Home » அதிசயம் ஆனால் உண்மை » அறிவியல் » சூரிய குடும்பம் – 11
சூரிய குடும்பம் – 11

சூரிய குடும்பம் – 11


புளூட்டோவும் அதன் துணைக் கோள் சாரோனும்

இன்றைய இறுதிப் பகுதியில் சூரியனிடமிருந்து 9 வது இடத்தில் அமைந்துள்ள விண் பொருளான புளூட்டோ பற்றி ஆராய்வோம். சூரியனைச் சூற்றி 17 டிகிரி சாய்வில் சுற்றி வரும் குறுங்கோளான புளூட்டோ தனது சுற்றுப் பாதையில் சூரியனிடமிருந்து நெப்டியூனை விட அண்மையாகவும் (29.7 Au) அதை விட சேய்மையாகவும் (49.5 AU) வலம் வருகின்றது. 1930 ஆம் ஆண்டு ‘கிளைடு டோம்பா’ எனும் வானியலாளரால் புளூட்டோ கண்டு பிடிக்கப்பட்டது. நெடுங்காலமாக கிரகம் எனக் கருதப்பட்டு வந்த இக்குறுங்கோள் தற்போது (2006 முதல்) நெப்டியூனை அடுத்துள்ள கியூப்பர் பட்டை(Kuiper belt) எனப்படும் விண்கற்கள் மண்டலத்தின் மிகப் பெரிய பொருளாகவே கணிக்கப்படுவதுடன் கிரகங்கள் பட்டியலில் இருந்தும் நீக்கப் பட்டுள்ளது.

புளூட்டோ, பூமி, புதன். பூமியின் சந்திரன் பருமனில் ஓர் ஒப்பீடு

புளூட்டோவின் தோற்றம் பற்றிக் கருதுகையில் வியாழனிடமிருந்து பிரிந்து சென்ற ஒரு சந்திரனே புளூட்டோவானதாகவும் அல்லது சூரிய மண்டலத்தில் சூரியனின் ஈர்ப்பு விசையிலிருந்து விலகிச் சென்ற விண்கல் ஒன்று இறுதியில் புளூட்டோவாகி சூரியனைச் சுற்றி ஒழுக்கில் வர ஆரம்பித்ததாகவும் இரு கருதுகோள்கள் நிலவுகின்றன. அடுத்தடுத்து வாயுக்கோள்கள் அமைந்திருந்த எல்லையைத் தாண்டி அமைந்துள்ள புளூட்டோ கரும் பாறைகளால் ஆன தரையையும் பனிக்கட்டிகளையும் உடைய குறுங்கோள் ஆகும்.

புளூட்டோவின் தரை மேற்பரப்பு (கணனியால் வடிவமைக்கப்பட்டது)

இது பூமியின் சந்திரனை விட பருமனில் சிறிதான போதும் ஆறு மடங்கு அதிக நிறையை உடையது. புளூட்டோ சூரிய குடும்பத்தில் உள்ள பொருட்களிலேயே இதுவரை செய்மதி அல்லது விண்கலம் ஒன்றின் மூலம் அவதானிக்கப் படாத கிரகமாகும். எனினும் சமீபத்தில் செலுத்தப்பட்ட விண்கலமான நாசாவின் நியூஹாரிஸன் 2015 ஆம் வருடம் கோடைக் காலத்தில் புளூட்டோவின் சுற்றுப் பாதையை அடைந்து அதைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து பூமிக்கு அனுப்பவுள்ளது. இவ் விண்கலம் கிரகங்களின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி அதனதன் சுற்றுப் பாதைகளில் ஒவ்வொன்றாகப் பயணிக்கும் தன்மையுடையது.

