Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » பயிர் வட்டம் (Crop Circle) – 10
பயிர் வட்டம் (Crop Circle) – 10

பயிர் வட்டம் (Crop Circle) – 10

இந்தத் தொடர் பத்தாவது அத்தியாயத்தில் காலடியெடுத்து வைக்கிறது. தொடரில் இதுவரை சொல்லப்பட்டவற்றை நீங்கள் என்ன விதத்தில், எந்தக் கோணத்தில் மனதில் உள்வாங்கிக் கொண்டீர்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் பேய்க்கதைகள் கேட்பது போல மர்மத்தையும், திகிலையும் மட்டும் எதிர்பார்த்து, இதை வாசித்திருப்பீர்களானால், நான் மாபெரும் தோல்வியுற்றவனாவேன். பேய்கள் போன்று பகுத்தறிவுக்கேஒத்துவராதவற்றைப் பார்த்ததாகச் சிலர் தலையிலடித்துச் சத்தியம் செய்வது போல, இவற்றையும் ஒரு மூடநம்பிக்கையாக நான் உங்களுக்குள் விதைக்கப் பார்க்கிறேன் என்று வாசிப்பவர்கள் யாராவது நினைத்தாலும், எனது நோக்கம் தோல்வியடைந்துவிடும்.

சிலர் ஒருபடி மேலே போய், “ஏலியனா! இதென்ன பைத்தியக்காரத்தனம்? ஏலியனும் இல்லை. பறக்கும்தட்டும் இல்லை. எல்லாமே ஏமாத்து வேலை” என்று ஏளனம் செய்வார்கள். ஒன்றை மட்டும் சொல்லிவிடுகிறேன். மூடநம்பிக்கைகளை எதிர்ப்பவர்களில் நான் யாருக்கும் குறைந்தவனல்ல. மூடநம்பிக்கையின் எந்த மூலையிலும் உங்களை நான் விட்டுவிட்டுத் திரும்பிச் செல்ல மாட்டேன். அறிவியலினதும், ஆராய்ச்சியினதும் கைகள் எந்தெந்த இடங்களில் நீண்டு கொண்டிருக்கிறதோ அங்கே மட்டும்தான் நான் உங்களை அழைத்துச் செல்வேன்.

ஏலியன்களும், பறக்கும் தட்டுகளும் இருக்கின்றன என்பதை முற்றாக மறுத்து, அதுபற்றிப் பேசுபவர்களை முட்டாள்கள் போலப் பார்ப்பவர்களுக்கு மட்டும் ஒரு விசயத்தைச் சொல்லிவிட்டுத் தொடர்கிறேன். ஏலியனையோ, பறக்கும்தட்டையோ கண்ணால் காணும்வரை அவை இருக்கின்றன என்று கூற முடியாது என்பது உண்மைதான். ஆனால்,அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா என அனைத்து நாடுகளும் சேர்ந்து SETI (Search for ExtraTerrestrial Inteligence) என்னும் அமைப்பைஉருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பின் நோக்கமே ஏலியன்கள், அயல்கிரகங்களில் இருக்கின்றனவா என்று தேடுவதுதான்.உலகின் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அதியுயர் விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்கள். ‘ஹார்வார்ட்’ உட்பட பல்கலைக்கழகம் அடக்கமாக பிரபலமான அனைத்துப் பல்கலைக்கழகங்களும் இதில் சேர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுகின்றன. ஆண்டொன்றுக்குப் பில்லியன் கணக்கான டாலர்கள் இதற்கெனச் செலவு செய்யப்படுகின்றன.உலகம் முழுவதும் ‘ஆப்ஸர்வேட்டரி’ (Observatory) என்னும் பாரிய தொலைநோக்கிக் கருவிகளை அமைத்து,விண்வெளியை அங்குலம் அங்குலமாக, ஒவ்வொரு செக்கனும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படித் தேடுபவர்கள் யார்? அனைவரும் படிப்பில் மாமேதைகள். ஒன்றுமே இல்லாத ஒரு பைத்தியக்காரத்தனத்துக்கு இப்படி நேரத்தையும்பணத்தையும் இவர்கள் செலவழிப்பார்களா? அப்படி இவர்கள் செலவளிப்பதை அரசுகள் பார்த்துக் கொண்டு பண உதவி அளிக்குமா? ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டுத்தானே இப்படிச் செய்கிறார்கள். அந்த உலக மகாவிஞ்ஞானிகள் அனைவரும் முட்டாள்களா? அவர்கள் முட்டாள்களாக இருக்கும் பட்சத்தில், நாமும் முட்டாளாக இருப்பதில்தவறில்லைதானே!

