Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » ஆயிரம் பேய்கள் குடியிருக்கும் புளியமரம் : உண்மை சம்பவம்!

ஆயிரம் பேய்கள் குடியிருக்கும் புளியமரம் : உண்மை சம்பவம்!

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுவது வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி. இயற்கை எழில் நிறைந்த மலை. இதன் பின்புறம் உள்ளது குரிசிலாப்பட்டு கிராமம். இதையொட்டி சிறிய மலைக்குன்று உள்ளது. இதில் ஒரு முருகன் கோயில். அதன் அருகே பழைய புளியமரம். இதற்கு பேய் விரட்டும் சக்தி இருப்பதாக வியப்புடன் சொல்கின்றனர் கிராம மக்கள். மெய்சிலிர்க்க அவர்கள் கூறியதாவது: 30 வருஷம் முன்னாடி குரிசிலாப்பட்டில் ஜெயபால் என்பவரின் கனவில் முருகன் வந்தார். ‘மயில்கள் அதிகம் உள்ள இந்த இடத்தில் சுயம்புவா தோன்றியிருக்கேன்.

எனக்கு கோயில் கட்டி மயில்பாறைனு பேரு வையி’னு சொல்லி முருகன் மறைஞ்சிட்டார். மறுநாள் ஜெயபால் போய் பார்த்தார். பூமியில இருந்து முளைச்ச மாதிரி ஒரு கல் இருந்திச்சு. அதுதான் சுயம்புவா தோன்றுன முருகன்னு புரிஞ்சுக்கிட்டார். அங்க குடிசை போட்டு சுயம்புவுக்கு அபிஷேகம் செஞ்சு வந்தார். அவர்தான் இப்ப வரைக்கும் பூஜை செய்றார். கொஞ்ச நாள்ல இன்னொரு அற்புதம் நடந்திச்சு. கோயிலுக்கு எதிர்ல திடீர்னு ஒரு புற்று உருவாச்சு. அந்த இடத்துல நாகாலம்மன் சிலை வைத்து பூசாரி பூஜை செஞ்சார்.

சுயம்பு முருகன், புற்றுக்கு இருக்கிற சக்தியை கேள்விப்பட்டு பக்தர்கள் அதிகம் வர ஆரம்பிச்சாங்க.

ஒருநாள். பெற்றோருடன் ஒரு பெண் சாமி கும்பிட இங்கு வந்தாள். கோயில் அருகே வந்ததும் திடீர்னு கூந்தலை அவிழ்த்துப்போட்டு ஆக்ரோஷமா கத்தினாள். ‘கோயிலுக்குள் வரமாட்டேன்’னு கூச்சல் போட்டாள். அவள் மீது தீய சக்தி குடிகொண்டிருப்பது தெரிஞ்சு, புளியமரத்தடிக்கு வரச் சொன்னார் பூசாரி. இப்படி சொன்னதும் அந்த பெண்ணுக்கு வியர்த்துக் கொட்டியது. புளியமரத்தை பார்த்ததும் அலறினாள். ‘‘மரத்தை பார்த்தா பயமா இருக்கு’’ என்று சொல்லி ஓட ஆரம்பிச்சாள். புளியமரத்துக்கு தெய்வீக தன்மை இருப்பதையும் பேய், பில்லி, சூனியம் ஆகியவற்றை விரட்டும் சக்தி இருப்பதையும் பக்தர்கள் தெரிஞ்சுக்கிட்டாங்க. அப்பலேர்ந்து, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இங்கு பேய் விரட்டும் பூஜை நடக்கிறது என்கின்றனர் கிராமத்தினர்.பேய் விரட்டும் பூஜையும் வினோதமாக நடக்கிறது.

பேய் பிடித்தவர்களை பூசாரி வரிசையாக மரத்தடியில் உட்கார வைக்கிறார். அதன் பிறகு, அவர்களது தலையில் எலுமிச்சம்பழம் ஒன்றை வைக்கிறார். சாதாரணமானவர்கள் என்றால் பழம் விழுந்துவிடுமாம். தலையில் பழம் ஆடாமல் அசையாமல் இருந்தால் அவர்களுக்கு பேய் பிடித்திருக்கிறது என்று அர்த்தமாம். பேய் பிடித்தவர்களை ஒன்றாக உட்காரவைத்து பம்பை, உடுக்கை அடிக்கின்றனர். உடுக்கை வேகம் அதிகரிக்க அதிகரிக்க.. பேய் பிடித்தவர்கள் ஆக்ரோஷமாக ஆட ஆரம்பிக்கின்றனர்.

‘உனக்கு என்ன வேணாலும் தருகிறேன்.

ஓடிப்போய்டு’ என்கிறார் பூசாரி. சாராயம், சுருட்டு, கருவாடு, மீன்.. என்று அவரவர் இஷ்டம்போல கேட்கின்றனர். தருவதாக சொல்லி புளியமரத்தின் அருகில் அழைத்து செல்கிறார். அருகே போகும்போது, அவர்கள் அலறுகின்றனர். அவர்களது முகம் வெளிறிப் போகிறது. ‘எதுவுமே வேண்டாம். புளியமரத்து பக்கம் எங்களை கூப்பிடாதீங்க’ என்று கதறுகிறார்கள். அவர்களை வலுக்கட்டாயமாக மரத்தடிக்கு இழுத்துப் போகிறார் பூசாரி. பிறகு, அவர்களை மரத்தில் சாய்த்து பிடித்துக் கொண்டு அவர்களது உச்சி முடியை மரத்தில் ஆணி வைத்து அடிக்கிறார். கத்தரிக்கோலால் முடியை கத்தரிக்கிறார். அதுவரை ஆக்ரோஷமாக கத்திக்கொண்டு, அலறிக்கொண்டு இருந்தவர்கள் மெல்ல அமைதியாகி மயங்கி விழுகிறார்கள்.

முடியை மரத்தில் அடித்ததும் பேய், பில்லி, சூனியம் நீங்குவதாக நம்புகிறார்கள் மக்கள். ‘‘சில நேரங்களில் வெளி மாநில, வெளிநாட்டு பேய்கள்கூட சிலரை பிடித்திருக்கும். அவர்கள் புரியாத பாஷை பேசுவார்கள். பெரும்பாலும் திருமணமாகாத கன்னிப்பெண்களை ஆண் பேய்களும், வாலிபர்களை பெண் பேய்களும் பிடிக்கின்றன. இந்த புளியமரத்தடியில் பல ஆயிரம் பேய்களை ஓட்டியுள்ளேன். அத்தனை பேய்களும் இந்த மரத்தில்தான் இருக்கின்றன. இந்த பேய்களை அடக்கி ஆளும் மகா சக்தி இந்த மரத்துக்கு உண்டு. அதன் சக்திகள் பற்றி அதற்கு மேல் சொல்வது ஆபத்து’’ என்கிறார் பூசாரி ஜெயபால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top