அடுத்த மாதம் நியூசிலாந்தில் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டி நடக்கவிருக்கிறது. இதற்கு 15 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ அறிவித்து இருக்கிறது. இதில் சேவாக், கம்பீர், யுவராஜுக்கு இடம் இல்லை. 50 போட்டிகள்கூட விளையாடாதவர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது திறமையான வீரர்களுக்கு இடம் இல்லையா என பி.சி.சி-யை இந்தியா முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தார்கள். இந்த நிலையில் ஐசிசி சேர்மன் மற்றும் இந்தியா சிமென்ட்ஸ் சேர்மன் என்.சீனிவாசனையும் தோனியையும் தாக்கி மீம்ஸ் கிரியேட் செய்து தங்களுடைய கோபத்தைத் தனித்துக்கொண்டனர் நெட்டிசன்கள். ஆனா ஊனானா மீம்ஸ் ரெடி பண்ணிடுறாய்ங்கே!
சசிதரூரின் மூன்றாவது மனைவி சுனந்தா புஷ்கர் சென்ற ஆண்டு ஆரம்பத்தில் நட்சத்திர ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். போஸ்ட்மார்டம் அறிக்கை அவர் இயற்கையான முறையில் இறக்கவில்லை. கொலை செய்யப்பட்டு இருக்கிறார். உடலில் விஷ ஊசிகள் செலுத்தியதற்கான தடயங்கள் இருப்பதாகக் கூற இந்த விஷயம் இந்தியா முழுவதும் வைரலானது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் சசி தரூர் தான் மிகவும் அதிர்ச்சி அடைந்ததாகவும் போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரப் போவதாக சொல்லியிருக்கிறார். இதே பாணியில் நித்தியானந்தா ஆசிரமத்திலும் திருச்சியைச் சேர்ந்த ஒரு பெண் மர்மமான முறையில் இறந்து போனது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது பீதியைக் கிளப்பியிருக்கிறது. என்னமோ நடக்குது! என்னனென்னமோ நடக்குது!
அமிதாப் பச்சன், தனுஷ், அக்ஷரா இணைந்து நடிக்கும் ‘ஷமிதாப்’ படம் மற்றும் கே.வி ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘அநேகன்’ திரைப்பட டிரெய்லர் அடுத்தடுத்த நாட்களில் ரிலீஸாக வைரலில் ஹிட் அடித்தார் தனுஷ். ‘ஷமிதாப்’ படத்தில் ஸ்டைலாகவும் ‘அநேகன்’ படத்தில் லோக்கல் கேரக்டரிலும் தனுஷ் பின்னியெடுக்க பாலிவுட்டும் கோலிவுட்டும் தனுஷ் பற்றியே பேசின. இந்த நிலையில் ஆனந்த விகடன் விருது பட்டியலில் சிறந்த நடிகருக்கான விருது தனுஷுக்கு கிடைக்க தனுஷ் சோஷியல் மீடியாவில் விகடன் விருதை இன்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு சமர்ப்பணம் தெரிவித்திருக்கிறார். அப்படியே ஹாலிவுட் போங்க தனுஷ்!
இந்த வாரமும் வைரலில் முதல் இடம் ‘பிகே’ படத்துக்குதான். கடவுள் நம்பிக்கையைப் பற்றிய நியாயமான கேள்விகளைக் கேட்ட ‘பிகே’ படத்துக்கு பல இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததும் அமீர்கானுக்கு எதிராகப் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டதும் பழைய செய்தி. இந்த நிலையில் பிகே இதுவரை இந்திய அளவில் 300 கோடிக்கு அதிகமாகவும் வெளிநாடுகளில் 200 கோடி வரையும் வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் 500 கோடியைத் தொட்ட முதல் இந்தியப் படம் என்ற அந்தஸ்தைப் பெற்று இருக்கிறது. இந்திய அளவில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்களில் மூன்று படங்கள் அமீர்கான் நடித்துள்ளது எக்ஸ்ட்ரா தகவல். காது புடைப்பா இருந்தா காசு கொட்டுமாமே!