பல நாட்களுக்குப் பின்னர் நாம் மீண்டும் பயிர் வட்டங்களின் இடத்திற்கு வந்திருக்கிறோம். எனவே இன்று கொஞ்சம் விசேசமாக பயிர்வட்டங்கள் பற்றிப் பார்க்கலாம். மனிதர்களே உருவாக்கவில்லை என்று அடித்துச் சொல்லும்பயிர்வட்டச் சம்பவங்களிலிலிருந்து இன்று ஆரம்பித்தால்தான் சுவாரஸ்யமாக இருக்கும். அதனால் ஆச்சரியங்களின் ஊற்றாக இருக்கும் ஸ்டோன் ஹெஞ்சுக்கு அருகே சென்று, அந்த இடத்தில் பயிர்களுக்கு ஏதாவது நடந்ததா எனப் பார்க்கலாம் வாருங்கள்.

1996ம் ஆண்டு ஜூலை மாதம் 7ம் திகதி, மாலை 6 மணியளவில் லூஸி பிரிங்கெல் (Lucy Pringle) என்னும் பெண்மணி, தன்னுடைய மகனைப் பார்ப்பதற்கு டாக்ஸி ஒன்றில், ஸ்டோன் ஹெஞ்சுக்கு அருகாமையில் அமைந்திருக்கும் A303 நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தார். இருபக்கமும் பச்சையாய்ப் பரவியிருக்கும் வயல்வெளிகள். ஸ்டோன் ஹெஞ்சை டாக்ஸி அண்மித்ததும், சாலையில் மறுபுறமாக இருந்த வயல்வெளியில் காற்றின் சுழற்சியால் ஏற்பட்ட புழுதிபோன்று, ஏதோ ஒன்று உருவாவதை அவதானித்தார். ஏனோ அவருக்கு அது வினோதமான காட்சியாகத் தெரிந்தது.டாக்ஸி ஓட்டுனரிடம் டாக்ஸியைச் சாலையில் நிறுத்தும்படி கூறிவிட்டு நடப்பதை அவதானித்தார். வயலில் இருந்து ஒரு மீட்டர் உயரத்துக்கு மிகப்பெரிய வட்டவடிவத்தில், புகை போன்று காற்றுச சுழன்றபடி அந்த வயல்வெளிப் பிரதேசத்தில் அங்கும் இங்கும் அலைவதை அவதானித்தார். அவதானித்தது அவர் மட்டுமல்ல, அவருடனிருந்த டாக்ஸி ஓட்டுனரும்தான். யூலை மாதங்களில் ஐரோப்பாவெங்கும் இருட்டாவதற்கு மாலை 9 மணிக்கு மேலாகும்.இங்கிலாந்திலும்  நல்ல வெளிச்சமான பகல் நேரம் அது. திடீரென அந்த வட்டச் சுழற்சி நின்று மறைந்து போனது. அங்கே லூஸி கண்ட காட்சி யாருமே நம்பமுடியாதது. 115 மீட்டர் அகலமான மிகப்பெரிய பயிர்வட்டம் அங்கே காட்சியளித்தது. 151 வட்டங்களைக் கொண்டு அந்தப் பயிர்வட்டம் உருவாக்கப்பட்டிருந்தது. முன்னர் ஒருமுறை நான் சொன்னது போன்று ‘ஜூலியா செட்’ (Julia Set) என்னும் வடிவுடைய ஃப்ராக்டல் (Fractal) சித்திரமாக அது இருந்தது. ஃப்ராக்டல் என்பது மிகவும் சிக்கல் வாய்ந்த கணித வரைவு ஆகும்.

பட்டப்பகலில் பலர் சாட்சியாக இருக்கும்போது உருவானது ‘ஜுலியா செட்’ பயிர்வட்டம். லூஸியின் சாட்சியத்தின்படி மொத்தமாக 20 நிமிசங்களில் அந்தப் பயிர்வட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. லூஸியினதும், டாக்ஸி ஓட்டுனரதும் சாட்சியை நாம் பொய்யென்று வைத்தாலும், ஸ்டோன் ஹெஞ்சை வானத்தில் இருந்து பார்ப்பதற்கு ஆயத்தமான சிறு விமானம் ஒன்றின் விமானியும் அதில் அமர்ந்தவர்களும் மாலை 5.30 மணியளவில் அதற்கு மேலாகப் பறந்துசென்றிருக்கிறார்கள். அந்த இடத்தில் எதுவும் காணப்படவில்லை. பின்னர் மீண்டும் மாலை 6.15 மணி போலத் திரும்பி வந்தபோது, இந்தப் பயிர்வட்டம் காட்சியளித்திருக்கிறது.அதாவது 45 நிமிடங்களில் அது உருவாக்கப்பட்டிருகிறது என்று விமானி சொல்லியிருக்கிறார். அதோடு ஸ்டோன் ஹெஞ்சின் பாதுகாவலர்களாகக் கடமையாற்றியவர்களும் சாட்சி சொல்லியிருக்கிறார்கள். இவையெல்லாவற்றையும் விட, ‘A303 நெடுஞ்சாலை’ மிகவும் பரபரப்பான நெடுஞ்சாலை.எப்போதும் வாகனப் போக்குவரத்துடன் காட்சியளிக்கும் ஒரு நெடுஞ்சாலை அது. அந்த இடத்தில் யாருக்கும் தெரியாமல் மனிதர்கள் பட்டப்பகலில் அந்தப் பயிர் வட்டத்தை உருவாக்கியிருக்கவே முடியாது. அப்படி உருவாக்கினோம் என்று யாராவது கூறினாலும் நம்பவே முடியாததாகவே இருக்கும்.

