‘அசாஸின்’ஸ் க்ரீட்: ரெவலேஷன்ஸ்’ (Assassin’s Creed: Revelations) கேமில், அட்மிரல் பிரி ரேய்ஸ் (Admiral Piri Reis) என்பவர் ஒரு கதாபாத்திரம். அந்தக் கதை நடக்கும் காலகட்டம்: கி.பி பதினாறாம் நூற்றாண்டு. ஹீரோ எஸியோ, தனது பணிக்காக கான்ஸ்டான்ட்டிநோப்லி நகருக்கு வருகையில் அவரை சந்திக்கும் பிரி ரேய்ஸ், தனது அனுபவத்தினால் குண்டுகள் தயாரிக்கும் வழிமுறைகளை எஸியோவுக்கு சொல்லிக்கொடுக்கிறார். கான்ஸ்டான்ட்டிநோப்லி என்பது தற்போதைய இரான். ஒட்டோமன் சாம்ராஜ்யத்தைப் பற்றி பள்ளியில் சரித்திரப் பாடத்தில் படித்திருக்கிறோம் அல்லவா? துருக்கியை தலைநகராகக் கொண்ட சாம்ராஜ்யம் அது. இரண்டாம் பயேஸித் என்பவர், 1481லிருந்து 1512 வரை இந்த சாம்ராஜ்யத்தை ஆண்டவர். இந்தக் காலத்தில் அவரிடம் இருந்த பிரி ரேய்ஸின் வேலையை கவனித்தால், சுல்தான் இரண்டாம் பயேஸித்தின் கப்பல்படையில் வழிகாட்டியாக இருந்தவர் என்று தெரிகிறது. தனது மாமாவுடன் இதற்கு முன்னர் பல கப்பல் பயணங்களில் தேர்ந்த அனுபவம் இருந்ததால், மாமா அட்மிரலாக இருந்த படையில் இவரும் வழிகாட்டியாக சேர்ந்தார். ரேய்ஸ் என்ற பெயருக்கே ‘அட்மிரல்’ என்றுதான் டர்கிஷில் பொருள். எஸியோவிடம் பேசும் பிரி ரேய்ஸ், தற்போது அரசுப்பணியிலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு ஒரு முக்கியமான வேலையில் ஈடுபட்டிருப்பதாக சொல்கிறார். அது என்ன வேலை? கார்ட்டோக்ராஃபி. அதாவது, வரைபடங்களை உருவாக்குவது. இன்னும் தெளிவாக சொல்லப்போனால் மேப்கள் வரையும் கலை.
இங்குதான் நமது அடுத்த மர்மம் துவங்குகிறது.
இந்த ஒட்டோமன் மன்னர்களின் மாளிகையின் பெயர் – தோப்காபு மாளிகை (Topkapı என்று இருந்தாலும், அப்படித்தான் உச்சரித்தல் வேண்டும்). 180 ஏக்கர்களில் அமைந்திருக்கும் இந்த மாளிகை, கிட்டத்தட்ட ஒரு டௌன்ஷிப். இந்த மாளிகையின் நூற்றுக்கணக்கான அறைகளில் ஒன்றுதான் அதன் நூலகம். 1929ம் ஆண்டில், இந்த தோப்காபு மாளிகையை ஒரு ம்யூஸியமாக மாற்ற நினைத்த துருக்கி அரசு, கஸ்தாவ் அடால்ஃப் டேய்ஸ்மேன் என்ற ஜெர்மானியரை அழைத்து, அந்த மாளிகையின் நூலகத்தில் இருக்கும் இஸ்லாம் மதத்தை சாராத பொருட்களை பட்டியலிட்டுத் தரச் சொன்னது. அப்போது அவரது கட்டளையின் கீழ் மாளிகையின் சகல அறைகளிலும் தூசுதட்டும் வேலைகள் நடந்ததால், மிக மிக தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பொருள் – மான் தோலில் வரையப்பட்டிருந்த ஒரு வரைபடம் – அவரது கவனத்தை ஈர்த்தது.
