இப்பிரபஞ்சத்தின் எந்த ஒரு ஜீவராசியும் செல் என்ற அடிப்படை அலகைக் கொண்டே உருவாகின்றது. எந்த ஒரு ஜடப்பொருளும் ஒரு சின்னஞ் சிறு அணு என்கிற அலகை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப்படுகின்றது. அணு ஒரு உரோமத்தின் பருமனில் 10 லட்சத்தில் ஒரு பங்கு அளவிற்கு மிக மிகச் சிறியதான துகள்! ஒரு சாதாரண நுண்ணோக்கி மூலம் ஒரு ஊசி முனைப் புள்ளியில் ஒரு கோடி அணுக்களை நாம் காணமுடியும்.
இரசாயணக் கோட்பாடுகளின்படி ஒவ்வொரு பொருளின் அணுவும் அதற்கென ஒரு தனித் தன்மை கொண்டவை. அப்படி ஒரே தன்மை கொண்ட பலகோடி அணுக்கள் சேர்ந்து உருவாகும் ஒரு இரசாயணப் பொருளை நாம் தனிமம் (element) என்கிறோம். உதாரணமாக ஹைட்ரஜன், ஆக்சிஜன், இரும்பு, ஈயம், செம்பு, துத்தநாகம் மற்றும் யுரேனியம் போன்றவைகள் தனிமங்கள் ஆகும்.
எனவே ஒவ்வொரு தனிமத்திற்கும் ஒரு அடிப்படைத் தன்மை கொண்ட அணுக்களே அதற்கான செங்கற்கள் எனலாம்! ஒன்றுக்கு மேற்பட்ட தனிமங்கள் சேரும்போது ஒரு புதிய கூட்டுப்பொருள் (compound) உருவாகிறது. உதாரணமாக நாம் அருந்தும் நீரைச் சொல்லலாம். ஹைட்ரஜன் அணுக்களும் ஆக்ஸிஜன் அணுக்களும் சேர்ந்து நீர் உருவாகின்றது.
நீரை உருவாக்கப் பயன்படும் ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் அணுக்களின் சேர்மம் ஒன்றுக்கு ஒன்று என்ற சரி விகிதத்தில் இல்லாமல் சற்று வித்தியாசமான தாயும், சிக்கல் நிறைந்த அம்சமாகவும் உள்ளன. அணு எடை வித்தியாசம் காரணமாய் இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் ஒரே ஒரு ஆக்ஸிஜன் அணுவுடன் இணைந்து நீரை (H2O) உருவாக்குகின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட தனிமங்கள் சேர்வதால் உருவாகும் இந்த சேர்மத்தின் அடிப்படை அலகை நாம் நீரின் மூலக்கூறு (Molecule) என்கிறோம்.
ஒவ்வொரு தனிமங்களின் அணு எடையைப் பொறுத்தவரை அதிக வித்தியாசம் காணப்படும் அளவிற்கு அதன் பருமனைப் பொறுத்தவரை குறுக்pic8களவில் அதிக வித்தியாசம் ஏதும் இல்லை. ஏறக் குறைய அணுக்கள் யாவுமே ஒரே குறுக்களவைக் கொண்டுள்ளன. உதாரணமாக இவ்வுலகில் அதிக அணு எடை கொண்ட தனிமமான யுரேனியத்தின் அணு எடையானது ஹைட்ரஜன் அணு எடையை விட 200 மடங்கு அதிகம்! ஆனால் யுரேனிய அணுவின் குறுக்களவோ ஹைட்ரஜன் அணுவின் குறுக்களவை விட 3 மடங்கே அதிகம்!
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதென்பார்கள். அணுதான் இப்பிரபஞ்சத்தின் மிக மிகச் சின்னஞ் சிறிய பொருள். ஆனால் அதன் சக்தியும் வீரியமும் மிக மிகப் பெரிய அளவிலானது. அணுவில் பொதிந்துள்ள ஆற்றலின் (energy) அளவோ அளவிட முடியாத அபரிமித சக்தியாகும்! குதிரையை வசப்படுத்த நாம் சேணம் பூட்டி அதைக் கட்டுப்படுத்துவது போல் அளப்பரிய அணுவின் ஆற்றலையும் கட்டுப்படுத்தி நம் தேவைக்குப் பயன்படுத்த நம் விஞ்ஞானிகள் வழிவகைகள் கண்டுள்ளனர்.