இதில் உள்ள பிரச்சினை என்னவென்றால், இரண்டுமே நம்ப முடியாத சம்பவமாகவே இருக்கிறது. மனிதர்கள் உருவாக்காமல் வேறு ஒரு சக்தி உருவாக்கியது என்பதையும் நம்ப முடியவில்லை. மனிதர்கள் பட்டப்பகலில்உருவாக்கினார்கள் என்பதையும் நம்பமுடியவில்லை. ஆனால் அந்த பயிர்வட்டம் உருவாகியதை மட்டும் நம்பித்தான் ஆக வேண்டும்.

மீடியாக்கள், மக்கள் என அனைவரிடமும் இந்தச் சம்பவம் மிகப்பரபரப்பாகப் பேசப்படத் தொடங்கியது. மக்கள் அங்கு கூட்டமாகக் கூடத் தொடங்கினர். அப்போது, அந்தப் பயிர்வட்டத்தை நாங்கள்தான் உருவாக்கினோம் என்று இரண்டு இளைஞர்கள் பேட்டி கொடுத்தனர். அந்த இளைஞர்கள் சில பயிர்வட்டங்களை ஏற்கனவே உருவாக்கியிருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் இந்த அளவுக்கு மீடியாவில் விளம்பரம் கிடைத்த ஒன்றில் அதுவும் பட்டப்பகலில், பலரின் கண்முன்னே உருவான ஒன்றை அவர்கள் உருவாக்கினார்கள் என்று சொன்னதை யாரும் நம்பவில்லை.விளம்பரத்துக்காக பல வித்தியாசமான பயிர்வட்டங்களை நாம்தான் உருவாக்கினோம் என்று மூலைக்கு மூலை புறப்பட்டு வரும் சம்பவங்கள் அந்த நேரங்களில் அதிகமாகவே நடக்கத் தொடங்கியிருந்தன. இந்த ஜூலியா செட் பயிர்வட்டத்தை நாங்கள்தான் உருவாக்கினோம் என்று சொன்ன இளைஞர்களின் பேட்டியில் பல தடுமாற்றங்கள் இருந்ததைக் கண்டுபிடித்தனர். எது எப்படியாயினும் இந்தப் பயிர்வட்டத்தை மனிதர்கள் உருவாக்கினார்கள் என்று நம்புவது மிகவும் கடினமாகவே இருந்தது. மனிதர்கள் உருவாக்கவில்லை என்பதை மேலும் உறுதி செய்வதற்கு, இன்னுமொரு பயிர் வட்டமும் உருவாகியது. அது அனைவரையும் ஒரு உலுக்கு உலுக்கியது.

