பொருளாதார சிக்கனத்தை எந்த அளவிற்கு ஏற்படுத்த முடிகிறதோ அந்த அளவிற்கு விஞ்ஞானத்தின் தரத்தை நிர்ணயிக்கலாம். உதாரணமாக 1 லிட்டரில் 15 கி.மீ செல்லும் ஒரு வாகனம், விஞ்ஞானப் புரட்சியால் 1 லிட்டருக்கு 25 கி.மீ சென்றால் அது அறிவியல் வளர்ச்சியின் மிகப்பெரிய சாதனைதான். இதனால் எரிபொருள் சிக்கனம் ஏற்படுகிறது.
இதன் காரணமாக ஒரு நாட்டின் பொருளாதாரத்திலும் முன்னேற்றம் ஏற்படுகிறது. இப்படி எல்லா வகையிலும் விஞ்ஞானம் மூலப்பொருள் சிக்கனத்தையும், அதிக லாபம், நேரவிரயம் தடுக்கப்படுதல் போன்றவைகளில் சாதனை புரிந்து வருகிறது.
ஸ்கேண்டினேவியன் கப்பல் நிறுவனமான Wallenius Wilhelmsen (WW) 2025-ல் காற்று, அலை, சூரிய ஒளி இவைகளைக் கொண்டு இயங்கும் சரக்கு கப்பலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆர்செல் என்று பெயரிடப்பட்ட இந்த கப்பலில் எடை குறைவான பொருட்களால் தயாரிக்கப்பட்ட மூன்று பாய்மரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
காற்றின் உபயோகத்தைத் தவிர சூரியக் கதிர்களையும் (Solar Photovolatic cells) பயன்படுத்தி கப்பல் இயங்குவ தற்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. கப்பலில் உள்ள 12 துடுப்புகளின் மூலம் அலையிலிருந்து மின்சாரம் பெறப்படுகிறது. இந்த இரு உந்து சக்தியைக் கொண்டு இயங்கும் இதன் செயல்திறன் அதிகம். எஞ்சியுள்ள கப்பலுக்குத் தேவைப்படும் மின்சாரம் ஹைட்ரஜன் எரிசக்தியின் மூலம் பெறப்படுகிறது.
இந்த ஆர்செல் கப்பலின் கார்கோ தளம் மட்டும் 14 மடங்கு கால்பந்து ஆடுகளத்தின் அளவைக் கொண்டது. இதில் 10 ஆயிரம் கார்களை நிறுத்தலாம். இப்பொழுது இருக்கும் கார்களை கொண்டு வரும் சரக்கு கப்பல்களைவிட 50 சதவிகிதம் கூடுதலான கார்களை ஏற்றிச் செல்லும் அளவிற்கு இது பெரியது.
ஆனால் கப்பலில் பயன்படுத்தப் பட்டிருக்கும் அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக் இவைகளி னால் மற்றக் கப்பல்களைப் போன்ற எடைதான் இதுவும் இருக்கும். இதன் விஷேச அம்சம் என்னவென்றால் இதனுடைய சுக்கான் (கப்பலை செலுத்துவதற்கு மற்றும் திருப்புவதற்கு உதவும் ஸ்டியரிங் போன்ற சாதனம்), மின் உந்துசக்தி மோட்டார் இவைகள் நவீன வகையில் கச்சிதமாகவும், முந்தைய கப்பல்களில் உள்ளது போல் அதிக இடத்தை ஆக்கிரமிப்பு செய்யாத வண்ணம் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் அதிக எடையுள்ள எரி பொருள் சேமிப்பு தொட்டிகளும் தவிர்க்கப்படுகிறது.