Home » அதிசயம் ஆனால் உண்மை » அறிவியல் » சூரிய குடும்பம் – 10
சூரிய குடும்பம் – 10

சூரிய குடும்பம் – 10

சூரியனை மிக அதிக தூரத்தில் சுற்றி வரும் இறுதி வாயுக் கோளான நெப்டியூன் பற்றிய தகவல்களைப் பார்ப்போம். நெப்டியூன் விட்டத்தின் அடிப்படையில் சூரிய குடும்பத்தின் நான்காவது மிகப் பெரிய கோளாகவும் திணிவின் அடிப்படையில் மூன்றாவது பெரிய கோளாகவும் விளங்குகின்றது. நெப்டியூன் சூரியனிடமிருந்து 8 ஆவது இடத்தில் 4 498 252 900 Km அல்லது 30.07 AU தூரத்தில் அமைந்துள்ளது. நெப்டியூன் பூமியை விட பருமனில் 4 மடங்கு அதிகமும் திணிவில் 17 மடங்கு அதிகமும் உடையது. நீல நிறக் கோளான நெப்டியூனின் பெயர் ரோமானியர்களின் கடல் கடவுளின் பெயரை ஒத்தது.

நெப்டியூனில் ஒரு நாள் கிட்டத்தட்ட 16 மணித்தியாலங்கள் நீடிக்கும். மேலும் நெப்டியூனில் ஒரு வருடம் என்பது அதாவது அது சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் 165 புவி வருடங்களாகும். நெப்டியூன் சூரியனிடமிருந்து மிக அதிக தூரத்திலுள்ள கிரகம் என்பதும் அது சூரியனைச் சுற்றி வரும் வேகம் குறைவு என்பதனாலுமே அதன் ஒரு வருடம் புவியின் ஒரு வருடத்தின் 165 மடங்காக உள்ள காரணமாகும். மேலும் நெப்டியூனின் சுற்றுப்பாதை ஏனைய கிரகங்களைப் போல் அல்லாது கிட்டத்தட்ட வட்டப் பாதையாகும்.

நெப்டியூனைச் சுற்றி இதுவரை 13 துணைக் கோள்கள் அவதானிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் விசேசமானது ட்ரைட்டன் எனும் நிலவாகும். இந்நிலவு நெப்டியூனை பின்பக்கமாக சுற்றி வருகின்றது. மேலும் ட்ரைட்டனில் வரண்ட நிலங்களும் நைட்ரஜன் திரவ நிலையிலும் வெந்நீர் ஊற்றுக்களும் நிறைந்துள்ளன. சூரிய குடும்பத்திலுள்ள கிரகங்களை அவதானித்த வண்ணம் அதைத் தாண்டிச் செல்லும் நோக்கத்துடன் நாசாவால் செலுத்தப்பட்ட வொயேஜர் 2 செய்மதி இறுதியாகக் கட்டுப்பாட்டு மையத்துக்குத் தகவல் அனுப்பியது நெப்டியூனின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தே ஆகும். மேலும் அது நெப்டியூனையும் அதன் துணைக் கோள் ட்ரைட்டனையும் படம் பிடித்து பூமிக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.


நெப்டியூனும் அதன் துணைக் கோள் ட்ரைட்டனும்

துணைக் கோள் டிரைட்டனின் ஒரு பகுதி (வொயேஜர் 2 செய்மதியால் எடுக்கப்பட்டது)

இப்புகைப்படங்களில் வியாழனைப் போலவே நெப்டியூனிலும் இருண்ட நீல நிறப் பொட்டு அல்லது புயல் அவதானிக்கப்பட்டது. இப்பகுதியில் ஒரு மணிக்கு 500 மைல் வேகத்தில் புயல் வீசி வருவதாகக் கூறப்படுகின்றது. மேலும் நெப்டியூனின் வளி மண்டலத்தில் கிட்டத்தட்ட 2000 Km/h வேகத்தில் முகில்கள் அசைகின்றன. பூமியிலிருந்து தொலைக் காட்டியால் நோக்கும் போது சாந்தமான நீல நிறக் கோளாக நெப்டியூன் தென்பட்ட போதும் சூரிய மண்டலத்திலேயே மிக வேகமாக புயல்காற்றும் சூறாவளியும் இங்கு தான் வீசி வருகின்றது.

