Home » அதிசயம் ஆனால் உண்மை » அறிவியல் » அறிவியல் ஆச்சரியங்கள்! தொடர்…….உடற்பயிற்சி மாத்திரையாகிறது ஒரு ஹார்மோன்!

அறிவியல் ஆச்சரியங்கள்! தொடர்…….உடற்பயிற்சி மாத்திரையாகிறது ஒரு ஹார்மோன்!

நம் எல்லோருக்குமே ஆசைதான் வாரணம் ஆயிரம் சூர்யா போல நமக்கும் ஒரு சிக்ஸ்
பேக் இருந்தால் நன்றாக இருக்குமே என்று! ஆனால் என்ன செய்ய, சூர்யா போல நம்மால் மாதக் கணக்கில் ஜிம்முக்கு போகவும் முடியாது. உணவுக் கட்டுப்பாட்டிலும் இருக்க முடியாது!
‘இவை இரண்டையுமே செய்யாமல் கட்டுமஸ்தான உடலமைப்பு வேண்டும். இதற்கு ஏதாவது வழி இருக்கிறதா சொல்லுங்கள்’ என்று யாராவது கேட்டால் நமக்கு சிரிப்புதான் வரும்.
ஆனால், அமெரிக்க ஆய்வாளர் ப்ரூஸ் ஸ்பீகெல்மேனோ, ‘அவ்வளவுதானே கவலையை விடுங்க. இந்த உடற்பயிற்சி மாத்திரையை சாப்பிடுங்க. நீங்க ஜிம்முக்கும் போக வேண்டாம் உணவுக் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டாம். ஆனால் கட்டுமஸ்தான உடலமைப்புக்கு நாங்க கியாரண்டி’ என்று சொல்லாமல் சொல்கிறார்.
ப்ரூஸ் ஸ்பீகெல்மேன் தலைமையிலான ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கும் இயற்கை ஹார்மோன் ஒன்று உடற்பயிற்சி போலவே செயல்பட்டு கெட்ட கொழுப்பினை நல்ல கொழுப்பாக மாற்றுகிறது என்பதுதான் ஆய்வுலகின் சமீபத்திய ஹாட் செய்தி.
இந்த ஹார்மோனுக்கு ‘ஐரிசின்’ என்று பெயரிட்டிருக்கிறார் ஸ்பீகெல்மேன். மனிதர்கள் கடவுளுடன் தொடர்புகொள்ள அனுமதி கொடுத்த கிரேக்க பெண் தெய்வத்தின் பெயர் ஐரிஸ். அதுபோல உடற்பயிற்சியானது உடலின் பல திசுக்களுடன் தொடர்புகொள்ள இந்த ஹார்மோன் உதவுவதால் இதற்கு ஐரிசின் என்று பெயர் வைக்கப்பட்டது என்கிறார்.
ஐரிசின், எலிகள் மற்றும் மனிதர்களின் உடலில் இயற்கையாகவே உற்பத்தி ஆகிறது. இது, உடலின் செலவிடப்படாத சக்தியை சேமிக்கும், சிறு உருண்டைகளால் ஆன வெள்ளை கொழுப்பினை, வெப்பத்தை உண்டாக்கும் காப்பி கொழுப்பாக (பிரவுன்
ஃபாட்) மாற்றுமாறு உயிரணுக்களை தூண்டுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
உடற்பயிற்சியினால் தசை திசுக்களில் ஏற்படும் மாற்றங்களான கலோரிகள் எரிக்கப்படுவது, மேம்படுத்தப்பட்ட இன்சுலின் உற்பத்தி மற்றும் உடல் உறுதி பெறுவது ஆகிய பல மாற்றங்கள் ஐரிசின் செயல்பாட்டினாலும் ஏற்படுகின்றன.
ஐரிசின் கொடுக்கப்பட்ட எலிகள் சிகிச்சைக்கு பின்னான பத்து நாட்களில் சில கிராம்கள் அளவு எடை குறைந்தன. உயிரணுக்களின் செயல்பாட்டுக்கு தேவையான சக்தியை உற்பத்தி செய்யும் மரபணுக்கள் தூண்டப்பட்டது. மேலும், அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளால் உடலுக்கு ஏற்படும் சேதமும் ஐரிசினால் குறைக்கப்பட்டது. இதனால் உணவுகளால் ஏற்படும் உடல் பருமன் மற்றும்
நீரிழிவு ஆகிய நோய்களிலிருந்து உடலும் பாதுகாக்கப்படுகிறது.