இந்த வரைபடம், ஒரு முழு வரைபடத்தின் மூன்றில் ஒரு பங்கு. பாக்கி இரண்டு துண்டுகள் இதுவரை எங்கும் கிடைக்கவில்லை.
இந்த வரைபடத்தில் பொதிந்திருக்கும் குறிப்புகள், உலகெங்கும் ஆராய்ச்சியாளர்களின் மத்தியில் பரபரப்பைக் கிளப்பின. ஒவ்வொரு குறிப்பும், இந்த வரைபடத்தின் ஒவ்வொரு பகுதியைப் பற்றிய செய்தி. இந்தச் செய்திகள், ஒரு கடற்பயணியின் பார்வையில் விவரிக்கப்பட்டிருப்பதால், அவற்றில் பல மிகைப்படுத்தல்கள் இருந்தன என்றாலும், இந்த வரைபடம் எப்போது வரையப்பட்டது (இஸ்லாமிய வருடம் 919 – முஹர்ரம் மாதம்: மார்ச் 9லிருந்து ஏப்ரல் 7 வரை – 1513ம் ஆண்டு) என்பதில் தொடங்கி, வரைபடத்தின் ஒவ்வொரு பகுதியைப் பற்றிய தகவல்கள், அங்கு வாழும் மக்கள், மிருகங்கள் பற்றிய செய்திகள், இந்த இடங்கள் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டன என்ற தகவல்கள் ஆகிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த குறிப்புகள் இவை.
இந்த வரைபடத்தில் அடங்கியுள்ள அத்தனை குறிப்புகளின் ஆங்கில மொழியாக்கத்தை இங்கே படித்துக்கொள்ளலாம்.
இந்த மேப்பை வரைந்தவர் பிரி ரேய்ஸ். அதிலேயே இதனைப்பற்றிய குறிப்பும் இருக்கிறது. இந்தக் குறிப்புகளில் (ஆறாவது குறிப்பில்), இந்த வரைபடம் எவ்வாறு வரையப்பட்டது என்று விளக்குகையில், இதற்கு முன்னிருந்த பல்வேறு தனித்தனி வரைபடங்களைப் பார்த்தே இந்தப் பெரும் வரைபடம் உருவாக்கப்பட்டது என்று பிரி ரேய்ஸ் சொல்லியிருக்கிறார். ‘அலெக்ஸாண்டரின் காலத்தில் வரையப்பட்டிருந்த சில வரைபடங்கள், போர்ச்சுக்கீசியர்களால் வரையப்பட்ட சில வரைபடங்கள் மற்றும் கொலம்போவினால் வரையப்பட்ட வரைபடங்களை வைத்தே இந்த முழு வரைபடத்தை இந்த எளியவனின் கைகள் வரைந்தன. இப்படிப்பட்ட ஏழு கடல்களையும் உள்ளடக்கிய பெரும் வரைபடம் உலகில் எங்குமே இல்லை’ என்று பிரி ரேய்ஸ் அதில் எழுதியிருக்கிறார். ஆகவே, பிரி ரேய்ஸுக்கு source வரைபடங்கள் என்ற சில இருந்திருக்கின்றன என்பது அவரது கைப்படவே எழுதப்பட்டுவிட்டது.
இந்த வரைபடங்களின் காலம் என்ன? அதாவது, பிரி ரேய்ஸின் reference pointடாக இருந்த மேப்கள் யாரால் எப்படி வரையப்பட்டன? இதில்தான் மர்மம்.
இந்த மர்மம் ஏன்? இதைப் புரிந்துகொள்ள, பிரி ரேய்ஸின் இந்த மேப் துண்டை கொஞ்சம் அலசவேண்டும்.
நாம் ஏற்கெனவே பார்த்ததுபோல், பிரி ரேய்ஸின் இந்த மேப் துண்டின் மற்ற இரண்டு பாகங்கள் இதுவரை கிடைக்கவில்லை. எஞ்சியிருக்கும் இந்தத் துண்டில், ஆஃப்ரிக்காவின் மேற்குப்பகுதியும், வட -தென்னமெரிக்க கண்டங்களும், ஐரோப்பாவின் சில பகுதிகளும் உள்ளன. இவையெல்லாம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயங்கள்தான். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.