வொயேஜர் 2 செய்மதி அனுப்பிய புகைப் படங்களில் பூமியிலிருந்து தொலைக்காட்டியால் அவதானிக்கும் போதும் தென்படாத மிக மெல்லிய வளையங்கள் தெளிவாகத் தென்படுகின்றன. நெப்டியூனின் வளி மண்டலத்தில் ஹீலியம்,ஐதரசன், மற்றும் மெதேன் ஆகிய வாயுக்கள் அதிகமாக உள்ளன. மெதேன் வாயு சிவப்பு நிறத்தை உறிஞ்சுவதாலும் பச்சை நிறத்தை வெளிப்படுத்துவதாலும் நெப்டியூன் இரண்டும் கலந்து நீல நிறமாகத் தென்படுகின்றது.

இனி நெப்டியூன் குறித்த சுருக்கமான தகவல்களைப் பார்ப்போம் :

1.தன்னைத் தானே ஒரு முறை சுற்றி வர எடுக்கும் நேரம் – 16 மணி 6.5 நிமிடம்
2.சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் நேரம் – 164 ஆண்டு 288 நாள் 13 மணி
3.சுற்றுப் பாதையில் பயணிக்கும் வேகம் – 5.4778 Km/s
4.சூரியனிடமிருந்து சராசரி தூரம் – 4 498 252 900 Km அல்லது 30.07 AU
5.தனது அச்சில் சாய்வு – 29.58 பாகை
6.மையத்தினூடாக விட்டம் – 49 572 Km
7.மேற்பரப்பு – 7.65 * (10 இன் வலு 9) Km2
8.திணிவு – 1024 * (10 இன் வலு 26) Kg
9.சராசரி அடர்த்தி – 1.64 g/cm3
10.தப்பு வேகம் – 23.71 km/s
11.துணைக் கோள்கள் – 13
12.மேற்பரப்பு வெப்பம் – குறை – 50K, நடு – 53K
13.ஈர்ப்பு விசை – 11 m/s2
14.வளி அமுக்கம் – 100 – 300 KPa

வளிமண்டலத்திலுள்ள வாயுக்களின் சதவீதம் –

1.ஐதரசன் – 84%
2.ஹீலியம் – 12%
3.மெதேன் – 2%
4.அமோனியா – 0.01%

நெப்டியூன் கிரகம் கணித ரீதியான கணிப்புக்களினூடாகவே முதன் முறையாகக் கண்டு பிடிக்கப்பட்டது. அதாவது அதிக பார்க்கும் திறன் உள்ள தொலைக் காட்டிகள் இல்லாத காலமான 1846 ஆம் ஆண்டு யுரேனஸ் கிரகத்தின் சுற்றுப் பாதையில் அதன் ஈர்ப்பு நடுக்கம் காரணமாக அதன் அருகில் அதை ஒத்த கோளொன்று இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கணித மற்றும் வானியல் அறிஞர்களான உர்பைன் லெ வெர்ரியர், ஜான் கூச் ஆடம்ஸ், யோகன் காத்ரிபைட் கால் ஆகியோரால் நெப்டியூனும் அதன் துணைக் கோளான ட்ரைட்டனும் கண்டு பிடிக்கப்பட்டன.

அறிஞர் ‘உர்பைன் லெ வெர்ரியர்’

இதுவரை சூரிய குடும்பத்தின் இறுதிக் கோளான நெப்டியூன் பற்றிய தகவல்களைப் பார்த்தோம். அடுத்த தொடரில் கோள் என்று கருத முடியாத ஆனால் சூரிய குடும்பத்தில் ஒரு அங்கத்தவரான புளூட்டோ கிரகம் பற்றிய தகவல்களைப் பார்ப்போம். அடுத்த தொடருடன் சூரிய குடும்பம் பகுதி நிறைவுறுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top