை. நான் உனக்கு நாளைக்கு போன் செய்கிறேன்.”
ராஜாராம் ரெட்டியும், மிஸ்டர் எக்ஸும் அமானுஷ்யனால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்த போலீஸ்காரர்களைப் பார்க்கப் போய்க் கொண்டு இருந்தார்கள். மிஸ்டர் எக்ஸ் அமானுஷ்யன் தப்பித்த பிறகு ஒரு மௌனியாக மாறி விட்டார். ஒரு பக்கம் கேசவதாஸ், இன்னொரு பக்கம் மந்திரி, மூன்றாவது பக்கம் அமானுஷ்யன், நாலாவது பக்கம் நிருபர்கள் என்று நாலா பக்கமும் சிக்கல்கள் வந்தது அவரை விரக்தியடைய வைத்திருப்பதாக ராஜாராம் ரெட்டிக்குத் தோன்றியது.
ராஜாராம் ரெட்டியாலும் அமானுஷ்யன் தப்பித்ததை ஜீரணிக்க முடியா விட்டாலும் அவனைத் திரும்பப் பிடித்து ஜெயித்துக் காட்ட வேண்டும் என்ற ஒரு வெறி அவருக்குள் கிளம்பி விட்டிருந்தது. அவருடைய திறமைக்கு சவால் அவன் விட்டிருப்பதை அவரால் சகிக்க முடியவில்லை. அவர் டிவி காமிராக்கள் முன் வந்த போதே இதைப் பார்த்தவுடன் கண்டிப்பாக ஆனந்திற்கு அவர் மேல் சந்தேகம் வராமல் இருக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்திருந்தார். அது தவிர்க்க முடியாதது என்பதை அவர் அறிவார். அவன் செல் போனிற்கு அவர் பிறகு பல முறை தொடர்பு கொள்ள முயன்ற போது அது “ஸ்விட்ச்டு ஆஃப்” என்ற தகவலையே தர ஆரம்பித்தது. ஆனந்த் பேச்சை வைத்து அவன் இருக்கும் பகுதியைக் கண்டறிந்த அவர் அங்கு அவன் அகப்பட்டால் பிடித்து வர ஆட்களை அனுப்பியதற்கு அடுத்தபடியாக அவர் ஜம்முவிற்கும் அமானுஷ்யனைப் பிடிக்க ஆட்கள் அனுப்பின பிறகு தான் அவசரமாக எக்ஸை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குக் கிளம்பினார்.
மருத்துவமனையில் அவர்களுக்கு முன்பே நிருபர்கள் காத்திருந்தார்கள். மிஸ்டர் எக்ஸ் எரிச்சலுடன் கேட்டார். “எல்லோரையும் அப்படியே குண்டு கட்டாகத் தூக்கி போலீஸ் வேனில் போட்டு கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்தால் என்ன?”
“எல்லாம் இன்னும் இரண்டு மூன்று நாள்களில் சரியாகி விடும். அப்புறம் நம் ராஜ்ஜியம் தான். அது வரை பொறுமையாக இருங்கள்”
அவர்கள் இருவரும் வந்திறங்கியதைக் கண்ட நிருபர்கள் அவர்களை வந்து சூழ்ந்து கொள்ள ராஜாராம் ரெட்டி புன்னகையுடன் அவர்களை சமாளித்தார். “நீங்கள் என்ன கேட்கப் போகிறீர்கள் என்று எங்களுக்குத் தெரியும். நாங்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் போலீஸ்காரர்களைப் பார்த்து விட்டு வந்து உங்களிடம் விரிவாக நிலவரத்தைச் சொல்கிறோம். அது வரை அமைதியாகக் காத்திருங்கள்…”
ஆனாலும் ஓரிரு நிருபர்கள் தங்கள் அவசர சந்தேகங்களைக் கேட்க எக்ஸ் பல்லைக் கடிக்க ரெட்டி அனைவருக்கும் பொதுவாக “பொறுமை பொறுமை” என்ற படியே மருத்துவமனைக்குள் நுழைந்தனர். அவர்களைக் கண்டதும் மூத்த டாக்டர் ஒருவர் பெருமூச்சு விட்டபடி சொன்னார். “அந்த நிருபர்களை உள்ளே விடாமல் இருக்க நாங்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல.”