மேலே சொல்லப்பட்ட ஜூலியா செட் பயிர்வட்டம் உருவாகி, சரியாக 11 வருடங்களின் பின்னர் அதே நாளில் நடந்தது இன்னுமொரு ஆச்சரியமான சம்பவம். 2007ம் வருடம் ஜூலை மாதம் 7ம் திகதி அந்தச் சம்பவம் நடந்தது. வின்ஸ்டன்கீச்சும் (Winston Keech), காரி கிங்கும் (Gary King) நண்பர்கள். வின்ஸ்டன் ஒரு எஞ்சினியராக இருந்தாலும், அவருக்கு ஏலியன்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் நெடுநாட்களாக உண்டு. இரவில் படம் பிடிக்கும் காமெராக்கள்சகிதமாக வைல்ட்ஷையரில் உள்ள வயல்வெளிப் பிரதேசங்களில் திரிந்தபடி கண்காணிப்பதே அவர் வேலை. 07.07. 2007அன்று, ‘ஈஸ்ட்ஃபீல்ட்’ (East Field) என்னும் இடத்திலுள்ள மலையில் நண்பர் காரியுடன் அமர்ந்தபடி வயல்வெளிகளைஅவதானித்துக் கொண்டிருந்தார். தன்னிடம் இருந்த காமெராக்களை ஓடவிட்டுக் கொண்டு உடனிருந்த காரியுடன் பேசிக்கொண்டிருந்தார். நள்ளிரவு தாண்டி, நேரம் அதிகாலை 1.35 ஐ நெருங்கியது. கும்மிருட்டில் திடீரென ‘ஃப்ளாஷ்’வெளிச்சங்கள் போல ஒளி வட்டங்கள் தோன்றின. இதற்கென்றே தயாராக இருந்த அவர்கள் ஆச்சரியத்துடனும்,சந்தோசத்துடனும், ஒருவித பயத்துடனும் அங்கு நடப்பதை வீடியோக் காமெராவினால் பதிவு செய்தனர். அத்துடன்’நைட்விஷன்’ பொருத்தப்பட்ட வேறு கமெராவில் பார்த்தபோது, எங்கும் மனித நடமாட்டமோ, வாகனங்களோகாணப்படவில்லை. அவர்கள் அமர்ந்திருந்தது சிறிய மலைப்பிரதேசம் என்றபடியினால், அனைத்தையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அதிகாலை 3 மணிவரை அந்த ஃப்ளாஷ் வெளிச்சங்கள் ஆங்காங்கே எரிந்து அணைவதைக் கண்டார்கள்.  3.13 மணிவரை அவர்களுக்கு முன்னால் காட்சி தந்த பெரிய வயல்வெளியில் எதுவுமே இருக்கவில்லை.ஆனால் ஏழே நிமிடங்களின் பின்னர் 3.20க்குப் பார்த்த போது அவர்களால், அவர்கள் கண்களை நம்பவே முடியவில்லை.வயல்வெளியில் நீளமான வடிவமொன்றைக் கண்டார்கள். அது என்ன எதுவென்று தெரியவில்லை. உடன் சென்றுபார்க்கவும் பயமாக இருந்தது. நான்கு மணியளவில் கொஞ்சம் வெளிச்சம் வரத்தொடங்கியதும் பார்த்த போதுதான் தெரிந்தது. அது ஒரு மிகப்பெரிய பயிர்வட்டம் என்பது.

நடந்தவை அனைத்துமே காட்சிகளாக, சாட்சிகளாக வின்ஸ்டனின் காமெராக்களில் பதிவாகியிருந்தன.உருவாக்கப்பட்டிருந்த பயிர்வட்டம் 300 மீட்டர் நீளமாகப் பிரமாண்டமானதாக இருந்தது. 150 தனித்தனி வட்டங்களால் அது உருவாக்கப்பட்டிருந்தது. அந்தச் சம்பவத்தைப் பொய்யென்று யாருமே மறுக்க முடியாதபடி, உண்மையான வீடியோ ஆதாரங்களுடன் அவர்கள் கொடுத்த பேட்டி ஐரோப்பாவையே உலுக்கியெடுத்தது. அனைத்துப் பத்திரிகைகளும் அது பற்றிய செய்திகளை வெளியிட்டன. இதில் என்ன ஆச்சரியமென்றால், ‘மைக்ரோவேவ்’ (Microvave) என்று சொல்லப்படும் வெப்பக் கதிர்கள் இதில் பயன்படுத்தப்பட்டிருப்பது உடனடியான பரிசோதனைகள் மூலம் அவதானிக்கப்பட்டது. யாரும் இதை நாங்கள்தாம் செய்தோம் என்று சொந்தம் கொண்டாடி வரவுமில்லை. மனிதனால் செய்யப்படாத பயிர்வட்டத்துக்கு மிகவும் ஆணித்தரமான சாட்சியாக இந்தப் பயிர்வட்டம் காட்சியளித்தது.

இதுவரை பயிர்வட்டங்களைப் பற்றி பலவிதமாகப் பேசிக் கொண்டிருந்தவர்கள் எவராலும், எதுவும் சொல்ல முடியவில்லை. ஏழே நிமிடங்களில் 300 மீட்டர் அதாவது இரண்டு ஃபுட்பால் மைதானங்கள் அளவு பெரிய பயிர்வட்டம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. இது எப்படிச் சாத்தியமாக முடியும்? சரி, இதை மனிதன்தான் உருவாக்கினான் என்றால் அவனுக்குக் குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் இதைச் செய்வதற்குத் தேவைப்பட்டிருக்கும். சரி, இவை மனிதனால்செய்யப்படவில்லை என்றால், யாரால் செய்யப்படுகின்றன? பகலில் காற்றுச் சுழல்கள் போலவும், இரவில் வெளிச்சப் பந்துகள் போலவும் காட்சி தருபவை என்ன? இப்படியான கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கையில், இந்தப்பயிர்வட்டத்தை ஆராய்ந்த சிலர் வேறு ஒரு விளக்கத்துடன் நிற்கிறார்கள். அந்த விளக்கத்தை நீங்கள் அறிந்தால் எப்படிப்பட்ட மனநிலையில் இருப்பீர்களோ தெரியவில்லை. ஆராய்ச்சியாளர்களில் சிலர் கொடுத்த விளக்கம் என்னதெரியுமா…?
அதைப் படத்திலேயே பாருங்கள் தெரியும்…….!
ஆம்! சாட்சாத் இந்துக்களின் ‘ஓம்’ என்னும் அடையாளம்தான் இது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்களில் சிலர். இப்படிப் பர்க்கும்போது நிலைமை மேலும் சிக்கலான ஒரு வடிவத்தையே எடுக்கிறது என்று நம்பக் கூடிய நிலைக்கு நாம் வந்துவிடுவோம்.  இந்த அளவுக்கு மேல் இன்று யோசித்தால் தலையே வெடித்துவிடும். எனவே இந்த வாரம் இவை பற்றிச் சிந்திப்பதை விட்டுவிட்டு, அடுத்த வாரம் மீண்டும் தொடர்ந்து இது பற்றிப் பேசலாம்.

