அமெரிக்காவில் அதிக எடை கொண்ட பூசணிக்காய்களை சாகுபடி செய்வதில் கடந்த சில ஆண்டுகளாக கடும் போட்டியே நிலவி வருகிறது. அங்குள்ள விவசாய நிலங்களில் 600, 700 கிலோ எடை கொண்ட பூசணிக்காய் விளைவதெல்லாம் இப்போது சர்வ சாதாரணம். இதற்காக பிரமாண்ட பூசணிக்காய் சாகுபடி செய்யும் போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
கடந்த திங்கட்கிழமை வடக்கு சான்பிரான்சிஸ் பகுதியில் ஜான் ஹாக்லி என்பவருடைய தோட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட ஒரு ராட்சத பூசணிக்காயை எடை போட்டுப் பார்த்தனர். அது 933 கிலோ எடை கொண்டதாக இருந்தது. அமெரிக்காவில் இதுவரை அறுவடை செய்யப்பட்ட பூசணிக்காய்களில் இதுதான் மிகப் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்காக அவருக்கு 8 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் பரிசும் கிடைத்து இருக்கிறது. விரைவில் இந்த பூசணிக்காய் நியூயார்க் நகருக்கு விமானத்தில் பறக்க இருக்கிறது. ஆம், அங்குள்ள தாவரவியல் பூங்காவில் இந்த ராட்சத பூசணிக்காயை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்போகிறார்கள்.