எக்ஸ் ஆத்திரம் குறையாமல் சொன்னார். “அத்தனை பேர் நாக்கையும் வெட்டி நீங்கள் ஆபரேஷன் செய்தால் முழு செலவையும் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறது. செய்கிறீர்களா?”
ஆரம்ப காலங்களில் அமைதியாக அலட்டிக் கொள்ளாமல் இருந்த எக்ஸ் இந்த ஒரு நாளில் இப்படி மாறி விட்டதை எண்ணிய போது அந்த நேரத்திலும் மனதுக்குள் சிரித்துக் கொள்ளாமல் இருக்க ரெட்டியால் முடியவில்லை. அதை வெளியே காட்டாமல் டாக்டரை ரெட்டி கேட்டார். “அவர்கள் எப்படி இருக்கிறார்கள்?”
“சரி செய்து விட்டோம். ஆனால் நீங்கள் சொன்னபடியே அவர்களை தனி ஐசியூவில் தான் வைத்து இருக்கிறோம். பார்க்கிறீர்களா?”
ராஜாராம் ரெட்டி தான் முன்பிருந்தே பேசிக் கொண்டிருந்த போலீஸ்காரனிடம் மட்டும் பேச விரும்பினார். அவனை மட்டும் ஒரு தனியறைக்கு தருவித்தார். அவன் முகத்தில் பிரேத களை தெரிந்தது. அவர்களைப் பரிதாபமாகப் பார்த்தபடி நின்றான்.
“என்ன நடந்தது?”
அவன் நடந்ததைச் சொன்ன போது அவனால் இன்னமும் நடந்ததை நம்ப முடியவில்லை என்பது புரிந்தது. பந்து போல் சுழன்று கொண்டே கால் விரல்களால் கையைக் கட்டியிருந்த கட்டை அவன் அவிழ்த்த விதத்தையும் மின்னல் வேகத்தில் அவர்கள் அனைவரையும் செயலிழக்க வைத்ததையும் பழைய திகைப்புடனேயே விவரித்தான்.
பந்து மாதிரி சுழன்ற வித்தையை அமானுஷ்யன் இதற்கு முன் வெளிப்படுத்தியதாக அவன் ஃபைலில் தகவல் இல்லை.
எக்ஸ் வெளிப்படையாக சொன்னார். “சார் முதலில் அவனுக்கு என்னவெல்லாம் தெரியும் என்பதை தெரிந்து கொள்ளாமல் அவனை சமாளிப்பது கஷ்டம் தான்.”
அந்த போலீஸ்காரன் தன் கருத்தைச் சொன்னான். “சார் அவன் நினைத்திருந்தால் எங்களைக் கொன்று கூட இருக்கலாம். எங்களை சரி செய்த டாக்டர் இந்த வர்ம முடிச்சு சூட்சுமமானது என்றும் கொஞ்சம் பிசகி இருந்தாலும் மரணம் வந்திருக்கும்” என்றும் சொன்னார். அதுவும் எட்டு பேரையும் அவ்வளவு சீக்கிரம் அவ்வளவு கச்சிதமாகவும் நுணுக்கமாகவும் கையாண்டிருக்கிறான் என்பதை டாக்டர்களால் நம்ப முடியவில்லை.
அவனை விட்டிருந்தால் அவன் அமானுஷ்யன் புராணத்தை முழுவதுமாக விடாமல் சொல்லி இருப்பான். ஆனால் ரெட்டி அவனைப் போகச் சொல்லி விட்டார். மிஸ்டர் எக்ஸ் தன் கழுத்தை மெல்ல தடவிக் கொண்டார்.