இந்துக்களின் ‘ஓம்’ என்னும் வடிவம் பயிர்வட்டங்களில் இருந்தது நம்மை மட்டுமல்ல, உலகம் முழுவதையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்பது என்னவோ உண்மைதான். அதுவும் பயிர்வட்டங்களின் வரலாற்றிலேயே மிகவும் ஆணித்தரமாக, மனிதனால் உருவாக்கப்படவில்லை என்று சொல்லப்படும் ஒன்றாக, ‘ஓம்’ வடிவப் பயிர்வட்டம் இருக்கிறது என்கிறார்கள். உண்மையில் அந்த வடிவம் ‘ஓம்’ தானா அல்லது வேறு ஒன்றைக் குறிப்பதா? என்பது இன்றுவரை புரியவில்லை. ‘ஓம்’ என்னும் வடிவத்துக்கு இருக்க வேண்டிய அனைத்துக் கோடுகளும் அந்தப் பயிர்வட்டத்தில் உருவாக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, அது ‘ஓம்’தான் என்று அடித்துச் சொல்கிறார்கள் சிலர். ஒரு பேச்சுக்கு அதை ‘ஓம்’ என்று நாம் எடுத்துக் கொண்டால், ஏலியன்களுக்கும்  ‘ஓம்’ வடிவத்துக்கும் என்ன சம்பந்தம் என்ற ஆராய்ச்சிக்குப் போக வேண்டும். அப்படிப் பார்க்கும்போது, புராதன ஏலியன்களின்  (Ancient Aliens) ஆராய்ச்சியில் இந்து மதப் புராணக் கதைகளும், கடவுளர்களும்தான் மேற்குலக ஆராய்ச்சியாளர்களால் முதன்மைப்படுத்திச் சொல்லப்படுவதாக இருக்கிறது. ‘புராதன ஏலியன்களும், இந்து மதமும்’ என்று இன்னுமொரு தொடரையே உங்களுக்கு நான் தரும் அளவுக்குத் தகவல்கள் அவை பற்றி நிறைந்திருக்கின்றன. முடிந்தால் வேறொரு தொடர் மூலம் அதைத் தருகிறேன்.

மேலே சொல்லப்பட்ட ‘ஓம்’ வடிவப் பயிர்வட்டத்துக்கு இன்னுமொரு சிறப்பும் உண்டு. அது 07.07.07 இல் என்று எல்லாமே ஏழில் வரும் திகதியில் உருவாக்கப்பட்டிருக்கிறது. நிச்சயம் இது இந்துக்களின் ‘ஓம்’தான் என்று சிலர் அடித்துச் சொல்வதற்கு, சாட்சியாக வேறொரு வட்டச் சித்திரத்தைக் காட்டுகிறார்கள். இந்தப் பயிர்வட்டச் சித்திர அமைப்புகள் பயிர்களினால் மட்டுமல்ல, மணல், ஐஸ் போன்றவற்றினாலும் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்று இந்தத் தொடரின் ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கிறேன். அமெரிக்காவின் ஆரிகனில் (Oregon) 1990ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஒரு ஆற்றுப்படுகைக்கு அருகே இருக்கும் மணல்பரப்பில் ஒரு சித்திரம் உருவாக்கப்பட்டிருந்தது. அந்தச் சித்திரம் ஒரே இரவில் உருவாக்கப்பட்டிருந்தது. “ஆற்று மணலில் சித்திரம் வரைவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது. மனிதர்கள் சுலபமாக அதை வரைந்துவிடலாமே” என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அந்தச் சித்திரம் நீங்கள் நினைப்பது போலல்ல.மிகவும் சிக்கல் வாய்ந்த ஒரு சித்திரம் அது. அந்தச் சித்திரத்தில் வரையப்பட்டிருக்கும் கோடுகளின் மொத்த நீளம் 21கிலோமீட்டர் என்றால் அதன் பிரமாண்டத்தைக் கற்பனை பண்ணிப் பார்த்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு கோடும் 10அங்குலம் அகலமுள்ள மிகவும் பிரமாண்டமான சித்திரம் அது. அந்தச் சித்திரம் என்ன வடிவத்தில் இருந்தது என்பதுதான் இங்கு ஆச்சரியமே! அந்த வடிவம் என்ன தெரியுமா? இந்துக்களின் ‘இயந்திரம்’ (Sri Yantra) என்று சொல்வோமே அந்த வடிவத்தில் அது இருந்தது.

