‘உன் தலையில இடி விழ…’ என யார் சொல்லியோ, டிஷ் ஆன்டனாவில் இடி விழுந்து சேனல்களும் அவற்றின் நிகழ்ச்சிகளும் தடம் மாறி இடம் மாறினால் எப்படி இருக்கும்? ஜாலியாய் ஒரு கற்பனை பாஸ்!
ஜெயா டி.வி-யில் கலைஞர் செய்திகள்.
‘பிகே’ படத்தில் நடித்துள்ள அன்புத் தம்பி அமீர்கான் அவர்களின் நடிப்பு குன்றின் மேல் இட்ட விளக்கு போல இருக்கிறதென்று மக்களின் கலைஞர் கருணாநிதி அவர்கள் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இன்று காலை ஜெயா பிளஸ்ஸில் ஒளிபரப்பான ‘கல்லக்குடிகொண்ட கருணாநிதி வாழ்கவே’ பாடலைக் கேட்டு கல்லக்குடியில் மட்டுமல்ல திருக்குவளையிலும் ரிக்டர் 3.2 அளவில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தந்தி டி.வி-யில் சீமானின் ‘மக்கள் முன்னால்’ நிகழ்ச்சி கேப்டன் டி.வி-யில் சமையல் மந்திரத்தோடு மெர்ஜ் ஆகிவிடுகிறது.
‘தம்பிகளா! என் எழுச்சி உரைக்காக காத்திருப்பீங்கனு தெரியும். இன்னிக்கு நம்மளோட சமையல் மந்திரம் நிகழ்ச்சியில லைக்கா அன் லைக்கா லேகியம் செய்றது எப்படினு செயல்முறை விளக்கம் காட்டப் போறேன். இதைச் சாப்பிட்டா கடல் கடந்தும் தமிழ் உணர்வு கட்டுக்கடங்காம பெருகும். நான் பாட்டுக்கு செவனேன்னு லேகியம் செய்றேன். என் லேகியம் பிடிச்சிருந்தா கேளு தம்பி. நான் எதை விக்கணும், எப்பிடி விக்கணும்னு பாடம் எடுக்காதே. நான் அதுக்கு ஆளில்லை…’ என்று பொங்கியவரை அந்தப் பெண் கூல் செய்யும் விதமாக, ‘பொன் நிறத்துக்கு முந்திரி வெந்துடுச்சி சார்’ என்றதும் புன்முறுவலோடு நிகழ்ச்சியைத் தொடர்கிறார்.
மானாட மயிலாட நிகழ்ச்சியில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ‘மிங்கிள்’ ஆக ஒரே குழப்பக் குத்தடி சைலக்கா. வாய்ஸ் அனலிஸ்ட் அனந்த் பத்மநாபன் சார் சுடிதாரோடு நடுவராக மானாட மயிலாட ஷோவில் உட்கார்ந்திருக்கிறார்.
‘ஜிங்குன மணி ஜிங்குன மணி… சிரிச்சுப்புட்டா நெஞ்சுல ஆணி’ இந்தப் பாட்டுக்கு இப்பிடியா ஆடுறது? நெஞ்சுல ஆணீஈஈஈஈஈஈ… அப்படியே ஆணி அடிச்ச அந்த உணர்ச்சியையும் பாவனையையும் கொண்டு வந்திருக்க வேணாம்…? இப்போ பார்ருங்க நான் ஆடிக்காட்டுறேன்’ என சுடிதாரைத் தூக்கியபடி ‘ஏ ஜிங்குனமணி…’ பாட்டுக்குக் குத்தாட்டம் போடுகிறார்.
அங்கிட்டு, வாய்ஸ் அனலிஸ்ட்டாக சூப்பர் சிங்கரில் கலா மாஸ்டர் கக்கர கரகரப்ரியா குரலில், ‘டே யஷ்வந்த். பாட்டாடா படிக்கிறே டாக். பேசாதடா. உன் குரல்ல பிசிக்ஸ் இல்லைடா. உன் முகத்துல பயாலஜியே இல்லை. ஏன்டா நல்லாத்தானேடா பாடிக்கிட்டு இருந்தே, நான் உன்னை எலிமினேட் பண்றேன்டா. என் மூஞ்சியில முழிக்காதடா’ என முகத்தில் கால்கிலோ கடுகைப் பொரியவிடுகிறார் கலாக்கா.