தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற உயிரியலாளரான சிட்னி பிரென்னரின் பிறந்த தினம் இன்று (ஜனவரி13). இவரைப் பற்றி அரிய முத்துக்கள் பத்து
தென் ஆப்பிரிக்கா வின் ஜெர்மிஸ்டன் என்ற சிறிய ஊரில் பிறந்த இவர் யூதக் குடும்பத்தைச் சேர்ந்த வர். உயர் நிலைக் கல்வியை 15 வயதில் முடித்தார். பிறகு மருத்துவம் படிப்பதற்காக விட்வாட்டர்ஸ்ரான்ட் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார்.
முதலில் பி.எஸ்.சி. உடலியல் மருத்துவம் படிக்கும் வாய்ப்பைப் பெற்றார். அந்த சமயத்தில் வேதியியல், மைக்ரோஸ்கோப், மானுடவியல், பறவையியல் குறித்து கற்கும் வாய்ப்பைப் பெற்றார்.
அதன் பிறகு முதுகலைப் பட்டமும் பெற்றார். செலவைச் சமாளிக்கப் பகுதிநேரப் பரிசோதனைக்கூடத் தொழில்நுட்ப பணியாளராகச் சேர்ந்தார்.
குரோமசோம்கள் கட்டமைப்பு மற்றும் செயல்பாடு தொடர்பான பரம்பரை குறித்த ஆய்வுக் கட்டுரை உட்பட ஏராளமான கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். கல்லூரியில் பெற்ற இந்த அனுபவங்கள் பின்னாளில் இவர் மூலக்கூறு உயிரியிலாளராக ஆராய்ச்சியில் ஈடுபட்டபோது பெரிதும் உதவின.
பல விஞ்ஞானிகளுடன் இணைந்து செல்கள் குறித்து ஆராய்ந்துவந்தார். டி.என்.ஏ.க்கள் கண்டறியப்பட்டன. மூலக்கூறு உயிரியல் பிறந்தது.
20 வருடங்கள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மெடிக்கல் ரிசர்ச் கவுன்சில் பிரிவில் பணிபுரிந்தார். அப்போது மரபணுக் குறியீடு, மூலக்கூறு உயிரியியல் ஆகிய கள ஆராய்ச்சிகளில் மகத்தான பங்களிப்பை வழங்கினார்.
1963-ல் முதன் முதலில் கெனோர்ஹப்டிடிஸ் எலிகன்ஸ் சி எலெகன்ஸ்களை (வட்டப்புழுக்கள்) ஆராய்ச்சிகளுக்கு மாதிரியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவித்தார். 1974-ல் உயிரின நரம்பியல் வளர்ச்சி குறித்த ஆராய்ச்சிகளுக்கு இவற்றை மாதிரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கினார்.
எளிதாக உற்பத்தி செய்யக்கூடிய இந்த சி-எலிகன்ஸ் உயிரினத்தைப் பயன்படுத்தி இவர் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் பல்வேறு மரபணு குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதற்கு உதவுகின்றன. மிகச் சுலபமான உருவாக்கப்படக் கூடிய உயிரியாக இருப்பதால், பரவலாகப் பயன்படுத்தப்பட்டு, ஏராளமான மரபணு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவிவருகிறது. இதற்காக ஹெச். ராபர்ட் ஹார்விட்ஸ் மற்றும் ஜான் சல்ஸ்டன் ஆகியோருடன் இணைந்து 2002-ல் மருத்துவத் திற்கான நோபல் பரிசை இவர் பெற்றார்.
ஏராளமான விருதுகளும் பட்டங்களும் இவருக்கு வழங்கப் பட்டன. மரபணு குறியீடு குறித்த பிரச்சினைகளுக்குக்குத் தீர்வு காண ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்காக தென்னாப்பிரிக்காவில் மருத்துவக் கல்லூரியில் உடலியல் பிரிவில் ஒரு சோதனைக்கூடத்தை இவர் நிறுவியுள்ளார்.
80 வயதை நெருங்கும் இந்த நேரத்திலும் இன்னமும் அறிவியல் ஆராய்ச்சிகளில் ஆர்வத்தோடு ஈடுபட்டு வருகிறார். உயிரியியலில் மேலும் என்னென்ன கண்டு பிடிக்க முடியும் என்பதைக் குறித்த சிந்தனைகளிலும் ஆராய்ச்சிகளிலும் கவனம் செலுத்திவருகிறார், சிட்னி பிரென்னர்.