Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » அகோரிகள் என்பவர்கள் யார்? – சில உண்மைகள் – 3

அகோரிகள் என்பவர்கள் யார்? – சில உண்மைகள் – 3

“நான் வங்காளத்தை ஆண்ட மன்னன், நான் இறந்த பிறகு எனது ஆட்சியை எனது மகனுக்கு கொடுக்காமல் எனது மைத்துனன் எடுத்து கொண்டான். பிரிடீஷ் வைஸ்ராய் இதில் தலையிட்டு நீதி வழங்க வேண்டும்”

விசித்திரமான இந்த வழக்கை கண்டு நீதிபதி குழம்பினார். தான் இறந்துவிடேன் என சொல்லும் அரசன் உயிருடன் இருக்கிறான் என்றால் யாருக்கு தான் குழப்பம் வராது. நடந்தது இது தான்…

வங்க தேசத்தின் கிழக்கு பகுதியை ஆண்டு வந்த அரசன் (ஜமீந்தார், குறுநில மன்னன் என்றும் சொல்லலாம்) சில தவறான பழக்கங்களால் இள வயதில் நோய் கண்டான். அரசு மருத்துவர்கள் எத்தனையோ மருத்துவம் செய்தும் அரசன் உடல் நலம் மிகவும் நலிவுற்றது. 25 ஆம் வயதில் வாழ்க்கையின் கடைசி நிலையில் இருந்தான் அந்த அரசன். மலைவாழ்ஸ்தலங்களில் இருந்தால் சிறிது காலம் வாழலாம் என மருத்துவர்கள் கூறினார்கள். அரசன் தனது ராணி, மூன்று வயது மகன் மற்றும் பரிவாரங்களுடன் டார்ஜலிங் சென்றான்.

டார்ஜலிங் அப்பொழுது பிரிடீஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்தது. பிரிடீஷ்காரர்களுக்கு கப்பம் கட்டும் மன்னனாக இருந்ததால் அவர்களும் அரசனை வரவேற்றார்கள். அரசன் காலரா, பிளேக் போன்ற கொடுடிய நோய் கொண்டவனாக இருந்து அது பிறருக்கு பரவுமோ என ஐயம் கொண்ட பிரிடீஷ்காரகள் தங்கள் சார்பாக ஒரு மருத்துவரை கொண்டு மன்னனை பரிசோதித்தார்கள். அவருக்கு தொற்றகூடிய நோய் இல்லை என தெரிந்ததும் அனுமதித்து தங்கள் விருந்தினர் மாளிகையில் தங்குவதற்கு அனுமதித்தனர்.

சில மாதங்களில் மன்னன் நோய் முற்றி இறந்தான். பிரிடீஷ் ஆதிக்க இடத்தில் இறந்ததால், அவர்களின் மருத்துவர் மன்னன் உடலை பரிசோதித்து இறப்பு சான்றிதழ் வழங்கினான். அரசனின் அரண்மனை வைத்தியரும் பரிசோதித்து மன்னன் இறந்ததை உறுதி செய்தார். மன்னனின் இறுதி சடங்கு கங்கை ஆற்றங்கரையோரம் டார்ஜலிங் அருகில் இருக்கும் ஒரு ஊரில் நடந்தது.

உடலுக்கு மூன்று வயது மகன் நெருப்பு மூடிய சில நிமிடத்தில் திடீரென வெள்ள பெருக்கு ஏற்பட்டு உடல் ஆற்றில் அடித்து சென்றது. உடல் தகனம் செய்ய வந்தவர்கள் ஆற்றுவெள்ளத்தில் மிதந்து மீண்டார்கள்.

கணவன் இறந்த துக்கத்தில் அரண்மனை வந்த ராணி தனது மகனுக்கு முடிசூட்ட தயாரானாள். ஆனால் ராணியின் தம்பி ஆட்சியை கைபற்றினான். இருவரையும்துன்புறுத்தினான். மக்களை கொடுங்கோலனாக ஆட்சி செய்தான்.

இதே சமயத்தில் காட்டின் ஒரு பகுதியில்..

கங்கை கரையின் ஓரத்தில் அந்த யோகிகள் கூட்டம் வட்டமாக அமர்ந்திருந்தார்கள். தூரத்தில் ஆற்றில் ஒரு பிணம் மிதந்து வருவதை பார்த்த தலைமை யோகி சைகை செய்தார். பிற யோகிகள் அந்த உடலை ஆற்றில் இறங்கி கரை சேர்த்தார்கள். மார்பில் சில பகுதிகள் மட்டும் தீக்காயத்துடன் இருந்த உடலின் கபாலத்தை திறந்து சில மூலிகைகளை சேத்து மீண்டும் மூடினார்கள். தினமும் இரு யோகிகள் அந்த உடலுக்கு காவல் இருந்தார்கள். உடல் முழுவதும் சவரம் செய்யப்பட்டு தினமும் சில “ரகசியமான செயல்கள்” மூலம் அந்த உடல் புத்துயிர் ஊட்டப்பட்டது. சில நாட்களுக்கு பிறகு உடலில் சில அசைவுகள் வரத்துவங்கின. மெல்ல நடக்கவும், உணவு உற்கொள்ளவும் அந்த உடலுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. அந்த உடல் , தான் யார் என்ற எந்த உணர்வும் அற்ற நிலையில், இருபத்திஐந்து வயது குழந்தையாகவே வலம்வந்தது.

