இந்த உலகத்துல நாம புரிஞ்சிக்க முயற்ச்சிக்கிற மர்மங்களும், புதிர்களும் ஏராளம். ஆனா, இதுவரைக்கும் நமக்கு அறிமுகமான பெரும்பாலான மர்மங்கள், புதிர்கள் எல்லாமே நம் தாத்தா-பாட்டி, தாய்-தந்தையர் சொல்லும் கதைகள், அவர்களின் அனுபவங்களின் தொகுப்பிலிலுள்ள உண்மைச்சம்பங்கள், நண்பர்களின் அனுபவங்கள் இப்படி ஏதாவதொன்றின் மூலமாகத்தான் இருக்கும்!
மேலே சொன்னவற்றிற்க்கு உதாரணமாக, பேய்-பிசாசுக் கதைகளையும், பிரபஞ்சம் குறித்த சில மர்மங்கள், வினோதமான உயிர்கள் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். ஆனா, நம் தாய்-தந்தையரின் கதைகளிலல்லாது நாம் தெரிந்துகொள்ளும் மர்மங்களுக்கு அடிப்படை, நம் கல்வி/புத்தகங்கள் மற்றும் இவற்றுக்கு மூலக்காரணமாக இருக்கும் விஞ்ஞான ஆய்வுகள்! இவ்வுலக மர்மங்களில் நம்மை மிகவும் குழப்பத்துக்குள்ளாக்கி, தெரிந்துகொண்டே ஆகவேண்டும் என்னும் பேரார்வத்தை உருவாக்குபவை சில! அவற்றில் ஒன்றுதான் உயிர்களின் பரிணாமம் குறித்த
மர்மங்கள்/விந்தைகள்!
பரிணாம மர்மங்களில் மிகவும் பிரபலமானவை என இரண்டை சொல்லலாம். ஒன்று நம்மையெல்லாம் அதிசயிக்க வைக்கும் ஜூராசிக் பார்க் புகழ் டினோசர்களும், அவற்றின் அட்டகாசங்களும்! இரண்டு, குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்னும்கூற்று. ஆனா, இவை இரண்டைத் தவிர நமக்கு அதிகம் பரிச்சயமில்லாத, ஆனால் பரிணாம விஞ்ஞானிகளை குழப்பிக்கொண்டிருக்கும் உயிர்களின் பரிணாம வளர்ச்சித் தொடர்பான மர்மங்கள் ஏராளம்!
அத்தகைய மர்மங்களில் ஒன்றான, உயிர்களின் கழுத்து வளர்ச்சி/தோற்றம் குறித்த பரிணாம வளர்ச்சிக்கான அடிப்படைகள், காரணங்களை சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று பிரித்து மேய்ந்திருக்கிறது.
அப்படி பிரித்து மேய்ந்ததில் தெரிய வந்த உண்மைகள் (?), காரணங்கள், விளக்கங்கள் என்னென்ன அப்படீன்னு விரிவாக தெரிஞ்சிக்காத்தான் இன்றைய மர்மப் பதிவு. வாங்க மர்மப் பயணத்தை தொடருவோம்…..
கழுத்து மர்மமும் கடல்/நன்னீர் வாழ் உயிர்களும்!
உலக உயிர்களின் பரிணாம வளர்ச்சியின் பல நிலைகளை உற்று கவனித்தீர்களானால், அமீபா தொடங்கி மனிதன் வரையிலான பரிணாம வளர்ச்சிப் பயணத்தில் அவ்வப்போது, உயிர்களின் உடல் ரீதியிலான மாற்றங்கள் அவற்றின் வடிவத்திலும், அளவிலும் ஏற்பட்டுக்கொண்டே இருந்திருப்பதை உணரமுடியும்! அப்படியான மாற்றங்கள் உயிர்கள் ஒவ்வொரு நிலையிலிருந்தும் தம் அடுத்தகட்ட/உயர் நிலைக்கு மாறும்போதும் நிகழ்ந்தாலும், சில மாற்றங்கள் குறிப்பிட்ட சில நிலைகளின்போது மட்டுமே நிகழ்ந்திருக்கும்!