ஒரே இரவில் இவ்வளவு பெரியதொரு சித்திரத்தை மனிதர்களால் உருவாக்கவே முடியாது. அதுமட்டுமல்லாமல், அந்தச் சித்திரம் அமைக்கப்பட்ட இடம், ஈரமான சேற்று மண்ணில். அங்கு யாராவது சித்திரத்தை அமைத்திருந்தால், அவர்களது காலடித் தடம் எல்லா இடங்களிலும் இருந்திருக்க வேண்டும். அந்தச் சித்திரம் அமைந்த இடம் மட்டுமில்லாமல், அதைச் சுற்றிவர எங்குமே எந்தக் காலடித் தடங்களும் காணப்படவில்லை. மனிதர்கள் செய்திருந்தால்,செய்தவர்களின் காலடித் தடத்தில் ஒன்றாவது அங்கு இருந்திருக்க வேண்டுமல்லவா? சேற்று மணலில் தடங்களை அழித்துவிட்டு எப்படிச் செல்ல முடியும்? சித்திரத்தின் உள்ளேயும் எந்தக் காலடிகளும் இல்லை. எப்படி இது சாத்தியம்?அந்தச் சித்திரம் அமைக்கப்பட்டதும் மக்கள் கூட்டமாக வந்து அதைக் கவனிக்கத் தொடங்கியபோது, இருவர் தாங்கள்தான் அதை உருவாக்கியது என்று சேறு படிந்த காலணிகளுடன் வந்தார்கள். அவர்கள் அதை வரைந்த விதத்தை விளக்கியபோதே சந்தேகம் தோன்றியது. அவர்களிடம் இது போல ஒன்றைச் சாதாரண காகிதத்தில், அல்லது நிலத்தில் மீண்டும் வரைந்து காட்டினால், தகுந்த பரிசு அளிக்கிறோம் என்று கூறியதும், போக்குக் காட்டிவிட்டு அவர்கள் நழுவியதும் நடந்தது.உலகமெங்கும் மனிதர்கள் அறிய முடியாத இது போன்ற மர்மங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. அப்படி நடக்கும் மர்மங்களில் பல, மனிதர்கள் சம்பந்தப்படாத போதும் நம்பக்கூடிய வகையிலேயே அமைந்துவிடுகின்றன.இங்கு நடந்திருப்பதும் மனிதர்களல்லாத ஏதோ ஒரு சக்தியால் உருவாக்கப்பட்டதாகவே சொல்கிறார்கள். அதுவும் அங்கு வரையப்பட்டிருக்கும் சித்திரம் இந்துக்களின் ‘ப்ரீ இயந்திரம்’  என்று சொல்லும் வடிவில் அமைந்திருந்தது. ப்ரீ இயந்திரச் சித்திரத்துடன் முடிச்சுப் போட்டே, ‘ஓம்’ என்னும் பயிர் வட்டத்தையும் இந்துக்களுடைய வடிவம்தான் என்கிறார்கள் சிலர்.இந்த நம்பிக்கையின் அடிப்படையில் ‘ஓம்’ பயிர் வட்டத்தில் இரவு பகலாக தியானங்களும், இந்துப் பஜனைகளும் பல நாட்களாக நடந்து வந்தது தனிக் கதை.