பன்னிரெண்டு வருடங்கள் யோகிகளுக்கு உண்டான பயிற்சி அளிக்கபட்ட அந்த உடல் ஒரு கும்பமேளா நேரத்தில் யோகிகள் குழுவுடன் காட்டிலிருந்து நடக்க துவங்கியது. ஒர் இடத்தில் திடிரென டேரா அமைத்தார்கள். வட்டமாக பல மணி நேரம் யோகிகள் உட்கார்ந்து இருப்பது டேரா என அழைக்கிறார்கள். நெடுநாள் விருந்தாளிகள் நம் வீட்டில் தங்குவதை சொல்லுவோம் அல்லவா அதே வார்தை தான். யோகிகளின் குழு தலைவர் அந்த உடலை அழைத்து, சில யோக முறைகளை செய்து அவ்வுடலின் பழைய சம்பந்தத்தை மீண்டும் கொண்டுவந்தார்.

உடல் மீண்டும் மன்னன் ஆகியது. மன்னன் செய்ய வேண்டிய வேலையை கூறி டேராவிலிருந்து அனுப்பி வைத்தார்.மன்னன் மீண்டும் தனது நாட்டிற்கு வந்து தனது ஆட்சியை கேட்க, மன்னனின் மைத்துனன் ஏதோ மந்திரவாதி மன்னன் உருவில் வ்ந்திருப்பதாக சொல்லி விரட்டினான். சிலரின் துணையோடு பிரிடீஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தான் மன்னன். நீதிபதி விசாரணையை துவக்கி, மன்னன் இறந்ததையும் – மீண்டும் உயிருடன் வந்ததையும் உறுதி செய்தார். மன்னனுக்கு எப்படி உயிர் வந்தது என நீதிபதி கேட்க மன்னன் விளக்கியது தான் நீங்கள் மேலே படித்த வரிகள்.

மன்னன் உடலாக இருக்கும் பொழுது யோகிகளுக்கு உதவியாக தானும் பிற உடலுக்கு காவலாக இருந்ததையும் கூறினான். வழக்கு மேல்முறையீட்டுக்காக லண்டனில் இருந்த உச்ச நீதி மன்றதிற்கு மாற்றபட்டது. அங்கும் மன்னன் உயிர் பெற்றான் என்றும், யோகிகள் உயிர் அளித்தார்கள் என்றும் நிரூபிக்கபட்டது.

பிரிடீஷ்காரகள் மீண்டும் ஆட்சியை மன்னனிடம் கொடுத்தார்கள். பன்னிரெண்டு ஆண்டுகள் ஆட்சி செய்துவிட்டு வளர்ந்த மகனுக்கு முடிசூட்டி மீண்டும் யோகிகளுடன் சென்று இணைந்தான் மன்னன். மன்னிக்கவும் யோகி.

மேற்கண்ட சம்பவத்தை நான் ஒரு யோகியிடம் இருந்து கேட்டு கதைவடிவில் தந்திருக்கிறேன். தகவல் உண்மையா என காண இங்கே இருக்கு சுட்டி இங்கே. சுட்டியில் உள்ள சம்பவங்கள் நீதிமன்ற விசாரணை தன்மையில் விவரிக்கபட்டுள்ளது..

என்ன செய்ய…? சாட்சி கொடுத்தால் தானே நம் மக்கள் இங்கே அனைத்தையும் நம்புகிறார்கள்.

இது போல எத்தனையோ சம்பவங்கள், நீதி மன்றத்தில் இது போன்ற விசித்திர வழக்குகள்.[திரு. ஷண்முகப்ரியன் கூறியது போல விமலானந்தா எனும் அகோரியின் வாழ்க்கைசம்பவம் கூட நீதிமன்றவழக்கு தான்]

இப்படி பட்ட அசாத்திய ஆற்றல் கொண்ட அகோரிகளுக்கு ஒரு பழக்கம். தங்களை பிறர் கவனிக்கிறார்கள் என தெரிந்தால் அவர்கள் அருவெருக்க தக்க செயல்களை செய்வார்கள். அதன் பின் அவர்களை பார்த்து ஓடிவிட செய்வார்கள். தங்களை பிறர் பின் பற்றவேண்டும் என விரும்ப மாட்டார்கள் என்பதே இதற்கு காரணம். உதாரணமாக அவர்கள் பூஜை செய்வதை கவனிக்க ஆரம்பித்தால் மலம் மற்றும் சிறுநீரில் பூஜை செய்ய துவங்குவார்கள். ..!