அத்தகைய ஒரு மாற்றம்தான் உயிர்களுக்கு கழுத்து என்னும் உடல் பகுதி உருவானது! நீங்க எப்பவாவது யோசிச்சிருக்கீங்களா, நமக்கு கழுத்து எதுக்காக அப்படீன்னு? “ஐய்ய என்னாதிது, இதெல்லாம் ஒரு கேள்வியா? கழுத்து எதுக்குன்னா, தலையை தாங்குவதற்க்கும், டை மாதிரியான விஷயங்களைக் கட்டுறதுக்கும், நம்ம குழந்தைகள உப்பு மூட்டை தூக்கும்போது, அவங்க விழுந்துடாம இருக்க பிடிச்சிக்கவும்தான்” அப்படீன்னு போற போக்குல சர்வ சாதாரணமா ஒரு பதிலை நம்மில் பலர் சொல்லக்கூடும்!
“பிரத்தியேகமாக” கழுத்தில்லாத மீன்கள்
ஆனா, பரிணாம வளர்ச்சி அடிப்படையில பார்த்தா, கழுத்து வளர்ச்சி/தோற்றத்துக்கு ஒரு முக்கிய காரணம் இருந்திருக்கிறது அப்படீன்னு சொல்றாங்க அமெரிக்காவின் பரிணாமவியல் ஆய்வாளர்களான லியூங் ஹேங் மற்றும் ராபர்ட் பேக்கர்! பொதுவா பார்த்தீங்கன்னா, எல்லா விலங்குகளுக்கு கழுத்துப் பகுதி இல்லை! உதாரணமாச் சொல்லனும்னா, மீன்களையும் அதற்க்கு முந்தைய உயிர்களான புழுக்கள், பூச்சிகளையும் எடுத்துக்குங்க. மீன்களுக்கு கழுத்து என்று பிரத்தியேகமாக ஒரு பகுதி இருக்காது. தலையுடன் தொடர்ந்தாற்போல் உடலுடன் இணையும் பகுதி மட்டுமே உண்டு!
ஆனா, கழுத்து இல்லாததுனால மீன்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை! தண்ணீரில் மீன்களின் நடமாட்டத்துக்கு உதவும் பகுதிகளான fins-களின் இயக்கத்துக்கு அடிப்படையான நரம்புகள் அதன் மூளையில் இருப்பதால், மூளையின் கட்டளைக்கேற்ப மீன்கள் நீந்துகின்றன. ஆனா, மீன்களுக்கு அடுத்தகட்ட பரிணாம நிலை உயிர்கள்முதல் திடீரென்று ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது உடல்ரீதியாக! விளைவு உடலையும், தலையை பிரித்து-இணைக்கும் தன்மையுடைய கழுத்து என்னும் ஒரு பிரத்தியேகமான ஒரு பகுதி தோன்றியது!
கழுத்து தோன்றக் காரணமாயிருந்த பரிணாம மாற்றம் என்ன?
நீர்வாழ் உயிர்கள் நிலத்தில் வாழ முன்னேறிவிட்டபின், அவற்றின் முன்னங்கால்களை இயக்கிய நரம்புகள் மூளையிலிருந்து முதுகுத்தண்டுக்கு இடம்பெயர்ந்துவிட்டன. நரம்புகளின் இந்த இடப்யெர்வு, உடலை தலைக்குகீழே சற்று நீண்ட இடைவெளியில் இருக்குமாறு செய்துவிட்டது. விளைவு, கழுத்து என்னும் ஒரு புதிய உடல் பகுதி தோன்றியது என்கிறார்கள் லியூங் ஹேங்கும், ராபர்ட் பேக்கரும்!
அப்படியா?! அது சரி, ஏன் திடீர்னு இப்படி ஒரு மாற்றம் ஏற்பட்டுச்சு?
கழுத்து என்னும் ஒரு புதிய பகுதி தோன்றியதற்க்கு காரணமாக இந்த ஆய்வு முன்வைப்பது, தலையை உடல் பகுதியிலிருந்து பிரிப்பது மட்டுமல்லாமல், முன்னங்கால்கள்/கைகளை புதிய கோணங்களில் பயன்படுத்தவும், இன்னும் சுதந்திரமாக இயக்கவும் ஏதுவாக (flexibility) இருக்கவேண்டும் என்பதற்க்காகவுமே என்னும் கருத்து! கழுத்துப் பகுதி தோன்றியதன் விளைவாக, நம் தலைகளும் கைகளும் பல்வேறு வகையான உடல் இயக்கங்களுக்கு பயனபடும் வண்ணம் புதிய வழிகள்/முறைகளிலும், கோணங்களிலும் இயங்கத் தொடங்கின என்கிறார்கள் ஆய்வாளர்கள்!