அப்போது எங்குதானய்யா மர்மம்? சொல்லித் தொலையும்.
மர்மம் துவங்குவது, இந்த மேப்பின் தெற்குப்புறத்தில். அதாவது, தென்னமெரிக்காவின் கீழ்ப்புறத்தில். மேப்பை உற்றுக்கவனித்தால், அந்த இடத்தில் தென்னமெரிக்காவில் இருந்து வளைக்கப்பட்ட கோடு ஒன்று, ஒரு பெரிய நிலப்பகுதியை நமக்கு இந்த வரைபடத்தில் காண்பித்திருப்பது தெரியும்.
ஆமாம். அங்கு ஒரு நிலப்பகுதி உள்ளது. அதனால் என்ன?
சரி. இப்போது இங்கே இதேபோன்றதொரு மேப் இருக்கிறது. இது சமீபகாலத்தில் தயாரிக்கப்பட்ட மேப். இதில் தென்னமெரிக்காவுக்குக் கீழே என்ன இருக்கிறது? பனியால் சூழப்பட்டுள்ள அன்டார்ட்டிகா கண்டம். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.
ஓகே. பிரி ரேய்ஸ் அண்டார்ட்டிகாவை அவரது மேப்பில் காண்பித்திருக்கிறார். ஆஃப்ரிக்கா, அமெரிக்காக்கள் அவரது மேப்பில் சரியாக வரையப்பட்டிருப்பதுபோல, அண்டார்ட்டிகாவும் வரையப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட நான்கு பெரிய கண்டங்களை அவரது மேப்பில் வரைந்த நமது பிரிக்கு அண்டார்ட்டிகாவை வரைவதா கஷ்டம்?
இது ஒரு நல்ல ஆர்க்யுமென்ட்தான். ஆனால், அன்டார்ட்டிகா கண்டுபிடிக்கப்பட்ட வருடம் எது என்று பார்த்தால், கிட்டத்தட்ட A.D 1773ல் இருந்து பல பேர் அண்டார்டிகாவின் முன்னால் இருக்கும் தீவுகளைக் கண்டிருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்கிறோம். அண்டார்டிகா என்ற பெரும் தீவு முறையாக உலகின் பார்வைக்கு வந்ததோ, 1820ல் இருந்துதான் என்றும் அறிகிறோம்.
இதுதான் மர்மம். பிரி ரேய்ஸ் அன்டார்ட்டிகாவின் reference pointடை கட்டாயம் ஏதோ ஒரு மேப்பிலிருந்துதான் refer செய்கிறார் என்றால், அதற்கு முன்னரே அந்த மேப் இருந்திருக்க வேண்டுமல்லவா? ஆனால், அன்டார்ட்டிகா என்பது பிரியின் காலத்தில் – A.D 1513 – பதினாறாம் நூற்றாண்டில் – கண்டுபிடிக்கப்படவே இல்லையே? அப்படியென்றால் அந்த மேப்பை வரைந்தவர் யாராக இருக்க முடியும்? அவருக்கு எப்படி அண்டார்ட்டிகாவைப் பற்றித் தெரிந்தது? இதில் இன்னொரு குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவெனில், அன்டார்ட்டிகாவின் மீது எந்தப் பனியும் இல்லாமல் இந்த மேப்பில் வரையப்பட்டிருக்கிறது. அதாவது, அன்டார்ட்டிகா ஒரு சாதாரண நிலப்பரப்பு போல இருக்கிறது. விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட தகவல்களின்படி, 45.5 மில்லியன் வருடங்களுக்கு முன்னாலேயே அன்டார்ட்டிகாவின் மீது பனி படிய ஆரம்பித்துவிட்டது. அப்படியென்றால், அன்டார்ட்டிகா பனி இல்லாமல் இருந்தது அதற்கும் முன்புதான். மனித உயிரின் வாடையே இல்லாத அந்தக் காலத்தில் யார் வந்து அன்டார்ட்டிகாவை மேப்பில் பதிவு செய்தது? அந்த மேப்பின் பிரதியோ அல்லது பிரதியின் பிரதியோ அல்லது பிரதியின் பிரதியின் பிரதியின் பிரதியின் பிரதியோ எப்படி பிரி ரேய்ஸுக்குக் கிடைத்தது?