உங்கள் வைராகியத்தை நிரூபணம் செய்தால் அவர்களுடன் இணைத்து கொள்வார்கள். சிலர் இவர்கள் முன், தங்கள் உடல் உணர்வு இல்லாமல் வைராகியம்கொண்டிருக்கிறோம் என காட்ட பலர் தங்கள் பிறப்புறுப்பை கட்டையாலும், கம்பிகளாலும் பிணைத்து கொள்வார்கள். அப்படி பட்டவர்களை பார்க்கும்வெளிநாட்டுகாரர்களும் , நம் நாட்டுகாரர்களும் யோகிகளே அவ்வாறு இருப்பதாக நினைப்பார்கள். உண்மையில் இவர்கள் யோகிகளின் காலேஜுக்கு அட்மீஷன்கேட்பவர்கள் தான் யோகிகள் அல்ல.

நாக சன்யாசிகளுக்கு முன் தனது வைராக்யத்தை காண்பிக்கும் ஒருவர்.
[ காலேஜ் அட்மீஷன் காட்சியை பார்த்தவுடன் கால்ககளை சேர்த்து உற்கார தோன்றுகிறதா?]

காசி நகரத்தில் இவர்கள் வலம்வருவது உண்டு. காசி நகரம் ஆன்மீக நாட்டம் கொண்டர்களின் சரணாலயம். ஊருக்கு ஒரு மயானம் இருப்பது போல உலகிற்கே ஒரு மயானம் என்றால் அது காசி என சொல்லலாம். தினமும் சராசரியாக எழுநூறு முதல் ஆயிரம் பிணங்கள் எரிக்கப்படுகிறது. [என்னடா இது… காசியை பற்றி கூட தனி பதிவு போடலாம் போல இருக்கே..! ]

சன்யாசிகள், யோகிகள், தாந்திரீகர்கள், மாந்திரீகம் செய்பவர்கள் என அங்கே கூட்டம் அதிகம். காக்கி சட்டையில் வரும் ஒருவர் வாட்சுமேனா அல்லது போலீஸா என தெரியாமல் முழிப்பவர்கள் போல, மக்கள் யோகிகளுக்கும் மாந்திரீகர்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் அனைவரையும் ஒரே தலைப்பில் அடைத்துவிடுவார்கள்.

மேலைநாட்டுகாரர்களுக்கு இந்தியாவில் நரமாமிசம் சாப்பிடும் மாந்திரீகர்களை படம் பிடித்து அவர்களை நாக சன்யாசிகள், அகோரிகள் என கூறிவது வருந்த தக்கது.

ஒரு பதிவர்கூட அகோர பசியால் மனித உடலை திண்பவர்கள் அகோரிகள் என பதிவிட்டுருந்தார். அதை கண்டு மனம் வருந்தாமல் இருக்க முடியவில்லை. வீடியோவிலோ அல்லது இது போன்ற பதிவையோ படிக்க நேர்ந்தால் யோகிகளை மாந்திரீகர்கள் இடமிருந்து வித்தியாசம் காட்ட சில தன்மைகளை கூறிகிறேன்.

யோகிகளின் லட்சணங்கள் :

யோகிகள் மயானத்தில் தியானம் செய்வார்கள், எரியும் உடல் மேல் அமர்ந்து தியானிப்பார்கள். ஆனால் மனித உடலை உண்ணமாட்டார்கள். உணவு தேவை என்பதே இவர்களுக்கு இல்லை என்பது தான் உண்மை. சில மூலிகைகளை வைத்து கொண்டு பசியற்ற நிலையில் இருக்கிறார்கள். உடலில் எந்த ஒரு மத சின்னங்களோ அடையாளமோ இருக்காது. ருத்திராட்சம் , சங்கு மற்றும் ஆயுதம் இவற்றில் ஏதாவது ஒன்று கைகளில் வைத்திருப்பார்கள். ஆபரணம், மோதிரம் அணிய மாட்டார்கள். தலை மூடி நீண்டு இருக்குமே தவிர முகத்திலும், மார்ப்பிலும் முடி இருக்காது. கெளபீணமோ அல்லது நிர்வாணமாகவோ இருப்பார்கள். உடை உடுத்துவது இவர்கள் மரபு அல்ல. சுடுகாட்டு சாம்பலை கும்பமேளா தவிர பிற நாட்களில் / இடங்களில் பூச மாட்டார்கள்.

கும்ப மேளாவில் ஆரம்ப நிலை யோகிகளின் அணி வகுப்பு

கடந்த சில பதிவுகளாக யோகிகளை பற்றி எனக்கு தெரிந்தவற்றை பகிர்ந்து கொண்டேன். எனக்கும் அவர்களுக்கும் நடந்த பல சுவையான சம்வங்கள், தமிழகத்தில் இவர்கள் இருக்கும் இடங்கள் பற்றி விரிவாக எழுத முடியவில்லை. மற்றொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.

அமானுஷ தன்மையை கூறியும், யோகிகள் உயர்ந்தவர்கள் என கூறியும் இவர்களை பின்பற்ற சொல்லுவதற்காக நான் இந்த பதிவு இடவில்லை. இவர்களை பின்பற்ற சொல்லுவது கூட இவர்களுக்கு பிடிக்காது என்பதே உண்மை. இவர்களை வணங்க தேவையில்லை குறைந்த பட்சம் அசிங்கப்படுத்தாமல் இருக்க முயற்சிப்போம்.

சத்யமேவ ஜெயதே..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top