பயிர்வட்டங்கள் மனிதனால் உருவாக்கப்படுகின்றன அல்லது வேறு ஒரு சக்தியினால் உருவாக்கப்படுகின்றன என்பதைவிட, ஏன் உருவாக்கப்படுகின்றன என்னும் கேள்விக்குத்தான் எந்தப் பதிலும் கிடைப்பதில்லை. ஆனால் உருவாக்கப்படும் ஒவ்வொரு பயிர்வட்டத்துக்கும் ஏதோ ஒரு அர்த்தம் இருப்பதாகவே, அவற்றை ஆராய்பவர்கள் நினைக்கிறார்கள்.  இதுவரை உருவாக்கப்பட்ட பத்தாயிரத்துக்கும் அதிகமான பயிர்வட்டங்களுக்கு, அவை என்னென்ன அர்த்தங்களைக் கொடுக்கின்றனவோ, அதைப் பொறுத்துத் தனித்தனிப் பெயர்களை அதை ஆராய்பவர்கள் சூட்டியிருக்கின்றனர். பல சிக்கலான கணித வரைவுகளையுடைய பயிர்வட்டங்கள் இதுவரை உருவாக்கப்பட்டிருக்கின்றன. பயிர்வட்டங்களுக்கும் ‘கேத்திரகணித’ வரைவுகளுக்கும் (Geometry) நிறையவே சம்பந்தங்கள் இருப்பது, அவற்றின் அமைப்பின் மூலம் இலகுவாகப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது. ஒரு பேச்சுக்கு இந்தப் பயிர்வட்டங்களை ஏலியன்கள்தான் உருவாக்குகின்றன என்று வைத்துக் கொண்டால், ‘ஏலியன்களுக்கும்,ஜியாமட்ரிக்கும் அப்படி என்னதான் சம்பந்தம் இருக்கும்?’ என்ற கேள்வி நம்மை எப்போதும் ஆச்சரியப்பட வைக்கும்.  இந்த வகையில் 2008ம் ஆண்டு ஜூன் மாதம் 1ம் திகதி, இங்கிலாந்தில் உள்ள ‘பார்பர்ரி காஸில்’ (Barbury Castle)என்னுமிடத்தில் ஒரு பயிர்வட்டம் தோன்றியது. பல பரிசோதனைகளின் பின்னர் அது மனிதர்களால் உருவாக்கப்படவில்லை என்ற முடிவுக்கு அதை ஆராய்ந்தவர்கள் வந்திருந்தனர். ஆனால் அந்தப் பயிர்வட்டத்தின் அமைப்பு அனைவரையும் குழப்பத்திலாழ்த்தியது. வட்டவடிவமாகக் காட்சிதரும் அந்தச் சித்திரத்தில், ஒரு கோடு மையத்திலிருந்து ஆரம்பித்து, வட்டத்தின் விளிம்புவரை வளைந்தும் திரும்பியும் செல்வது போல அமைக்கப்பட்டிருக்கிறது. மைய வட்டத்தில் ஆரம்பிக்கும் கோட்டின் ஆரம்பத்திலேயே ஒரு சிறு புள்ளி போன்ற வட்டமும், முடிவில் மூன்று வட்டங்களும் காணப்படுகின்றன. இது அந்தப் பயிர்வட்டத்தில் ஒரு வித்தியாசமான தோற்றதைக் கொடுத்தது. அந்தச் சித்திரத்தின் படம் மேலே கொடுக்கப்பட்டிருக்கிறது.அந்தப் பயிர்வட்டம் மனிதனால் செய்யப்படவில்லை என்று உறுதிசெய்யப்பட்ட பின்னர், அந்தப் பயிர்வட்ட அமைப்புக்கு என்ன அர்த்தம் என்பதை அறிவதற்கு மிகவும் ஆவலுடன் முயன்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஆனால், என்ன முயன்றும் சுலபமாக அதன் அர்த்தத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 150 அடிகள் அகலமான அந்தப் பயிர்வட்டம், பார்லி (Barley)பயிரினால் உருவாக்கப்பட்டிருந்தது. இதுவரை உருவாக்கப்பட்ட சிக்கலான பயிர்வட்டங்களில், முதன்மையான பயிர்வட்டமாக அது கருதப்படுகிறது. யாருக்கும் அதன் அர்த்தம் புரியவில்லை. அதன் அர்த்தம் புரியாததனால், ‘நாங்கள்தான் உருவாக்கினோம்’ என்று சொல்லி அதைச் சொந்தம் கொண்டாட யாரும் வரவுமில்லை. சில காலங்களின் பின்னர் நார்த் கரோலினாவைச் (North Carolina) சேர்ந்த ஆஸ்ட்ரோ பிசிஸிஸ்ட்டான ‘மைக் ரீட்’ (Dr.Mike Reed) என்பவர் அதற்கான அர்த்தத்தைக் கண்டுபிடித்தார். அவர் கண்டுபிடித்த அர்த்தம் அனைவரையும் மலைக்க வைத்தது. “அடக்கடவுளே! இது எப்படிச் சாத்தியம்?” என்று பலரையும் திகைக்க வைத்தது. “மனிதனுக்கு மட்டுமே தெரிந்திருந்தது எப்படி ஏலியன்களுக்குத் தெரிந்திருக்க முடியும்?” என்று நினைக்க வைத்தது? “இது மனிதன் உருவாக்கியதுதானோ?”என்றும் சந்தேகப்பட வைத்தது. ஆனால், ‘மனிதனால் இப்படிச் சிந்தித்து சிக்கலாக இதுபோல ஒரு அமைப்பை உருவாக்கியிருக்கவே முடியாது’ என்றே பின்னர் முடிவுக்கு வந்தனர். இவ்வளவு சிந்திக்க வைத்த அந்தப் பயிர்வட்டத்தின் அர்த்தம் என்ன தெரியுமா?