Charles Hapgood என்பவர்தான் இந்தத் தியரியைப் பற்றி முதலில் புத்தகம் எழுதி சம்பாதித்தவர் என்றாலும், நமக்கெல்லாம் இந்தத் தொடரில் ஏற்கெனவே அறிமுகமாகியிருக்கும் எரிக் வான் டானிக்கென் தனது ‘Chariots of the Gods’ புத்தகத்தில் இதனைப் பற்றி எழுதியிருக்கிறார். இவரது கருத்தைப் பின்பற்றித்தான் பலரும் இந்த விஷயத்தில் கருத்து சொல்லியிருக்கிறார்கள் என்பதால், முதலில் டானிக்கெனின் கருத்தை கவனிப்போம் – அதிலேயே அத்தனை ஏலியன் நம்பிக்கையாளர்களின் கருத்தும் கவர் செய்யப்பட்டுவிடும் என்பதால்.
Arlington H Mallery என்ற அமெரிக்க மேப் எக்ஸ்பர்ட்டிடம் இந்த பிரி ரேய்ஸ் மேப்கள் அளிக்கப்பட்டதாகவும், அவற்றை ஆராய்ந்த மேல்லரி, அத்தனையும் மிகச்சரியாக இந்த மேப்பில் வரையப்பட்டிருப்பதாக ஆச்சரியம் தெரிவித்ததாகவும் டானிக்கென் எழுதியிருக்கிறார். கூடவே பல ஆராய்ச்சியாளர்களின் பெயரை லிஸ்ட் செய்து, இவர்களின் ஆராய்ச்சி முடிவுப்படி, இந்த மேப்கள் மிக உயரத்திலிருந்து ஸாடலைட் உதவியுடன்தான் வரையப்பட்டிருக்கின்றன என்பதையும் உறுதி செய்கிறார் அவர். பிரி ரெய்ஸ் காலத்துக்கு மிக மிக முன்னால் வரையப்பட்டிருக்கும் இந்த reference மேப்கள் ஸாடலைட் உதவியுடன்தான் வரையப்பட்டிருக்கின்றன என்றால், ஏலியன்கள்தான் இந்த மேப்களை தயாரித்திருக்கமுடியும் என்பதே டானிக்கெனின் வாதமாக இருக்கிறது. பிற ஆதரவாளர்களும் இதையேதான் சொல்கின்றனர்.
இந்த மேப்கள் ஸாடலைட்டில் இருந்துதான் வரையப்பட்டிருக்கின்றன என்பதற்கு எடுத்துக்காட்டும் டானிக்கென் எழுதியிருக்கிறார். அதாவது, இந்த மேப்பை உற்றுக்கவனித்தால், மேப்பின் நடுவில் இருக்கும் பகுதிகள் மிகப் பெரிதாக வரையப்பட்டிருக்கின்றன. அதேசமயம், ஓரமாக இருக்கும் தென்னமெரிக்கா போன்ற பகுதிகள் கொஞ்சம் கொஞ்சமாக சிறிதாகிக்கொண்டே போகின்றன. மேலே வானத்தில் இருந்து ஒரு பகுதியை கவனித்தால்தான் அப்படித் தெரியும் என்பது அவரது வாதம். மேப்களை வரையும் கலையான கார்ட்டோக்ராஃபியில் இதற்கு Azimuthal Projection என்று பெயர். நடுவில் இருக்கும் விஷயங்களை அப்படியப்படியே ஒரு அளவையின்படி வரைந்துவிட்டு, சற்றே தள்ளியிருக்கும் விஷயங்களை அந்த அளவையின்படி இல்லாமல் சிறிதாக்கிவிடுவது.