நியூ ஹாரிஸன் விண்கலம் (கணனியால் வடிவமைக்கப்பட்டது)

20 ஆம் நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்ட ஒரேயொரு கிரகமான புளூட்டோவுக்கு ஏனைய கோள்களைப் போன்றே பாதாள உலகத்தினரின் கடவுளும் தன்னை மறைத்துக் கொள்ளும் சக்தி கொண்டவருமான ரோமானியர்களின் கடவுளின் பெயர் சூட்டப் பட்டுள்ளது. மிகக் குளிர்ந்த பாறைக் கிரகமான புளூட்டோவின் வெப்ப நிலை -235 பாகைக்கும் -170 பாகைக்கும் இடைப்பட்டது. இது சூரியனை ஒரு முறை சுற்றி வரா 247.7 புவி வருடங்களை எடுக்கின்றது. புளூட்டோ தன்னைத் தானே ஒரு முறை சுற்ற எடுக்கும் நேரமும் மிகக் குறைவாகும். இதன் சுழற்சிக் காலம் 6 நாட்கள் 9 மணி 6 நிமிடம் ஆகும்.

ஹபிள் போன்ற மிகுந்த பார்வைத் திறனுள்ள தொலைக்காட்டியால் அவதானிக்கும் போது கூட இது ஒளி அடர்த்தி குறைவாக மங்கலாகவே தென்படுகின்றது. புளூட்டோவுக்கு சாரோன் எனப்படும் ஒரு பெரிய நிலவு உட்பட மொத்தம் 4 நிலவுகள் உள்ளன.

புளூட்டோவும் சாரோனும் (ஹபிள் தொலைக் காட்டியால் எடுக்கப் பட்டது)

இனி புளூட்டோ குறித்த சுருக்கமான தகவல்களைப் பார்ப்போம் –

1.தன்னைத் தானே ஒரு முறை சுற்ற எடுக்கும் காலம் – 6 நாள் 9 மணி 6 நிமிடம்
2.சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் – 248 வருடம் 197 நாள் 5.5 மணி
3.சூரியனில் இருந்து சராசரித் தூரம் – 5 906 376 200 Km அல்லது 39.48 AU
4.மையத்தின் ஊடாக விட்டம் – 2320 Km
5.தனது அச்சில் சாய்வு – 119.61 பாகை
5.சுற்றுப் பாதையில் வேகம் –  4.7490 Km/s
6.மேற்பரப்பளவு – 17 மில்லியன் Km2
7.நிறை – 1.290 * (10 இன் வலு 22) Kg
8.சராசரி அடர்த்தி – 2.05 g/cm3
9.மேற்பரப்பு ஈர்ப்பு விசை – 0.6 m/s2
10.தப்பு வேகம் – 1.2 Km/s
11.எதிரொளி திறன் – 0.3
12.மேற்பரப்பு வெப்பநிலை – குறை 33K நடு 44K மிகை 55K
13.துணைக் கோள்கள் – 4
14.மேற்பரப்பு அழுத்தம் – 0.01 Kpa

வளி மண்டலத்திலுள்ள வாயுக்களின் வீதம் –

1.நைதரசன் – 90%
2.மீதேன் – 10%

சூரியனைச் சுற்றி வரும் ஒரு பொருள் கிரகம் எனக் கருதப்படுவதற்குப் பின்வரும் நிபந்தனைகளைக் கட்டாயமாகப் பூர்த்தி செய்ய வேண்டும். அவையாவன :

1.சூரியனை ஒரு சுற்றுப் பாதையில் சுற்றி வர வேண்டும்.
2.கிட்டத்தட்ட கோள வடிவம் எனக் கருதத் தக்க நிறையைப் பெற்றிருக்க வேண்டும்.
3.தனது ஈர்ப்பு விசை காரணமாக தனது சுற்றுப் பாதையின் அண்மையில் அமைந்துள்ள பொருட்களை இல்லாமல் செய்திருக்க வேண்டும்

கியூப்பர் பெல்ட்டில் அமைந்துள்ள புளூட்டோ அதன் துணைக் கோள் சாரோன் உட்பட ஏனைய விண் பொருட்கள் இம் மூன்று நிபந்தனைகளில் மூன்றாவதைத் திருப்தி செய்யாததால் அவை கோள் அல்லது கிரகம் என அழைக்கப் படும் அந்தஸ்தை இழந்துள்ளன. இதுவரை சூரிய குடும்பத்தின் அங்கத்தவர்களான பூமியின் சந்திரன் உட்பட ஏனைய ஒன்பது கிரகங்களைப் பற்றிய தகவல்களைப் பார்த்தோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top