ஹைடெக் சட்டை மற்றும் புளூடூத் கண்ணாடி
ஸ்காட்வெஸ்ட் நிறுவனம் உங்கள் சட்டையிலேயே நீங்கள் பயன்படுத்தக்கூடிய அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களையும் அதாவது செல்போன், மற்றும் பாக்கெட் கணிணி, கேமரா, இன்னும் என்னென்ன எலக்ட்ரானிக் கருவிகளை பயன்படுத்துகிறீர்களோ அத்தனையையும் பொருத்திக்கொள்ளும் வகையில் தயாரித்துள்ளது. PAN (Personal Area Network) என்றழைக்கப்படும் இந்த ஹைடெக் சட்டையில் வயர் மற்றும் வயர்லஸ் கருவிகளை உள்ளேயே பொருத்திக்கொண்டு நீங்கள் சாதாரணமாக உங்கள் பயணத்தைத் தொடரலாம்.
நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கலாம். கிட்டத்தட்ட 40 பாக்கெட்டுகள் வரை இதனுள் தைக்கப்பட்டிருக்கும். நீங்கள் வைத்திருக்கும் கருவிகளை ஒன்றுடன் ஒன்று இணைப்பதற்கு அதனுள்ளேயே வயர் இணைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் செல்போன்கள், MP3 பிளேயர், PDA (பாக்கெட் கணினி), பைனாகுலர், மூக்குக்கண்ணாடி, மற்றும் பாட்டரிகளை வைக்கும் விதமாக காந்தவிசை மூடி கொண்ட அறைகள் உள்ளன.
இதன் சிறப்பம்சம் என்னவென்றால் நீங்கள் உங்கள் கருவிகளை பாக்கெட்டில் கையை விட்டு தேடி இயக்கத் தேவையில்லை. சட்டையின் வெளிப்புறத்திலேயே இருக்கும் பட்டனை தட்டினாலே போதும். அந்தந்தக் கருவிகளை இயக்கலாம். MP3 ரேடியோவின் ஒலியைக் குறைக்கலாம், அதிகப்படுத்தலாம். இதை மடிப்பதாலும், இச்சட்டையை சலவை செய்வதாலும் எதுவும் பழுதாகாது. இதுதான் இதனுடைய முக்கிய சிறப்பம்சம்.
சட்டையின் பாக்கெட்டில் மறைந்திருக்கும் பாட்டரியை சட்டையின் பின்புறம் உள்ள சூரிய ஆற்றல் மூலம் `சார்ஜ்’ செய்யலாம். மேலும் இதில் உங்களுக்குத் தேவையான பானங்களை வைத்துக் கொள்ளலாம். இந்த PAN எல்லா வகை பருத்தியால் நெய்யப்பட்ட கால் சட்டைகளிலும் 11 கருவிகளை வைக்கக்கூடிய அறைகளுடன் கிடைக்கிறது.
சிங்குலர் (Cingular) என்ற நிறுவனம் புளூடூத் தொழில்நுட்பத்துடன் RAZRWIRE என்ற குளிர் கண்ணாடியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள ஹெட்செட் மூலம் 30 அடி தொலைவில் உங்கள் செல்போனை வைத்துவிட்டு பேசிக் கொண்டே நடக்கலாம். உங்கள் போனுக்கு வரும் அழைப்பையோ அல்லது கொடுக்கும் அழைப்பையோ (Incoming and outgoing) கண்ணாடியில் உள்ள ஒரே பட்டனிலேயே இயக்கலாம்.
இரண்டு காதுகளிலும் நீங்கள் விரும்பியபடி மாற்றி மாற்றி பொருத்திக் கொள்ளும்விதமாக கழற்றி மாற்றிக் கொள்ளும்படி ஒலிபெருக்கி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இக்கண்ணாடியில் ஆபத்தை விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களை தடுக்கும் விதமாக பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. உங்கள் வீட்டின் சுவற்றில் உள்ள மின் இணைப்பிலேயே சாதாரணமாக இதை சார்ஜ் செய்து கொள்ளலாம்.
இதே நிறுவனம் MP3 பிளேயருடன் ஒரு குளிர் கண்ணாடியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு தனியே ஹெட்போன் தேவையில்லை. ஒரு சிறிய செவி ஒலிபெருக்கி கண்ணாடி பிரேமிலேயே மடக்கி பொருத்தப்பட்டிருக்கும். தேவைப்படும்போது இழுத்து காதில் செருகிக் கொள்ளலாம். மேலும் பிரேமிலேயே USB இணைப்பானும் இருக்கும். இதன் மூலம் கம்யூட்டரில் இணைப்பு கொடுத்து தேவையான MP3 பாடல்களை ஏற்றம் செய்து கொள்ளலாம். எடையும் மிகக்குறைவு.