நாம் கணிதத்தில், வட்டங்களின் சமன்பாடுகளில் (Equations) பயன்படுத்தும் ‘பை’ அதாவது ‘π’ என்பதுதான் அது. கணிதம் படித்தவர்களுக்கு ‘பை’ (Pi) என்றால், 22/7 அல்லது 3.141592654… என்பது தெரியும். கணிதத்தில் ‘பை’ என்பதை நாம் பல இடங்களில் பயன்படுத்தி வந்திருக்கின்றோம். அதே ‘பை’ யை, அந்தப் பயிர்வட்டத்தில், அதன் கணிதப் பெறுமானத்தைக் கொண்டு உருவாக்கியிருக்கிறார்கள். ஒரு வட்டத்தை, அதன் மையத்திலிருந்து பத்துச் சமபங்குகளாகப் பிரித்து,ஒவ்வொன்றுக்கும் ஒன்று என்னும் எண்ணிக்கையைக் கொடுத்து 3.141592654… என்னும் பெறுமானத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இதை வாசிக்கும்போது, நான் மேலே கொடுத்திருக்கும் வர்ணப் படத்தைச் சற்று நிதானமாக அவதானித்துப் பாருங்கள், நான் சொல்ல வருவது முழுமையாகப் புரியும்.

‘பை’யினது பெறுமதியைப் பத்து இலக்கங்களுக்குக் கொடுத்தது மட்டுமல்லாமல், அதன் தொடர்ச்சியாக மூன்று புள்ளிகளையும் கொடுத்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் விட ஆச்சரியம் என்னவென்றால், மூன்றுக்குப் பக்கத்தில் வரும் தசம புள்ளியைக் குறிப்பதற்கு, பயிர்வட்டத்தில் ஒரு சிறிய புள்ளி போன்ற வட்டத்தை, மையத்தின் ஆரம்பத்திலேயே அமைத்திருக்கிறார்கள். இந்தப் பயிர்வட்டத்தை மனிதன் அமைத்தானோ, ஏலியன் அமைத்ததோ என்று சிந்திப்பதை விட, அது அமைக்கப்பட்டிருக்கும் சிறப்புத்தான் பலராலும் பேசப்படுகிறது. பயிர்வட்டங்களிலேயே ஒரு மைல்கல்லாக அமைந்த சித்திரமாக அது கணிக்கப்படுகிறது. அதை மனிதன் செய்யவே இல்லையென்ற முடிவுதான் ஆராய்ந்தவர்களின் முடிவாக உள்ளது. ஒருவேளை மனிதன் இதைச் செய்திருந்தால், அந்த மனிதன் பயிர்வட்டத்தைச் செய்து கொண்டிருக்கும் ஒருவனாக இருக்கவே தேவையில்லை. அவன் உலகில் மாபெரும் கணிதவியலாளனாக எல்லாராலும் மதிக்கப்பட்டிருப்பான். இப்படி ஒளிந்திருந்து பயிர்வட்டங்களை அவன் அமைக்கவே தேவையில்லை. ஆனால் கிடைத்த அனைத்துத் தகவல்களும் அந்தப் பயிர்வட்டத்தை மனிதர்கள் உருவாக்கவில்லை என்று அடித்துக் கூறுகிறது. அந்த வகையில் அதை ஏலியன்கள் உருவாக்கினார்கள் என்றே நம்ப வேண்டியிருக்கிறது. அப்படி இருக்கும்பட்சத்தில், ஏலியன்கள் ‘பை’ என்பதை எப்படித் தெரிந்துகொண்டார்கள்? கணிதம் என்பது உலக ரீதியாக இல்லாமல், பிரபஞ்ச ரீதியாக ஒரே மாதிரியானதுதானா அல்லது ஏலியன்கள் ‘பை’ மூலமாக நமக்கு ஏதாவது செய்திகளைக் கூற விரும்புகின்றனரா?

இவையெல்லாம் நம்மைத் துளைத்தெடுக்கும் கேள்விகளாகவே இருக்கின்றன. இவற்றிற்கான பதில்களை நாம் எப்போதுதான் பெற்றுக் கொள்ளப் போகிறோம்? விடை தெரியாத மர்மச்சுழல்கள் நம்மை மேலும் மேலும் அழுத்தியபடியே இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில், மனிதனால் செய்யப்பட்ட பயிர்வட்டங்கள் எவை? மனிதனால் செய்யப்படாதவை எவை? என்று ஆராய்ச்சியாளர்கள் எப்படி உறுதி செய்கின்றனர் என்பதை நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top