இந்தக் கருத்துக்கு எதிராகவும் பலர் எழுதியிருக்கின்றனர். அவர்களின் லாஜிகல் கருத்து என்னவெனில், பிரி ரேய்ஸின் இந்த மேப், ஸாடலைட்டிலிருந்து எடுக்கப்பட்ட வரைபடம் அல்ல; மாறாக, பிரி இந்த மேப்பை வரையும்போது, இவரது மான்தோல் கிட்டத்தட்ட முடியும் நிலையில் இருந்ததால், தென்னமெரிக்காவை வரைந்து முடித்ததும், அப்போதைய மேப்களின் முடிவு அவ்வளவே என்பதால் கடலின் கோஸ்ட்லைனைத்தான் இப்படி வலதுபுறம் செல்லும் கோடாக வரைந்திருக்கிறார் என்பது. இதற்குத் துணையாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில இடங்களில் இந்தப் பிரி ரேய்ஸின் மேப்பில் இருக்கும் பல தவறுகளை சுட்டிக்காட்டுகிறார்கள்.
இதோ இந்த லிங்க்கில், ஒவ்வொரு பார்ட்டாக அதனை தற்போதைய வரைபடங்களுடன் ஒப்பிட்டு, பிரி ரேய்ஸின் வரைபடத்தை பிரித்தெடுத்திருக்கிறார் ஒருவர். அதனைப் பற்றிய ஏலியன் மேட்டர் எல்லாம் டுபாக்கூர் என்பது இவரது வாதம். அதற்கான காரணங்களை பொறுமையாக நேரம் இருந்தால் படியுங்கள். இது Azimuthal Projection இல்லை என்பதையும் இவர் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியிருக்கிறார்.
பொதுவாக, மர்மமாக ஏதோ ஒன்று இருந்தால் அதனை ஏலியன்களுடன் அல்லது பிற அமானுஷ்ய சக்திகளுடன் ஒப்பிட்டு அந்த மர்மத்துக்கு ஒரு hype கொடுப்பதுதானே வழக்கம்? ஏனெனில், இந்தத் தியரிதான் கவர்ச்சிகரமாக, நினைத்துப் பார்க்கவே ஒரு சிலிர்ப்பை வரவழைப்பதாக இருக்கிறது. மாறாக இதெல்லாம் அமானுஷ்யம் இல்லை; சாதா மேட்டர்தான் என்று சொன்னால் அந்த சுவாரஸ்யம் போய் அதனை நம்ப மறுத்துவிடுவோம். ஆகவே இந்த மறுப்பாளர்களை விடவும் ஆதரவாளர்களின் தியரிதான் பலராலும் நம்பப்பட்டு வருகிறது.
இதுவரை பலராலும் விவாதிக்கப்பட்டுக்கொண்டு, விடையே கண்டுபிடிக்கப்படாத பல மர்மங்களில் இந்த பிரி ரேய்ஸ் மேப்பும் ஒன்று. அதன் பிற இரண்டு துண்டுகள் எங்கே போயின? உலகின் ஏதோ ஒரு கட்டிடத்தின் கவனிக்கப்படாத மூலையில் இன்னமும் அவை யார் கையும் படாமல் உறங்கிக்கொண்டிருக்கலாம். அவையும் வெளியே வந்து இத்துடன் இணைக்கப்பட்டால் மட்டுமே பிரி ரேய்ஸ் மேப்பின் மர்மம் தீர வழி இருக்கிறது.
பி.கு :
பிற்காலத்தில் அளித்த பேட்டி ஒன்றில், எரிக் வான் டானிக்கென், தனது புத்தகத்தில் இந்த மேப்பைப் பற்றி சில பிட்டுகள் எக்ஸ்ட்ராவாக எழுதியிருந்ததை சிரித்துக்கொண்டே ஒப்புக்கொண்டிருக்கிறார்.