ராஜாராம் ரெட்டி மூத்த டாக்டரை அழைத்துப் பேசி இன்னும் இரண்டு நாள் ஐசியூவிலேயே அந்த எட்டு பேரையும் வைத்திருக்குமாறும் வெளியே யாருக்கும் தெரியாதபடி பார்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார். பின் எக்ஸிடம் நிருபர்களிடம் சொல்ல வேண்டியதைத் தெரிவித்தார்.
எக்ஸ் வெளியே வந்து ரெட்டி சொன்னபடியே அறிக்கை வெளியிட்டார். கல்லூரிக்குள் ஒரு தீவிரவாதி ஒளிந்து கொண்டிருந்தது உண்மையே என்றும் அவன் பயங்கரமானவன் என்றும் போலீஸ்காரர்களைத் தாக்கி விட்டு அவன் தப்பித்து விட்டான் என்றும் தெரிவித்தார். போலீஸ்காரர்கள் இன்னமும் ஐசியூவில் தான் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் உயிருக்கு ஆபத்தில்லை என்றாலும் அவர்கள் இப்போது பேசும் நிலைமையில் இல்லை என்றும் சொன்னார்.
“அந்த தீவிரவாதி யார் என்று தெரிந்ததா?”
“சரியாகத் தெரியவில்லை. ஆனால் ஒரு போலீஸ்காரர் சைகையால் தெரிவித்ததைப் பார்க்கையில் அந்த தீவிரவாதி சில நாட்களுக்கு முன் டெல்லி புறநகர்ப்பகுதியில் குண்டு வைத்தவன் தான் என்று சந்தேகப்படுகிறோம்…”என்று சொல்லி விட்டு அக்ஷயின் போட்டோவை அங்கிருக்கும் நிருபர்களுக்கு வினியோகித்தார்.
“இந்த தீவிரவாதி பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு பெரிய தொகையை சன்மானமாக அளிக்க இருக்கிறோம். பிரச்னைக்குரிய கேள்விகளை மட்டுமே கேட்காமல் இவனைப் பிடிப்பது போன்ற நல்ல காரியங்களிலும் நீங்கள் ஈடுபடுவீர்கள் என்று நம்புகிறோம்”
இந்தக் கடைசி வரி ரெட்டி சொல்லிக் கொடுத்ததல்ல. இது எக்ஸ் சுயமாகச் சொன்னது. போலீஸ்காரர்களுக்கு ஏற்பட்ட காயம் எப்படிப்பட்டது என்பது போன்ற கேள்விகளைக் கேட்க முற்பட்ட நிருபர்களைப் பார்த்து “இப்போதைக்கு இவ்வளவு தான். கூடுதல் தகவல் கிடைத்தால் கண்டிப்பாகச் சொல்கிறோம்” என்று சொல்லி விட்டு எக்ஸும், ரெட்டியும் வேகமாக அங்கிருந்து கிளம்பினார்கள்.
எக்ஸ் ரெட்டியிடம் சொன்னார். “நாம் இப்படித் தான் முதலிலும் அவன் போட்டோவை விளம்பரம் செய்தோம். ஆனால் அவன் கிடைக்கவில்லை”
“அப்படி விளம்பரம் செய்ததனால் தான் அந்த டிவிக்காரியுடன் அவனைப் பார்த்த ஒரு கடைக்காரன் நமக்கு துப்பு தந்தான். அதை மறந்து விடாதீர்கள்…” என்று ரெட்டி சொல்லச் சொல்ல மந்திரியின் போன் வந்தது. “உடனே வாருங்கள்” என்று மட்டும் சொன்னார்.
இப்போது என்ன புதிதாக என்று எண்ணியவராக ரெட்டி மந்திரியை சந்திக்கச் சென்றார். மந்திரியுடன் மத்திய உளவுத் துறைத் தலைவர் இருந்தார். அந்தத் தலைவர் சிபிஐயின் தற்காலிகத் தலைவர் வருகையை அவ்வளவாக விரும்பவில்லை என்பது அவரது முகபாவத்திலேயே தெரிந்தது.