இது தவிர, உடற்பயிற்சியானது நரம்பு தசை பகுதிகளுக்கு பலனளிக்கக்கூடியது. அது போல ஐரிசினும் பலனளிக்கும் பட்சத்தில், தசை நோய்களான மஸ்குலர் டிஸ்ட்ரஃபி மற்றும் தசை விரயமாதல் ஆகியவற்றுக்கும் ஐரிசின் கொண்டு சிகிச்சை அளிக்க முடியும் என்கிறார் ஸ்பீகெல்மேன்.
அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவ பள்ளியின் மூத்த ஆய்வாளர் ஜெஃப்ரி ஃப்லையர் ஐரிசின் பற்றி கூறுகையில், ஐரிசினுடைய வருகை உடற்பயிற்சி, உடல் எடை மற்றும் நீரிழிவு ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பை புரிந்துகொள்ள ஒரு புது அணுகுமுறையை அறிமுகப்படுத்தி இருக்கிறது என்கிறார்.
ஐரிசினை உடற்பயிற்சி மாத்திரையாக உற்பத்தி செய்யவும், பிரவுன் ஃபாட் தொடர்பான மேலும் பல ஆய்வுகளை மேற்கொள்ளவும் ‘எம்பர் தெரபியூடிக்ஸ்’ என்னும் ஒரு நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார் ஸ்பீகெல்மேன். இந்த நிறுவனத்துக்காக சுமார் 34 மில்லியன் டாலர் கடனுதவியும் பெற்றிருக்கிறார்.
ஆனால், ஸ்பீகெல்மேன் நினைப்பது போல இந்த ஐரிசினை உடற்பயிற்சி மாத்திரையாக மாற்றுவது அவ்வளவு சுலபமான காரியமல்ல என்கிறார் அமெரிக்காவின் எம்.ஐ.டி ஆய்வு மையத்தின் உயிரியல் துறை பேராசிரியர் ஹார்வீ லோடிஷ். ஏனென்றால்,
கடந்த 1990-களில் தான் கண்டுபிடித்த ‘அடிப்போனெக்டின்’ என்னும் ஹார்மோனை மாத்திரையாக தயாரிக்க முயன்று இறுதியில் தோல்வியையே சந்தித்ததாக கூறுகிறார் லோடிஷ். அடிப்போனெக்டினும் ஐரிசினை போன்ற ஹார்மோன் என்பது
குறிப்பிடத்தக்கது.
பொதுவாக ஐரிசினும், அடிப்போனெக்டினும் ரத்தத்தில் அதிக அளவுகளில் இருக்கின்றன. அதைவிட அதிக அளவுகளில் இவை இரண்டையும் மாத்திரையாக உட்கொண்டால் மட்டுமே இந்த ஹார்மோன்களின் பலன் உடலுக்கு முழுமையாக
கிடைக்கும். இந்த காரணத்தாலேயே இவை இரண்டையும் மாத்திரைகளாக உற்பத்தி செய்வது மிகவும் கடினமான ஒன்று என்கிறார் லோடிஷ்!
அதேசமயம், ஐரிசினை உற்பத்தி செய்வது மிகவும் சுலபம். அதனால் ஜீன் தெரபி போன்ற முறைகள் மூலமாக ஐரிசினை கொண்டு சிகிச்சை அளிக்க முடியும் என்கிறார் பேராசிரியர் லோடிஷ்.
மொத்தத்தில் உடல் பருமன், நீரிழிவு மற்றும் நரம்புதசை நோய்களான மஸ்குலர் டிஸ்ட்ரஃபி மற்றும் தசை விரயமாதல் உள்ளிட்ட பல நோய்களுக்கு ஐரிசின் கொண்டு சிகிச்சை அளிக்க முடியும் என்று நம்பிக்கை அளிக்கிறார் ஸ்பீகெல்மேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top