மந்திரி ராஜாராம் ரெட்டியை உட்காரச் சொல்லி விட்டு உடனடியாக விஷயத்திற்கு வந்தார். “சார் ஒரு திடுக்கிடும் தகவலைக் கொண்டு வந்திருக்கிறார். சர்வதேசக் குற்றவாளிகளில் ஒருவனான வாடகைக் கொலையாளி சலீம் டெல்லிக்கு வந்திருப்பதாக ஒரு தகவல் கிடைத்திருக்கிறதாம். அதை போலீஸ், சிபிஐ, பன்னாட்டு உளவுத் துறைகளுக்கெல்லாம் தெரிவிப்பது நல்லது என்கிறார்”
ராஜாராம் ரெட்டி சிறிது யோசித்து விட்டு சொன்னார். “எதற்கும் இரண்டு நாட்கள் பொறுப்பது நல்லது. பிறகு அதைச் செய்யலாம். இப்போது இன்னொரு பெரிய தீவிரவாதி பற்றி செய்தியை நாம் வெளியிட்டிருக்கிறோம். அதோடு இதையும் வெளியே சொல்லி குழப்ப வேண்டாம்”
மந்திரி தலையசைத்து அவர் சொல்வது தான் என் கருத்து என்பதைக் காட்டிக் கொண்டார். மத்திய உளவுத் துறைத் தலைவர் கேட்டார். “யார் அந்த பெரிய தீவிரவாதி?”
“சில நாட்களுக்கு முன் டெல்லி புறநகர்ப் பகுதியில் குண்டு வைத்தவன் தான். அப்போது அவனுடைய போட்டோவைக் கூட வெளியிட்டிருந்தோம்…”
“அவன் அமானுஷ்யன் என்ற புனைப்பெயருடையவன். பம்பாய் வாசி. அவன் தீவிரவாதி என்றால் நீங்களும் நானும் தீவிரவாதி தான்”
மந்திரியும் ரெட்டியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ரெட்டி அமைதியாகச் சொன்னார். “ஒரு காலத்தில் நல்லவராக இருந்து பின் அடியோடு மாறி விடுபவர்களை நாம் பார்த்திருக்கிறோம்”
அவரையே ஆழமாகப் பார்த்த உளவுத்துறைத் தலைவர் சொன்னார். “வாஸ்தவம்”
அப்போது தான் அந்த வாக்கியம் தனக்கு நன்றாகப் பொருந்துகிறது என்ற உண்மை ரெட்டிக்கு உறைத்தது. ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் சொன்னார். “அந்த அமானுஷ்யன் இப்போது தீவிரவாதியாக மாறி இருக்கிறான் என்ற ஆதாரபூர்வ தகவல் கிடைத்திருக்கிறது”
மந்திரி உறுதியாகச் சொன்னார். “நீங்கள் அந்த சலீம் பற்றி என் அனுமதி இல்லாமல் யாருக்கும் தெரிவிக்க வேண்டாம்”
உளவுத்துறைத் தலைவர் தலையசைத்து விட்டுச் சொன்னார். “இன்னும் சில நாட்களில் நம் தலைநகரில் பல குண்டுகள் வெடிக்கலாம் என்று தகவல் கிடைத்திருக்கிறது. இப்போது பல தகவல்கள் போலீசிற்கும் கிடைத்திருக்கிறது என்று சொன்னாலும் அதில் ஏதாவது ஒன்று உண்மையாக இருக்கலாம் என்று நினைக்கிறோம்”
மந்திரி முகத்தில் ஈயாடவில்லை. ரெட்டி கேட்டார். “அந்தக் குண்டு வெடிப்பிற்கும் சலீமிற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?”
“இல்லை அவன் ஏதோ தனி வேலையாக வந்தது போலத் தான் இருக்கிறது”
“எங்களுக்கும் வெடிகுண்டு வெடிப்பு பற்றி தகவல் வந்ததில் ஒன்று உண்மை என்று தோன்றுகிறது. அந்த ஒன்று தான் நீங்கள் சொன்ன அமானுஷ்யனை சம்பந்தப்படுத்துகிறது’ என்று அமைதியாக ரெட்டி சொன்னார்.
(தொடரும்)